Published:Updated:

“அ.தி.மு.க-வுக்கு அடிமை சாசனம் எழுதித் தரவில்லை!”

“அ.தி.மு.க-வுக்கு அடிமை சாசனம் எழுதித் தரவில்லை!”
பிரீமியம் ஸ்டோரி
“அ.தி.மு.க-வுக்கு அடிமை சாசனம் எழுதித் தரவில்லை!”

தடதடக்கும் தமிமுன் அன்சாரி

“அ.தி.மு.க-வுக்கு அடிமை சாசனம் எழுதித் தரவில்லை!”

தடதடக்கும் தமிமுன் அன்சாரி

Published:Updated:
“அ.தி.மு.க-வுக்கு அடிமை சாசனம் எழுதித் தரவில்லை!”
பிரீமியம் ஸ்டோரி
“அ.தி.மு.க-வுக்கு அடிமை சாசனம் எழுதித் தரவில்லை!”

‘‘அ.தி.மு.க-வின் சின்னத்தில் வெற்றிபெற்றதாலேயே,  அந்தக் கட்சியினரின் தவறான முடிவுகளுக்கு எல்லாம் என்னால் கட்டுப்பட முடியாது” என்கிறார், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான தமிமுன் அன்சாரி. அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“ஜெயலலிதா இருந்தவரை  சட்டசபையில் அ.தி.மு.க-வின் ஆதரவாளராக இருந்த நீங்கள், இப்போது எடப்பாடி அரசுக்கு எதிராக வெளிநடப்பு செய்யும் அளவுக்குப் போகக் காரணம் என்ன?”

“அனைவரின் உணர்வுகளையும் அறிந்து ஜெயலலிதா செயல்பட்டார். ஓ.பி.எஸ் முதல்வராக இருந்தபோது, ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மாற்றுக் கருத்துகளை நாங்கள் முன்வைத்தோம். அதில் தொடங்கி இப்போதுவரை தமிழ், தமிழர் நலன், தமிழ்நாடு என்ற கொள்கை அடிப்படையில் மக்கள் நலன் சார்ந்தே எங்கள் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஜெயலலிதா கடுமையாக எதிர்த்த ஜி.எஸ்.டி வரி, நீட் தேர்வு, உணவுப் பாதுகாப்பு மசோதா போன்ற பல விவகாரங்களில் எடப்பாடி அரசு, பல சமரசங்களைச் செய்துள்ளது. இவற்றிலெல்லாம் எங்களால் ஒத்துப்போக முடியாது. எங்கள் கட்சியின் கொள்கைகள் மற்றும் திட்டமிடல் அடிப்படையில்தான் எங்களின் அரசியலும், செயல்பாடுகளும் இருக்கும்.”

“அ.தி.மு.க-வுக்கு அடிமை சாசனம் எழுதித் தரவில்லை!”

“மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசாக எடப்பாடி அரசு செயல்படுகிறது என்று சொல்கிறீர்களா?”

“அப்படிச் சொல்ல முடியாது. ஜெயலலிதா துணிச்சலான முறையில் பிரச்னைகளை எதிர்கொண்டார். அவர் எந்த முடிவு எடுத்தாலும், அதில் தமிழக நலனும், மாநில உரிமைகளும் பாதிக்கப்படாமல் இருக்கும். எடப்பாடி அரசு அதுபோன்ற நிலையில் இல்லை என்பதுதான் வேதனை. மத்திய பி.ஜே.பி அரசு கொடுக்கும் நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடிய துணிச்சல், எடப்பாடி அரசிடம் இல்லை. அ.தி.மு.க-வுக்குள் ஏற்பட்ட பிளவு, இவர்களை முழு ஆளுமையோடு செயல்பட விடாமல் தடுக்கிறது என்று நினைக்கிறேன். இன்னும் எஞ்சியிருக்கும் நான்கு ஆண்டு காலம் இந்த ஆட்சி நீடித்து, இவர்களுக்கு மக்களிடம் நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் மாற்றுக் கருத்துகளை முன்வைக்கிறோம்.”

“நீங்கள், கருணாஸ், தனியரசு ஆகிய மூவரும் தனிக் கூட்டணியாகச் செயல்படுவதாகச் சொல்கிறார்களே?”

“உண்மைதான். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் முதன்முதலாக மதுரையில் நாங்கள் மூவரும் இணைந்துதான் போராட்டத்தைத் தொடங்கிவைத்தோம். அதன் தொடர்ச்சியாக மாட்டிறைச்சி தடை விவகாரம், பேரறிவாளன் விடுதலை, நீட் தேர்வு போன்ற விவகாரங்களில் இணைந்து குரல் கொடுக்கிறோம். எங்கள் மூவருக்கும் நல்ல நட்பு இருக்கிறது. இது, மூன்று கட்சிகளின் நட்பாக மாறியிருக்கிறது. எங்களைச் சட்டசபையில் சேரர், சோழர், பாண்டியர் என்றுதான் வர்ணிக்கிறார்கள்.”

“உங்கள் மூவரையும் எடப்பாடிக்கு எதிராக தினகரன்தான் இயக்குகிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளதே?”

“நான், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர். கருணாஸ், முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர். தனியரசு, கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனர். இந்த மூன்று கட்சிகளுக்குமே தனித்தனிக் கொள்கைகள், தனித்தனி நிர்வாகங்கள் உண்டு. நாங்கள் அ.தி.மு.க கூட்டணியில் இருக்கிறோமே தவிர, அவர்களின் வழிகாட்டுதலில் செயல்படவில்லை. அ.தி.மு.க-வே மூன்று அணிகளாகப் பிரிந்திருக்கும் நிலையில், இந்தப் பலவீனத்தை வைத்து நாங்கள் குளிர் காய நினைக்கவில்லை.அனைவரிடமும் மரியாதை ரீதியான தொடர்பு எங்களுக்கு இருக்கிறது. தினகரனுடன் கூட எங்களுக்குப் பல கருத்துவேறுபாடுகள் உண்டு.”

“ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் பி.ஜே.பி வேட்பாளருக்கு எதிராக வாக்களித்திருக்கிறீர்களே?”

“வகுப்புவாதத்தை எந்த ரூபத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பது எங்கள் கொள்கை. அந்த அடிப்படையில், காங்கிரஸ் வேட்பாளர் மீரா குமாரை ஆதரித்தோம். இதே நிலையை எடுக்க வேண்டும் என்று தனியரசிடமும், கருணாஸிடமும் வேண்டுகோள் வைத்தேன். ஆனால், முடிவெடுத்தது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்!”

“இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நீங்கள், அ.தி.மு.க-வுக்கு எதிராகச் செயல்படுவது நியாயமா?”

“இரட்டை இலைச் சின்னத்தில் நாங்கள் போட்டியிட வேண்டும் என்பது ஜெயலலிதாவின் முடிவு. தனிச்சின்னத்தில் போட்டியிடவே நாங்கள் விரும்பினோம். ஆனால், அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் அப்போது அவர்கள் இல்லை. எங்கள் அரசியல் நலன் கருதி அப்போது சிறிய சமரசம் செய்துகொண்டோம். அதற்காக அ.தி.மு.க-வுக்கு நாங்கள் அடிமைச் சாசனம் எழுதித் தரவில்லை!’’

“நீங்கள் மூவரும் தி.மு.க கூட்டணிக்குச் செல்லப்போவதாகச் செய்தி வருகிறதே?”

“அது தவறான செய்தி. பேரறிவாளன் விடுதலை, சிறைவாசிகள் விடுதலைத் தொடர்பாக அனைத்துக் கட்சிகளின் ஆதரவைத் திரட்ட முடிவு செய்தோம். அதனால், ஸ்டாலினையும், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமியையும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்.எல்.ஏ அபுபக்கரையும் சட்டமன்றத்தில் சந்தித்து மனு கொடுத்தோம். முரசொலி விழாவில் பங்கேற்க வேண்டும் என்று தி.மு.க சார்பில் அழைப்பிதழ் கொடுத்தார்கள். இது, அரசியல் நாகரிகத்தின் அடையாளம். அதனால் நாங்கள் தி.மு.க பக்கம் சாய்வதாக நினைக்க வேண்டாம். திருநாவுக்கரசர், அன்புமணி ராமதாஸ், ஜி.ராமகிருஷ்ணன், திருமாவளவன், சீமான் உள்ளிட்டவர்களைக் கூட சந்தித்தோம். தமிழகத்தில் ஆரோக்கியமான ஜனநாயக சூழல் வேண்டும். அதையே நாங்கள் முன்னெடுக்கிறோம்.”

- அ.சையது அபுதாஹிர்
படம்: கே.ஜெரோம்