Published:Updated:

``எல்லா சாதிக்காரங்களையும் ஒரே மேடைல உட்கார வெச்சது தி.மு.க-தான்!’’ - `சைக்கிள்’ முத்துசாமி

தி.மு.க பொதுக்கூட்டம்  எங்க  நடந்தாலும் சைக்கிளை எடுத்துக்கிட்டுக் கிளம்பிருவேன். எங்க ஊர்ல கத்தியைத்தான் தீட்டுவாங்க. எங்க ஊருக்கு வந்து `புத்தியைத் தீட்டுங்கள்'னு சொன்னவர் கலைஞர். அதையெல்லாம் எப்படி மறக்க முடியும்?

``எல்லா சாதிக்காரங்களையும் ஒரே மேடைல உட்கார வெச்சது தி.மு.க-தான்!’’ - `சைக்கிள்’ முத்துசாமி
``எல்லா சாதிக்காரங்களையும் ஒரே மேடைல உட்கார வெச்சது தி.மு.க-தான்!’’ - `சைக்கிள்’ முத்துசாமி

காவேரி மருத்துவமனை நுழைவுப் பகுதியில், இரண்டு நாள்கள் சோகமே உருவாய் கலங்கியிருந்தது மக்கள் கூட்டம். அவர்களின் முகத்தில் இன்றுதான் கொஞ்சம் நிம்மதி தென்பட்டது. நேற்று (31-7-18) மாலை ராகுல் காந்தி, கருணாநிதியைச் சந்தித்த புகைப்படம் வெளியானதில் ஏற்பட்ட நிம்மதி அது. `கருணாநிதி நலமுடன் உள்ளார்' என, மருத்துவமனை சார்பிலும் அறிக்கை வெளியிடப்பட்டது. சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்தும் வந்திருந்த மக்கள், இன்று என்ன மனநிலையில் உள்ளனர் என்பதை அறிய முயன்றோம்.

கறுப்பு, சிவப்பு நிற மிதிவண்டியில் உதயசூரியன் கொடி, பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்களுடன் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆர்.கே.நகர் தொகுதியில் வாழ்ந்துவரும் அவரின் பெயர் முத்துசாமி; நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர். தி.மு.க-வின் அம்சங்கள் நிறைந்த தனது சைக்கிளில், தமிழகம் முழுக்கச் சுற்றிவருபவர். அவரிடம் பேசினோம்.

``இந்த வயதில் ஏன் சைக்கிள் பயணம்?''

``நேத்து தலைவரோட போட்டோவைப் பார்த்த அப்புறம்தான் எனக்கு நிம்மதியே வந்தது. 15 வயசுலயிருந்தே எனக்கு தி.மு.க மேலயும் கலைஞர் மேலயும் பெரிய அபிமானம். நான் ஸ்கூல்ல படிச்சிட்டிருந்த சமயம் அது. அங்க மூணு பானை இருக்கும். ஆதிக்கச் சாதியினருக்கு ஒரு பானை. இடைநிலைச் சாதியினருக்கு ஒரு பானை. தாழ்த்தப்பட்டவர்கள்னு சொல்லப்படுறவங்களுக்கு ஒரு பானை. எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த வாத்தியார்களும் இதைப் பற்றிக் கவலையேபடலை. இதைப் பார்த்து என் மனசுல நிம்மதியேயில்லை. ஆணிகளை எடுத்துட்டுப்போய் மூணு பானையையும் குத்திட்டு வந்துட்டேன். குறிப்பிட்ட தெரு வழியா சில மக்களை நடக்கக்கூட விட மாட்டாங்க. ரொம்பக் கொடுமையா இருக்கும். இதெல்லாம்  மாறி, எல்லாரையும் ஒண்ணா ஒரே மேடையில் உட்காரவெச்சது, தி.மு.க சார்பா நடந்த பொதுக்கூட்டத்துலதான். எல்லா சாதி மக்களும் அந்தப் பொதுக்கூட்டத்துல கலந்துக்கிட்டாங்க.  அதுதான் தி.மு.க மீது ஈர்ப்பு வரக் காரணம்.

அதுக்குப் பிறகு தி.மு.க பொதுக்கூட்டம்  எங்க  நடந்தாலும் சைக்கிளை எடுத்துக்கிட்டுக் கிளம்பிருவேன். எங்க ஊர்ல கத்தியைத்தான் தீட்டுவாங்க. எங்க ஊருக்கு வந்து `புத்தியைத் தீட்டுங்கள்'னு சொன்னவர் கலைஞர். அதையெல்லாம் எப்படி மறக்க முடியும்?

நான் சின்ன வயசுலேயே பொதுக்கூட்டத்துல கலைஞரைச் சந்திச்சிருக்கேன். மொத தடவைப் பார்த்துப் பேசினப்போ, `நல்லா படிக்கணும்'னு சொன்னார். அதுக்கப்புறம் நான் மெட்ராஸ் வந்தப்ப, கலைஞரை நேர்ல சந்திச்சிருக்கேன். கோபாலபுரத்துக்குப் போனா,  அங்க இருக்கிறவங்க என்னை ஞாபகம்வெச்சுப் பேசுவாங்க. கலைஞர்கூட சேர்ந்து போட்டோ எடுத்திருக்கேன். எங்க ஊருக்கு அவர் வந்ததைப் பற்றி அவர்கிட்ட  சொன்னேன். உடனே அவர் ஒரு பேப்பரை எடுத்து என் பேரை எழுதி என்கிட்ட குடுத்தார். எவ்வளவோ எழுதி சாதிச்ச மனுஷன், என் பேரையும் எழுதினது எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு. அதையெல்லாம் என் வாழ்க்கையில மறக்கவே முடியாது.

அவர் சிக்கிரமே கோபாலபுரம் திரும்புவார். அவரை நான் திரும்பவும் வீட்ல பார்ப்பேங்க. என்ன மாதிரி எத்தனையோ பேரு அவர் மேல வெச்சிருக்கிற அன்பும் பாசமும்தாங்க அவர் குணமாகக் காரணம்" என்று தன் உணர்வுகளை வார்த்தைகளாகப் பதித்துவிட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினார் முத்துசாமி.