Published:Updated:

அ.தி.மு.க-வை அழித்த கதை! - அணிகளின் அட்டகாசம்

அ.தி.மு.க-வை அழித்த கதை! - அணிகளின் அட்டகாசம்
பிரீமியம் ஸ்டோரி
அ.தி.மு.க-வை அழித்த கதை! - அணிகளின் அட்டகாசம்

ப.திருமாவேலன்

அ.தி.மு.க-வை அழித்த கதை! - அணிகளின் அட்டகாசம்

ப.திருமாவேலன்

Published:Updated:
அ.தி.மு.க-வை அழித்த கதை! - அணிகளின் அட்டகாசம்
பிரீமியம் ஸ்டோரி
அ.தி.மு.க-வை அழித்த கதை! - அணிகளின் அட்டகாசம்

ந்தவனத்தில் ஓர் ஆண்டி
அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி
அதைத் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தான்டி.


- எந்த மகராசன் எழுதிய பாட்டோ?  எம்.ஜி.ஆர் என்ற  மகராசன் ஆரம்பித்த அ.தி.மு.க-வின் இன்றைய நிலைக்கு இது பொருத்தமானது. எதற்கும் நாலு பேர் வேண்டும் என்பார்கள். ஆனால், இதற்கு மூன்று பேர் போதும்போல. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகிய மூவரும் கட்சியைக் காலி செய்யும்  வேலையை எல்லா வேளையும் பார்க்கிறார்கள். அதாவது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குக் குழி தோண்டுகிறார்கள், சட்டை வேட்டியில் அழுக்குப்படாமல். அதுதான் மனதில் சுயநலச் சாக்கடை தாராளமாய் ஓடுகிறதே!

அ.தி.மு.க-வை அழித்த கதை! - அணிகளின் அட்டகாசம்

வெட்கமே இல்லாமல், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை நடத்தத் தொடங்கியிருக்கிறார்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் தனித்தனியாக. இவர்கள் இருவரையும் ஒன்று சேர்த்துத் தனது தலைமையில் விழா நடத்த நினைத்திருந்தார் டி.டி.வி. தினகரன். அது நடக்கவில்லை. அதனால், அனலாக அடையாறு வீட்டில் உட்கார்ந்திருக்கிறார் தினகரன். ஐயோ பாவம்... இவர்களுக்கு எம்.ஜி.ஆரின் ஞாபகம் இப்போதுதான் வந்திருக்கிறது.

1917 ஜனவரி 17-ல் பிறந்தவர் எம்.ஜி.ஆர். அவருக்கான நூற்றாண்டு விழாவை 2016 ஜனவரியிலேயே தொடங்கியிருக்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர். என்றால், ஒருவித அலர்ஜி இருக்கும். அதனால், அவர் அதை நினைக்கவே இல்லை. இந்த யோக்கிய சிகாமணிகளாவது, 2017 ஜனவரியில் தொடங்கியிருக்க வேண்டும். அப்போது நாற்காலிச் சண்டையில் மும்முரமாக இருந்தார்கள். இப்போது ஓரளவு நிம்மதி கிடைத்திருப்பதாக நினைத்துக் கடந்த ஜூன் 30-ம் தேதி மதுரையில் வைத்து நூற்றாண்டு விழாவைத் தொடங்கியிருக்கிறது எடப்பாடி அணி. அக்டோபர் மாதத்தில் இருந்து விழா தொடங்க இருக்கிறது பன்னீர் அணி. இப்போதும் இவர்கள் எம்.ஜி.ஆர். பாசத்தில் இந்த விழாக்களை நடத்தவில்லை. யார் உண்மையான அ.தி.மு.க என்று காட்டவே நடத்துகிறார்கள். அதைவிட முக்கியமாக நரேந்திரமோடியின் காலில் விழும் பாக்கியம் யாருக்கு அதிக நேரம் கிடைக்கும் என்பதைக் கணக்கிடவே நடத்துகிறார்கள்.

எம்.ஜி.ஆரை விட இவர்களுக்கு நரேந்திரமோடிதான் முக்கியம். உண்மையான ‘மன்னனை’ மறந்த ‘நாடோடிகள்’ இவர்கள்.

தமிழ்நாட்டையே ஜெயலலிதாவுக்கும், சசிகலா குடும்பத்துக்கும் எடப்பாடி, பன்னீர் போன்ற நாற்காலிப் பேர்வழிகளுக்கும் தாரை வார்த்தவர் எம்.ஜி.ஆர். அவரது பெயரை மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்குச் சூட்டுகிறார் தமிழ்நாட்டு முதலமைச்சர்.

 மதுரை தி.மு.க. மாநாட்டைத் தொடங்கி வைக்கும் பெருமை எம்.ஜி.ஆருக்குத்  தரப்பட்டது. அப்போது பேசும்போது, ‘`என்னைவிடத் திறமையானவர்கள், தகுதியானவர்கள் கழகத்தில் இருக்கும்போது என்னை இந்த மாநாட்டைத் தொடங்கிவைக்க அழைத்தது ஏன் தெரியுமா? இது சாதாரணமானவர்களுக்கான கட்சி. சாமானியர்களுக்காகப் பாகுபடும் கட்சி என்பதை எடுத்துக்காட்டத்தான். இனி வரும் காலத்தில், சாமானியர்கள் பொறுப்புக்கு வருவார்கள்” என்றார் எம்.ஜி.ஆர். அவர் நினைத்தது மாதிரியே, சாமானியர்கள் பொறுப்புக்கு வந்தார்கள். பொறுப்பை உணரவில்லை. ஆனால், பெரும் பண்ணைகள் ஆனார்கள். பணக்கொழுப்பில் திமிர் பிடித்து ஆடினார்கள். அதைத்தான் இன்று பார்க்கிறோம்.

சசிகலா சிறைக்குப் போனதால், தவிர்க்க முடியாத சூழலில் முதலமைச்சர் ஆனார் எடப்பாடி பழனிசாமி. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வென்று எடப்பாடியிடம் இருந்து முதலமைச்சர் பதவியைப் பறிக்கத் திட்டமிட்டார் டி.டி.வி. தினகரன். ‘`நான் உங்களோடு சேர வேண்டுமானால், முதலமைச்சர் பதவியை எனக்குத் தர வேண்டும்” என்பது பன்னீரின் பணிவுக் கோரிக்கை. இப்படி மூன்று பேருமே செயின்ட் ஜார்ஜ் கோட்டையையே செக்குமாடுபோலச் சுற்றிச் சுற்றி வருகிறார்களே தவிர, அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தைப் பற்றித் துளிக்கூட நினைப்பில்லை.

‘ஒழுங்காக என் பேச்சைக் கேளுங்கள். கேட்காவிட்டால், கவிழ்த்து விடுவேன்’ என்று எடப்பாடியை மிரட்டுகிறார் தினகரன். ‘கேட்க மாட்டேன். கவிழ்க்க நினைத்தால், கவிழ்த்துக் கொள்’ என்று சொல்லி அனுப்புகிறார் எடப்பாடி. `என் ஆதரவு எம்.எல்.ஏ-க்களையும் அழைத்து வருகிறேன். ஒரே ஒரு வருஷம் முதலமைச்சர் பதவி தாருங்கள்’ என்று கேட்கிறார் பன்னீர். `முடியாது’ என்கிறார் எடப்பாடி. `அப்படியானால், கவிழட்டும். எடப்பாடியா, தினகரனா, பன்னீரா என்று போட்டி வந்தால், எனக்குத்தான் செல்வாக்குக் கிடைக்கும்’ என்கிறார் பன்னீர். இப்படி மூன்று பேரும் மூன்று பக்கமாக இழுத்து ஆட்சிக் கண்ணாடிச் சுக்குநூறாக்க, முடிவெடுத்துவிட்டார்கள். தனக்குக் கிடைக்காததை, வேறு யாரும் அனுபவிக்கக் கூடாது என்ற நினைப்புதான் இதற்குக் காரணம். இந்த நினைப்புதான் பொழைப்பைக் கெடுக்கப் போகிறது.

அ.தி.மு.க-வை அழித்த கதை! - அணிகளின் அட்டகாசம்

அண்ணன் அமித்ஷாவும், மாமன் மோடியும் தங்களுக்கு அனுசரணையாக இருக்கவே, இவர்கள் மூவரும் எல்லா குட்டிக்கரணங்களையும் போடுகிறார்கள். வாழ்ந்த காலத்தில் ஜெயலலிதாவை எதிர்கொள்ள முடியாத மோடி, முதலில் இவர்களைப் பிரித்தார். இப்போது சேரவும் விடாமல் தடுத்தார். மூவரும் தன்னையே ஆதரிக்கும் சூழ்நிலையை உருவாக்கினார். எப்போது தேவையோ அப்போது, யார் தேவையோ அவருக்கு மட்டும் பின்னர் கை கொடுப்பார். அது அவ்வை சண்முகம் சாலை அ.தி.மு.க. அலுவலகத்தை பி.ஜே.பி. கமலாலயத்தின் கார் ஷெட்டாக ஆக்கும் முயற்சியாகவே முடியும்.

தி.மு.க., படித்தவர்கள் கட்சியாக அடையாளம் காட்டப்பட்டபோது, அ.தி.மு.க., பாமரர் கட்சியாகச் சொல்லப்பட்டது. தன்னை வளர்த்தது கிராமப்புற ரசிகர்கள் என்பதால், எம்.ஜி.ஆரின் சிந்தனை, கிராமப்புறத்தைச் சுற்றியே இருந்தது. சத்துணவுத் திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வந்ததும், அரிசித் தட்டுப்பாட்டுக்காக உண்ணாவிரதம் இருந்ததும், ‘விலைவாசியைக் குறைக்க அ.தி.மு.க-வினர் போராடுவார்கள்’ என்று அ.தி.மு.க ஆட்சியின்போதே அறிவித்ததும்தான் எம்.ஜி.ஆர்.

 அவர் உருவாக்கிய கட்சியின் இன்றைய ஆட்சியாளர்கள், தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்ட நீட் தேர்வு பற்றியோ, இந்தித் திணிப்புப் பற்றியோ, கிராமப்   பொருளாதாரத்தையே கேள்விக்குறியாக்கும் மாடு பிரச்னை பற்றியோ, 1,000 ரூபாய் 500 ரூபாய் தடை பற்றியோ, ஜி.எஸ்.டி. பற்றியோ வாய் திறக்காமல், சோற்றால் அடித்த பிண்டங்கள்போல் உட்கார்ந்திருக்க என்ன காரணம்? மத்திய அரசை பகைத்துக்கொள்ளக் கூடாது. இது ஒன்றுதான் நோக்கம்.

``பேதமற்ற சமத்துவ சமதர்ம சமுதாயத்தை உருவாக்குவதற்காகத்தான் மாநில சுயாட்சி கேட்கிறோமே தவிர, பிரிவினைக்காக அல்ல” என்றவர் எம்.ஜி.ஆர். ‘`சாதிமதத்தை வைத்துப் பிரித்தாளும் தீய சக்திகளை, சாதிமதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்யும் அயோக்கியர்களைச் சட்டம் வேடிக்கை பார்க்காது” என்று முதலமைச்சராக இருக்கும் போதுதான் எம்.ஜி.ஆர். சொன்னார்.

‘`ஆர்.எஸ். எஸ்ஸின் விவகாரத்திலும் மொழிப் பிரச்னையிலும் தி.மு.க-வோடு கருத்து வேறுபாடு இல்லை. தி.மு.க-வின் கொள்கைதான் அ.தி.மு.க-வின் கொள்கை. அணுகுமுறையில்தான் வேறுபாடு” என்றவர், எம்.ஜி.ஆர். இது இந்த மும்மூர்த்திகளுக்குத் தெரியுமா? ராம்நாத் கோவிந்தையே மூவரும் ஆதரிக்க எதற்கு மூன்று அணி? தரையில் தெண்டனிடும் இந்த எண்ணங்கள் அ.தி.மு.க-வுக்கு ஏற்பட்டுள்ள பிணி.

அ.தி.மு.க. என்ற கட்சியைத் தொடங்கியதுமே, ‘`அ.தி.மு.க. தலைமையை ஏற்றுக்கொண்ட கட்சியுடன்தான் கூட்டணி” என்று துணிந்து சொல்லும் முதுகெலும்பு எம்.ஜி.ஆருக்கு இருந்தது. நாட்டின் அரசியல் சூழல் எப்படி மாறும், யாருடைய தயவு நமக்குத் தேவை என்பது பற்றிக் கவலையே படாமல், நாடாளுமன்றத் தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, ``நாற்பது தொகுதியிலும் இரட்டை இலையே போட்டியிடும்” என்று சொல்லும் தீர்க்க தரிசனம் ஜெயலலிதாவுக்கு இருந்தது. இந்த இரண்டு பிம்பங்களால் வளர்த்தெடுக்கப்பட்ட ஆட்சியையும் கட்சியையும் குறுகிய கால லாபத்துக்கு குஜராத் அடகுக்கடையில் அடகுவைக்கத் துணிந்துவிட்டார்கள் எடப்பாடியும், பன்னீரும், தினகரனும். இதை தங்களால் எந்தக் காலத்திலும் ‘திருப்ப’ முடியாது என்பதை இவர்கள் அறிவார்கள். மூழ்கிப்போகும் என்று தெரிந்தே அடகு வைக்கிறார்கள். எடப்பாடியையும்  பன்னீரையும்  அரவணைத்தும், தினகரனை மிரட்டியும் இது நடக்கிறது.

ஆனால், இவர்கள் மூவருக்கும் அ.தி.மு.க-வைச் சொந்தம் கொண்டாட எந்த அருகதையும் இல்லை. ‘இது நான் ஆரம்பித்த கட்சி அல்ல. தொண்டர்கள் ஆரம்பித்த கட்சி’ என்றவர் எம்.ஜி.ஆர். அந்தத் தொண்டர்கள் கடந்த ஓராண்டு காலமாகப் பைத்தியம் பிடித்தவர்கள்போல் அலைகிறார்கள். ஹீரோவும் ஹீரோயினும் இல்லாத படம் பார்க்க அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதுவும் ‘கண்டதெல்லாம்’ அந்தப் பாத்திரத்தில் நடிப்பதை விரும்பவுமில்லை.

அ.தி.மு.க-வை அழித்த கதை! - அணிகளின் அட்டகாசம்

கோடைக்காலத்தில் தண்ணீர்ப் பந்தல் வைப்பது அ.தி.மு.க-வின் பரம்பரைப் பழக்கம். கடந்த கோடையில் திறக்கப்பட்ட பல பந்தல்களில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா படம் இருந்ததே தவிர, சசிகலா, தினகரன், பன்னீர், எடப்பாடி படங்களை அதிகமாகப் பார்க்க முடியவில்லை என்றால், என்ன பொருள்? இவர்களது அடிதடிக்கும் அ.தி.மு.க-வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று உண்மைத் தொண்டன் நினைக்கிறான். 135 எம்.எல்.ஏ-க்கள், 37 எம்.பி-க்களை அடகு வைக்கலாமே தவிர, லட்சக்கணக்கான தொண்டர்களை வைக்க முடியாது என்று உணர்த்து கிறார்கள் அவர்கள்.

 கருணாநிதிக்கும் எம்.ஜி.ஆருக்கும் மோதல் வந்தபோது, கிண்டலாக எம்.ஜி.ஆர். சொன்னாராம்... ‘`அவர் கதாசிரியர். எல்லாக் கதையையும் எப்படி முடிப்பார் என்று எனக்குத் தெரியும். அவர் கதை சொல்லக் கேட்டும் இருக்கிறேன். ஆனால், நான் கதை சொல்லி அவர் கேட்டது இல்லை.  நான்  ஒரு  கதையை எப்படி முடிப்பேன் என்று அவருக்குத் தெரியாது” என்று.

அ.தி.மு.க-வை அழித்த கதை! - அணிகளின் அட்டகாசம்

இப்போதும் அப்படித்தான். இதுவரை விசிலடித்துக்கொண்டுதான் இருந்தான் அ.தி.மு.க. தொண்டன். எடப்பாடி, பன்னீர், தினகரன் கதையை அவர்கள் எப்படி முடிக்கப் போகிறார்களோ? அ.தி.மு.க-வின் கதையை இவர்கள் முடிப்பதற்கு முன்னதாக, இவர்கள் கதையைத் தொண்டர்கள் முடிப்பார்கள். ஏனென்றால், இவர்கள் ‘நினைத்ததை முடிப்பவன்’ பார்த்து வளர்ந்தவர்கள்!