Published:Updated:

காவிரி போன்று கச்சத்தீவு பிரச்னைக்கும் தீர்வு : ஜெ.

காவிரி போன்று கச்சத்தீவு பிரச்னைக்கும் தீர்வு : ஜெ.
காவிரி போன்று கச்சத்தீவு பிரச்னைக்கும் தீர்வு : ஜெ.
காவிரி போன்று கச்சத்தீவு பிரச்னைக்கும் தீர்வு : ஜெ.

சென்னை: தமிழக மீனவர்கள் என்றால் இந்திய நாட்டிற்கு அப்பாற்பட்டவர்கள் என்ற நினைப்பிலேயே மத்திய அரசு தொடர்ந்து மவுனம் சாதித்து வருவதாகவும், காவிரி போன்று கச்சத்தீவு பிரச்னைக்கும்  தமது அரசு நிரந்தர தீர்வு காணும் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

.தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடித்து துன்புறுத்தப்படுவது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா," தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் அடித்து துன்புறுத்தப்படுவது குறித்து மாண்புமிகு உறுப்பினர்கள், இந்த அவையினுடைய கவனத்திற்கு கொண்டு வந்து, தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தங்களது கருத்துகளை எடுத்துரைத்து இருக்கிறார்கள். இந்தப் பிரச்சனை குறித்த எனது விரிவான விளக்கத்தை இந்த மாமன்றத்திற்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

இந்தியாவின் ஒரு பகுதியாக கச்சத்தீவு இருந்த போது இந்தப் பிரச்சனை எழவில்லை. தமிழக மீனவர்கள் கச்சத்தீவின் அருகில் மீன் பிடித்து தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தனர். 1974 ஆம் ஆண்டு, இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது. அப்போது, தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர்  கருணாநிதி தான். அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி, இரு நாடுகளும் பரம்பரை பரம்பரையாக, தங்கள் நாட்டிற்குச் சொந்தமான கடல் எல்லைகளில் எந்தெந்த உரிமைகளை அனுபவித்து வந்தனவோ, அந்தந்த உரிமைகளைத் தொடர்ந்து அனுபவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இதையெல்லாம் இலங்கை அரசு

##~~##
மதிப்பதாகத் தெரியவில்லை. மாறாக, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
1991 ஆம் ஆண்டு நான் முதன் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன், தமிழக மீனவர்களை
இலங்கைக் கடற்படையிடம் இருந்து காப்பாற்ற கச்சத்தீவினை மீட்பதைத் தவிர வேறு வழி இல்லை என்று முடிவெடுத்து, இதனை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாரதப் பிரதமரை நேரிலும், கடிதம் மூலமாகவும் வற்புறுத்தினேன்.

குறைந்தபட்சம் நிரந்தரமான குத்தகை, அதாவது, டுநயளந in யீநசயீநவரவைல என்ற முறையிலாவது, தமிழக மீனவர்கள் கச்சத்தீவிற்குச் சென்று மீன் பிடிக்கும் உரிமையையாவது பெற்றுத் தர வேண்டும் என்று பாரதப் பிரதமரை பல முறை வற்புறுத்தி இருக்கிறேன். இருப்பினும், மத்திய அரசு எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

2006 முதல் 2011 வரை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர் கருணாநிதி. கருணாநிதி தயவில் தான் மத்திய அரசும் இருந்தது. தன் நலத்திற்காக பல மிரட்டல்களை மத்திய அரசுக்கு விடுத்த திரு. கருணாநிதி, தான் செய்த பாவத்திற்கு பரிகாரமாக கச்சத்தீவினை மீட்டுத் தருமாறு மத்திய அரசை வலியுறுத்தி இருக்கலாம். ஆனால், அதைச் செய்யவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் கச்சத்தீவு பற்றிய எண்ணமே திரு. கருணாநிதிக்கு இல்லாமல் போய்விட்டது.

ஆனால், 12.8.2012-ல் நடைபெற்ற புத்துயிரூட்டபட்ட ‘டெசோ’ மாநாட்டில், "கச்சத்தீவை இந்தியா
மீண்டும் தனது ஆளுகையின் கீழ் கொண்டு வருவதோடு; தனுஷ்கோடி அல்லது மண்டபம் முகாமில் இந்தியக் கடற்படைத் தளம் ஒன்றை இந்திய அரசு நிறுவ வேண்டும்"" என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.

1974 ஆம் ஆண்டு கச்சத் தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட போது, அப்போது முதலமைச்சராக
இருந்த. கருணாநிதி அதைத் தடுக்க தவறிவிட்டார். மேற்கு வங்காளத்தில் உள்ள பெருபாரி பகுதியை 1960-
க்கு முன்பு கிழக்கு பாகிஸ்தானுக்கு இந்திய அரசு தாரைவார்க்க முயன்ற போது, அதனை எதிர்த்து அப்போதைய மேற்கு வங்க அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், "இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை,நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும்" என 1960-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

மேற்கு வங்க அரசின் இந்த நடவடிக்கையை 1974 ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி பின்பற்றி இருப்பாரேயானால், கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டு இருக்காது. ஆனால் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கருணாநிதி இதைச் செய்ய தவறி விட்டார்.

கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதன் காரணமாக, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் இன்றளவும் தொடர்கிறது. தமிழக மீனவர்களின் வலைகளை அறுத்தெறிவதையும்; அவர்களை ஆயுதங்களால் துன்புறுத்துவதையும்; இலங்கை கடற்படையினர் வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்கள். தமிழக மீனவர்களுடைய வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது. தங்களது உயிரைப் பணயம் வைத்து மீன் பிடித் தொழிலை தமிழக மீனவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையும் இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் போதும்; பாரதப் பிரதமரை வலியுறுத்தியும்; தமிழக அரசு அதிகாரிகள் மூலம் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளைத்தொடர்பு கொண்டும் அவர்களை மீட்டெடுத்து இருக்கிறேன். தமிழக மீனவர்களும் இந்திய நாட்டு குடிமக்கள் தான் என்பதை பாரதப் பிரதமருக்கு உணர்த்தி; வலுவான, உறுதியான, ஆக்கப்பூர்வமான, ராஜதந்திர நடவடிக்கைகளை எடுத்து இந்தப் பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பல முறை வலியுறுத்தி இருக்கிறேன்.

பரம்பரை பரம்பரையாக, மீன்பிடித்து வரும் அப்பாவி தமிழக மீனவர்களை துன்புறுத்தும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள இலங்கை அரசுக்கு அறிவுரை கூற வேண்டும் என்றும் வற்புறுத்தி இருக்கிறேன். ஆனால், மத்திய அரசோ தமிழக மீனவர்கள் என்றால் இந்திய நாட்டிற்கு அப்பாற்பட்டவர்கள் என்று நினைத்தோ என்னவோ,தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறது. மத்திய அரசின் கையாலாகாத்தனம் காரணமாக தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதல், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நான்கு முறை நடைபெற்று இருக்கிறது. இது உண்மையிலேயே கவலை அளிக்கக் கூடியது.

தமிழக மீனவர்களின் பிரச்னை நிரந்தரமாக தீர்க்கப்பட வேண்டும் எனில், கச்சத்தீவு மீண்டும் நமது நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும். கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கு கிடைத்திட வேண்டும். எனவே தான், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம், உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கிணங்க, கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி; இது குறித்த இந்தியா – இலங்கை உடன்படிக்கை செல்லாது என தீர்ப்பளிக்க வேண்டும் என்று 2008 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடுத்துள்ளேன்.

]இந்த வழக்கில், தமிழக அரசின் வருவாய்த் துறையும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. இந்த வழக்கை விரைவில் எடுத்து விசாரிக்கும் வகையில், உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் நமக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இது மட்டுமல்லாமல், இந்திய அரசின் ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணவும் நான் நடவடிக்கை எடுத்து வருகிறேன். அப்பாவி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் போது, அவர்களை மீட்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எனது அரசு எடுத்து வருகிறது. மீனவர்களின் இன்னல்களை உணர்ந்து, அவர்களுக்கென பல்வேறு சலுகைகளை எனது அரசு அளித்து வருகிறது.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, போதைப் பொருள் கடத்தியதாக கூறி, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு; சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த ஐந்து மீனவர்கள் சார்பாக இலங்கை நீதிமன்றத்தில் வாதாடி, அவர்கள் விடுதலை செய்யப்படுவதற்கான நடவடிக்கையை எனது அரசு எடுத்துள்ளது. அந்த வழக்கிற்கான செலவுகளையும் எனது தலைமையிலான அரசு ஏற்றுள்ளது.

இந்த ஐந்து மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவித் தொகையாக, தலா இரண்டு லட்சம் ரூபாய் எனது தலைமையிலான தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், அவர்களது குடும்பங்கள் அன்றாட வாழ்க்கை நடத்திடும் வகையில், மாதந்தோறும் 7,500 ரூபாய் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

இவர்கள் தவிர, அண்மையில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 19 தமிழக மீனவர்கள் இலங்கை சிறைச்சாலைகளில் உள்ளனர்.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதல்களை இந்திய அரசு கடுமையாகக் கண்டிக்க வேண்டும் என்றும்; தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதற்கும்; கொடூரமாக துன்புறுத்தப்படுவதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வலுவான நடவடிக்கைகளை ராஜதந்திர முறையில் இனிமேலாவது மேற்கொள்ள வேண்டும் என்றும்; டெல்லியில் உள்ள இலங்கை நாட்டு தூதரக அதிகாரியை நேரில் வரவழைத்து, இந்தியாவின் வலுவான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றும், இந்தத் தருணத்தில் மத்திய அரசைக் கேட்டுக் கொள்வதோடு, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக ஏற்படுத்தப்பட்ட இந்தியா – இலங்கை நாடுகளுக்கு இடையேயான கச்சத்தீவு உடன்படிக்கையை இந்தியா திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

இல்லையெனில், காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்ய உச்ச நீதிமன்றத்தை அணுகி வெற்றி பெற்றதைப் போல்; கச்சத்தீவு பிரச்னையிலும் என்னால் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு வரும் போது, வலுவான வாதங்களை முன் வைத்து சட்ட ரீதியாக இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்" என்றார்.