Published:Updated:

மாணவர்கள் போராட்டத்தை கைவிட ஜெ. வேண்டுகோள்!

மாணவர்கள் போராட்டத்தை கைவிட  ஜெ.  வேண்டுகோள்!
மாணவர்கள் போராட்டத்தை கைவிட ஜெ. வேண்டுகோள்!
மாணவர்கள் போராட்டத்தை கைவிட  ஜெ.  வேண்டுகோள்!

சென்னை: இலங்கை பிரச்னை தொடர்பாக போராடும் மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை தமிழர்கள் பிரச்னை தொடர்பாக மாணவ - மாணவியர் நடத்தி வரும் போராட்டம் குறித்து, இன்று தமிழ்நாடு சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதன் மீது நடந்த விவாதத்திற்கு பதில் அளித்துப் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா கூறியதாவது:

இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற, ஈவுஇரக்கமற்ற, மனிதநேயமற்ற செயல்களை, போர்க்குற்றங்களை, இனப் படுகொலையைக் கண்டித்து, கல்லூரி மாணவ-மாணவியர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மாநிலம் முழுவதும் சுமார் 100-க்கும் அதிகமான கல்லூரிகளில் மாணவ – மாணவியர் வகுப்புகளை புறக்கணித்து நூற்றுக்கணக்கான மாணவ-மாணவியர் பல்வேறு இடங்களில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

##~~##
மேலும், மாணவ-மாணவியர் 210 இடங்களில் ஆர்ப்பாட்டம், 110 இடங்களில் ஊர்வலம், 68 இடங்களில் சாலை மறியல், 31 இடங்களில் ரெயில் மறியல், 24 இடங்களில் உருவபொம்மையை எரித்தல் ஆகிய போராட்டங்களிலும் ஈடுபட்டனர். எனது தலைமையிலான அரசால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், இலங்கைத் தமிழர்கள் பிரச்னை தொடர்பாக மத்திய அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பாரதப் பிரதமரை வலியுறுத்தி நான் எழுதியுள்ள கடிதங்கள் மற்றும் இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக எனது தலைமையிலான அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் ஆகியவற்றை பிரதிபலிக்கும் விதமாகத்தான் மாணவ-மாணவியரின் போராட்டம் அமைந்துள்ளது.
ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதுதான் இந்தப் போராட்டம். அரசியலுக்கு சிறிதும் இடமளிக்காமல் இலங்கை தமிழர் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு, உன்னதமான குறிக்கோளுக்காக அறவழியில் நடத்தப்படும் இந்தப் போராட்டம் இலங்கைத் தமிழர் நலனுக்கான அர்ப்பணிப்பின் வெளிப்பாடு. இவ்வளவு உணர்வுப்பூர்வமான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புகள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற சூழ்நிலையிலும், இலங்கை அரசு இலங்கைத் தமிழர்களை தொடர்ந்து இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தி வருகிறது.

போரினால் இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள், முகாம்களிலும், சிறைச்சாலைகளிலும் அடைக்கப்பட்டுள்ளனர். தங்களுடைய சொந்த நாட்டிலேயே இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வாழ்ந்து வரும் அவல நிலைமை நீடிக்கிறது. இது மட்டுமல்லாமல், தமிழர்கள் வசித்த பகுதிகளில் சிங்களர்களை இலங்கை அரசு குடியமர்த்தி வருகிறது.

தமிழர் வழிபாட்டுத் தலங்கள் அகற்றப்படுகின்றன. மொத்தத்தில் ஒரு இனவெறி இலங்கையில் தாண்டவமாடிக் கொண்டு இருக்கிறது. இவற்றையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய மத்திய அரசு, தமிழர்களின் உணர்வுகளுக்கு, தமிழக அரசின் கோரிக்கைகளுக்கு சற்றும் மதிப்பளிக்காமல் பாராமுகமாக இருந்து வருவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

இலங்கைத் தமிழர்களின் பால் எனது தலைமையிலான தமிழக அரசு எடுத்து வரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டும், நமது கோரிக்கைகள் வென்றெடுக்கப்படும் நாள் விரைவில் மலர இருக்கிறது என்பதை மனதில் வைத்தும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களாகிய மாணவ- மாணவியர் தங்களுடைய அறப் போராட்டத்தைக் கைவிட்டு, கல்வியில் தொடர்ந்து கவனம் செலுத்தி, பெற்றோருக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று இந்த மாமன்றத்தின் மூலமாக கேட்டுக்கொள்கிறேன்.

எனது இந்த வேண்டுகோளிற்கு அனைத்துக் கட்சிகளைச் சார்ந்தவர்களும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.