
அ.தி.மு.க அணிகளின் டெல்லி காவடி
போயஸ் கார்டன் போல ஆகிவிட்டது டெல்லி. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் போட்டி போட்டுக்கொண்டு டெல்லி வந்து மத்திய அரசுக்கான விசுவாசத்தை அகலமாக்கிக்கொண்டு செல்கிறார்கள். சும்மாவே விசுவாசம் காட்ட டெல்லி வரும் அவர்கள், ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் என்றால் வராமல் இருப்பார்களா? அதுவும் எடப்பாடி பழனிசாமியை, பிரதமர் மோடியும் பன்னீரை, பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷாவும் வெற்றிலை பாக்கு வைத்து அழைக்காத குறையாக அழைத்தபிறகு?
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான ராம்நாத் கோவிந்த், 23-ம் தேதி காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்போவதாக அந்தக் கூட்டணியின் சார்பில் அறிவித்தனர். அவரை ஆதரிக்கும் முதல்வர் எடப்பாடியும் ஓ.பன்னீர்செல்வமும் அதற்காக முதல் நாளே டெல்லி வந்து சேர்ந்தனர்.
22-ம் தேதி இரவு எட்டு மணிக்கு டெல்லி விமான நிலையத்தில் இறங்கிய எடப்பாடியை, நேராக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அனந்தகுமார் வீட்டுக்கு வரச்சொல்லி இருந்தார்கள். அங்கு சென்ற அவர், தயாராக இருந்த வேட்புமனுவில் ராம்நாத் கோவிந்த்தை முன்மொழிந்து கையெழுத்திட்டார். அவருடன் சென்ற மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அ.தி.மு.க-வின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் வேணுகோபால் மற்றும் துணைத்தலைவர் நவநீதகிருஷ்ணன் ஆகியோரும் கையெழுத்திட்டனர். அனந்தகுமார் வீட்டுக்குப் பக்கத்தில்தான் தம்பிதுரையின் வீடு. அங்கு சென்ற எடப்பாடி, சில நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்துவிட்டு, அதன்பிறகு தமிழ்நாடு இல்லத்துக்குச் சென்றார்.

அங்கு முதல்வர் போனபோது பத்திரிகையாளர்கள் சிலர் இருந்தார்கள். அவர்களை உள்ளே விடவில்லை. ‘‘நாங்கள் என்ன தீவிரவாதிகளா... ஏன் எங்களுக்கு அனுமதி இல்லை?” என்று வாசலில் பத்திரிகையாளர்கள் குரல்கொடுக்க, அதைக் கண்டு கொள்ளாமலேயே படி ஏறிச்சென்றார் எடப்பாடி. கடந்த முறை முதல்வர் வந்தபோது விலங்குகளுக்கு ஆதரவான பீட்டா அமைப்பைச் சேர்ந்தவர்கள், தமிழ்நாடு இல்லத்தில் அவர் தங்கியிருந்த அறை வாசலுக்கே சென்று கோஷமிட்டு எதிர்ப்பு தெரிவித்ததால், இம்முறை பாதுகாப்பை அதிகப்படுத்தி இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
‘செய்தியாளர்களுக்கு அனுமதி இல்லை’ என்று மெயின் கேட் வாசலிலேயே அனைவரும் தடுக்கப்பட்டனர். ஆனால், பொதுமக்கள் சாதாரணமாகப் போய் வருவதையும், செய்தியாளர்கள் மட்டும் குறிவைத்துத் தடுக்கப்படுவதையும் பார்த்த பத்திரிகையாளர்கள், தமிழ்நாடு இல்லம் எதிரில் தர்ணா போராட்டத்தில் அமைதியான முறையில் உட்கார்ந்து எதிர்ப்பைத் தெரிவித்தனர். அந்தப் போராட்டம் மறுநாள் காலை வரை தொடர்ந்தது. ஆனாலும், அதை அவர் கண்டுகொள்ளவே இல்லை.
23-ம் தேதி காலை 10 மணிக்கு ராம்நாத் கோவிந்த் வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வில் பங்கேற்க நாடாளுமன்றம் புறப்பட்டார் முதல்வர். அசோகா ஹோட்டல் அருகே சென்ற அவரது வாகனம், அங்கிருந்து யூ-டர்ன் அடித்து வேறு சாலை வழியாக நாடாளு மன்றம் சென்றது. ‘அது பிரதமர் இல்லம் செல்லும் வழி’ என்று போலீஸ் அதிகாரி யாரோ சொல்ல, அதன் காரணமாகவே திரும்பி யிருக்கிறார்கள். ஆனால், வலதுபக்கம் திரும்பாமல் இடதுபக்கம் திரும்பினால் நாடாளுமன்றம் செல்லலாம் என்பதுகூட தெரியாத நபர்கள் பைலட் வாகனத்தில் இருந்ததுதான் கொடுமை.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலகக் கட்டடத்தில் பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டவர்கள் எடப்பாடியை வரவேற்றனர். ஓ.பன்னீர்செல்வத்துக்கும் உரிய மரியாதையுடன் வரவேற்பு கிடைத்தது. பிரதமர் இருவருடனும் தனித்தனியாகச் சில நிமிடங்கள் பேசி நலம் விசாரித்தார். எப்போதும்போல் பன்னீருடன் மைத்ரேயன் இருந்தார்.

அனைவரையும் வரவேற்று முடித்தபிறகு, வேட்புமனு தாக்கல் செய்ய மக்களவைச் செயலாளர் அனுப் மிஷ்ரா அலுவலகத்துக்குச் சென்றனர். அங்கு எடப்பாடி இரண்டாம் வரிசையில் உட்கார வைக்கப்பட்டார். பன்னீருக்கு அதற்கும் பின்னால்தான் உட்கார இடம் கிடைத்தது. நொந்துபோனார் பன்னீர். முதல் வரிசையில் வேட்பாளருடன், பிரதமர் மோடி, அமித் ஷா, அத்வானி உள்ளிட்டவர்கள் அமர்ந்திருந்தனர். வேட்புமனு தாக்கலுக்கு முன்பும் பின்னரும், எடப்பாடியும் பன்னீரும் இரண்டு முறை நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தும் பார்க்கவே இல்லை. இருவரும் தலையைக்குனிந்தவாறு கடந்து சென்று, அந்தச் சந்தர்ப்பத்தை வேண்டு மென்றே தவிர்த்தனர்.
‘தனக்கு எடப்பாடிக்கு இணையான மரியாதை கிடைக்கவில்லை’ என்று பன்னீர்செல்வம் பின்னர் வருத்தப்பட்டிருக்கிறார். எடப்பாடியோ, ‘தன்னை அனந்தகுமார் இல்லத்துக்கு வரவழைத்து வேட்புமனுவில் கையெழுத்து வாங்கியவர்கள், பன்னீர் தங்கியிருந்த மைத்ரேயன் வீட்டுக்கு வேட்புமனுவைக் கொடுத்தனுப்பிக் கையெழுத்து பெற்றிருக்கிறார்களே’ என்று தனது ஆதரவு எம்.பி-க்களிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார். மொத்தத்தில் இரண்டு பேரையும் சாமர்த்தியமாக பேலன்ஸ் செய்திருந்தது பி.ஜே.பி.
எடப்பாடி தங்கிய தமிழ்நாடு இல்லத்தில் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதால், பன்னீருக்கு அன்று அதிக முக்கியத்துவத்தைத் தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும் கொடுத்தன.
- டெல்லி பாலா