Published:Updated:

இயக்குநராகிய நான்...

இயக்குநராகிய நான்...
பிரீமியம் ஸ்டோரி
இயக்குநராகிய நான்...

ப.சூர்யராஜ், ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

இயக்குநராகிய நான்...

ப.சூர்யராஜ், ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
இயக்குநராகிய நான்...
பிரீமியம் ஸ்டோரி
இயக்குநராகிய நான்...

ருபுறம் காட்டுமொக்கையும், கப்பிமொக்கையுமான படங்களாய் வெளியாகி தத்தளித்துக் கொண்டிருக்கிறது தமிழ் சினிமா. மறுபுறம், ஆக்‌ஷன், காமெடி, சென்டிமென்ட் எனத் தமிழ் சினிமாவிற்குத் தேவையான அத்தனை மசாலாக்களும் சேர்ந்து காரசாரமாய் சென்றுகொண்டிருக்கிறது தமிழ்நாட்டு அரசியல். எனவே, தமிழ் சினிமாவைக் காப்பாற்ற வேண்டி அரசியல்வாதிகளை உசுப்பேற்றி இயக்குநராக்கினால்...

இயக்குநராகிய நான்...

ஸ்டாலின்

டிராக், டி-ஷர்ட், கூலிங் கிளாஸ் சகிதம் இயக்குநர் லுக்கில் பார்க்கவே பக்காவாக இருப்பார் `தளபதி’ ஸ்டாலின். ஷூட்டிங்கில் எப்போது குண்டூசியை நகர்த்துவது என்பதில் ஆரம்பித்து, எப்போது வெங்காய வெடியை உருட்டிவிடுவது என்பதுவரை எல்லா சம்பவங்களையும் முன்னரே பேப்பரில் எழுத்துப்பிழை இன்றி குறித்துவைத்துக்கொள்வார். வீட்டிலேயே உதயநிதி எனும் உலக மகா நடிகர் இருப்பதால், கதைக்கு ஹீரோ தேடி அலைய வேண்டியதில்லை. இவர் இயக்கும் எல்லா படங்களிலும் தம்பிகளை ஹீரோக்களாகவும், அண்ணன்களை வில்லன்களாகவும் காட்டுவார். வாடகை சைக்கிள், ஷேர் ஆட்டோ, டவுன் பஸ் எனப் படம் முழுக்கப் பரபர சேஸிங் காட்சிகளாக நிறைந்திருக்கும். மேலும், கரும்புக் காட்டுக்குள் கான்க்ரீட் சாலைகள் அமைப்பது, பஸ்ஸுக்குள் கலர் பேப்பர் சுற்றி சீரியல் லைட்களைத் தொங்கவிடுவது எனக் கற்பனைக்கு எட்டாத அளவு கலர்ஃபுல்லாகப் பாடல்களைப் படமாக்கு வார். ஒரே ஒரு படத்தை எடுக்கத் தமிழகம் முழுவதும் ரவுண்டடிப்பார். ஆனால், மதுரை பக்கம் எடுக்க வேண்டிய காட்சியை மட்டும் மணலி பக்கம் செட் அமைத்து முடித்துவிடுவார்.

இயக்குநராகிய நான்...

வைகோ

எண்ணூரில் மேடை போட்டுப் பேசினாலும், ஏதென்ஸ், எத்தியோப்பியா என வாயிலேயே உலகவரைபடம் வரைந்து காட்டும் வைகோ, கண்டிப்பாக உலக சினிமாதான் இயக்குவார். படத்தின் ஹீரோ `பாபா’ ரஜினியைப்போல், `சின்னகவுண்டர்’ விஜயகாந்தைப் போல் துண்டை வைத்து மாஸ் காட்டுவார். பச்சைத்துண்டு போர்த்தியிருந்தால், பூப்பாதை. நீதி, நேர்மை, நியாயம். அதுவே, கறுப்புத்துண்டு போர்த்தி யிருந்தால், சிங்கப்பாதை. அடி, உதை, குத்து. ஆனால், எந்தப் பாதையாக இருந்தாலும், ஹீரோ நடந்தே போவதுபோலத்தான் காட்சிகளை அமைப்பார். எந்தப் புதுமுக இயக்குநர் ஹிட் கொடுத்தாலும், `இவர் நான் தூக்கி வளர்த்த புள்ள... சோரம் போவதில்ல’ என ஹிஸ்டரியை தனக்குச் சாதகமாக எழுதிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார். `கபாலி’, `பில்லா’ போன்று மலேசியாவைக் கதைக்களமாக கொண்ட கேங்ஸ்டர் படம் எடுக்கவேண்டும் என்பதுதான் இவரது கனவு புரோஜெக்டாக இருக்கும்.

இயக்குநராகிய நான்...

விஜயகாந்த்

விஜயகாந்த் காக்கி சொக்காய் போட்டு நடித்த முக்கால்வாசிப் படங்கள் முரட்டு ஹிட் அடித்த காரணத்தினால், கண்டிப்பாக போலீஸ் ஸ்டோரியைத்தான் இயக்குவார். நோலனையும், நலனையும் குழப்பிக் கொண்டுவந்து புரிந்துக்கொள்ளவே முடியாத குழப்பமான திரைக்கதை அமைப்பார். பாராசூட்டைக் கட்டிக்கொண்டு பாஸ்போர்ட்டே இல்லாமல், பாகிஸ்தானுக்குப் பறந்துபோவது, கரன்ட் வொயரைக் கடித்து, எலெக்ட்ரிசிட்டியை உறிந்து எதிரிகள் முகத்தில் `த்தூ’ எனத் துப்புவது போன்ற அதி பயங்கர ஆக்‌ஷன் காட்சிகளைக் கட்டாயம் வைப்பார். கூடவே, `தூக்கி அடிச்சுருவேன் பார்த்துக்க, இங்கே நிக்கிறவன் என்ன சொம்பைகளா, ஆத்திரங்கள் வருகிறது மக்கழேய்ய், இந்த வொயர் ஏன் இங்க தொங்குது’ எனப் படம் முழுக்க பன்ச் மழையும் பலத்த இடியுடன் வெளுத்து வாங்கும்.

இயக்குநராகிய நான்...

ஓ. பன்னீர்செல்வம்

விசு, விக்ரமன் படங்கள்போல சர்வம் சாந்தமயமான படங்களைத்தான் எடுப்பார் ஓ.பி.எஸ். இவர் எவ்வளவு பெரிய இயக்குநராய் இருந்தாலும், தொப்பி அணிய மாட்டார். பங்குனி வெயில் நடுமண்டையில் பல்லைக் காட்டி அடித்தாலும் அணிய மாட்டார். ஆனால், இவரது படத்தில் வரும் வில்லன்கள் மட்டும் கௌபாய் படங்களில் வருபவர்கள்போல எப்போதும் தொப்பி அணிந்திருப்பார்கள். அயோக்கியர்களின் சூழ்ச்சியால், அரசாங்க வேலையை இழந்த ஹீரோ, பக்கடா துக்கடாவாகப் பிரிந்துபோன குடும்பம் என இவர் இயக்கும் படங்களைப் பத்து நிமிடங்கள் பார்த்தாலே, நம் கண்களில் தாரைத்தாரையாகக் கண்ணீர் கொட்டும்.

இயக்குநராகிய நான்...

அன்புமணி

`அன்புமணியாகிய நான்...’ டயலாக்கிற்கும், `பாகுபலியாகிய நான்...’ டயலாக்கிற்கும் ஏதோ விட்டகுறை தொட்டகுறை இருப்பதாக இவர் ஆழ்மனதில் யாரோ புகுந்து நம்பவைத்திருப்பதால், `பாகுபலி’ போன்ற எப்பிக் படம்தான் எடுப்பார். படத்தின் கதை எழுத ஏ4 ஷீட் வாங்கிய நாளில் ஆரம்பித்து, படம் ரிலீஸாகும் நாள் வரை போஸ்டர்களாய் அடித்துப் பட்டித்தொட்டி எங்கும் பக்கெட் பக்கெட்டாய் கோந்து காய்ச்சி ஒட்டுவார். படத்தையும் திங்கள் கிழமைதான் ரிலீஸ் செய்வார். இவர் படத்தில் வரும் ஹீரோ கதாபாத்திரங்கள் அனைத்தும், அப்பா பேச்சைக் கேட்கும் சமத்துப்பையன் கதாபாத்திரங்களாகவே இருக்கும். அவர்களது வாயில் வாய்ப்புண் வந்தாலும் வரும், `காதல்’ங்கிற வார்த்தை மட்டும் வரவே வராது.

இயக்குநராகிய நான்...

தமிழிசை

இந்தியில் ஹிட் அடித்த படங்களை அப்படியே தமிழில் ரீமேக்குவதுதான் இவரது வேலை. மும்பையைச் சேர்ந்த டப்பாவாலாவிற்குப் பிறந்த இந்திவாலா ஒருவன், தமிழகத்தில் சுற்றித்திரியும் ஆன்டி இந்தியன்களின் மண்டையை உடைத்து மாவிளக்கு வைப்பதே படத்தின் கதையாக இருக்கும். பீப் பிரியாணி விற்கும் வில்லன், அந்தப் பிரியாணி அண்டாவை ஆட்டையைப் போட்டு அவனைப் பழிவாங்கும் ஹீரோ எனத் திரைக்கதை பரபரக்கும். ஹீரோவை அம்மாவுக்கு அம்மாவாக, அப்பாவுக்கு அப்பாவாக இருந்து வழிநடத்தும் அக்கா கதாபாத்திரம் ஒன்றும் படத்தில் கண்டிப்பாக இருக்கும்.