Published:Updated:

நாற்காலிகள் காட்டிய நாகரிகம்! - சரித்திரம் படைத்தது சட்டப் பேரவை

நாற்காலிகள் காட்டிய நாகரிகம்! - சரித்திரம் படைத்தது சட்டப் பேரவை
பிரீமியம் ஸ்டோரி
நாற்காலிகள் காட்டிய நாகரிகம்! - சரித்திரம் படைத்தது சட்டப் பேரவை

ப.திருமாவேலன்

நாற்காலிகள் காட்டிய நாகரிகம்! - சரித்திரம் படைத்தது சட்டப் பேரவை

ப.திருமாவேலன்

Published:Updated:
நாற்காலிகள் காட்டிய நாகரிகம்! - சரித்திரம் படைத்தது சட்டப் பேரவை
பிரீமியம் ஸ்டோரி
நாற்காலிகள் காட்டிய நாகரிகம்! - சரித்திரம் படைத்தது சட்டப் பேரவை

ஜூன் 23-ம் தேதி - தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் மட்டுமல்ல; தமிழக அரசியல் வரலாற்றிலும் பொன் எழுத்துகளால் பொறிக்கத்தக்க முக்கியமான நாள். அரசியல் ஜனநாயக மாண்பை ஆளும் அ.தி.மு.க-வும் எதிர்க்கட்சியான தி.மு.க-வும் ஒருசேரக் காப்பாற்றி, தமது உன்னதக் கடமையை ஒருசேர ஆற்றியிருந்தன.

செய்த தவறுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டதும், பரந்த மனதோடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அதை ஏற்றுக்கொண்டதும் அரசியல் ஆச்சர்யங்கள். ஜெயலலிதாவும் கருணாநிதியும் பேரவைக்குள் இருந்திருந்தால் இந்த நிகழ்வு நடந்திருக்குமா என்பது ஐயமே. ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், இன்று முதலமைச்சர் நாற்காலியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமியும் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ஸ்டாலினும் இந்த ஒரு நிகழ்வுக்காகப் பாராட்டுக்குரியவர்கள்.

நாற்காலிகள் காட்டிய நாகரிகம்! - சரித்திரம் படைத்தது சட்டப் பேரவை

கடந்த பிப்ரவரி 18-ம் நாள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் செய்த பாவத்தை தி.மு.க இதன்மூலம் கழுவிவிட்டது. அன்றைய தினம் அ.தி.மு.க. அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அ.தி.மு.க-வில் இருந்து தனி அணியாகப் பிரிந்த ஓ.பன்னீர்செல்வம் தன்னோடு பத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு சென்றதால், ‘எடப்பாடி பழனிசாமிக்கு அறுதிப் பெரும்பான்மை இருக்கிறதா’ என்ற அச்சம் இருந்த நாள் அது. கூவத்தூர் குளிர்சாதனக் கொட்டடியில் அடைக்கப்பட்டு, அங்கிருந்தே உயர்ரகக் கூண்டு வாகனங்களில் அழைத்து வரப்பட்ட ஆளும்தரப்பு எம்.எல்.ஏ-க்கள் சுதந்திர எண்ணத்தோடு வாக்களித்தால் எடப்பாடி பழனிசாமியின் அரசு கவிழ்ந்துபோகும் என்று தி.மு.க நினைத்தது. ஓர் அரசியல் கட்சி இப்படி நினைப்பதில் தவறு இல்லை.

எனவே, எம்.எல்.ஏ-க்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால், அவர்களில் சிலர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக மாறி, எடப்பாடி மீதான நம்பிக்கையை மாற்றிக்கொள்ளக் கூடும் என்றும் தி.மு.க கணக்கிட்டது. அதுவும் தவறில்லை. ‘கோடிகள் தருகிறோம், கான்ட்ராக்ட்கள் தருகிறோம், தங்கம் தருகிறோம், தீவு வாங்கித் தருகிறோம், நான்கு ஆண்டு சோறு போடுகிறோம்...’ என்கிற அளவுக்கு வாக்குறுதிகள் சசிகலா தரப்பால் தரப்பட்டன. ஓ.பன்னீர்செல்வமும் தனது ‘சக்திக்கு’ உட்பட்டு சில வாக்குறுதிகளை வழங்கினார். கருவாட்டு வாசனை இருக்கும் பக்கமெல்லாம் எம்.எல்.ஏ பூனைகள் அலைந்ததால், மதிலுக்கு எந்தப்பக்கம் குதிப்பார்கள் என்ற அச்சம் எல்லோருக்கும் இருந்தது. அது, தி.மு.க-வுக்கு அதிகமாகவே இருந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்லத் தேவையான எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையைவிடக் கூடுதலாக ஐந்து பேர்தான் எடப்பாடி பக்கம் இருந்தார்கள். அவர்களை மனமாற்றம் செய்ய பன்னீர்செல்வத்துக்குக் கொஞ்சம் கால அவகாசம் கிடைக்கும் ஏற்பாடாக தி.மு.க சில காரியங்களைச் செய்தது.

பேரவையில் ஒரு கட்சி எந்தக் கோரிக்கையையும் வைக்கலாம். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விவாதிக்கலாம். ஆனால், பேரவைத் தலைவரின் தீர்ப்பே இறுதியானது. அந்தத் தீர்ப்பை விமர்சிக்கலாம். நீதிமன்றத்துக்கும் கொண்டு போகலாம். ஆனால், பேரவைத் தலைவரை அவையில் இருந்து பலாத்காரமாக வெளியேற்ற முடியுமா? அதை அன்று செய்தது தி.மு.க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவையை நடத்தவிடாத தி.மு.க உறுப்பினர்கள், பேரவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டதும், அவரைப் பேசவிடாமல் தடுத்ததும், அவரது நாற்காலி அருகே போய் அச்சுறுத்தியதும், நாற்காலியில் இருந்து எழுந்த அவரைக் கையைப் பிடித்து இழுத்ததும், அவரது நாற்காலியை மியூஸிக்கல் சேர் மாதிரி நினைத்துக்கொண்டு தி.மு.க உறுப்பினர்கள் சிலர் அதில் உட்கார்ந்து பார்த்ததுமான காட்சிகள் மிகமிகக் கேவலமானவை. எப்படியாவது கலவரம் ஏற்படுத்தி, சபையைக் கலைப்பதற்காகப் போட்ட திட்டம் அது. இதை முன்கூட்டியே அ.தி.மு.க தரப்பு அறிந்ததால், கைகட்டி வேடிக்கை பார்த்தது. அனைத்து தி.மு.க உறுப்பினர்களும் போய், அ.தி.மு.க உறுப்பினர்களைத் தாக்கியிருந்தாலும் திருப்பி அடித்திருக்க மாட்டார்கள். பதவியைக் காப்பாற்றிக்கொள்ள நல்ல பிள்ளையாக உட்கார்ந்து இருந்தார்கள் அவர்கள். ‘கெட்ட பிள்ளைகள்’ என்று பேர் வாங்கினார்கள் தி.மு.க உறுப்பினர்கள்.

நாற்காலிகள் காட்டிய நாகரிகம்! - சரித்திரம் படைத்தது சட்டப் பேரவை

பெரம்பூர் எம்.எல்.ஏ வெற்றிவேல் (அ.தி.மு.க.) இதுபற்றி அவை உரிமைக்குழு விசாரணைக்குப் புகார் கொடுத்தார். தி.மு.க உறுப்பினர்களான எஸ்.அம்பேத்குமார் (வந்தவாசி). கே.எஸ்.மஸ்தான் (செஞ்சி), கே.எஸ்.ரவிச்சந்திரன் (எழும்பூர்), என்.சுரேஷ்ராஜன் (நாகர்கோவில்), சு.கார்த்திகேயன் (ரிஷிவந்தியம்), பி.முருகன் (வேப்பனஹள்ளி), கு.க.செல்வம் (ஆயிரம்விளக்கு) ஆகிய ஏழு பேர் மீது உரிமைக்குழு விசாரணை நடந்தது. உரிமைக்குழுத் தலைவரும் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் இதை விசாரித்தார்.

அவரது அறிக்கைப்படி, இந்த ஏழு பேரும் ஆறு மாத காலத்துக்குச் சபை நடவடிக்கைகளிலிருந்து நீக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த ஆறு மாத காலத்துக்கு அவர்களது ஊதியம் வராது. எம்.எல்.ஏ-வுக்கான சலுகைகளையும் இழப்பார்கள். இப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டு இருந்தால் தி.மு.க-வுக்கு அது மிகப் பெரிய தலைகுனிவாக இருந்திருக்கும்.

இதை முன்கூட்டியே உணர்ந்த அந்தக் கட்சியின் செயல்தலைவர் முந்திக்கொண்டுவிட்டார். தி.மு.க-வின் மூத்த பிரமுகர்கள் சிலரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் பேரவைத் தலைவர் தனபாலையும் சந்திக்க அனுப்பினார். ‘நடந்த தவறுக்கு நாங்கள் மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்கிறோம். இந்த நடவடிக்கையைத் தவிர்க்கவும்’ என்று வேண்டுகோள் வைத்தார்கள். எடப்பாடியும் தனபாலும் பேசி எடுத்த முடிவின்படி தி.மு.க-வுக்கு மன்னிப்பு வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 21-ம் தேதி பேரவைத் தலைவர் தனபாலை தி.மு.க உறுப்பினர்கள் ஏழு பேரும் சந்தித்து, ‘நடந்த நிகழ்வுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இனிமேல் இதுபோன்று நடந்துகொள்ள மாட்டோம்’ என்றும் எழுதிக் கொடுத்தார்கள். இதைத்தான் 23-ம் தேதி சபையில் வெளிப்படையாகச் சொன்னார் தனபால். “இதை இத்தோடு விட்டுவிடுவோம்” என்றார் தனபால்.

பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கல் செய்த அறிக்கை திரும்பப் பெறப்பட்டு, தனபாலின் தீர்ப்பு பேரவையின் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

‘தி.மு.க உறுப்பினர்கள்மீது நடவடிக்கை தேவையில்லை’ என்ற தீர்மானத்தை அ.தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக ஏற்று ‘ஆம்’ என்று சொன்ன காட்சி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. நிகழ்வு நடந்த பிப்ரவரி 18-ம் தேதியே, பேரவைத் தலைவர் அறைக்குச் சென்று அவரிடம் மன்னிப்புக் கேட்டார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். மீண்டும் பகிரங்கமாகச் சபையிலும் ஒருமுறை வருத்தத்தையும் மன்னிப்பையும் ஸ்டாலின் பதிவுசெய்தார்.

நாற்காலிகள் காட்டிய நாகரிகம்! - சரித்திரம் படைத்தது சட்டப் பேரவை

எழுத்துமூலமாகவே மான அவமானம், ஈகோ பார்க்காமல் எழுதிக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இப்படி இவர்கள் கடிதம் கொடுத்தால், அதை ஏற்க வேண்டிய கடமை தனபாலுக்கோ, எடப்பாடி பழனிசாமிக்கோ இல்லை. ‘இதுதான் நேரம்’ என்று தி.மு.க-வைப் பழிவாங்கி இருக்கலாம். ஏனென்றால், ஏழு பேர் என்ற எண்ணிக்கை தி.மு.க-வுக்குக் குறைந்தால் அதனால் லாபம் அடையப்போவது எடப்பாடியும் தனபாலும்தான். நாளையே தி.மு.க ஏதாவது ஒரு தீர்மானம் கொண்டுவந்தால் அவர்களுக்கு ஏழு வாக்குகள் குறைவாகத்தான் விழும். இந்த அரசியல் கணக்குப்போடாமல் அ.தி.மு.க-வும் நடந்து கொண்டுள்ளது.

அரசியல் நாகரிகம் என்பது தமிழ்நாட்டில் அற்றுப்போன ஒரு சூழ்நிலையில், ‘எதிர்க்கட்சிகள்’ என்றால் ‘எதிரிக்கட்சிகள்’ என எலியும் பூனையுமாகத் தெருவில், திருமண வீடுகளில், சபையில் நடந்துகொள்ளும் காலத்தில்... இப்படிப்பட்ட நயத்தக்க நாகரிகத்தை இரண்டு கட்சிகளிலும் பார்க்க முடிவது பரவசத்தை ஏற்படுத்துகிறது. அரசியல் போட்டிகள் என்பவை தேர்தல் நேரத்தில் மட்டும்தான். மற்ற நேரங்களில் மக்களுக்குச் சேவை செய்வதில் போட்டி போடுங்கள். அதுதான் எடப்பாடிக்கும் நல்லது; ஸ்டாலினுக்கும் நல்லது. நீங்கள் இருவருமே உங்களை நிரூபிக்க வேண்டிய இடத்தில் நிற்கிறீர்கள்!