Published:Updated:

சம்பள உயர்வோடு முடிந்த சட்டசபை!

சம்பள உயர்வோடு முடிந்த சட்டசபை!
பிரீமியம் ஸ்டோரி
சம்பள உயர்வோடு முடிந்த சட்டசபை!

மீன் பார்சல்... தெர்மாகோல் விளக்கம்...

சம்பள உயர்வோடு முடிந்த சட்டசபை!

மீன் பார்சல்... தெர்மாகோல் விளக்கம்...

Published:Updated:
சம்பள உயர்வோடு முடிந்த சட்டசபை!
பிரீமியம் ஸ்டோரி
சம்பள உயர்வோடு முடிந்த சட்டசபை!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி முகத்தில் சந்தோஷக் களை மின்னுகிறது. நிம்மதியாக ஒரு சட்டமன்றக் கூட்டத் தொடரை முடித்துவிட்டார். அணிகளாகப் பிரிந்துகிடக்கும் ஆளும்கட்சி உறுப்பினர்களை லாகவமாகக் கையாண்ட முதல்வர்... கடைசி தினம்வரை ஆளும்கட்சி உறுப்பினர்களுக்குக் கிலியை ஏற்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்... அமைச்சர்களின் பேச்சையே அவைக்குறிப்பிலிருந்து நீக்கிய சபாநாயகர் தனபாலின் துணிச்சல் என வித்தியாசமாக இருந்த இந்தச் சட்டமன்றக் கூட்டத்தொடர், ஜூலை 19-ம் தேதி நிறைவுபெற்றது. கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத சபையாக இருந்தாலும், சுவாரஸ்யத்துக்குப் பஞ்சம் இல்லை!

இ.பி.எஸ்-ஸுக்கு அர்த்தம் தெரியுமா?

ஆதிதிராவிடர் நலத்துறை மானியக் கோரிக்கையில் பேசிய அந்தத் துறையின் அமைச்சர் ராஜலெட்சுமி, ஏகத்துக்கும் முதல்வரைப் புகழ்ந்து தள்ளினார். ஒரு கட்டத்தில், “இ.பி.எஸ் என்று முதல்வரை அழைக்கக் காரணம் தெரியுமா?” என்று கேட்டவர், “E-(Energy) அம்மாவின் எனர்ஜியோடு, P- (Power) தொண்டர்களின் பவரோடு, S-(Success) அரசை வெற்றிகரமாக வழிநடத்துவதால்தான் அவர் இ.பி.எஸ் என்று அழைக்கப்படுகிறார்” என்று விளக்கம் தர, முதல்வர் உட்பட அனைவருமே சிரித்து விட்டனர்.

சம்பள உயர்வோடு முடிந்த சட்டசபை!

வஞ்சிரம் மீன் பார்சல்!

மீன்வளத் துறை மானியக் கோரிக்கை நாளன்று, சட்டமன்ற விடுதியில் உள்ள எம்.எல்.ஏ-க்களின் வீடுகளுக்கு ஐஸ் பாக்ஸ் பார்சல் ஒன்று சென்றுள்ளது. அந்த பாக்ஸில் வஞ்சிரம் மீன் இருந்ததாம். மேலும், மீன்வறுவல், இறால் ஃப்ரை, கனவாய் தொக்கு எனக் கடல் அயிட்டங்கள் தனி பாக்ஸில் இருந்துள்ளன. மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரின் ஏற்பாட்டில், இந்த மீன் உபசாரம் நடைபெற்றது.

தெர்மாகோலுக்கு விளக்கம்!

அமைச்சர் செல்லூர் ராஜு, தனது தெர்மாகோல் கண்டுபிடிப்பைக் கடையெழு வள்ளல்களோடு ஒப்பிட்டு விளக்கம் சொன்னார். “முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியைக் கேலி செய்தோர் உண்டு. மயிலுக்குப் போர்வை போர்த்திய  பேகனையும் அறியாத மன்னன், புரியாத மன்னன் என்று கிண்டல் செய்தோர் உண்டு. எங்களிடம் வெகுளித்தனம் இருக்கும். வெள்ளந்தி சனங்களாக இருப்போம். ஆனால் , எங்கள் நோக்கங்களில் நல்ல எண்ணங்கள் மட்டுமே நிறைந்திருக்கும்” என்றார்.  இவரின் இந்த அடடா விளக்கத்தைப் பார்த்து, ஆளும்கட்சி உறுப்பினர்களே வாயடைத்துப்போனார்கள்.

‘‘நான் ஒரு வானொலிப் பெட்டி!”

ராதாபுரம் எம்.எல்.ஏ-வான இன்பதுரை, தாமிரபரணி நதி நீர் இணைப்புப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, தி.மு.க-வினரைப் பற்றி சில கருத்துகளைக் கூறினார். அவருடைய பேச்சுக்கு இடையூறாக தி.மு.க-வினர் கூச்சலிட்டனர். அதைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பேசிய இன்பதுரை, “நான் ஒரு வானொலிப் பெட்டி. எனது சத்தத்தைக் கூட்டவோ, குறைக்கவோ முடியும். பிடிக்கவில்லை என்றால் அணைக்கமுடியும். ஆனால், ஒருபோதும் எனது அலைவரிசையைத் தடுத்து நிறுத்த முடியாது” என்று ‘அலைவரிசை’ ஊழலைப் பற்றி சூசகமாகக் கூறினார்.

குற்றம்சாட்டிய அ.தி.மு.க உறுப்பினர்!

தினகரன் அணியில் உள்ள அ.தி.மு.க உறுப்பினர் செந்தில்பாலாஜி, ஜி.எஸ்.டி-யால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்துப் பேசினார். அப்போது, எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன், “உங்கள் கட்சி உறுப்பினரே குற்றம்சாட்டுகிறாரே?” என்று கமென்ட் அடித்தார். உடனே வணிகவரித்துறை அமைச்சர் வீரமணி எழுந்து, “அவரது கோரிக்கை பற்றி ஜி.எஸ்.டி கவுன்சிலில் பரிசீலிக்கப்படும்” என்று சமாளித்தார். ஜி.எஸ்.டி-யின் பாதிப்புகள் குறித்து தெளிவாகப் பேசிய மற்றோர் உறுப்பினர், காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார்.

அதிகாரத்தைக் காட்டிய சபாநாயகர்!

சபாநாயகரின் அதிகாரம் என்ன என்பதை இந்தக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சியினருக்கு மட்டுமல்ல, ஆளுங்கட்சியினருக்கும் உணர்த்திவிட்டார் தனபால். பெரும்பாலும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சைத்தான் அவைக்குறிப்பிலிருந்து நீக்குவார்கள். இந்த முறை, அமைச்சரின் பேச்சையும், முதல்வரின் பேச்சையும் அவைக்குறிப்பிலிருந்து சபாநாயகர் நீக்கினார். இறுதியாக, அவை முன்னவர் செங்கோட்டையனின் பேச்சையும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கி, தான் பாரபட்சமற்றவர் என்பதை நிரூபித்துவிட்டார்.

தி.மு.க-வினரின் ஆர்வமும், ஸ்டாலினின் கோபமும்!

எம்.எல்.ஏ-க்களின் சம்பளத்தை உயர்த்துவதாக முதல்வர் அறிவித்தபோது, அ.தி.மு.க உறுப்பினர்கள் மேஜையைத் தட்டினார்கள். எதிர்வரிசையில் இருந்த தி.மு.க உறுப்பினர்களும் ஆர்வக்கோளாறில் இதில் கூட்டணி சேர முயன்றார்கள். இதனால் டென்ஷனான ஸ்டாலின், தி.மு.க உறுப்பினர்களைப் பார்த்து முறைத்ததும், கப்சிப் என்று அடங்கி விட்டார்கள். “நாங்கள் சம்பள உயர்வை வரவேற்க வில்லை” என வெளியே வந்து துரைமுருகன் பேட்டி கொடுத்ததன் பின்னணி இதுதான்.

- அ.சையது அபுதாஹிர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!