Published:Updated:

சைக்கிள் `டிரம் டீ’... பிளாட்பாரத் தூக்கம்... கசங்கிய சட்டை... இவர்கள் தி.மு.க-வின் சீனியர்கள்!

உடன்பிறப்புகளில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். அதிர்ச்சியால் நெஞ்சடைப்பு, தற்கொலை என்று அவர்களின் மரணத்துக்கான காரணங்கள் இருந்திருக்கின்றன. இறந்தவர்களில் ஒருவர்கூட இளைஞர் இல்லை. இளைஞரணியில் ஒரு காலத்தில் அவர்கள் இருந்திருக்கலாம்.

சைக்கிள் `டிரம் டீ’... பிளாட்பாரத் தூக்கம்... கசங்கிய சட்டை... இவர்கள் தி.மு.க-வின் சீனியர்கள்!
சைக்கிள் `டிரம் டீ’... பிளாட்பாரத் தூக்கம்... கசங்கிய சட்டை... இவர்கள் தி.மு.க-வின் சீனியர்கள்!

தி.மு.க தலைவராக 50 ஆண்டுகள், பொதுவாழ்வில் 80 ஆண்டுகள் எனத் தொடர்ந்து இயங்கி வருபவர் கருணாநிதி! `அண்ணாவிடம் இதயத்தை இரவல் பெற்ற கருணாநிதியைப்போல, 2017 ஜனவரி 4-ம் தேதி முதல் கருணாநிதியின், 'தலைவர்' பதவியில் பாதியை இரவலாகப் பெற்று செயல் தலைவராகி இருக்கிறார் மு.க.ஸ்டாலின்! தி.மு.க-வில் இளைஞரணி உருவானபோது, அதன் செயலாளராக அரசியலில் விஸ்வரூபம் எடுத்தவர் ஸ்டாலின். முன்னதாக 1967-களின் இறுதியில், பள்ளி மாணவராக இருந்தபோதே, நண்பர்களை இணைத்துக்கொண்டு, 'கோபாலபுரம் இளைஞர் தி.மு.க'-வைத் தொடங்கி, எதிர்காலத் தி.மு.க இளைஞரணிக்கு வித்திட்டார். மதுரை, ஜான்சிராணி பூங்காவில், 1980-ல் அமைப்பு ரீதியாகத் தி.மு.க இளைஞரணி உருவான பின்னர்தான், அப்போது ஆட்சியிலிருந்த அ.தி.மு.க உள்ளிட்ட பல தமிழ்நாட்டுக் கட்சிகள் இளைஞரணி என்ற அமைப்பை தத்தம் கட்சிகளில் புகுத்தியது.

1975-ல் இந்திராகாந்தி, எமர்ஜென்ஸியைக் கொண்டு வந்தபோது, ஸ்டாலின் உட்பட நூற்றுக்கணக்கான தி.மு.க-வினர், `மிசா' சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ச்சியான முன்னெடுப்பும் விடா முயற்சியும் ஸ்டாலினுக்குக் கட்சி ரீதியாகக் கொடுத்த பரிசுகள்தான் பொருளாளர் பதவியும் செயல்தலைவர் பதவியும். ஐந்து முறை எம்.எல்.ஏ, இரண்டு முறை மேயர், ஒருமுறை உள்ளாட்சித்துறை அமைச்சர் பொறுப்புடன்கூடிய துணை முதலமைச்சர் ஆகியவை அரசியல் ரீதியாகக் அவருக்குக் கிடைத்தப் பதவிகள். கருணாநிதியின் பிள்ளைகளான மு.க.முத்து, மு.க.தமிழரசு ஆகியோர் முழுநேர அரசியலில் ஈடுபடாதவர்கள். மு.க.அழகிரியும் மு.க.ஸ்டாலினும், மு.க.கனிமொழியும் முழுநேர அரசியல்வாதிகள் என்றாலும், கட்சியைப் பொறுத்தவரை உயரிய பொறுப்பில் இருப்பவர் ஸ்டாலினே!

ஸ்டாலினுக்கு செயல் தலைவர் பொறுப்பை ஒப்படைக்கும் விழாவில், கட்சியின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன், வரவேற்ற விதமே அலாதியானது. ``தி.மு.க வரலாற்றிலே இன்று மிக முக்கியமான நாள். செயல் தலைவராக ஸ்டாலின் வரலாறு படைப்பார். வானத்து நட்சத்திரமாக ஜொலிப்பார் என்பது உறுதி. 1956-ல்  நடைபெற்ற தி.மு.க மாநாட்டில், தலைமை வகித்த நாவலர் நெடுஞ்செழியனைப் பார்த்து, 'தம்பி வா, தலைமையேற்க வா! உன் ஆணைக்கு நான் கட்டுப்படுகிறேன்' என்று அண்ணா அழைத்தார். அந்த அண்ணாவின் வார்த்தைகளைக் கடன் வாங்கி இப்போது ஸ்டாலினுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். 'தம்பி வா, தலைமையேற்க வா. உன் ஆணைக்கு நாங்கள் கட்டுப்பட்டு நிற்கிறோம்... இது சத்தியம், இது சத்தியம், இது சத்தியம்'' என்றே அழைப்பு விடுத்து வரவேற்றார்.

இன்று கருணாநிதிக்கு உடல் நலமில்லை. முதுமை காரணமாகக் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உள்ளூரிலிருந்தும் வெளியூரிலிருந்தும் வந்து சேரும் ஆயிரக்கணக்கானத் தொண்டர்கள் - அனுதாபிகள் காவேரி மருத்துவமனை வளாகத்தில் குவிந்து கிடக்கின்றனர். அவர்கள் எழுப்பும் கோஷம், காவிரியில் பெருக்கெடுக்கும் வெள்ளத்தின் இரைச்சலை மிஞ்சும் விதமாகக் காவேரி மருத்துவமனை கதவுகளில் மோதி உடைகிறது. கருணாநிதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் இரண்டு நாள்கள் வரை பரவிய தகவல்கள் அத்தனை 'நல்ல' விதமாக இல்லை. கருணாநிதி குறித்து வெளியான தகவலை நம்ப மறுத்தத் தொண்டர்கள், 'தலைவா எழுந்து வா' என்ற கோஷத்தை எழுப்பியபடி காவேரி மருத்துவமனை முன்பாக, அடுத்த சில நிமிடங்களில் திரண்டு விட்டனர். திரண்டவர்களில் பாதிக்கும் மேலான நபர்கள் இளைஞர்கள் அல்ல!

ஆனால், மருத்துவமனை அருகே `டிரேட் மார்க்’ ஆடை அடையாளத்துடன், அடுத்து வந்த நாள்களில், சில இளைஞர்கள் சுழற்சி முறையில் வந்து நின்று `போஸ்' கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். கேமராக்களுக்கு முகங்களைக் காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். இன்னொரு பக்கம், வெயில், மழை, குளிர் என்று அனைத்தையும் தாங்கிக்கொண்டு ஒருவார காலமாக ஒரே ஆடையில், ஒரு கூட்டம் எப்போதும் மருத்துவமனை வாசல், சுற்றுப்பகுதிகளில் காத்துக் கிடக்கிறது, நடைபாதைகளில் உறங்கிக் கழிக்கிறது. அந்தக் கூட்டத்தின் தலைகளில் கறுப்பு-சிவப்புத் துண்டுகளே தலைப் பாகைகளாய், முகம் துடைக்கும் துண்டுகளாய்ப் பயன்பட்டுக்கொண்டிருக்கின்றன. சைக்கிள் கேரியரில் 'கேன்'களில் கொண்டுவந்து விற்கப்படும் டீ, காய்ந்த ரொட்டி, நமத்துப்போன பிஸ்கட்டுகள்தான் அந்த ஜீவன்களைப் பசியிலிருந்து காப்பாற்றிக்கொண்டிருக்கின்றன. சென்னைக்கு வர வாய்ப்பில்லாமல், தங்கள் ஊரிலேயே உருகி, அழுது தேய்ந்த உடன்பிறப்புகளில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். அதிர்ச்சியால் நெஞ்சடைப்பு, தற்கொலை என்று அவர்களின் மரணத்துக்கான காரணங்கள் இருந்திருக்கின்றன. இறப்புப்பட்டியலில் இருப்பவர்கள் அனைவரும் வயதில் மூத்தவர்கள்தான். 21 பேரில் 15 பேர் தி.மு.க-வில், எந்த முக்கியப் பொறுப்பிலும் இல்லாதவர்கள்; அடிப்படை உறுப்பினர்கள் மட்டுமே. 'உயிரை மாய்த்துக்கொள்ளும் செயலில் யாரும் ஈடுபட வேண்டாம்' என்று மு.க.ஸ்டாலின் அறிக்கையின் மூலம் கேட்டுக்கொண்டிருக்கிறார். கட்சியின் இளைஞரணிப் பொறுப்பைக் கையில் வைத்திருந்த ஸ்டாலினுக்கும் தி.மு.க-வுக்கும் இந்த மரணங்கள் மிகப் பெரிய உண்மையைப் பாடம் நடத்திவிட்டுப் போயிருக்கிறது!