Published:Updated:

கருணாநிதியின் பொன் விழாவும் ஆச்சர்ய 50 தகவல்களும்! #karunanidhi

கருணாநிதியின் பொன் விழாவும் ஆச்சர்ய 50 தகவல்களும்! #karunanidhi
கருணாநிதியின் பொன் விழாவும் ஆச்சர்ய 50 தகவல்களும்! #karunanidhi

தி.மு.க என்ற மாபெரும் ஓர் இயக்கத்தின் தலைவராக இத்தனை ஆண்டுக்காலம் கருணாநிதி பதவி வகித்த, அவரின் தலைவர் பதவி பொன்விழா ஆண்டையொட்டி  அவரைப் பற்றிய அரிய தகவல்கள் சிலவற்றைப் பகிர்ந்துகொள்வோம்.

தி.மு.க தலைவர் கருணாநிதி, கடந்த ஜூன் மாதம் 3-ம் தேதி தன்னுடைய 95 வது பிறந்த நாளைக் கொண்டாடினார். உடல் நலிவுற்று கோபாலபுரம் இல்லத்தில் அப்போதே ஓய்வெடுத்து வந்தபோதிலும், வீட்டின் முன்பு திரண்டிருந்த தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். அவர்களின் வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டதுடன், தன் வாழ்த்துகளையும் தொண்டர்களுக்குத் தெரிவித்தார். 

இந்த நிலையில் தி.மு.க-வின் தலைவராகக் கருணாநிதி பொறுப்பேற்று (27.07.2018) 50 ஆண்டுகளாகின்றன. தி.மு.க என்ற மாபெரும் ஓர் இயக்கத்தின் தலைவராக இத்தனை ஆண்டுக்காலம் கருணாநிதி பதவி வகித்த, அவரின் தலைவர் பதவி பொன்விழா ஆண்டையொட்டி  அவரைப் பற்றிய அரிய தகவல்கள் சிலவற்றைப் பகிர்ந்துகொள்வோம்.

* திருவாரூர் மாவட்டம் திருக்குவளை என்னும் சிறிய கிராமத்தில் 1924-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி முத்துவேலர் - அஞ்சுகம் அம்மையாருக்கு மகனாகப் பிறந்தவர் கருணாநிதி. 

* இயற்பெயர் தட்சிணாமூர்த்தி. தன் பெற்றோருக்கு மூன்றாவது குழந்தையாகப் பிறந்த கருணாநிதி, தன் பெயருக்கு முன்னால் 'டி.எம்' (திருவாரூர் முத்துவேலர் கருணாநிதி) என்ற இனிஷியலை, சி.என்.அண்ணாதுரை (காஞ்சிபுரம் நடராசன் அண்ணாதுரை) வழியைப் பின் பற்றி, நீண்டகாலமாகப் போட்டுக்கொண்டிருந்தார். பின்னர், மு.கருணாநிதி என்று மாற்றிக்கொண்டார். 

* பள்ளியில் படிக்கும்போது நடந்த பேச்சுப் போட்டியில் 'நட்பு' என்ற தலைப்பில் முதன்முதலாக 1939-ம் ஆண்டு கருணாநிதி பேச்சைத் தொடங்கினார். அவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து 'மாணவ நேசன்' என்ற பத்திரிகையைத் தொடங்கினார். முதன்முறையாக அவர் தொடங்கிய இந்தப் பத்திரிகை ஒரு மாத இதழ். அவர் முதல் முறையாகத் தொடங்கிய அமைப்பு 'தமிழ் மாணவர் மன்றம்'. 

* கருணாநிதி எழுதி முதன்முதலில் அரங்கேற்றப்பட்ட நாடகம் 'பழனியப்பன்'. தமிழ் மன்றம் நடத்த நிதி திரட்டுவதற்காக, திருவாரூர் பேபி டாக்கீஸில் 1940-ம் ஆண்டு இந்த நாடகத்தை நடத்தினார் அவர்.

* பேரறிஞர் அண்ணா நடத்திய 'திராவிட நாடு' இதழில் 'இளமைப் பலி' என்ற கருணாநிதியின் கட்டுரை 1942-ம் ஆண்டு வெளிவந்தது. திருவாரூரில் நபிகள் நாயகம் விழாவுக்கு வந்த அண்ணா, 'இளமைப் பலி' எழுதிய கருணாநிதியை அழைத்துப் பாராட்டினார். 'நடுவகிடு எடுத்து வாரிய தலை, அரும்புமீசை, கண்களில் ஓர் கனல், பேச்சில் தெளிவு..." என அண்ணாவை முதல் சந்திப்பிலேயே தன்வசப்படுத்தினார் கருணாநிதி.

 * `முரசொலி வெளியீட்டுக் கழகம்’ என்ற பெயரில் 1942-ம் ஆண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, 'முரசொலி' என்ற மாத இதழைத் தொடங்கினார். அதில் 'சேரன்' என்ற பெயரில் புரட்சியான பல கருத்துகளுடன் கட்டுரைகள் எழுதினார்.

* திருவாரூர் சுயமரியாதைச் சங்க ஆண்டு விழாவில் 28.5.1944 அன்று கலந்துகொள்ள வந்த பெரியார், முரசொலி ஏட்டைப் பாராட்டியதோடு 'மிகச் சிறந்த பணி' என்று கருணாநிதியை உச்சி மோந்தார். பெரியாருடன் நட்பு ஏற்பட்ட பின், தொடர்ந்து அவரது இயக்கக் கூட்டங்களில் பேசத் தொடங்கினார். ஈரோட்டிலிருந்து வெளிவந்த `குடியரசு' பத்திரிகையில் கருணாநிதியை உதவி ஆசிரியராகப் பணியில் சேர்த்துக் கொண்டார் பெரியார்.

* குடியரசு பத்திரிகையில் பணியாற்றியபடி, நேரடியாகப் பெரியாரிடம் பயிற்சி பெற்ற கருணாநிதிக்கு இயக்கப் பணி, எழுத்துப் பணி ஆகியவற்றோடு திரைத்துறை மீதும் தீராத ஆர்வம் இருந்தது. எனவே, திரைப்பட இயக்குநர் ஏ.எஸ்.ஏ சாமி-யோடு பணியாற்ற, பெரியார் அனுமதியுடன் கோவைக்குச் சென்றார் கருணாநிதி. `ராஜகுமாரி' படத்துக்கு வசனம் எழுதினார். அந்தப் படத்தில் எம்.ஜி.ஆர் முன்னணி வேடத்தில் நடித்தார்.

* கருணாநிதியின் திரைப்பட வாழ்க்கையில் அவர் கடைசியாக கதை, வசனம் எழுதிய திரைப்படம் பொன்னர்-சங்கர். தொலைக்காட்சி தொடர் 'ராமானுஜர்'. சிவாஜி கணேசன் நடித்த, 'பராசக்தி' திரைப்படத்தில் கருணாநிதி எழுதிய வசனம், தென்னிந்திய திரையுலகத்தையே புரட்டிப்போட்டது. எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற இரு பெரும் நடிகர்களுக்கும் மிகப் பெரிய வெற்றிப்படங்களை தன் கதை, வசனம் மூலம் அளித்தவர் கருணாநிதி. 

* 6 சரித்திர நாவல்களையும் 10 சமூக நாவல்களையும் 21 நாடகங்களையும் கருணாநிதி எழுதியுள்ளார். தி.மு.க-வின் தேர்தல் சின்னமாக உதயசூரியன் கிடைத்தபோது, அதைப் பிரபலப்படுத்துவதற்காகவே, `உதயசூரியன்' என்ற நாடகத்தை எழுதினார். 'இனியவை 20' என்ற பெயரில் பயண நூல் ஒன்றையும் அவர் எழுதியுள்ளார்.

* முத்தமிழ் அறிஞர், உலகத் தமிழர்களின் ஒப்பற்றத் தலைவர், தமிழ் இனக் காவலர், கலைஞர் என்று பல பெயர்களில் தொண்டர்களும் பொதுமக்களும் கருணாநிதியை அன்போடு அழைப்பார்கள். ஆனால், கலைஞர் என்று அழைப்பதையே அவர் மிகவும் விரும்பினார். கருணாநிதி எழுதிய, `தூக்குமேடை' நாடகத்தைப் பார்த்த நடிகர் எம்.ஆர்.ராதா அவரை முதன்முதலில் 'கலைஞர்' என்று கூறி, அந்தப் பட்டத்தை அளித்தார்.

* எம்.ஜி.ஆருக்கு, `புரட்சி நடிகர்' என்ற பட்டத்தை, கருணாநிதி கொடுத்தார். கருணாநிதியை எம்.ஜி.ஆர், `ஆண்டவரே' என்று ஆரம்பகாலங்களில் அழைத்து வந்தார்.

* முதன்முதலாகத் தன்னுடைய 33 வது வயதில் தமிழக சட்டமன்றத்துக்குள் நுழைந்தார் கருணாநிதி. 45 வயதில் முதல் அமைச்சர் ஆனார். இதுவரை 13 முறை சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். குளித்தலை தொகுதியில் முதலில் வென்றார். தற்போது, சொந்த மாவட்டமான திருவாரூர் தொகுதி உறுப்பினராக உள்ளார். 1957-ம் ஆண்டிலிருந்து, சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் கருணாநிதி, சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். 

* மாநில அரசுகளின் சார்பில் குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய நாள்களில் மாநில ஆளுநர்கள்தான் தேசியக் கொடியை ஏற்றிவந்தனர். 1974-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் கருணாநிதி வலியுறுத்திக் கேட்டு, சுதந்திர தினத்தன்று அந்தந்த மாநில முதல்வர்கள் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத்தந்தார். முதன்முதலாக 1974-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் கருணாநிதி. 

* மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய, 'நீராரும் கடலுடுத்த... என்று தொடங்கும் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அறிவித்து, தமிழக அரசு விழாக்களில் தொடக்கத்தில் பாடும் நடைமுறையைக் கொண்டுவந்தவர் கருணாநிதி.

* அரசு நிகழ்ச்சியானாலும் கட்சி நிகழ்ச்சியானாலும் குறித்த நேரத்துக்கு முன்பாகவே மேடைக்கு வந்துவிடுவார். குறித்த நேரத்தில் விழாவை முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்.

* ராஜாஜி, பிரகாசம், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, காமராஜர், பக்தவச்சலம், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் என்று தமிழகத்தின் 11 முதல்வர்களின் ஆட்சிக் காலத்தில் அரசியல் செய்தவர் கருணாநிதி.

* சென்னையில் வள்ளுவர் கோட்டம், அண்ணா மேம்பாலம், பூம்புகார் மீட்டெடுப்பு, பெரியார் சமத்துவபுரம், குமரியில் திருவள்ளுவருக்கு 133 அடியில் கற்சிலை, கோவையில் உலக செம்மொழி மாநாடு, உணவுப் பாதுகாப்புகாக இந்திய உணவுக் கழகத்தைப்போல, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் போன்ற பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.  

* நாட்டிலேயே முன்னோடித் திட்டமாக மகளிர் திருமண உதவித் திட்டங்களைக் கொண்டு வந்தார். தமிழ் அறிஞர்கள் உதவியோடு, தமிழ் ஆண்டு வரிசைக்கு, 'திருவள்ளுவர் ஆண்டு' என்ற முறையைக் கொண்டு வந்தார். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்து, பெருமை சேர்த்தவரும் கருணாநிதிதான்.

* பெண்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, 'இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தமிழகத்தில் பெண்களுக்கும் குடும்பச் சொத்தில் சமஉரிமை உண்டு' என்ற சட்டத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றினார்.

* கருணாநிதியின் உதவியாளராகக் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பவர் சண்முகநாதன். கருணாநிதியின் கண் அசைவைப் புரிந்துகொண்டு செயல்படக் கூடிய உதவியாளர். கருணாநிதியின் தனி உதவியாளராக நித்யானந்தன் என்பவர் இருக்கிறார்.

* 2005-ம் ஆண்டு ரூ.5 கோடியில் 'கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை' நிறுவி, மாதந்தோறும் அந்தத் தொகையில் இருந்து கிடைக்கும் வட்டி மூலம் ஒவ்வொரு மாதமும் 12 பேருக்கு தலா ரூ.25,000 வீதம், 'கல்வி மற்றும் மருத்துவ நிதியுதவி' வழங்கி வருகிறார் கருணாநிதி. 

* 'தன்னுடைய கோபாலபுரம் இல்லம், தயாளு அம்மாளின் காலத்துக்குப் பிறகு, மருத்துவமனையாகப் பயன்பட வேண்டும்' என்று எழுதி வைத்துள்ளார் கருணாநிதி.

அடுத்த கட்டுரைக்கு