Published:Updated:

“அ.தி.மு.க முடிந்துவிட்டது... தி.மு.க முடியப்போகிறது!” - கணிக்கும் ராமதாஸ்

“அ.தி.மு.க முடிந்துவிட்டது... தி.மு.க முடியப்போகிறது!” - கணிக்கும் ராமதாஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
“அ.தி.மு.க முடிந்துவிட்டது... தி.மு.க முடியப்போகிறது!” - கணிக்கும் ராமதாஸ்

“அ.தி.மு.க முடிந்துவிட்டது... தி.மு.க முடியப்போகிறது!” - கணிக்கும் ராமதாஸ்

ரசாங்கத்தின் தவறுகளைப் பாரபட்சமில்லாமல் குத்திக்கிழிப்பவை, பா.ம.க நிறுவனர் ராமதாஸின் அறிக்கைகள். அவருடைய அறிக்கைகளில் காரம் தூக்கலாக இருக்கும். அப்படிப்பட்ட அறிக்கைகளுக்குச் சொந்தக்காரர் புத்தகம் எழுதினால்? ‘கழகத்தின் கதை: அ.தி.மு.க - தொடக்கம் முதல் இன்றுவரை’ என்ற தலைப்பில் இன்றைய ஆளும்கட்சியின் வரலாற்றைத் தன் காரசாரப் பார்வையில் விவரித்துள்ளார் ராமதாஸ். அதை மையமாக வைத்து அவரிடம்  கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘இப்படி ஒரு புத்தகம் எழுதும் எண்ணம் எதனால் ஏற்பட்டது?’’

‘‘ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு தமிழக அரசியலில் நடந்த கூத்துகளைப் பார்க்கும் போதுதான், இப்படி ஒரு புத்தகம் எழுதும் எண்ணம் வந்தது. அரசியலில் ஒரு கட்சி நீடிக்க கொள்கை அவசியம். ஆனால், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் கவர்ச்சியை மூலதனமாகக் கொண்டுதான் அ.தி.மு.க செயல்பட்டது. பணம் மட்டும் இருந்தால்,  அ.தி.மு.க-வில் சேர்ந்து எந்த உயரத்துக்கும் செல்லலாம். அதன்பின் முதலீடு செய்த பணத்தைவிட ஆயிரம் மடங்கு பணத்தைத் திரும்ப எடுக்கலாம். இந்த எண்ணம் உருவானதால் அக்கட்சியில் பலரும் சேர்ந்தனர். தங்களுக்குக் கிடைத்த பதவியை விட்டுவிடக் கூடாது என அ.தி.மு.க-வினர் நினைத்ததுதான், ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு நிகழ்ந்த கூவத்தூர் கலாட்டா களுக்குக் காரணம். இவற்றையெல்லாம் பதிவுசெய்ய நினைத்தே புத்தகம் எழுதினேன்.’’

‘‘இந்தப் புத்தகம், தனிப்பட்ட முறையில் தலைவர்கள் மீதான விமர்சனமாக இருக்குமா? அல்லது தத்துவார்த்த விமர்சனமாக இருக்குமா?’’

‘‘அ.தி.மு.க-வின் செயல்பாடுகளை ஒரு பாட்டாளியின் பார்வையில் தொகுத்து வழங்கியிருக்கிறேன். அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், தமிழகத்தின் உரிமை சார்ந்த பிரச்னைகளில் அந்தக் கட்சிகள் செய்த துரோகங்கள் ஆகியவற்றைப் பட்டியலிட்டிருக்கிறேன். தேர்தலில் வாக்குகளை விலை கொடுத்து வாங்கும் திராவிடக் கட்சிகளின் கலாசாரத்தை விமர்சித்திருக்கிறேன். மற்றபடி தனிப்பட்ட முறையில் எந்தத் தலைவரையும் விமர்சிக்கவில்லை. அதில் எனக்கு உடன்பாடும் இல்லை. அதேநேரத்தில் கொள்கை அடிப்படை யிலான விமர்சனங்களுக்குப் பஞ்சம் இருக்காது.’’

“அ.தி.மு.க முடிந்துவிட்டது... தி.மு.க முடியப்போகிறது!” - கணிக்கும் ராமதாஸ்

‘‘பா.ம.க நிறுவனர் ராமதாஸ், கழகத்தின் கதையை எழுதுவதன் நோக்கம்... அதன் பின்னால் உள்ள அரசியல் என்ன?’’

‘‘தமிழகத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் அறிவார்ந்த அரசியல் அவசியம் என்ற விழிப்பு உணர்வை ஏற்படுத்த நினைக்கிறேன். அ.தி.மு.க தொடங்கப்பட்டு 44 ஆண்டுகளாகின்றன. 26 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தக் கட்சி தமிழகத்தை ஆட்சி செய்திருக்கிறது. அந்தக் கட்சி எப்படி உருவானது என்பது 50 வயதைக் கடந்தவர்களுக்குத் தெரிந்திருக்கலாமே தவிர, இன்றைய இளைஞர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அ.தி.மு.க என்பது கொள்கையே இல்லாத, சினிமாக் கவர்ச்சியை மட்டுமே நம்பித் தொடங்கப்பட்ட கட்சி. இன்றளவும் அதே நிலைமைதான் நீடிக்கிறது. கொள்கை இல்லாத அந்தக் கட்சியால் தமிழக அரசியலில் ஏற்பட்ட பாதிப்புகள், கேலிக்கூத்துகள் ஆகியவை குறித்து இன்றைய இளைஞர்கள் அறிந்துகொள்வதற்கும், கொள்கை சார்ந்த அரசியலில் அவர்களை ஈடுபடுத்திக்கொள்ளத் தூண்டுவதற்கும் வசதியாகவே இந்த நூலை வடித்திருக்கிறேன். அந்தவகையில் இது அ.தி.மு.க-வினர் அதிக அளவில் படிக்க வேண்டிய புத்தகம்.’’

‘‘ஜெயலலிதாவுடன் உங்களுக்கு அரசியல் தாண்டிய நட்பு இருந்ததா? அதைப் பற்றிய விவரங்கள் உங்கள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதா?’’

‘‘கலைஞர் அளவுக்கு ஜெயலலிதாவுடன் அரசியலைத் தாண்டிய நட்பு இருந்ததில்லை. அதேநேரத்தில் பல சமயங்களில்,  அ.தி.மு.க-வின் கூட்டணிக் கட்சித் தலைவர் என்ற முறையில் என்னுடன் நட்புடனும், மரியாதையுடனும்தான் ஜெயலலிதா நடந்துகொண்டார். ஆனால், அவரை இயக்கிய சிலரின் தூண்டுதலால் அரசியலில் உணர்ச்சிவசப்பட்டு முடிவு எடுத்தார். வாஜ்பாய் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஓராண்டுக்குள் திரும்பப் பெற்றதும் அதில் ஒன்று. ஜெயலலிதாவின் அந்த முடிவு தவறானது. இதனால், தேவையற்ற விளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்தேன். இதுபோன்ற சில நிகழ்வுகள் குறித்தெல்லாம் இந்தப் புத்தகத்தில் விரிவாக விளக்கியிருக்கிறேன்.’’

‘‘அ.தி.மு.க என்றால், எம்.ஜி.ஆரைப் பாராட்டுவதும், ஜெயலலிதாவை விமர்சிப்பதுமான நிலையே இப்போதுவரை அதிகமாக உள்ளது. உங்கள் புத்தகத்திலும் அது எதிரொலிக்கிறதா?’’

‘‘இல்லை... எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் தவறான அரசியல் அணுகுமுறைகளையும், மத்திய ஆட்சியாளர்களின் அழுத்தங்களுக்குப் பணிந்து தமிழக நலன்களைத் தாரை வார்த்ததையும் சமரசமின்றி விமர்சித்திருக்கிறேன். அதேநேரத்தில் அவர்களின் நல்ல குணங்களையும் தயக்கமின்றி பாராட்டியிருக்கிறேன்.’’

‘‘ஜெயலலிதாவின் மரணம், கருணாநிதியின் முழுமையான ஓய்வுக்குப்பிறகு, தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது எனச் சொல்லப்படுகிறதே..?’’

‘‘இப்போது ஏற்பட்டிருப்பதை வெற்றிடம் என்று கூற மாட்டேன். மாறாக, தமிழகத்தில் ‘மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான மக்களின் விருப்பம்’ உருவாகியிருக்கிறது என்று சொல்லலாம். அதுவும்கூட ஜெயலலிதாவின் மரணத்தாலோ, கலைஞரின் ஓய்வாலோ ஏற்படவில்லை. 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகவே இப்படி ஒரு சூழல் ஏற்பட்டிருந்தது. ஆனால், அ.தி.மு.க-வுக்கும் தி.மு.க-வுக்கும் மாற்றாக எந்தக் கட்சியும் வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் ஊடகங்கள் செயல்பட்டு, அந்தச் சூழலை மாற்றின. இப்போது அந்தச் சூழல் மாறியிருக்கிறது. தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு எதிரான மனநிலை மக்களிடையே மீண்டும் ஏற்பட்டிருக்கிறது.’’

‘‘மாநில அரசைத் தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்கிறீர்கள். ஆனால், மத்திய அரசு மீதான விமர்சனத்தில் ஒரு மென்மைப் போக்கு இருக்கிறதே?’’

‘‘எந்த அரசின் செயல்பாட்டையும், அவற்றின் நிறை - குறைகளின் அடிப்படையில் மட்டுமே விமர்சிக்கிறோம். மத்தியில் 2014-ம் ஆண்டு நரேந்திர மோடி அரசு பதவியேற்ற நாளிலிருந்து இன்றுவரை மத்திய அரசை பா.ம.க பிரச்னைகளின் அடிப்படையில் கடுமையாக விமர்சித்து வருகிறது. நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டம், இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரி உயர்வு, காவிரிப் பிரச்னை, முல்லைப் பெரியாறு பிரச்னை உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளிலும் முதல் எதிர்ப்புக்குரல் பாட்டாளி மக்கள் கட்சியிடமிருந்துதான் வெளிவந்திருக்கிறது. இப்போதுகூட மாட்டிறைச்சி விவகாரம், நீட் தேர்வு சிக்கல், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பிரச்னைகளிலும்கூட மத்திய அரசை பா.ம.க மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறது.’’

‘‘அ.தி.மு.க மற்றும் தி.மு.க-வின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை ஒரு மூத்த அரசியல் தலைவராக உங்களால் கணிக்க முடிகிறதா?’’

‘‘அ.தி.மு.க-வின் எதிர்காலம் முடிந்துவிட்டது. தி.மு.க-வின் எதிர்காலம் முடியப்போகிறது.’’

‘‘அன்புமணி ராமதாஸின் நாடாளுமன்றச் செயல்பாடுகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறதே?’’

‘‘தமிழகத்திலிருந்து மக்களவைக்கு அ.தி.மு.க சார்பில் 37 பேர் சென்றிருக்கிறார்கள். பா.ம.க சார்பில் அன்புமணி மட்டும்தான் உறுப்பினராக உள்ளார். ஆனாலும், காவிரிப் பிரச்னைக்காக அன்புமணி மட்டும்தான் தனி மனிதனாக நாடாளுமன்றத்தில் போராடினார். அன்புமணிக்கு எதிராக கர்நாடகத்தைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் கட்சி வேறுபாடுகளை மறந்து குரல் கொடுத்தனர். அப்போது அ.தி.மு.க உறுப்பினர்கள் அவையில் இருந்தபோதும், அன்புமணிக்காகக் குரல் கொடுக்கவில்லை. விவசாயிகள் பிரச்னைக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த உறுப்பினர், அவர் மட்டும்தான். காவிரி மேலாண்மை வாரியம், மேகதாட்டூ அணை விவகாரம் ஆகியவை தொடர்பாகப் பிரதமர் மோடியை மூன்று முறையும், உமாபாரதியை இரண்டு முறையும் சந்தித்துப் பேசியிருக்கிறார். ஜல்லிக்கட்டு சிக்கலுக்காகப் பிரதமர் வீட்டின்முன் அன்புமணி ஒற்றை ஆளாகப் போராட்டம் நடத்தி, துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார். ஒரே உறுப்பினராக உள்ள அன்புமணி இதைவிட சிறப்பாக எப்படிச் செயல்பட முடியும் என்பதை நீங்களே சொல்லுங்கள்?’’

‘‘சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘தம்பி ஸ்டாலின்மீது அரசியலைக் கடந்து எனக்குப் பாசமுண்டு. அவரை துணை முதலமைச்சராக்க வேண்டும் என்று கலைஞரிடம் நான்தான் பரிந்துரை செய்தேன். ஆனால், 89 உறுப்பினர்களுடன் வலிமையான எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ஸ்டாலின், அவையில் முத்திரை பதிக்கவில்லை. வெளிநடப்பு செய்வதும், சட்டப்பேரவைக்கு வெளியே மறியல் என்ற பெயரில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதும், சட்டையைக் கிழித்துக்கொண்டு போஸ் கொடுப்பதும் மட்டுமே எதிர்க்கட்சித் தலைவரின் வேலை இல்லையே?’’

- ஜோ.ஸ்டாலின்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz