Published:Updated:

``எங்களை நம்பி வருபவர்களுடன் கூட்டணி!” - டி.டி.வி.தினகரன் பேட்டி...

நவீன் இளங்கோவன்
``எங்களை நம்பி வருபவர்களுடன் கூட்டணி!” - டி.டி.வி.தினகரன் பேட்டி...
``எங்களை நம்பி வருபவர்களுடன் கூட்டணி!” - டி.டி.வி.தினகரன் பேட்டி...

``கூட்டணி பற்றி தற்போது பரவிவரும் யூகங்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. தேர்தல் நேரத்தில்தான் அதைப்பற்றிப் பேசுவேன்” என டி.டி.வி.தினகரன் கூறியிருக்கிறார்.

தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில் அமைந்துள்ள தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதன் பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய டி.டி.வி.தினகரன், ``2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது பா.ஜ.க தலைமையில் ஒரு கூட்டணி, காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணி என ஆளாளுக்கு ஒரு கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டனர். ஆனால், ஜெயலலிதா தனித்து நின்று போட்டியிட்டு 37 தொகுதிகளில் பிரமாண்டமான வெற்றி பெற்றார். அதைப்போலவே, வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கூட்டணி அமைத்து 40 தொகுதிகளில் நிச்சயமாக வெற்றி பெறும். ஒருசிலர் நீங்கள் அவருடன் கூட்டணியா..! இவர்களுடன் கூட்டணியா..! என்கின்றனர். கூட்டணி குறித்த யூகங்களுக்கு இப்போது பதில் சொல்ல முடியாது. தேர்தல் நேரத்தில் அதைப் பற்றிப் பேசுவோம். நிறைய கட்சிகள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 90 சதவிகித அ.தி.மு.க தொண்டர்கள் எங்களிடமே உள்ளனர். ஒருவேளை வலுவான கூட்டணி அமையாவிட்டால், அ.ம.மு.க தலைமையில் ஒரு கூட்டணியை உருவாக்கி தேர்தலைச் சந்தித்து 37 தொகுதிகளில் நிச்சயமாக வெற்றி பெறுவோம்.

சிலைக் கடத்தல் வழக்குகளை சி.பி.ஜ வசம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு எடுத்திருப்பதில் உள்நோக்கம் இருக்கலாம். 50 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன சிலைகளை எல்லாம் மீட்டுக் கொண்டுவந்த பொன்.மாணிக்கவேலுக்குப் பதிலாக தற்போது சி.பி.ஜயை இந்த அரசு நாடுவது சரியல்ல. வேண்டுமானால் பொன்.மாணிக்கவேலுக்கு உதவியாக சி.பி.ஐயை அமர்த்தலாம். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, முட்டை ஊழல் மற்றும் செய்யாத்துரை வீட்டில் நடைபெற்ற ரெய்டு போன்றவற்றுக்கும் தமிழக அரசு சி.பி.ஜ விசாரணை கேட்கலாமே..! அப்படிச் செய்தால் ரெய்டில் என்னென்ன கைப்பற்றப்பட்டது, யார் யாருக்கெல்லாம் சம்பந்தம் இருக்கிறது என தெரியவரும்” என்றார்.

தொடர்ந்து பேசியவர், ``சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய நிர்வாகிகளிடம் பேசிய ஆடியோ ஒன்று வெளியானது. அந்த ஆடியோவில் ஆசிரியர்களையும், அரசு அதிகாரிகளையும் எடப்பாடி பழனிசாமி ஒருமையில் ஒரு நாலாந்தர மனிதரைப் போல பேசியிருக்கிறார். அவர்களைப் போலத்தான் அவர்களுடைய தொண்டர்களும் இருப்பார்கள். எடப்பாடி சம்பந்தி பார்ட்னராக உள்ள நிறுவனத்துக்கு 4,000 கோடிக்கு கான்ட்ராக்ட் கொடுக்க காரணம் என்ன. 10 கோடி செலவில் அவசர அவசரமாக எட்டு வழிச்சாலை போடப்படுவது ஏன்?... அனைத்து துறைகளில் ஊழலில் திளைக்கும் அரசாகவே இந்த அரசு இருக்கிறது. விரைவில் இந்த ஆட்சி அகற்றப்படும். எங்களை நம்பி கூட்டணி வைப்பவர்களுடன் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெறுவோம். மறுபடியும் தமிழகத்தில் அம்மாவினுடைய ஆட்சி மலரும்” என்றார்.