Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

செ.அ.ஷாதலி, கோனுழாம்பள்ளம்.

அரசியல் சாணக்கியத்தனம் நிறைந்த கருணாநிதியிடம் அரசியல் பாடம் படித்த வைகோவால், தமிழக அரசியலில் நிலையான இடம் பெற முடியாமல் போனது ஏன்?


கருணாநிதியின் அரசியல் இலக்கு ஒன்றே ஒன்றுதான், எப்படியாவது வெற்றி பெறுவது. அதைப் பற்றிய யோசனையில்தான் அவர் எப்போதும் இருப்பார். அதற்கு அர்ஜுனனின் கதையைச் சொல்வார். மரத்தில் இருக்கும் பறவையைக் குறிவைத்துத் தாக்கச் சொல்லும்போது, ஒருவருக்கு மரம் தெரியும்; ஒருவருக்குக் கிளை தெரியும்; ஒருவருக்குப் பறவை தெரியும்; அர்ஜுனனுக்குப் பறவையின் கழுத்து மட்டும்தான் தெரியும், மற்றவை எதுவும் தெரியாது. அதனால்தான் அர்ஜுனனால் பறவையை வீழ்த்த முடிந்தது. இது, கருணாநிதி அடிக்கடி சொல்லும் கதை. இந்த இலக்கோடு செயல்பட்டால் மட்டும்தான் அரசியலில் நிரந்தர இடத்தைத் தக்க வைக்க முடியும்.

கழுகார் பதில்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எஸ்.பி.விவேக், சேலம்.

மாநில அரசு செய்யும் தவறுகளைத் தட்டிக் கேட்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருப்பது போல, மத்திய அரசு செய்யும் தவறுகளைத் தட்டிக் கேட்கும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது?


மத்திய அரசு செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டும் அதிகாரம், நாடாளுமன்ற மக்களவைக்கும் மாநிலங்களவைக்கும் இருக்கிறது. தட்டிக் கேட்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு இருக்கிறது. கேள்வி கேட்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு இருக்கிறது. இவை எல்லாமே இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் அதிகாரங்கள்தான்.

ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்.

‘தமிழகத் திட்டங்களுக்கு நிதி ஆதாரம் பெறவே பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கிறேன்’ என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்கிறாரே?


அப்படி ‘எந்தத் திட்டத்தை அவர் கொண்டு வந்துள்ளார்’, அப்படி ‘எவ்வளவு நிதியை அவர் வாங்கி வந்துள்ளார்’ என்று சொன்னால் கூடுதல் பெருமையை அடையலாமே?

ஓ.பன்னீர்செல்வத்துக்குப் பிரதமர் மோடி, பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷா போன்றோரின் ஆதரவு அதிகமாக இருக்கிறது. அதே ஆதரவைத் தனக்கும் பெறுவதற்காக எடப்பாடி துடிக்கிறார். அதனால் டெல்லிக்குப் போய் நடிக்கிறார். திட்டம், நிதி என்பதெல்லாம் சும்மா ஒப்புக்குச் சொல்லப்படும் வார்த்தைகள்.

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

ராம்நாத் கோவிந்த்தை ஜனாதிபதி வேட்பாளராக பி.ஜே.பி அறிவித்து எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்திருப்பது பற்றி..?


பி.ஜே.பி-யின் வேட்பாளரை விமர்சித்தால், ‘ஒரு தலித் முதல் குடிமகன் ஆவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் விமர்சனம் செய்கிறார்கள்’ என்று பிரச்னை கிளம்பும். அதனால்தான் இப்படித் தேடிப் பிடித்து வேட்பாளரை நிறுத்தியிருக்கிறார் மோடி. காங்கிரஸ் கட்சியும் ‘மீரா குமாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும்’ என்று நினைத்திருந்தால், பி.ஜே.பி அறிவிப்பதற்கு முன்னதாக அவர்கள் அறிவித்திருக்க வேண்டும். காலம் தாழ்த்தியதால், பி.ஜே.பி-யைப் பார்த்து அவர்களும் தலித் வேட்பாளரை நிறுத்தியதாக ஆகிவிட்டது. 

பி.ஜே.பி வேட்பாளரையும் விமர்சிக்க முடியாமல், சொந்தக் கட்சி வேட்பாளரின் பெருமையையும் சொல்லிக்கொள்ள முடியாமல் சங்கடமான நிலைமைக்கு காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் தள்ளப்பட்டு விட்டன.

கழுகார் பதில்கள்!

ச.புகழேந்தி, மதுரை-14.

‘தமிழகம் மெள்ள மெள்ள பாலைவனம் ஆகிறது’ என்ற அபாய அறிவிப்பை, மத்திய நீர் ஆதார ஆணையம் ஆய்வு செய்து வெளியிட்டு உள்ளதே?


 கடந்த ஆண்டில் தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை இயல்பான அளவை விட 62 சதவிகிதம் குறைவாகப் பெய்துள்ளது. அதாவது, 1876-க்குப் பிறகு கடந்த ஆண்டுதான் இவ்வளவு குறைவாக மழை பெய்துள்ளது. இதனால் தமிழகம் முழுக்க நிலப்பரப்பு காய்ந்து விட்டது. பொதுவாகவே சில ஆண்டுகளாக மழையளவு குறைந்து வந்தாலும், கடந்த ஆண்டு மிக மிக மோசம். இதனால் அனைத்து மாவட்டங்களையும் வறட்சி மாவட்டங்களாக மாநில அரசு அறிவித்துள்ளது. ஓரளவு நீர்ப்பரப்பு உள்ள பகுதிகளாக கன்னியாகுமரியையும் பொள்ளாச்சியையும் மட்டுமே சொல்கிறார்கள். நகரங்களில் மட்டுமில்லை, கிராமப் புறங்களிலும் குடிநீர்ப் பஞ்சம் மிக மோசமாக இருக்கிறது. இவை அனைத்தும் மிகமோசமான சூழ்நிலைக்கான அடையாளங்கள்.

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.


ஜனாதிபதி வேட்பாளராக அத்வானியை அறிவித்து இருந்தால் மற்ற கட்சித் தலைவர்கள் ஏற்றிருப்பார்களா?

பிரதமர் மோடியே ஏற்காதபோது மற்றவர்கள் ஏற்றுக் கொண்டால் என்ன, ஏற்றுக் கொள்ளாவிட்டால்தான் என்ன? ‘அத்வானிதான் ஜனாதிபதி ஆகத் தகுதி வாய்ந்தவர்’ என்றார் சத்ருகன் சின்ஹா. அதற்கு ஆதரவாக யாரும் குரல் கொடுத்துவிடக் கூடாது என்பதால், உடனடியாக ராம்நாத் கோவிந்த் பெயர் அறிவிக்கப்பட்டு விட்டது.

த.சத்தியநாராயணன், அயன்புரம்.


ரஜினி அரசியலுக்கு வருவதைத் திருமாவளவன் ஓவராக ஆதரிக்கிறாரே?


யாரையும் ஓவராக ஆதரிப்பது அவரது வழக்கம். இந்தப் பழக்கம் அவருக்கு மட்டுமல்ல, எந்த அரசியல் தலைவருக்கும் நல்லதல்ல.

உமரி பொ.கணேசன், மும்பை-37.


தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தைக் கடந்த அ.தி.மு.க ஆட்சி பாழடைய விட்டுவிட்டது. ஆனால், இப்போது அது புதுப்பொலிவுடன் ஜொலிக்கிறதே?


அண்ணா நூற்றாண்டு நூலகம் என்பது தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்டு இருந்தாலும், தி.மு.க-வால் கட்டப்படவில்லை; தமிழக அரசால்தான் கட்டப்பட்டது. முன்பு அதே இடத்தில் தலைமைச் செயலகம் கட்ட ஜெயலலிதா முயன்றார். அதனை மத்திய அரசில் அப்போது அங்கம் வகித்த தி.மு.க அமைச்சர்கள் தடுத்துவிட்டார்கள் என்ற கோபம் ஜெயலலிதாவுக்கு இருந்தது. அதனால் அந்த நூலகத்தையே கண்டுகொள்ளாமல் விட்டதோடு, அதைக் குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையாக மாற்றுவதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார் ஜெயலலிதா. சென்னை உயர் நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவுகள் காரணமாக அது தடுக்கப்பட்டது. அத்துடன் நூலகத்தை சீரமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ஜெயலலிதா இருக்கும்வரை அதை அதிகாரிகளால் நிறைவேற்ற முடியவில்லை. ஜெயலலிதா மறைந்த பிறகுதான், நூலகம் புதுப்பொலிவு பெற ஆரம்பித்துள்ளது. அ.தி.மு.க-வில் தலைமை மட்டும் மாறவில்லை. சிந்தனையும் மாறி இருக்கிறது என்றும்கூட இதை எடுத்துக் கொள்ளலாம். கூடவே, அதிகாரிகளின் செயல்பாடுகளும் முக்கிய காரணம்.

கருணாநிதி கொண்டு வந்தார் என்பதற்காக   அ.தி.மு.க அந்தத் திட்டத்தைப் புறக்கணிப்பது, ஜெயலலிதா கொண்டு வந்தார் என்பதற்காக தி.மு.க புறக்கணிப்பது போன்ற சூழல்கள் இனி முற்றாக மாற வேண்டும்.

கழுகார் பதில்கள்!

செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவி சாதனை படைத்து வரும் நாட்டில், கையால் மலம் அள்ளும் அவலத்தைப் போக்க முடியாததற்குக் காரணம்... அக்கறை இல்லாத அரசாங்கமா? எதிர்த்துப் போராடாத மக்களா?

ஒரு லட்ச ரூபாய் விலையில் உள்ள கருவியை வாங்கினால் பிரச்னை தீர்ந்தது. ஆனால், தினக்கூலிகளாக அந்த மக்களைப் பயன்படுத்தும் ஏஜென்ட்டுகளும் அதிகாரிகளும் இதுபோன்ற கருவிகளை அதிக அளவில் வாங்கவிடாமல் செய்கின்றனர்.

‘நம்முடைய தலையெழுத்து’ என்று அந்த மக்களும் அதில் ஈடுபடுகிறார்கள். பெரியார், தான் பேசும் கூட்டங்களில் எல்லாம் ஒரு கருத்தைச் சொன்னார். ‘நீ குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவன் என்பதற்காக எந்தத் தொழிலைச் செய்யச் சொல்கிறார்களோ அந்தத் தொழிலைச் செய்யக்கூடாது. செய்ய மறுக்க வேண்டும். அத்தொழிலைச் செய்பவர்கள், தங்கள் குழந்தைகளைப் படிக்க வைத்து இத்தொழிலைச் செய்யவிடாமல் தடுக்க வேண்டும்’ என்றார். அள்ளுவதற்கு ஆள் இல்லாமல் நாறும்போதுதான், மாற்று வழியை அரசாங்கம் யோசிக்கும்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:  கழுகார் பதில்கள்,  ஜூனியர் விகடன்,  757, அண்ணா சாலை, சென்னை- 600 002  kalugu@vikatan.com  என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!