Published:Updated:

``என் உயிர் பறிக்கும் சக்தி, அந்த ஒன்றுக்கு மட்டுமே!” கருணாநிதியின் வாக்கும் வாழ்வும்

``என் உயிர் பறிக்கும் சக்தி, அந்த ஒன்றுக்கு மட்டுமே!” கருணாநிதியின் வாக்கும் வாழ்வும்
``என் உயிர் பறிக்கும் சக்தி, அந்த ஒன்றுக்கு மட்டுமே!” கருணாநிதியின் வாக்கும் வாழ்வும்

``நானும் அன்பழகனும் 90 வயதைக் கடந்துவிட்டோம். 100 வயது வரை வாழ விரும்பினால், அது உங்களையும் எங்களையும் ஏமாற்றுவதாக இருக்கும்.

``நாற்பத்து ஐந்தாவது வயதில் தமிழக முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளானேன். இதோ இன்னும் 15 நாள்களில் ஜூன் 3 ம் தேதி 60-ம் அகவையில் அடியெடுத்து வைக்கிறேன். இனி நான் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியும் என்னைப் பொறுத்தவரையில் கல்லறையை நோக்கித்தான் என்றாலும் நான் ஒவ்வோர் அங்குலம் நகரும்போதும் இந்தச் சமுதாயம் குன்றின் மேலிட்ட விளக்காக ஒளிவிடுவதற்கான உழைப்பையே வழங்குவதற்கு உறுதிபூண்டிருக்கிறேன்” 1983-ம் ஆண்டு கருணாநிதி தனது அறுபதாவது பிறந்த நாளுக்கு முன் எழுதியது. அதே கருணாநிதிதான் இன்று 95 வயதிலும் இயற்கையை எதிர்த்து காவேரி மருத்துவமனையில் மனஉறுதியோடு போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார். 

கருணாநிதியின் உடல்நிலை கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நலிவடைந்த நிலையில் இருந்தபோது, ஒருபோதும் அவர் மனரீதியாக நலிவடைந்ததில்லை. ஓய்வே இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தவருக்கு இந்த ஒன்றரை ஆண்டு தொடர் ஓய்வினால் துவண்டு போயிருப்பார் என்று கருதியவர்கள்கூட இப்போதும் மனவலிமையோடு போராடிக்கொண்டிருக்கும் கருணாநிதி என்று ஆளுமையைப் பார்த்து ஆச்சர்யப்படாமல் இல்லை. கருணாநிதிக்கு எதிராக வசைவு வார்த்தைகள் வீசிய பலரும் இவரின் மனோ தைரியத்தைப் பார்த்து வாயடைத்துப் போய் உள்ளார்கள். அது கருணாநிதிக்கு மட்டுமே கைவந்த கலை” என்று சிலாக்கிறார்கள் அவரால் அன்போடு அழைக்கப்பட்ட உடன்பிறப்புகள்.

கருணாநிதி 1983-ம் ஆண்டு நெஞ்சுக்கு நீதி எழுதும் போது 60 வயதை எட்டியிருந்தார். அப்போது அவர் ``இனி எனது ஒவ்வோர் அடியும் என்னைப் பொறுத்தவரைக் கல்லறையை நோக்கித்தான்” என்று உணர்ச்சிபூர்வாகச் சுட்டிக்காட்டியிருந்தார். அதன்பிறகு ஒரு கட்டத்தில் தனது ஆயுள் பற்றி எழுதிய கருணாநிதி, ``நான் குறிப்பிட்டுள்ளபடி இனியிருப்பது நீடித்த பயணமோ, குறுகிய காலப் பயணமோ... எனக்குத் தெரியாது. நடை தள்ளாடலாம்... தடைபடலாம்... முடிவுற்றுப்போய் விடலாம். ஆனால், நான் அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்றுக்கொண்ட உணர்வுக்கு முடிவே இல்லை” என்று அழுத்தமாகச் சொல்லியுள்ளார். அந்த உணர்வும், போராட்ட குணமும்தான் கருணாநிதி என்னும் ஆளுமையை மருத்துவ அறிவியலுக்கே சவால்விடும் மனோ தைரியத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது.

அதுமட்டமல்ல, தொண்ணூறு வயதை நெருங்கும் ஒரு மனிதரின் ஆயுள் குறித்த பேச்சு என்னவாக இருக்கும்? ஆனால், கருணாநிதியின் பேச்சோ அதற்கு எதிர்மாறாகவே இருந்துள்ளது. குறிப்பாக தனது ஆயுளை எமன் நினைத்தாலும் பறிக்க முடியாது என்று எமனுக்கே எச்சரிக்கைவிடும் வகையில் பேசியிருக்கிறார். அந்தப் பேச்சில் ``நான் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். தமிழை, தமிழர்களை வாழவைக்க வேண்டும் என்பதற்காக வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். இது சுயநலமாகக்கூட இருக்கலாம். ஆனால், இந்தச் சுயநலத்தை விரும்பாத தாய்நாட்டுப் பற்றுக்கொண்டவனும் தாய்மொழி பற்றுக்கொண்டவனும் இருக்க முடியாது. அந்த வகையில் நான் சொல்கிறேன், புராணத்திலே, வைதீகத்திலே சொல்வது போல என்னுடைய உயிரை எமன் பறித்துவிட முடியும் என்று நான் கருதவில்லை. என்ன அகம்பாவம், நெஞ்சம் அழுத்தம் என்று நீங்கள் நினைக்கலாம். எமன் உறவினரைப் போலவோ, உற்றார் போலவோ வந்து என் உயிரைக் கொண்டுபோய்விட முடியாது. அவன் என்னிடம் உயிரைப் பறிக்க எந்த முறையைக் கையாண்டு இருப்பான் என்றால், தமிழ்ப் புலவர் போல கை இரண்டை ஏந்தி என் உயிரைக் கொண்டு போக முடியும். அத்தருணத்தில் புலவனாக என்னிடத்தில் உயிரைப் பிச்சை கேட்டுக் கொண்டு சென்றிருக்க வேண்டும். அதுவும் தமிழுக்காக, தமிழ் புலவனுக்காகப் பிச்சையாக உயிரைப் பெற்றுச் சென்றிருக்க வேண்டும். அப்படி ஒரு காலம் வருகிறவரையில் உயிரை யாருக்கும் கொடுக்க மாட்டேன்... நிச்சயமாக நீங்கள் எண்ணுகிறபடி நூறாண்டுக்கும் மேலாக இருக்கும் என் உயிர். அதற்குள்ளே கொடுக்க வேண்டும் என்றால் அது தமிழுக்கா, தமிழ்நாட்டுக்காக, மொழிக்கா, தமிழ் பண்பாட்டுக்காக மட்டுமே இருக்கும்” என்று உறுதியான நெஞ்சோடு சொல்லியுள்ளார் கருணாநிதி. இப்போது அந்த உறுதிதான் கருணாநிதியை உயிர்த் துடிப்போடு வைத்துள்ளது.

அதே போல், 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசிய கருணாநிதி ``நானும், அன்பழகனும், 90 வயதைக் கடந்துவிட்டோம். 100 வயது வரை வாழ விரும்பினால், அது உங்களையும் எங்களையும் ஏமாற்றுவதாக இருக்கும். எனினும், நானும், அன்பழகனும் இன்னும், 10, 15 ஆண்டுகள் வாழ்வோம். அதுவரை, தி.மு.க-வை இளைஞர்கள், மாணவர்கள், தொண்டர்கள் கட்டிக் காக்க வேண்டும்” என்று சொல்ல கலைஞர் அரங்கமே அதிர வாழ்த்துகளை ஓசையாக எழுப்பினார்கள். அந்த நெஞ்சுறுதியும், வாழவேண்டும் என்கிற வேட்கையுமே இன்றும் கருணாநிதியை மருத்துவத்துக்கே சவால்விடும் வகையில் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. அவர் எந்த உடன்பிறப்புகளை உயிருக்கு உயிராக நேசித்தாரோ அந்த உடன்பிறப்புகள் எழுப்பும் ``எழுந்து வா தலைவா” என்ற கோஷமே அவருக்கு இப்போது உயிர்காக்கும் மருந்தாகவும் மாறியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு