Published:Updated:

'இந்த 5 விஷயத்தைப் ஃபாலோ பண்ணுனா போதும்!'  - தமிழக பா.ஜ.கவுக்கு அமித் ஷா மெசேஜ்

'இந்த பூத்துக்கு இந்த நபர் எனக் கட்சியால் அடையாளம் காணப்பட்டு, கட்சி உறுப்பினர்களாக இருப்பவர்கள் மட்டும் மோடி பங்கேற்கும் கூட்டத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்' என உறுதியாகக் கூறிவிட்டார் அமித் ஷா.

'இந்த 5 விஷயத்தைப் ஃபாலோ பண்ணுனா போதும்!'  - தமிழக பா.ஜ.கவுக்கு அமித் ஷா மெசேஜ்
'இந்த 5 விஷயத்தைப் ஃபாலோ பண்ணுனா போதும்!'  - தமிழக பா.ஜ.கவுக்கு அமித் ஷா மெசேஜ்

மிழகத்தில் பா.ஜ.கவை வலுப்படுத்தும் வேலைகளைத் தீவிரமாகச் செய்து வருகிறார் அமித் ஷா. 'சட்டமன்றத் தொகுதிவாரியாக புதிய செயல் திட்டம் வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் மோடி பங்கேற்கும் கூட்டத்துக்கு முன்னதாக இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிடும்' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில். 

தமிழக அரசைக் குறிவைத்து ரெய்டு நடவடிக்கையைத் தொடங்கிய மத்திய நிதித்துறை அமைச்சகம், தற்போது அடுத்தகட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு வேண்டியவரான கிறிஸ்டி ஃபிரைடு கிராம் நிறுவன அதிபர் குமாரசாமி, அரசு நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாதுரை ஆகியோர், வருமான வரித்துறையின் விசாரணையை எதிர்கொண்டு வருகின்றனர். இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சொத்துக்களின் அடிப்படையில் ஆளும்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் முடிவில் இருக்கிறது பா.ஜ.க. எடப்பாடி பழனிசாமியைக் குறிவைத்து இப்படியொரு ஆட்டம் நடந்துவரும் அதேவேளையில், கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மீது சொத்துக்குவிப்பு புகாரை எழுப்பியிருந்தார் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.எஸ். இந்தப் புகார் குறித்து நீதிமன்றத்தில் தெரிவித்த தமிழக அரசு, ' சொத்துக்குவிப்பு தொடர்பாக முதற்கட்ட விசாரணை நடந்து வருகிறது' எனத் தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கச் சென்ற ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர் ஓ.பி.எஸ் தரப்பினர். 

மத்தியில் ஆளும் பா.ஜ.கவுடன் இணக்கமான உறவைக் கடைபிடித்து வந்த அ.தி.மு.கவின் இரண்டு அணிகள் மீதும் ரெய்டுகள், வழக்குகள் பாய்வதை அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர் தமிழக அமைச்சர்கள். ' இந்த ஆட்சி எத்தனை நாள்கள் தாங்கும்?' என்ற கேள்வியும் அவர்களுக்குள் எழுந்துள்ளது. இந்த சம்பவங்களைக் கவனித்து வரும் டி.டி.வி.தினகரன், ' ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்ஸிடம் இருந்து அதிகாரம் பறிக்கப்பட்டால், அனைவரும் நம்மிடம் வந்துவிடுவார்கள்' என ஆதரவாளர்களிடம் பேசி வருகிறார். அதேநேரம், தமிழக அரசியல் சூழல்கள் குறித்து கட்சி நிர்வாகிகளுக்குச் சில அறிவுறுத்தல்களை அளித்துவிட்டுச் சென்றிருக்கிறார் பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா. இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசினார் பா.ஜ.க மூத்த நிர்வாகி ஒருவர், " நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, பா.ஜ.கவினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவான குறிப்புகளை அளித்திருக்கிறார் அமித் ஷா. அதன் அடிப்படையில் கட்சி நிர்வாகிகள் செயல்பட்டு வருகின்றனர். 'வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி?' என தேசியத் தலைவரிடம் நாங்கள் கேட்டபோது, 

' இந்த நேரத்தில் கூட்டணி குறித்து எதுவும் பேச வேண்டாம். அதையெல்லாம் அக்டோபருக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை, நான் பார்த்துக் கொள்கிறேன். தொகுதிவாரியாக கட்சியின் கட்டுமானத்தைப் பலப்படுத்தும் வேலையைத் துரிதப்படுத்துங்கள். நீங்கள் செய்ய வேண்டிய முதல் காரியம், தமிழ்நாட்டில் 40 நிர்வாகிகளைத் தேர்வு செய்து, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சென்று அங்குள்ள நிர்வாகிகளுடன் சந்திப்பு கூட்டங்கள், உள்ளூர் பிரச்னைகளைக் கண்டறிந்து அதற்கொரு போராட்டம், அந்தப் பகுதியில் பொதுமக்கள் மதிக்கக்கூடிய, வணங்கக் கூடிய இடங்களுக்குச் செல்வது, பத்திரிகையாளர்களை சந்திப்பது என்ற செயல் திட்டத்தை வகுத்துக் கொள்ளுங்கள். கடந்த 17-ம் தேதியில் இருந்து 31-ம் தேதிக்குள்ளாக தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இந்த 40 நிர்வாகிகளும் சென்று முடித்துவிட வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் நிர்வாகிகள் கூட்டம், போராட்டம் நடத்தப்பட வேண்டும். இவை அனைத்தும் வரும் செப்டம்பர் மாதம் வரையில் 5 முறை நடத்தப்பட வேண்டும்' எனக் குறித்துக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்" என்றவர், 

"செப்டம்பர் மாதம் இறுதி வாரம் அல்லது அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் பிரதமர் மோடி, தமிழகம் வரவிருக்கிறார். அப்போது அவர் முன்பாக, ஒன்றரை லட்சம் பூத் கமிட்டி உறுப்பினர்களை நிறுத்த இருக்கிறோம். அதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கடந்த 9-ம் தேதி அமித் ஷா வந்தபோது, கட்சியின் 15 ஆயிரம் பேர் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது பூத் கமிட்டி நிர்வாகிகள் குறித்து எங்களிடம் பேசிய அமித் ஷா, ' இந்த பூத்துக்கு இந்த நபர் எனக் கட்சியால் அடையாளம் காணப்பட்டு, கட்சி உறுப்பினர்களாக இருப்பவர்கள் மட்டும் மோடி பங்கேற்கும் கூட்டத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்' என உறுதியாகக் கூறிவிட்டார். அதன்படி, 65 ஆயிரம் பூத்துகளில் இருந்து பூத்துக்கு இருவர் எனக் கணக்கு போட்டு ஆள்களைத் தயார் செய்து கொண்டிருக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் வேகம் எடுக்கத் தொடங்கிவிட்டன. 15 நாளைக்கு ஒருமுறை தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்குத் தலைவர்கள் செல்கிறார்கள். பயிற்சி கூட்டமும் தொடர்ந்து நடந்து வருகிறது. செப்டம்பர் இறுதி வாரத்துக்குள் இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிடும்" என்றார் உறுதியாக.