Published:Updated:

ஸ்டாலின் தீர்மானத்தை ஆதரித்த அ.தி.மு.க!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஸ்டாலின் தீர்மானத்தை ஆதரித்த அ.தி.மு.க!
ஸ்டாலின் தீர்மானத்தை ஆதரித்த அ.தி.மு.க!

அன்று ஜெயலலிதா... இன்று கருணாநிதி

பிரீமியம் ஸ்டோரி

திர்க்கட்சித் தலைவர் கொண்டுவரும் தீர்மானத்தை ஆளுங்கட்சி ஆதரிப்பது அபூர்வம். ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில், கருணாநிதி தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானத்தை அ.தி.மு.க ஒருமனதாக ஆதரித்த அதிசயம் நிகழ்ந்தது.

முன்னாள் முதல்வரும், திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான கருணாநிதி, சட்டமன்ற உறுப்பினர் ஆனதன் வைர விழா, சமீபத்தில் சென்னையில் கொண்டாடப்பட்டது. அந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்க முடியாத அளவுக்கு உடல்நலக்குறைவோடு இருந்தார், தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியான கருணாநிதி. முதன்முதலாக, குளித்தலைத் தொகுதியில் வெற்றிபெற்று சட்டமன்றத்துக்குச் சென்ற கருணாநிதி, இப்போது அவர் பிறந்த மண்ணான திருவாரூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். எப்போதும் அவர் உற்சாகம் பொங்க, உணர்ச்சிகரமாக சட்டமன்ற நிகழ்வுகளில் பங்கேற்பார். 2001-06 ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அந்த உற்சாகம் மெல்ல வடியத் தொடங்கியது. எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும்போது லாபிக்கு வந்து கையெழுத்துப் போடுவதும், சபை நடவடிக்கைகள் குறித்து காட்டமான அறிக்கைகளை வெளியிடுவதுமாக தன்னைச் சுருக்கிக்கொண்டார்.

ஸ்டாலின் தீர்மானத்தை ஆதரித்த அ.தி.மு.க!

2006-ம் ஆண்டு முதல்வர் ஆனதும் மீண்டும் சுறுசுறுப்பானார். கருணாநிதி முதல்வராக இருந்தபோது, கடந்த 2011-ம் ஆண்டில் 13-வது சட்டமன்றத்தின் 15-வது கூட்டத்தொடரில்தான் கடைசியாக உரையாற்றினார். இந்தக் கூட்டத்தொடர், 2011-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி முதல் பிப்ரவரி 10-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தொடரில் இன்னொரு சுவாரஸ்யமான நிகழ்வும் நடைபெற்றது. பேரவை விதி 20(1)-ன் கீழ் அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். மருத்துவர்கள் அறிவுரையின்படி ஓய்வில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு விடுப்பு அளிக்க வகை செய்யும்படி இந்தத் தீர்மானம் முன்மொழியப்பட்டது. ஆளுங்கட்சியான தி.மு.க ஆதரவுடன் இது நிறைவேற்றப்பட்டது. 2006-2011 வரையிலான தி.மு.க ஆட்சிக் காலத்தில், ஜெயலலிதா தொடர்ந்து அவைக்கு வராமல் இருந்தார். இதனால் அவரின் எம்.எல்.ஏ பதவி பறிபோகும் என்கிற நிலையில் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்கள். அந்த நேரத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜர் ஆக வேண்டியிருந்தது. சட்டமன்ற தீர்மானத்தைக் காரணம் காட்டி, அதிலிருந்து விலக்கு பெற்றார் ஜெயலலிதா. இதைக் குறிப்பிட்டு, ‘‘நம் மூலமே விடுப்பு தீர்மானத்தை நிறைவேற்றி, நீதிமன்றத்தில் இருந்து ஆஜராவதிலிருந்து விலக்குப் பெற்றிருக்கிறார்’’ எனச் சொன்னார் கருணாநிதி.

2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வென்று ஜெயலலிதா முதல்வரானபிறகு, கருணாநிதி அவை செயல்பாடுகளில் ஆர்வம் காட்டவில்லை. எம்.எல்.ஏ பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு மட்டும் வந்த அவர், அதன்பிறகு லாபியில் வந்து கையெழுத்துப் போட்டுச் சென்றதோடு சரி. மீண்டும் 2016 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர், எம்.எல்.ஏ-வாகப் பதவி ஏற்கும்போது மட்டும் கருணாநிதி சட்டமன்றத்துக்குள் வந்தார். பின்னர், கடந்த ஆகஸ்ட் மாதம் பேரவை லாபிக்கு வந்த கருணாநிதி, வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டுச் சென்றார்.

அதன் பின்னர் உடல்நலம் இல்லாமல் இருக்கும் கருணாநிதி, சட்டமன்றத்துக்கு வரவில்லை. ஆறு மாதங்களுக்கும் மேலாக, வருகைப் பதிவேட்டிலும் கையெழுத்துப் போடவில்லை. சட்டமன்ற விதி 20(2)-ன் படி முன் அனுமதி பெறாமல், 60 நாட்களுக்குத் தொடர்ந்து அவைக் கூட்டங்களுக்கு எந்த ஒரு உறுப்பினராவது வராதபட்சத்தில், அவரின் பதவி பறிபோகும். இதற்கான தீர்மானத்தை, சட்டமன்ற உறுப்பினர் யார் வேண்டுமானாலும் கொண்டு வரலாம். அப்படிக் கொண்டு வரப்படும் தீர்மானம் திருத்தமோ, விவாதமோ இன்றி பேரவையின் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்படும். எனவே, ‘கருணாநிதியின் எம்.எல்.ஏ பதவி பறிபோனதாக அறிவிக்கப்படும்’ என்ற பரபரப்பு எழுந்தது.

இந்தச் சூழ்நிலையில்தான், முன்பு ஜெயலலிதாவுக்கு விடுப்பு அளிக்கும் தீர்மானம் நிறைவேற்றியதைப் போல, கடந்த 18-ம் தேதி சட்டமன்றத்தில், பேரவை விதி 20(1)-ன்படி கருணாநிதிக்கு விடுப்பு அளிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்தத் தீர்மானத்துக்கு ஆளும்கட்சி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். இதனால் தீர்மானம் நிறைவேறியது. ‘கருணாநிதியின் எம்.எல்.ஏ பதவி தப்பியது’ என்கிற செய்தித் தலைப்பு, நினைவுகளின் நிழலில் ஓய்வெடுக்கும் அவருக்கு என்ன உணர்வைத் தந்திருக்குமோ, தெரியவில்லை!

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸிடம் பேசினோம்.

“சோ.பாலகிருஷ்ணன், உ.சுப்பிரமணியன், மூக்கையா தேவர் ஆகியோருக்கு இப்படி விடுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இதே போல நாடாளுமன்றத்தில் எம்.பி-க்களுக்கும் விடுப்பு அனுமதி உண்டு” என்றார்.

கண்ணியமான அரசியலின் கனிந்த அடையாளங்கள் இவை!

- கே.பாலசுப்பிரமணி
படம்: ஆ.முத்துக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு