Published:Updated:

பட்ஜெட் கூட்ட தொடர் புறக்கணிப்பு : விஜயகாந்த் அறிவிப்பு

பட்ஜெட் கூட்ட தொடர் புறக்கணிப்பு : விஜயகாந்த் அறிவிப்பு
பட்ஜெட் கூட்ட தொடர் புறக்கணிப்பு : விஜயகாந்த் அறிவிப்பு
பட்ஜெட் கூட்ட தொடர் புறக்கணிப்பு : விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: பழிவாங்கும் போக்குடன் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை ஓராண்டுக்கு நீக்கியுள்ளதால் எங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் நிதிநிலை அறிக்கை பொது விவாதத்தில் பங்கேற்காமல் புறக்கணிக்கப் போவதாக  தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

25.03.2013 அன்று நடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் தே.மு.தி.க.வை சேர்ந்த சட்டமன்ற கொறடா வி.சி.சந்திரகுமார் மற்றும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ப.பார்த்தசாரதி, து.முருகேசன், கு.நல்லதம்பி, எஸ்.செந்தில்குமார், ஆர்.அருள்செல்வன் ஆகிய 6 தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஓராண்டு காலத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிமாக நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து முறையாக விசாரணை நடைபெறவில்லை என்பதையும், பாதிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை அவை உரிமைக்குழு அழைத்து கேட்கவில்லை என்றும் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தேன்.

##~~##
மேலும் முறையாக விசாரிக்காதது மட்டுமல்ல, அளவுக்கு மீறிய தண்டனை அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது என்பதும், இது ஜனநாயகத்திற்கும், சட்டத்திற்கும் விரோதமான செயல் என்றும் சொல்லியுள்ளேன்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இதுவரையில் யாருக்கும் இப்படிப்பட்ட தண்டனை கொடுத்ததாக வரலாறு இல்லை. தமிழ்நாடு சட்டமன்றத்தில் இதுகுறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது எதிர்க்கட்சி வரிசையில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கும்கூட கருத்து சொல்ல உரிமையும், வாய்ப்பும் தரப்படவில்லை.
குறிப்பாக, தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, புதிய தமிழகம் கட்சித் தலைவர்கள் இந்த போக்கை சுட்டிக்காட்டி கண்டித்து இருப்பதையும் நினைவு கூறுகிறேன்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தே.மு.தி.க. எதிர்க்கட்சியாக பணியாற்றி வருகிறது. இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அரசினரால் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடைமுறையில் உள்ளது. மக்களின் கருத்துக்களை பிரதிபலிக்க வேண்டிய கடமை எதிர்க்கட்சிக்கு உண்டு.
இருப்பினும் எதிர்க்கட்சியை சேர்ந்த எங்களது சட்டமன்ற உறுப்பினர்களை தற்காலிமாக நீக்கியும், பேசவிடாமல் தடுத்தும் வரும்போக்கு விவாதத்திற்குரிய ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையை வகுக்காது என்று கருதுகிறேன்.
மேலும் எங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை வேண்டுமென்றே பழிவாங்கும் போக்குடன் ஓராண்டுக்கு நீக்கியுள்ளதால் அதற்கு எங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் இந்த நிதிநிலை அறிக்கையில் நடைபெறும் பொது விவாதத்தில் பங்கேற்காமல் புறக்கணிப்பது என்று முடிவு செய்துள்ளோம்.
பொது விவாதத்தை புறக்கணிக்கும் எங்களது நோக்கத்தை பொதுமக்கள் புரிந்து கொள்வார்கள் என்றும், எங்கள் மீது அவர்கள் ஏற்கனவே கொண்டுள்ள நல்லெண்ணமும், நம்பிக்கையும் வலுப்பெறும் என்றே கருதுகிறேன்.
இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.