Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கோ.பாலன், சென்னை-3.

தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான கிராம மக்கள் குடிநீர் இல்லாமல் தவிக்கிறார்கள். இதெல்லாம் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தெரியுமா? தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஏதாவது உதவி செய்ய வேண்டாமா?

உங்களது ஆதங்கம் நம்முடைய மக்கள் பிரதிநிதிகளில் எத்தனை பேருக்கு இருக்கும்? ‘தண்ணீர்ப் பிரச்னை, சுகாதார வசதி இல்லாதது, போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றுக்கும் நமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, அவரவர் தலையெழுத்து’ என்று எம்.எல்.ஏ-க்களும் எம்.பி-க்களும் நினைக்கிறார்கள். இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டருடனோ, அரசு அதிகாரிகளுடனோ இவர்கள் பேசியிருக்கவும் மாட்டார்கள். குடிநீர்ப் பஞ்சம் என்று எப்போதாவது மக்கள் சாலை மறியல் செய்யும்போதுதான் இவர்களுக்கு உண்மை சுடும். அப்போதும், ‘உடனடியாக நடவடிக்கை எடுப்போம். இதுவரை எங்கள் கவனத்துக்குப் பொதுமக்கள் இதைக் கொண்டு வரவில்லை’ என்று மையமாகப் பேட்டி தருவார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தண்ணீர்ப் பிரச்னை என்பது கிராமப் பிரச்னை மட்டுமல்ல, பெரும்பாலான நகர்ப் பகுதிகளிலும் குடிநீர்ப் பஞ்சம் உள்ளது. தமிழக அரசு இதில் கவனம் செலுத்தி, போர்க்கால நடவடிக்கையில் இறங்கியாக வேண்டும்.

கழுகார் பதில்கள்!

இ.சுல்தான் ஸலாஹீத்தீன் மழாஹிரி, காயல்பட்டினம்.

ஜெ.தீபாவின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது ‘காமெடி செய்கிறாரே’ என்ற எண்ணம் ஏற்படுகின்றதே?

அவர் சீரியஸாகத்தான் நடந்துகொள்கிறார். நமக்குத்தான் அது காமெடியாகத் தெரிகிறது. அவர் உண்மையில் தன்னை ஜெயலலிதாவாகவே நினைத்துக்கொள்கிறார். அப்படியே நடந்து கொள்ளவும் செய்கிறார். அது ஜெயலலிதா செய்தபோது சீரியஸாகத் தெரிந்தது; தீபா செய்யும்போது காமெடியாக இருக்கிறது. ஜெயலலிதாவுக்கு அது இயல்பு; தீபாவுக்கு இது நடிப்பு.

தனுஷ் நடித்த ‘படிக்காதவன்’ படத்தில் ஒரிஜினல் வில்லன் சுமனும் காமெடி வில்லன் விவேக்கும் பேசும் காட்சிகளை நினைவில்கொள்ளவும்!

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

மன்னார்குடியில் தினகரனுக்கு ஆதரவாக நடைபெற இருந்த அ.தி.மு.க கூட்டத்துக்கு போலீஸ் தடை விதித்திருக்கும் சம்பவம் உணர்த்தும் உண்மை என்ன?


தினகரனுக்கான எதிரிகள் அ.தி.மு.க-வுக்குள் மட்டுமல்ல, சசிகலா குடும்பத்துக்குள்ளும் இருக்கிறார்கள் என்பது மன்னார்குடியில் வெட்டவெளிச்சமாகத் தெரிந்தது. இதில் மறைக்க எதுவும் இல்லை. தினகரனை அவருடைய மாமா திவாகரனும் மாமன் மகன் ஜெயானந்த்தும் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

உமரி பொ.கணேசன், மும்பை-37.

 ‘தமிழகத்தில் உள்ள ஆறுகளில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மணல் அள்ளுவது முற்றிலும் நிறுத்தப்படும்’ என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்கிறாரே?


இப்போது இருக்கும் மணல் எல்லாம் மூன்று ஆண்டுகளுக்குள் மொத்தமாக வழித்து அள்ளப்பட்டுவிடும் என்பதை வேறு வார்த்தைகளில் மாற்றிச் சொல்கிறார் முதலமைச்சர். இப்போதே பல நீர்நிலைகளில் மணல் இல்லை. மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா என்ன?

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

‘அ.தி.மு.க-வையும் தி.மு.க-வையும் தவிர வேறு எந்தக் கட்சி வேண்டுமானாலும் எங்கள் கூட்டணிக்கு வரலாம். அவர்களை ஏற்றுக்கொள்வோம்’ என்கிறாரே பா.ம.க நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ்?

யார் யார் வரலாம் என்று சொல்லிவிட்டால் நல்லது. இல்லாவிட்டால், அட்ரஸ் இல்லாத கட்சிகள் எல்லாம் ஐயா தலைமையில் அணி சேர்ந்துவிடப் போகிறார்கள்!

கழுகார் பதில்கள்!

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14.

ரஜினி தலைமையில் ‘மக்கள் நலக் கூட்டணி’யைப் போல ஒரு புதிய கூட்டணி உருவாகுமா?


உங்களுக்கு ரஜினியைப் பிடிக்காதா?

டி.சி.இமானுவேல், மயிலாடுதுறை.

தினகரன் அணியில் இருக்கும் வெற்றிவேல், இ.பி.எஸ் அணியில் இருக்கும் ஜெயக்குமார், ஓ.பி.எஸ் அணியில் இருக்கும் கே.பி.முனுசாமி... இவர்களின் கருத்துகளை வரிசைப்படுத்துங்களேன்..?


இந்த மூன்று பேரின் கருத்துகளையும் வாசித்தால் மனக்குழப்பம் ஏற்பட்டுத் தீராத காய்ச்சல் வந்துவிடக்கூடும் என்பதால் பதிலைத் தவிர்ப்பது நல்லது என்றே நினைக்கிறேன்.

மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

இப்படிப்பட்டவர்களை வைத்துக்கொண்டு, கட்சியையும் ஆட்சியையும் விரல் அசைவில் நடத்திய ஜெயலலிதாவின் திறமை பற்றி..?

உண்மையில் அவர் புரட்சித் தலைவிதான். அடங்காப் பிள்ளைகளை அச்சத்தால் அடக்கி வைத்த இரும்பு அம்மா அவர்.

எஸ்.நாராயணசாமி, கோயமுத்தூர்.

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் குளம், குட்டைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசு தயக்கம் காட்டுவது ஏன்?


குளம், குட்டைகளில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்பு களை அகற்றுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அப்படி தைரியமாக ஆக்கிரமிப்பு செய்தவர்கள், அரசியல், சாதி, பணம் என்று ஏதோ ஒருவகையில் அதிகாரம் படைத்தவர்களாக இருப்பார்கள். இம்மூன்றையும் எதிர்க்கும் தைரியம் அரசாங்கத்துக்கு உண்டா? கிடையாது. அதனால்தான் அமைதியாக, கண்டும் காணாதது போல இருக்கிறார்கள்.

இதுபோல் நீதிமன்றங்கள் சொல்வது முதன்முறை அல்ல. பல தடவை இதைச் சொல்லிவிட்டார்கள். ஆனாலும் அரசாங்கம் நெளிந்து கொடுக்கிறதே தவிர, நிமிர்ந்து நின்று நடவடிக்கை எடுக்கவில்லை.

கழுகார் பதில்கள்!

என்.டி.டி.வி மீதான நடவடிக்கை என்பது பி.ஜே.பி அரசுக்கு எதிரான குரல்களை முடக்கும் நடவடிக்கையாகவே உள்ளது. இவ்விஷயத்தைக் கண்டித்து ஊடகங்கள் போதுமான அளவுக்கு எதிர்வினையாற்றியதாக நினைக்கிறீர்களா? இல்லை என்றால் ஏன்?

! என்.டி.டி.வி மீதான நடவடிக்கை டெல்லியில் மட்டுமே ஓரளவு பரபரப்பைக் கிளப்பியது. மற்ற மாநிலங்களில், குறிப்பாகத் தமிழகத்தில் எந்தப் பரபரப்பையும் கிளப்பவில்லை என்பது உண்மைதான். கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதலாக இது தெரிந்துவிடக் கூடாது என்பதால், நிதி முறைகேடு தொடர்பான நடவடிக்கையாக நடந்தது. கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேசுபவர்கள்கூட  நிதி தொடர்பான நடவடிக்கை என்றதும் அமைதியானார்கள். இந்த நடவடிக்கை திட்டமிட்டுச் செய்யப்பட்டது என்பதை குல்தீப் நய்யார், அருண் ஷோரி போன்றவர்கள் டெல்லி கண்டனக்கூட்டத்தில் வெளிப்படையாகக் கண்டித்துள்ளனர். இதில் அருண் ஷோரி பேசியதை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அந்தப் பேச்சின் மொழியாக்கம் ஆனந்த விகடன் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

யாரோ ஒருவருக்கு, ஓர் ஊடகத்துக்கு எதிரான நடவடிக்கை யாக இதைப் பார்க்காமல், ஊடக உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கையாக இதைப் பார்க்க வேண்டும்.

இந்திய பிரஸ் கவுன்சில் உறுப்பினரும், ‘அவுட் லுக்’ இதழின் முன்னாள் ஆசிரியருமான கிருஷ்ண பிரசாத், ‘‘ஊடகங்கள் மட்டுமல்ல... இந்தியா என்ற எண்ணமே முற்றுகைக்கு உள்ளாகி இருக்கிறது. செல்வாக்குள்ள பத்திரிகை அதிபர்கள், விவாத நடுவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் காஷ்மீரில் ராணுவ ஜீப்பின் முன்பக்கத்தில் உட்காரவைக்கப்பட்ட காஷ்மீரியைப் போலத் தவிக்கின்றனர்” என்று சொல்லியிருக்கிறார்.

இதைத் தடுக்க வேண்டிய கடமை... பத்திரிகைகள், காட்சி ஊடகங்கள், இணையதள ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருக்குமே உள்ளது.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:  கழுகார் பதில்கள்,  ஜூனியர் விகடன்,  757, அண்ணா சாலை, சென்னை- 600 002  kalugu@vikatan.com  என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!