Published:Updated:

ராணுவ (ஹெலிகாப்டர்) ரகசியத்தை உடைத்த ஓ.பன்னீர்செல்வம்!

ராணுவ (ஹெலிகாப்டர்) ரகசியத்தை உடைத்த ஓ.பன்னீர்செல்வம்!
ராணுவ (ஹெலிகாப்டர்) ரகசியத்தை உடைத்த ஓ.பன்னீர்செல்வம்!

'அவரை சாலை வழியாக வாகனத்தில் கொண்டு செல்வது உயிருக்கு ஆபத்தானது, ஓரிரு மணி நேரத்தில் சென்னைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்; பயணிகள் விமானத்திலும் செல்ல முடியாது' என்று சொல்லப்படவே, உடனே ஓ.பி.எஸ். தனக்கு தெரிந்தவர்களிடம் தனியார் ஏர் ஆம்புலன்ஸை புக் பண்ண சொல்லியுள்ளார். அது உடனே கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டதும், ராணுவ ஏர் ஆம்புலன்ஸைப் பெறுவதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பேசியுள்ளார்.

ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் விவகாரம், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பதவிக்கு சிக்கலைத் தரும் வகையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. 'இருவரும் ராஜினாமா செய்யவேண்டும்; சாதாரண மக்களாக இருந்தால், இதுபோல் செய்வீர்களா?' என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இந்த நிலையில் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக பி.ஜே.பி-யிலும், ஓ.பி.எஸ்ஸூக்கு எதிராக அ.தி.மு.க-விலும் இப்பிரச்னை தொடர்பாக, உள்ளடி வேலைகள் அதிவேகமாக நடந்து கொண்டிருக்கின்றன.

மதுரையில் கடந்த வருடம் நடந்த அ.தி.மு.க. விழாவில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரால் திட்டமிட்டு பெயர்ப்பலகையில் ஓ.பன்னீர் செல்வத்தின் பெயர் புறக்கணிக்கப்பட்டது, கட்சிக்குள் மிகப்பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது. அப்போது, மதுரையில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், ஆதரவு எம்.எல்.ஏக்கள் சிலரிடம் ''இங்கு உள்ளவர்கள் எனக்கு முக்கியத்துவம் தராதது பற்றி கவலையில்லை. மத்திய அரசுக்கு நான்தான் செல்லப்பிள்ளை. அவர்கள் என்னைத்தான் முதலமைச்சராகப் பார்க்கிறார்கள். டெல்லி சென்றால் பிரதமர், மத்திய அமைச்சர்களை என்னால் உடனடியாகச் சந்திக்க முடியும்'' என்று பெருமையாகக் கூறினார். அப்படிப்பட்ட ஓ.பன்னீர் செல்வம், ஜூலை 24-ம் தேதி டெல்லி சென்றபோது, அவரை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுத்ததோடு மட்டுமல்லாமல், அதை ட்விட்டரிலும் பதிவிட்டார். ஓ.பி.எஸ்ஸிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தன் மீது நிர்மலா சீதாராமன் கோபமாக இருக்கிறார். அவரைக் கூல் படுத்தலாமே என்று நினைத்து, 'தம்பியின் சிகிச்சைக்கு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் கொடுத்து உதவியதற்கு நன்றி சொல்ல வந்தேன்' என்று ஊடகத்தினருக்கு பன்னீர் அளித்த பேட்டியை, இவ்வளவு பெரிய விவகாரமாக்குவார்கள் என்று அவர் நினைக்கவில்லை.

'பேரிடர் காலத்திலும், போர்ச்சூழலிலும் மட்டுமே ராணுவத்திலுள்ள ஏர் ஆம்புலன்ஸ்களைப் பயன்டுத்த முடியும். தனி நபர்கள் பயன்டுத்திக்கொள்ள விதிகளில் இடமில்லை' என்று ஒரு தரப்பும், 'வி.ஐ.பி-க்கள் நினைத்தால், அதற்கான கட்டணத்தைச் செலுத்தி அவசர நேரத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்' என்று மற்றொரு தரப்பும் விவாதித்து வருகின்றன. இந்த நிலையில் ஜூலை 1-ம் தேதி, மதுரைக்கு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வந்தது ஏன் என்பது பற்றிப் பார்ப்போம்.

ஓ.பி.எஸ்ஸுக்கு ராஜா, பாலமுருகன், சண்முக சுந்தரம் என்று மூன்று தம்பிகள். இரண்டாவது தம்பியான ஓ.பாலமுருகன், அரசியல் கூட்டங்களில் தலைகாட்ட மாட்டார். விவசாயம், ஃபைனான்ஸ் என்று தொழிலில் ஈடுபட்டு வந்தார். ஓ.பி.எஸ்ஸுக்கு இவர் மீது மிகுந்த பாசம். சமீபகாலமாக இதயநோய் மற்றும் கல்லீரல் பாதிப்பால் அவர் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் அவரின் உடல்நிலை கடந்த 1-ம் தேதியன்று மிகவும் சீரியஸானது. உடனே அவரை மதுரை அப்போலோவுக்குக் கொண்டுவந்தனர். அங்கு தீவிர சிகிசைப்பிரிவில் சேர்க்கப்பட்டார். அன்று கட்சி நிகழ்ச்சியில் வெளியூரில் இருந்த ஓ.பி.எஸ்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் உடனே அப்போலோ சி.இ.ஓ. ரோஹினியிடம் பேசி, தன் தம்பிக்கு சிறப்பான சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஓ.பி.எஸ். தம்பி, மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவகாரம், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோருக்குத் தெரியாது. மதுரையிலுள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களில் இரண்டு பேர் ஓ.பி.எஸ். ஆதரவாளராக இருந்தனர். அதில் எஸ்.எஸ். சரவணன், எடப்பாடி அணிக்கு போய்விட்டார். மிச்சம் இருப்பது சோழவந்தான் மாணிக்கம் மட்டுமே. அதனால், மதுரையில் ஓ.பி.எஸ். ஆதரவாளர் என்று யாருமில்லை. அதனால் ஓ.பி.எஸ். தம்பி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தகவல், அரசல் புரசலாக வெளியில் தெரிந்தும் கட்சி நிர்வாகிகள் யாரும் சென்று பார்க்கவில்லை.

இந்த நிலையில் பாலமுருகனின் உடல்நிலை மிகவும் மோசமாகிக் கொண்டு போனது. மேல் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் அல்லது சென்னை அப்போலோவுக்குக் கொண்டு செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனை மருத்துவர்கள் கூற, உடனே ஓ.பி.எஸ்., 'சென்னை அப்போலோவில் அட்மிட் செய்யுங்கள்' என்று கூறிவிட்டார். அதேநேரம், 'அவரை சாலை வழியாக வாகனத்தில் கொண்டு செல்வது உயிருக்கு ஆபத்தானது, ஓரிரு மணி நேரத்தில் சென்னைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்; பயணிகள் விமானத்திலும் செல்ல முடியாது' என்று சொல்லப்படவே, உடனே ஓ.பி.எஸ். தனக்கு தெரிந்தவர்களிடம் தனியார் ஏர் ஆம்புலன்ஸை புக் பண்ண சொல்லியுள்ளார். அது உடனே கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டதும், ராணுவ ஏர் ஆம்புலன்ஸைப் பெறுவதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பேசியுள்ளார். இதற்குக் காரணம், சில மாதங்களுக்கு முன் குரங்கணி மலையில் தீ விபத்து ஏற்பட்டபோது, நிர்மலா சீதாராமனால் அனுப்பி வைக்கப்பட்ட விமானப்படையைச் சேர்ந்த மீட்பு ஹெலிகாப்டர்கள், ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டதை நேரில் பார்த்திருந்தார். அதை நினைவில் வைத்தே, நிர்மலா சீதாராமனிடம் உதவி கோரினார். இதையடுத்து உடனே அதற்கு ஏற்பாடு செய்தார் மத்திய அமைச்சர். இந்த ஏற்பாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கே தெரியாதாம். இது சம்பந்தமாக அவரிடம் எந்த உதவியும் ஓ.பி.எஸ். கோரவில்லை. 

அன்று மாலை ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் பெங்களூரிலிருந்து மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட அப்போலோவிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் 20 நிமிடத்தில் விமான நிலையத்தின் பாதுக்காக்கப்பட்ட வழியாக ரன்-வேக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த ஹெலிகாப்டரில் பாலமுருகனின் குடும்பத்தினரும் சென்றனர். மதுரை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் ஒருவர் கொண்டு செல்லப்பட்டது இதுவே முதல்முறை. இந்த விஷயம் விமான நிலைய அதிகாரிகளுக்குக் கடைசி நேரத்தில்தான் தெரியவந்துள்ளது. பாதுகாப்புத் துறை அமைச்சகத்திலிருந்து உத்தரவு வந்ததால், எந்தக் கேள்வியும் கேட்காமல் சோதனையும் செய்யாமல் அனுப்பி வைத்தனர். "மிக முக்கியமானதாகக் கருதப்படும் உறுப்புமாற்று அறுவை சிகிச்சைக்குக்கூட ராணுவ ஹெலிகாப்டர்கள் இதுவரை பயன்படுத்தப்பட்டதில்லை" என்கிறார்கள் விமான நிலைய அதிகாரிகள். 

ராணுவ ஹெலிகாப்டரில் ஓ.பி.எஸ். தம்பி கொண்டு செல்லப்பட்ட விவகாரம், அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதாம். ஓ.பி.எஸ் உடன் முறைத்துக் கொண்டிருந்த மற்றொரு தம்பி ஓ.ராஜா கூட அதன் பின்னர் அவருடன் ராசியாகி விட்டாராம். சென்னை அப்போலோவில் சேர்க்கப்பட்ட பாலமுருகனை, எடப்பாடி, உட்பட அமைச்சர்கள் வந்து பார்த்தபோதுதான், அவரை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கொண்டு வந்ததை ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர்களுடன் ஓ.பி.எஸ். நேரடித் தொடர்பு வைத்திருப்பதைப் பார்த்து, அப்போதே அதிர்ந்திருக்கிறார் எடப்பாடி. தம்பியின் உடல்நிலை ஓரளவு தேறிவந்த நிலையில்தான், இதுவரை பாதுகாத்து வந்த ராணுவ ஹெலிகாப்டர் ரகசியத்தை இப்போது போட்டு உடைத்திருக்கிறார் ஓ.பி.எஸ். என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

அடுத்த கட்டுரைக்கு