Published:Updated:

காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. - எதிர்க்கும் ஸ்டாலின், ஆதரிக்கும் அழகிரி

காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. - எதிர்க்கும் ஸ்டாலின், ஆதரிக்கும் அழகிரி
காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. - எதிர்க்கும் ஸ்டாலின், ஆதரிக்கும் அழகிரி
காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. - எதிர்க்கும் ஸ்டாலின், ஆதரிக்கும் அழகிரி

சென்னை: காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என செயற்குழுவில் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார் ஸ்டாலின். ஆனால், 'காங்கிரஸோடு கூட்டணியை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு இருக்கிறார் அழகிரி.

காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு தி.மு.க. அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறும் முடிவிற்கு தொடக்கத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்தார் மு.க.அழகிரி. அப்படியும் நிலைமை கைமீறிப் போய் ஆதரவை வாபஸ்வாங்கியது தி.மு.க. தலைமை. இந்த வருத்தத்தில் தான், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதில் கால தாமதம் செய்தார் அழகிரி.

ராஜினாமா கடிதம் கொடுத்த பிறகும் டெல்லியிலேயே முகாமிட்டிருந்த அழகிரி, சோனியா காந்தி, மன்மோகன்சிங், ப.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து கைகுலுக்கினார். "அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்துக் கட்சியிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள்" என்று அதற்கொரு காரணமும் சொன்னார். இந்த நிலையில், காங்கிரஸ் கூட்டணி தொடரும் விவகாரத்தில் ஸ்டாலின் , அழகிரிக்கு இடையில் கருத்து மோதல் நடந்து கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.

##~~##
இது தொடர்பாக அழகிரி வட்டாரத்தில் நம்மிடம் பேசியவர்கள், ''ஆளும் அ.தி.மு.க. அரசு மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இலங்கை விவகாரத்தில் தி.மு.க. மீது மக்களுக்கு இருக்கும் கோபத்தை விடவும் கூடுதலான கோபம். இந்த நிலையில், தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி நீடித்திருந்தால் நாடாளுமன்ற தேர்தலில் அந்தக் கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைத்திருக்கும். இதைத் தெரிந்து கொண்டு தான் ஜெயலலிதா அழகாய் அரசியல் சதுரங்கம் ஆடினார்.
காங்கிரஸ் கூட்டணியிலிருந்து தி.மு.க.வைச் கழற்ற வேண்டும் என்பதற்காகவே, தமிழகத்தில் நடந்த ஈழ‌ தமிழர் ஆதரவு போராட்டங்களை தள்ளி நின்று வேடிக்கை பார்த்தது தமிழக அரசு. ஜெயலலிதா எதிர்பார்த்தபடியே தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டது. இப்போது காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. என மூன்று அணிகள் நாடாளுமன்ற தேர்தல் களத்தில் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அ.தி.மு.க. அரசுக்கு எதிரான வாக்குகள் இரண்டு பக்கமாக சிதறப் போகிறது. இதைத்தான் ஜெயலலிதாவும் எதிர்பார்க்கிறார். ஒரு இடத்தில் கூட ஜெயிக்க முடியாது என்ற நிலையில் இருந்த‌ அ.தி.மு.க.வுக்கு,  இப்போதைய அரசியல் சூழல் சாதகமான சூழலை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலை வரக் கூடாது என்பதற்காகத்தான் அழகிரி அண்ணன் 'காங்கிரஸ் கூட்டணியைவிட்டு வெளியில் வர வேண்டாம்" என்று பதறினார். ஆனால், அண்ணன் சைரன் காரில் போவதை சகித்துக் கொள்ள முடியாத சிலர் செய்த சதியால் வாபஸ் முடிவை எடுத்துவிட்டார் தலைவர். ஆனாலும், காங்கிரஸ் கூட்டணியில் மீண்டும் தி.மு.க.வை இணைய வைப்பதற்கு தொடர்ந்து தலைவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார் அண்ணன். காங்கிரஸ் கூட்டணியில் நீடித்தால் தமிழகம் தி.மு.கவை புறக்கணித்துவிடும் என்ற‌ ஸ்டாலின் உள்ளிட்டவர்களின் கருத்தையும் தலைவரால் ஒதுக்கித் தள்ள முடியவில்லை. காங்கிரஸ் இல்லாமல் தேர்தலை சந்திப்போம். தேர்தலுக்குப் பிறகு, ஒருவேளை காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் பிரச்னைகளின் அடிப்படையில் மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கலாம்" என்ற கருத்தும் தலைவரிடம் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது" என்கிறார்கள்.
 திரிசங்கு நிலையில் நிற்கிறது தி.மு.க!
 குள.சண்முகசுந்தரம்