Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

த.சத்தியநாராயணன், அயன்புரம்.

ஓ.பி.எஸ் அணி இப்படி அம்போவென்று ஆகிவிட்டதே?


பொதுநோக்கம் இல்லாத அமைப்புகள் அப்படித்தான் ஆகும். ‘சசிகலா குடும்பத்தை அ.தி.மு.க-வில் இருந்து விலக்கி வைக்க வேண்டும், ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்’ என்ற இரண்டைத் தாண்டி பளிச்சென எந்தக் கோரிக்கையையும் பன்னீர்செல்வம் அணி வைக்கவில்லை. இந்தக் காரணங்களும்கூட, ‘தாங்கள் ஏன் பிரிந்து வந்தோம்’ என்பதற்காக அவர்கள் தரப்பில் சொல்லப்படுபவை.

சசிகலா இன்னமும் அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராகத்தான் இருக்கிறார். அவரது அக்கா மகன் தினகரன், இன்னமும் துணைப் பொதுச்செயலாளராகத்தான் தொடர்கிறார். இந்தச் சூழ்நிலையில் எடப்பாடி அணியுடன் பன்னீர் அணியினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, பன்னீர்செல்வத்துக்கு முதலமைச்சர் பதவியை விட்டுத்தரச் சொல்லிக் கேட்டுள்ளார்கள். ‘‘ஓராண்டாவது அவரை முதலமைச்சர் ஆக்குங்கள்’’ என்று மன்றாடி இருக்கிறார்கள். அது முடியவே முடியாது என்பதில் எடப்பாடி தெளிவாக இருந்ததால், பேச்சுவார்த்தைக் குழுவைப் பன்னீர் கலைத்துவிட்டார்.

இன்றைய சூழ்நிலையில் அந்த அணிக்கு இருக்கும் ஒரே கொள்கை, பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைப்பதுதான். கட்சி நடத்த இது போதுமா? அதனால்தான் அம்போ ஆகிறது!

கழுகார் பதில்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு-32.

குடியரசுத் தலைவர் பதவிக்கு அண்ணா ஹசாரே பெயரைச் சிலர் முன்மொழிகிறார்களே?

அவர்கள் தங்கள் ஆசையைச் சொல்லலாம். ஆனால், அது சாத்தியம் ஆகும் சூழ்நிலை இல்லை. பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, தனது வேட்பாளரை அறிவித்துவிட்டது. காங்கிரஸ் இன்னமும் அறிவிக்கவில்லை. காங்கிரஸுக்கும் அண்ணா ஹசாரேவுக்கும் ஆகாது. அதனால் அவர் பெயரை அறிவிக்கவும் மாட்டார்கள். அறிவித்தாலும் ஹசாரேவுக்கு அதில் ஆர்வம் இருக்கிறதா என்று தெரியாது. பொதுவாகவே அண்ணா ஹசாரே போன்ற ஆட்கள் இந்தப் பதவிக்குப் பொருத்தமானவர்கள் அல்ல.

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

டி.டி.வி.தினகரன் தன் ஆட்டத்தை மீண்டும் தொடங்கிவிட்டாரா?


அவர் ஆட்டத்தை எப்போது நிறுத்தினார், மீண்டும் தொடங்குவதற்கு?

கழுகார் பதில்கள்!

திருப்பூர் அர்ஜுனன்.ஜி, அவிநாசி.

தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்கள் அறையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் படம் 100 நாட்களுக்குப் பிறகு வைக்கப்பட என்ன காரணம்?


எடப்பாடி பழனிசாமிக்குக் கிடைத்து இருக்கும் தைரியமும், சசிகலா குடும்பத்தினர் மீதான பயமில்லாத தன்மையும்தான் காரணம்.

சீர்காழி சாமா, ஸ்ரீரங்கம்.

சமீப காலமாக ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று யாரும் தியானம் செய்யாததன் காரணம் என்ன?


முழு ஞானம் அடைந்துவிட்டதால் இருக்கலாம்! அந்த ஞானச் சிந்தனைகளை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம் என்று பொதுமக்கள் சார்பாக கோரிக்கை வைக்க வேண்டும். குறிப்பாக தீபாவின் கணவர் மாதவன் அடைந்துள்ள ஞானம் நம்மை மலைக்க வைக்கிறது. ‘‘ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா என்பதால், தீபாவின் கணவரான நான் ஜெயலலிதாவின் மகன்’’ என்கிறார். ‘இது ஜெயலலிதாவுக்குத் தெரியுமா?’ என்று கேட்டால், ‘‘ஜெயலலிதாவுக்குத் தெரியும்’’ என்கிறார். நல்லவேளை, இவற்றையெல்லாம் கேட்க ஜெயலலிதா இல்லை.

பொதுவாக ஜெயலலிதாவின் சமாதிக்குச் செல்லும் யாருக்கும் உண்மையான ஜெயலலிதாவைத் தெரியவில்லை.

கழுகார் பதில்கள்!

சோ.பூவேந்த அரசன், சின்ன தாராபுரம்.

கட்சிப் பத்திரிகைகளின் அமைப்பும் கண்ணோட்டமும் மாறிவிட்டனவே?


முன்பெல்லாம் கட்சி நாளிதழ்களில் கட்டுரைகள், அவர்களது நிலைப்பாடுகள், வாதப் பிரதிவாதங்கள் அதிகமாக வரும். ஆனால், இப்போது அவையும் மற்ற நாளிதழ்களைப் போல வழக்கமான செய்திகளைத் தாங்கி வருகின்றன. செறிவான கட்டுரைகளைக் கட்சிப் பத்திரிகைகள் வெளியிட்டால் மட்டும்தான் அவை மற்றவர்களாலும் கவனிக்கப்படும்.

எம்.ஜி.ஆர். மனோகரன், க.பரமத்தி.

மலேசியாவுக்குள் செல்ல வைகோ அனுமதிக்கப்படாதது பற்றி..?


அந்த நாட்டுக்குள் செல்வதற்கு அவருக்கு அனுமதி இல்லை என்றால், அவருக்கு விசா தரப்பட்டு இருக்கக்கூடாது. இங்கே விசா கொடுத்துவிட்டு, அங்கே போனதும் தடுப்பது... அவமானப்படுத்துவதுதான்.

டி.சந்திரன், ஈரோடு.

மனிதர்கள் செயற்கையை நம்பும் அளவுக்கு இயற்கையை நம்புவது இல்லையே ஏன்?


விலை கொடுத்து வாங்கப்படுகிறது செயற்கை. இயற்கைக்கு விலை இல்லை. சும்மா கிடைப்பதால் அதனை அதிகம் நம்புவது இல்லை.

எஸ்.ராமசாமி, குட்டைதயிர்பாளையம்.

மகாத்மா காந்தியை ‘சாமர்த்தியமான பனியா’ என்று அமித் ஷா சொன்னது சரியா?


உண்மையில் இது அமித் ஷாவின் தைரியம்தான். காந்தியைச் சொல்வதன் மூலமாக மோடியையும் நைஸாகக் கொட்டுகிறாரா அமித் ஷா?

காந்தியும் நரேந்திர மோடியும் ‘மோத் கான்ச்சி’ என்ற சமூகத்தின் இருவேறு உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்தான். இரண்டுமே வணிகச் சமூகங்கள்தான்.

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

உங்கள் பார்வையில் யார் உண்மையான அ.தி.மு.க?


இவர்களில் யாரும் இல்லை. இன்றைய கட்சி ஜெயலலிதாவின் திறமையால் வளர்க்கப்பட்டது, இன்றைய ஆட்சியும் அவரால் அமைந்தது. இதற்கும் இவர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ‘இவர்களில் யார் உண்மையான அ.தி.மு.க’ என்பதை மக்கள் மன்றத்தில் நிரூபிக்காமல் அவர்கள் பதவியில் தொடர்வது சரியல்ல.

கழுகார் பதில்கள்!

பெரியார், அண்ணா பெயர்கள்தான் தமிழகத்தில் அதிகமாக உச்சரிக்கப்படுகின்றன. அவர்களது லட்சியங்கள் தமிழ்நாட்டில் வெற்றி பெற்றுள்ளனவா?

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுக்கு வர வேண்டும் என்பது திராவிட இயக்கத்தின் அடிப்படை லட்சியமாகச் சொல்லப்பட்டது. அதில் அவர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளார்கள். ‘வீட்டுக்குள் முடக்கப்பட்ட பெண்கள், அனைத்து வகையிலும் முன்னேற வேண்டும்‘ என்றும் பெரியார் போராட்டங்களை நடத்தினார். அதனால்தான் பெண்கள் மாநாட்டில் ‘பெரியார்’ என்ற பட்டம் அவருக்குத் தரப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைமையை விட பெண்கள் முன்னேறி இருக்கிறார்கள்.

தமிழ் இன உணர்வு, மொழிப்பற்று, மாநில உரிமைகளுக்காகப் போராடுவது போன்றவை இவர்களால் விதைக்கப்பட்டவை. இவையும் ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளன.

சாதி ஏற்றத்தாழ்வுகள், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக இவர்கள் பேசினார்கள். சாதி வன்மமும், மூடப்பழக்க வழக்கங்களும் நாளுக்கு நாள் அதிகமாகித்தான் வருகின்றன. மேலும், இவர்களது பெயரைச் சொல்லி இயக்கம் நடத்துபவர்களே அடிப்படை லட்சியங்களுக்கு விரோதமாகச் செயல்படுகிறார்கள். பொதுவாழ்க்கையில் நேர்மையை விரும்பியவர்கள் பெரியாரும் அண்ணாவும். ஆனால் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் ஊழல் புரையோடிப் போயிருக்கிறது. இன்றைய தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் பெரியார், அண்ணா பெயரைச் சொல்லும் அருகதையை இழந்துவிட்டன என்றுதான் சொல்ல வேண்டும்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:  கழுகார் பதில்கள்,  ஜூனியர் விகடன்,  757, அண்ணா சாலை, சென்னை- 600 002  kalugu@vikatan.com  என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!