Published:Updated:

பாரத் பந்துக்குப் பணிந்ததா மத்திய அரசு? - பட்டியல் சமூகத்தினர் மீதான வன்கொடுமை விவகாரம்!

இரு கோரிக்கைகள் உட்பட 20 பிரச்னைகளைத் தீர்க்கவேண்டும் என வலியுறுத்தி, அகில இந்திய அம்பேத்கர் மகாசபா சார்பில் வரும் 9 ம் தேதியன்று முழு அடைப்பு (பாரத் பந்த்) நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான பிரசாரம் வடமாநிலங்கள் முழுவதும் தீவிரமாக நடத்தப்பட்டுவந்தது.

பாரத் பந்துக்குப் பணிந்ததா மத்திய அரசு? - பட்டியல் சமூகத்தினர் மீதான வன்கொடுமை விவகாரம்!
பாரத் பந்துக்குப் பணிந்ததா மத்திய அரசு? - பட்டியல் சமூகத்தினர் மீதான வன்கொடுமை விவகாரம்!

நான்கு மாதங்களுக்கு முன்னர் நடந்ததைப்போல மீண்டும் ஒரு நிகழ்வு நடந்துவிட்டால், வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்துக்கான போராட்டம் பெரும் பிரச்னையாகிவிடுமோ என மத்திய அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது. ஆம், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகளைத் தடுக்கும் சட்டத்தில் நீதிமன்றம் திருத்தம்சொல்ல, சட்டத்தின் முகாந்திரத்தையே அது அழிப்பதாக நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்தது! 

கடந்த மார்ச் 20 ம் நாளன்று வழக்கொன்றில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு.லலித் ஆகியோர், வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தில் அதிர்ச்சியளிக்கும் மாற்றங்களைச் செய்ய உத்தரவிட்டனர். அதன்படி, அச்சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரைக் கைதுசெய்ய - அரசு ஊழியர் என்றால் அவரின் நியமன அதிகாரியின் அனுமதி பெறவேண்டும்; அரசு ஊழியர் அல்லாதவர் என்றால் மாவட்ட அதிகாரியிடம் அனுமதி பெறவேண்டும் என்பது முக்கியமான மாற்றம். மூலச்சட்டத்தின்படி வன்கொடுமைக் குற்றத்தில் ஈடுபட்டவருக்கு முன்பிணை வழங்கப்படவே கூடாது என்பதை நீதிமன்றம் மாற்றக் கூறியது. முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்ய வேண்டுமெனில் ஒரு வாரத்துக்கு மிகாமல் பூர்வாங்க விசாரணை நடத்தி அதிகாரியின் ஒப்புதலைப் பெற்றாகவேண்டும் என இடையில் மாற்றப்பட்டது. 

புதிய மாற்றங்களால் வன்கொடுமைத் தடுப்புச் சட்டமானது மேலும் பலவீனமாக்கப்படவே வாய்ப்பு உண்டு என நாடு முழுவதும் சாதியொழிப்புக்கான அமைப்புகள் மற்றும் பட்டியல் சமூகத்தினர் அமைப்புகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன. 

உச்ச நீதிமன்றத் தீர்ப்பையடுத்து செய்யப்பட்ட மாற்றங்களை உடனடியாக நீக்கவும் முந்தைய வடிவத்திலேயே சட்டத்தை நீட்டிக்கச்செய்யவும் கோரி கடந்த ஏப்ரல் 2-ம் நாளன்று `பாரத் பந்த்’ நடத்தப்பட்டது. அதையொட்டி பீகார், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் உட்பட பல மாநிலங்களில் வன்முறைகள் வெடித்தன. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பொதுமக்கள் என 11 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக வடமாநிலங்களில் பல நாள்களுக்கு வன்முறை நீடித்தது. 

அதன் பிறகு, அந்தப் போராட்டங்களுடன் தொடர்புடையவர்கள் எனக் கல்லூரிப் பேராசிரியர்கள், உலகப் புகழ்பெற்ற கல்வியாளர்கள், செயற்பாட்டாளர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்டனர். இந்தப் பின்னணியில், உச்ச நீதிமன்றத்தின் சர்ச்சைக்குரிய தீர்ப்பைக் கூறியவர்களில் ஒருவரான கோயல், கடந்த மாதம் 6 அன்று ஓய்வுபெற்றார். அதே நாளில் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் பதவியில் அவர் அமர்த்தப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள பல்வேறு பட்டியல் சாதிக் கட்சிகளும் ஒன்றிணைந்து இந்த நியமனத்துக்குக் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தின. 

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் மகனும் லோக்ஜன சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சிராக் பாஸ்வான், கோயலை அந்தப் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டார். 

பின்னர் டெல்லியில் உள்ள தன் வீட்டில் தலித் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கூட்டிய ராம்விலாஸ் பாஸ்வானும் உள்துறை அமைச்சர் ராஜ்னாத்சிங்குக்குத் தனியாக ஒரு கடிதம் அனுப்பினார். 

இந்த விவகாரத்தைக் கையிலெடுத்துப் போராடிவரும் கூட்டமைப்பான அகில இந்திய அம்பேத்கர் மகாசபாவின் தலைவர் அசோக் பார்த்தி, நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து முந்தைய சட்டத்தை நீட்டிக்கும்வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர வைக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்தும் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது. 

பாஸ்வானைத் தொடர்ந்து, இன்னொரு மத்திய அமைச்சரான இந்திய குடியரசுக் கட்சியின் ராமதாஸ் அத்வாலேவும் இக்கோரிக்கைக்கு ஆதரவாக கடந்த ஞாயிறன்று கருத்துத் தெரிவித்தார். ஆளும் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினரான உதித் ராஜ் கடந்த மாதம் 24 அன்று இந்தப் பிரச்னையை மக்களவையில் எழுப்பினார். வன்முறைச் சம்பவங்களுக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட பீம் ராணுவத்தின் தலைவர் சந்திரசேகரை விடுவிக்கவேண்டும் என்றும் அவர் பேசினார். இந்த இரு கோரிக்கைகள் உட்பட 20 பிரச்னைகளைத் தீர்க்கவேண்டும் என வலியுறுத்தி, அகில இந்திய அம்பேத்கர் மகாசபா சார்பில் வரும் 9 ம் தேதியன்று முழு அடைப்பு (பாரத் பந்த்) நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான பிரசாரம் வடமாநிலங்கள் முழுவதும் தீவிரமாக நடத்தப்பட்டுவந்தது. 

நாடாளுமன்ற மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது இந்தப் பிரச்னை எழுப்பப்பட்டது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பானது பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு ஆபத்தானது என்று குறிப்பிட்டார். அவரின் கேள்விக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இடையில் செய்யப்பட்ட திருத்தங்களை ரத்துசெய்யும்வகையில் சட்டத்திருத்த வரைவை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே அரசு கொண்டுவரும் என்று உறுதியளித்தார். 

நடப்புக் கூட்டத்தொடரானது வரும் 10-ம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. முன்னதாக, கடந்த மார்ச்சில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை தலித் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பாக சந்தித்துப் பேசினர். நேற்று கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் பற்றி முடிவு எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. 

உத்தேச சட்டத்திருத்தத்தில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் ஓர் அங்கமாக 18 ஏ எனும் பிரிவு சேர்க்கப்படவுள்ளது. அதில் முன்பிணை, கைது, முதல் தகவல் அறிக்கை போன்ற அம்சங்கள் தொடர்பாக பழைய நிலையே நீடிக்கும் எனத் திருத்தப்படவுள்ளது.