Published:Updated:

போஸ் எம்.எல்.ஏ மரணம்: சட்டசபையில் பெரும்பான்மையை இழக்கிறதா அ.தி.மு.க?

எம்.எல்.ஏ போஸ் மரணம் அடைந்திருப்பதால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு ஆபத்து ஏற்படுமா? அரசியல் பார்வையாளர்கள் கருத்து என்ன?

போஸ் எம்.எல்.ஏ மரணம்: சட்டசபையில் பெரும்பான்மையை இழக்கிறதா அ.தி.மு.க?
போஸ் எம்.எல்.ஏ மரணம்: சட்டசபையில் பெரும்பான்மையை இழக்கிறதா அ.தி.மு.க?

திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. போஸ் மரணம் அடைந்திருப்பதால், சட்டசபையில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 115 ஆகக் குறைந்துள்ளது. தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கில், மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பைப் பொறுத்தே ஆட்சி தப்புமா என்பது தெரியவரும்.

இந்நிலையில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ், இன்று அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 69. எடப்பாடி பழனிசாமி அரசுக்கு பெரும்பான்மை கிடையாது என்று ஒருபுறம் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், போஸின் மரணம், மேலும் நெருக்கடியை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக மூன்று முறை பதவி வகித்த ஏ.கே. போஸ், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே, உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்தநிலையில் அவர், நேற்று மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நள்ளிரவு 2 மணியளவில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, உயிர் பிரிந்ததாகப் போஸ் குடும்பத்தினர் தெரிவித்தனர். அவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

2016-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சில தினங்களிலேயே அ.தி.மு.க.-வைச் சேர்ந்த எஸ்.எம். சீனிவேலு உயிரிழந்ததை அடுத்த, திருப்பரங்குன்றம் தொகுதியில் போஸ் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதனால், இந்தத் தொகுதிக்கு கடந்த இரண்டாண்டுகளில் மீண்டும் ஓர் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் தற்போது உருவாகியுள்ளது.

அ.தி.மு.க-வின் இளைஞர் அணி உறுப்பினராக தன் அரசியல் பயணத்தைத் தொடங்கிய போஸ், அடிப்படையில் டிராவல்ஸ் அதிபராக இருந்தார். மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட கட்சியின் பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளார். 2006-ம் ஆண்டு முதல்முறையாகத் திருப்பரங்குன்றம் தொகுதியிலிருந்து சட்டமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்ட அவர், 2011-ல் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். என்றாலும் 2016-ம் ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தலில் போஸூக்கு சீட் வழங்கப்படவில்லை.

ஆனால், இந்தத் தொகுதியில் 2016-ல் போட்டியிட்டு வெற்றிபெற்ற அ.தி.மு.க.-வைச் சேர்ந்த எஸ்.எம்.சீனிவேலு, எம்.எல்.ஏ-வாகப் பதவிப் பிரமாணம் எடுப்பதற்கு முன்னரே மரணம் அடைந்ததால், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டியதாயிற்று. இந்த இடைத்தேர்தலில் போஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். இவர் இதற்கு முன்னர், 2004-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தவர். 

ஜெயலலிதாவின் தோழியான சசிகலா குடும்பத்தினருடன் நெருக்கமானவர் என்றாலும், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த 18 எம்.எல்.ஏ-க்கள் பட்டியலில் போஸ் இடம்பெறவில்லை. முதலில் தினகரன் பக்கம் சென்றுவிடுவார் என்று பேசப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில், "ஜெயலலிதாவின் ஆட்சி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர வேண்டும்" என்று தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அ.தி.மு.க-வில் போஸ் இருந்தபோதிலும், பரபரப்பான அரசியல்வாதியாகத் தன்னைக் காட்டிக் கொள்ளாததால், பெரிய அளவில் மக்கள் மத்தியில் பிரபலமாகவில்லை. மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ அரசியல் அறிவியல் பட்டம் பெற்றவர்.

மதுரையில் ஏ.கே.போஸின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவருடைய உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

2016-ல் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, அந்தத் தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளராக ஏ.கே.போஸ் அறிவிக்கப்பட்டார். அப்போது, கட்சியின் பொதுச் செயலாளராகவும் முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். போஸை வேட்பாளராக நியமித்து, தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரப் படிவத்தில் ஜெயலலிதாவின் கைரேகை இடம்பெற்றிருந்தது. அந்தக் கைரேகை செல்லாது என்று கூறி, போஸூக்கு எதிராகத் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் வழக்கு தொடர்ந்தார். ஜெயலலிதாவின் கைரேகை பதிவிடப்பட்டபோது, அவர் சுயநினைவுடன் இருந்தாரா என்றும் தி.மு.க உள்ளிட்ட மற்ற கட்சியினர் அப்போது கேள்வியெழுப்பி இருந்தனர். எனினும், அரசு மருத்துவர் ஒருவர், ஜெயலலிதா சுயநினைவுடன்தான் கைரேகை வைத்தார் என்று சான்றளித்தார். இதையடுத்து, போஸ் வேட்புமனு ஏற்கப்பட்டு, பொதுத் தேர்தலின்போது பணப்பட்டுவாடா காரணமாகத் தள்ளிவைக்கப்பட்ட அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கான தேர்தலுடன் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது. அதில் போஸ் வெற்றிபெற்றார்.

இதற்கிடையே, போஸ் எம்.எல்.ஏ மரணம் அடைந்திருப்பதால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு ஆபத்து ஏற்படுமா என்பது குறித்து அரசியல் பார்வையாளர்கள் கூறுகையில், "அ.தி.மு.க-வுக்கு இப்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கையில், அரசுக்கு இப்போதைக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. போஸ் எம்.எல்.ஏ மரணம் அடைந்திருப்பதால், 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு 115 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு உள்ளது. இது, பெரும்பான்மையை விடவும் குறைவு என்றாலும், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பைப் பொறுத்தே பெரும்பான்மையை அரசு இழக்குமா என்பது தெரியவரும். டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை, சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதையடுத்து, தற்போது மூன்றாது நீதிபதி நியமிக்கப்பட்டு, இந்த வழக்கை அவர் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த வழக்கில் தீர்ப்பு வருவதைப் பொறுத்தே, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு உண்மையான பெரும்பான்மை உள்ளதா, இல்லையா என்பது தெரியவரும். என்றாலும் இப்போதைக்கு அரசுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை" என்றனர்.