Published:Updated:

பொம்மைகளுக்காக ஓர் ஆட்டம்!

பொம்மைகளுக்காக ஓர் ஆட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
பொம்மைகளுக்காக ஓர் ஆட்டம்!

ப.திருமாவேலன்

பொம்மைகளுக்காக ஓர் ஆட்டம்!

ப.திருமாவேலன்

Published:Updated:
பொம்மைகளுக்காக ஓர் ஆட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
பொம்மைகளுக்காக ஓர் ஆட்டம்!

லால் கிஷண் அத்வானியைக் காலி செய்வதற்காக நரேந்திர மோடியால் தயாரிக்கப்பட்ட தலித் கசாயம்தான் ராம்நாத் கோவிந்த். இந்தியக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அமித்ஷாவை போட்டிருந்தால்கூட விமர்சனங்கள் வந்திருக்கும். தலித் ஒருவரை வேட்பாளராக நியமித்ததன் மூலம், பேயறைந்தவர்களாக நிற்கிறார்கள் அத்வானி ஆதரவாளர்கள். ‘அத்வானியை ஏன் ஜனாதிபதி ஆக்கவில்லை?’ என்று கேட்டால், ‘நீ தலித் விரோதி’ என்று சொல்லிவிடுவார்களே என்பது தான் கலக்கத்துக்குக் காரணம். மோடி - அமித்ஷா எதிர்பார்த்ததும் இதுதான். மோடியின் சதுரங்கத்தில் ஜனாதிபதியும் சிறு பொம்மை தான்.

எவர் ஒருவரை எந்தப் பதவிக்கு முன்மொழிந்தாலும், அவரது சாதியைப் பார்த்து விமர்சிப்பதும் - பாராட்டுவதும் அறுவறுப்பானது தான். இந்தியச் சமூகத்தின் பொதுப் புத்தி நரம்புகள் சாதியால் ஆனது என்பதால், தவிர்க்க முடியாதது இது. பிராமணர் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தால், ‘பிராமண ஜனாதிபதி வேட்பாளர்’ என்று யாரும் சொல்ல மாட்டார்கள். தலித் ஒருவரை வேட்பாளர் ஆக்கியதும் சொல்கிறார்கள் என்றால், ‘தலித் ஒருவரை ஜனாதிபதி ஆக்குகிறோம்’ என்று தங்களுக்குத் தாங்களே முதுகில் தட்டிக்கொள்கிறார்கள். ‘அந்த அளவுக்கு நாங்கள் சமூகநீதிக் காவலர்கள்’ என்று காட்ட விரும்புகிறார்கள்.

பொம்மைகளுக்காக ஓர் ஆட்டம்!

‘அத்வானி,ஜோஷி, மோகன் பகவத் ஆகிய மூவரில் ஒருவரை ஜனாதிபதி ஆக்குங்கள்’ - என்று பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார் வட்டாரங்கள் கடந்த ஓராண்டு காலமாகத் துடித்துக் கொண்டிருந்தன.இவர்கள் மூவரையுமே தேர்ந் தெடுக்க மோடி விரும்பவில்லை. இவர்கள் கைக்கு அடக்கமானவர்கள் அல்ல. ‘நான்; நான் மட்டுமே’ என்ற தனது போக்குக்குத் தடையாக இருப்பார்கள் என்று முன்கூட்டியே எச்சரிக்கையானார் மோடி. அமித்ஷா பாணியில் சொல்வதாக இருந்தால், ‘சாதுர்ய பனியா’வாக நடந்து கொண்டார். இதைத் தெரிந்த  மோகன் பகவத் ‘எனக்கு விருப்பமில்லை’ என்று விலகிக் கொண்டார்.

 அத்வானிக்கும், ஜோஷிக்கும் பாபர் மசூதி வழக்கை தூசி தட்டிக் கொண்டுவந்து குற்றப் பத்திரிகை  என்ற தடுப்பணையைப் போட்டார்கள். ‘குற்றச்சாட்டுப் பதிவானவர்கள் ஜனாதிபதி ஆக முடியாது அல்லவா’ என்று அவரது ஆதரவாளர்கள் வாயை அடைத்தார்கள். மேலும் விமர்சனம் வரக் கூடாது என்பதற்காகத் தலித் முகமூடி வேறு.

தலித்தை ஜனாதிபதி வேட்பாளர் ஆக்குவதன் மூலம், ஒடுக்கப்பட்ட மக்களின் முகமாகவும் - தலித்தை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பதன் மூலம், யாரையும் விமர்சிக்க விடாமல் முகமூடியாகவும் என இரண்டு தந்திரங்களையும் பி.ஜே.பி. இரட்டையர்கள் செய்து காட்டியிருக்கிறார்கள்.

காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் சார்பில் அறிவிக்க நினைத்தது கோபாலகிருஷ்ண காந்தியை. பி.ஜே.பி-யின் சித்தாந்த எதிரியான மகாத்மா காந்தியின் பேரனை நிறுத்துவதன் மூலமாக நெருக்கடி தர நினைத்தது காங்கிரஸ். அதை அவர்கள் முன்கூட்டியே அறிவித் திருக்க வேண்டும். ‘அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து பொது வேட்பாளரை நியமிக்கலாம்’ என்று மோடி சொன்னதை நம்பி ஏமாந்தது காங்கிரஸ். இவர்களோடு பேசுவதற் காக மூவர் குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவும் வந்து பேசியது. வேட்பாளர் பெயரைக் கேட்டது காங்கிரஸ். பின்னர் சொல்கிறோம் என்று பி.ஜே.பி. மறைத்தது. ‘எப்படியும் நம்மிடம் சொல்லிவிட்டுத்தான் அறிவிப்பார்கள்’ என்று நம்பியது காங்கிரஸ். அதனால், தனது வேட்பாளரையும் அறிவிக்காமல் தள்ளிப் போட்டது காங்கிரஸ். மோடி எதிர்பார்த்ததும் இந்தக் கால தாமதத்தைத்தான். திடீரென ராம்நாத் கோவிந்த் பெயர் அறிவிக்கப்பட்டது. கழுத்தறுபட்டது காங்கிரஸ். தலித் சமூகத்தைச் சேர்ந்தவருக்கு எதிராக காந்தி பேரனை நிறுத்த முடியுமா? அதனால், தனது நிலையக் கலைஞரான மீரா குமாரையே இறக்கிவிட்டார்கள். பிரணாப் முகர்ஜி காலி செய்துவிட்டுப் போகும் நாற்காலியில் யார் உட்காருவது என்பதை விட தலித் பாசம் அதிகம் கொண்டவர் மோடியா, சோனியாவா என்பதை நிரூபிக்கும் தேர்தலாக இது மாறிப்போனது.

“நான் எந்தக் கட்சியும் சார்ந்தவன் அல்ல. அனைவருக்கும் பொதுவானவன்” என்று ராம்நாத் கோவிந்த் சொல்லியிருப்பதைக் கேட்கும்போது புல்லரிக்கிறது. அனைவருக்கும் பொதுவானவரைத் தேர்ந்தெடுக்க புலி, புல்லைத் தின்னும் காலம் உருவாகி விடவில்லை. ‘இந்தியாவில் தீண்டாமை வெகுவாகக் குறைந்துள்ளது’ என்றும், ‘கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்களைச் சேர்ந்த தலித்துகளைத் தாழ்த்தப்பட்ட விதிகளின் வரிசையில் சேர்ப்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது’ என்றும், ‘இஸ்லாமும், கிறிஸ்தவமும் இந்தத் தேசத்துக்கு அந்நியமானவை’ என்றும், ‘வீடு கொடுப்பதில் மட்டும்தான் தீண்டாமை உள்ளது. பணியில் சேருவது போன்றவற்றில் சாதிப்பாகுபாடு குறைந்துவிட்டது’ என்றும் வெவ்வேறு காலகட்டத்தில் சொன்னவர்தான் ராம்நாத் கோவிந்த்.

‘சாதி  இல்லை என்று பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுத்தால் போதும், சாதியை ஒழித்து விடலாம்’ என்பதும் இவரது கண்டுபிடிப்புதான். இந்திய அரசியலமைப்புப்படி தீண்டாமை தடை செய்யப்பட்டது. ‘தீண்டாமை பெருங்குற்றம்’ என்று எல்லாப் பாடப்புத்தகங்களிலும் இருக்கிறது. கேன்சர் பாதிக்கப்பட்டவனின் கழுத்து பாகத்தை, சிகரெட் அட்டையில் போட்டு, ‘உடல் நலனுக்குத் தீங்கானது’ என்று எழுதிய பிறகும், சிகரெட் விற்பனை அமோகமாக நடப்பதைப் போலத் தான், ‘தீண்டாமை பெருங்குற்றம்’ என்று படித்த பிறகும், அக்கொடுமை கடைப்பிடிக்கப்படுகிறது.

``தொழுநோயாளியைப்போல பட்டியலினத்து மக்கள் அருவருப்பாக, இன்னும் சொன்னால் அதைவிடக் கேவலமாகப் பார்க்கப்படுகிறார்கள். தொழுநோயாளியைப் பார்க்கும்போது அருவருப்பு அடைந்தாலும் ‘பாவம்’ என்ற இரக்க குணமும் லேசாக வரும். ஆனால், பட்டியலினத்து மக்களைப் பார்க்கும்போது அந்த இரக்க குணமும் சாதி இந்துக்களுக்கு இருக்காது” என்று சொன்னார் டாக்டர் அம்பேத்கர். இந்த நிலைமை இன்னமும் அடித்தட்டுக் கிராமத்திலும்,  நகரத்திலும் மாறவில்லை. ஒரு கிருபாநிதியைத் தமிழக பி.ஜே.பி. மாநிலத் தலைவராக தேர்ந்தெடுத்தபிறகு, கமலாலயத்தில் அவர் எப்படி நடத்தப்பட்டார் என்பதைக் கேட்டுப் பாருங்கள், சாதியின் வன்மம் தெரியும்... புரியும்.

பொம்மைகளுக்காக ஓர் ஆட்டம்!

2014-ம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி 18 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு தலித்மீது வன்கொடுமை நடத்தப்படுகிறது இந்தியாவில். ஒருநாளில் மூன்று தலித் பெண்கள் பலாத்காரத்துக்குள்ளாகிறார்கள்.  கிராமப்புறங்களில் தலித் குடும்பங்களில் 10,000  ரூபாய்க்கு மேல் மாத வருமானம் ஈட்டுபவர்கள் ஐந்து சதவிகிதக் குடும்பங்களில் மட்டுமே இருக்கிறார்கள் என்று சமூக பொருளாதார சாதிக் கணக்கெடுப்பு கூறுகிறது. 5,000கூட வருமானம் ஈட்ட முடியாத குடும்பங்களின் எண்ணிக்கை 83 சதவிகிதம் பேர். இதுதான் நாட்டு நிலவரம்.  2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகையில் 16.6 சதவிகிதம் பேர், அதாவது 20 கோடி மக்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதில் 15 கோடி பேர் கிராமத்தில் இருக்கிறார்கள். அதிகப்படியான தலித்  மக்கள் கிராமத்தில் இருப்பது உத்தரப்பிரதேச மாநிலத்தில்தான். இந்த மாநிலத்தில் இருந்துதான் இந்தியாவுக்கு வரிசையாக பிரதமர்கள் வந்து ஆண்டுள்ளார்கள். இப்படிப்பட்ட ஒரு மாநிலத்தில் இருந்துதான் குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் வரப் போகிறார்.

குறிப்பிட்ட மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரதமர் ஆவதால். அந்த மாநிலம் முன்னேறிவிடாது என்பது எவ்வளவு உண்மையோ, குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் அதிகாரத்துக்கு வருவதால், அச்சமூகம் முன்னேறிவிடாது என்பதும் உண்மையே.  ‘ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருப்பார்’ என்று ட்விட் போட்டு நரேந்திரமோடி மகிழும் அளவுக்கு நாட்டில் எதுவும் நடந்துவிடாது. ஒரு தலித்துக்குப் பதவி கொடுப்பதன் மூலமாக, தலித்துகள் அதிகாரம் செலுத்தும் இடத்துக்கு வந்துவிட்டார்கள் என்று மகிழ்வது அபத்தம்.

காந்தியையும், காங்கிரஸையும் கிழித்துத் தொங்கப்போட்ட அம்பேத்கருக்குப் பதவி கொடுத்து அரவணைத்துக்கொள்ள பிரதமர் நேரு திட்டமிட்டார். ஆனால், அம்பேத்கர் நினைத்ததை எல்லாம் செய்யவிடவில்லை. அம்பேத்கர், அவராகவே பதவி விலகும் சூழ்நிலை உருவாக்கப்பட்டது. சாதியிலோ, மதத்திலோ கை வைத்தால் அதிகாரம் விடாது. ஏனென்றால், இங்கே அதிகாரம் என்பதே சாதியினாலும் மதத்தினாலும் கட்டமைக்கப்பட்டதுதான். இதை பி.ஜே.பி. பட்டவர்த்தனமாகச் செய்யும். காங்கிரஸ், திரை மறைவில் செய்யும். அவ்வளவுதான் வித்தியாசம். ‘`கசப்பான பண்டத்தை இனிப்பாக்கலாம். உப்பானதைப் புளிப்பு ஆக்கலாம். ஆனால் நஞ்சை அமிர்தம் ஆக்க முடியாது” என்று அம்பேத்கர் சொன்னது சாதிக்கும் பொருந்தும். கட்சிக்கும் பொருந்தும்.

பொம்மைகளுக்காக ஓர் ஆட்டம்!

இவ்வளவையும் தாண்டி தலித் ஒருவரை வேட்பாளராக நிறுத்துவதும் ஒருவிதமான தந்திரம்தான். தீண்டாமை, வறுமை, ஏற்றத்தாழ்வு, சாதிப்பாகுபாடு ஆகியவை பற்றிச் சிந்திக்க விடாமல் தேசியம் - தெய்வீகம் என்ற சட்டகத்துக்குள் அவர்களை அடைத்துப் போடவே இந்தப் பொம்மலாட்டம் எல்லாம்.

ஜனாதிபதி பதவியை ரப்பர் ஸ்டாப் என்பார்கள். அதுவும் திரும்பி வராத ரப்பரைத் தான் தேர்வு செய்வார்கள்!