பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

பாரதி முருகன், மணலூர்பேட்டை.

‘‘பசு பாதுகாப்பு என்ற பெயரில் மக்களைக் கொல்வதை ஏற்க முடியாது’’ என்று பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளாரே?


 சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் பொறுப்பில் உள்ள பிரதமர், இப்படிச் சொல்வது வரவேற்கத்தக்கது. அப்படிச் செயல்படுபவர்கள் மீது சட்டம் கடுமையான நடவடிக்கை எடுக்கிறது என்பதையும் பிரதமர் உறுதி செய்ய வேண்டும். மேலும், குற்றத்தாக்குதல் என்பதைவிட  வன்மம் தோய்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவது அதிகமாகி வருகிறது. எல்லாப் பிரச்னைகளுக்கும் இதுதான் காரணம். அது தடுக்கப்பட வேண்டும்.

கழுகார் பதில்கள்!

முருகேசன், கோவை.

டி.கே.ராஜேந்திரனுக்கு டி.ஜி.பி-யாக இரண்டு ஆண்டுகள் பதவி நீட்டிப்பு தரப்பட்டுள்ளது எதைக் காட்டுகிறது?


இங்கு வேறு தகுதியான போலீஸ் அதிகாரிகள் இல்லை எனத் தமிழக ஆட்சியாளர்கள் நினைப்பதையும், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைக்  காப்பாற்ற ராஜேந்திரனை விட்டால் ஆள் இல்லை என அவர்கள் நம்புவதையும், ‘ஒருவர் மீது என்ன குற்றச்சாட்டு வந்தால் என்ன... அது பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை’ என்ற அவர்களின் போக்கையும் காட்டுகிறது. மன்னன் எவ்வ்ழியோ, மக்கள் அவ்வழி!

கழுகார் பதில்கள்!

சம்பத்குமாரி, பொன்மலை.

‘தமிழகம், ஊழலில் பீகாரையும் முந்திவிட்டது’ என்று சொன்ன கமல், ‘இதற்கு எதிராக வலுவான போராட்டத்தை எதிர்பார்க்கிறேன்’ என்றும் சொல்லியிருக்கிறார். வலுவான போராட்டத்துக்கு அவரே ஏன் பிள்ளையார் சுழி போடக்கூடாது?


அதுதான் சிக்கல் தொடங்கிவிட்டதே. அவரை எதிர்த்துப் பெரும்பாலான அமைச்சர்கள் பேட்டி கொடுத்துவிட்டார்கள். கமல் மீது வழக்குப் போடப் போவதாகவும் சொல்கிறார்கள். கமலுக்குத் தி.மு.க ஆதரவு தெரிவித்துள்ளது. தி.மு.க-வுக்குக் கமல் நன்றி சொல்லியிருக்கிறார். கமலை ஆதரித்தும் எதிர்த்தும் அரசியல் தலைவர்கள் பேச ஆரம்பித்துள்ளார்கள். அடுத்து, கமல் ரசிகர்களை யாராவது சீண்டுவார்கள். இப்படித்தான் ஆரம்பிக்கும். பொறுத்திருந்து பாருங்கள்.

கழுகார் பதில்கள்!

பி.ஸ்ரீ.தர்ஷினி, குடந்தை-1.

மோடியை மகனைப் போல கவனித்துக்கொண்டாராமே பிரணாப்?

அப்பா போல இருப்பவரையே ஜனாதிபதியாகத் தொடர வைத்திருக்கலாமே?

மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

சினிமாவில் வடிவேலு பேசும் பாணியில் அரசியலில் துரைமுருகன் பேசுகிறாரே?

துரைமுருகன் நன்றாக மிமிக்ரி செய்வார். யார் மாதிரியும் பேசிக் காட்டுவார். அது அவருக்குக் கை வந்த கலை.

கழுகார் பதில்கள்!

ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

தம்பிதுரை அ.தி.மு.க-வில் எந்த அணியில் இருக்கிறார்?

சசிகலாவுக்குத் தம்பியாகவும் எடப்பாடிக்குத் துரையாகவும் இருக்கிறார்.

கே.வேலுச்சாமி, தாராபுரம்.


நாட்டில் இப்போது அமல்படுத்தப் பட்டுள்ள ஜி.எஸ்.டி வரி முறையில் உள்ள குறைபாடுகளை எடுத்துக்கூற மேல்முறையீட்டு அமைப்பு உள்ளதா?


மேல்முறையீட்டு அமைப்பு போல எதுவும் இல்லை.

ஜி.எஸ்.டி கவுன்சில் என்ற ஒன்று உள்ளது. அதில், அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் இடம்பெற்றுள்ளார்கள். மத்திய நிதி அமைச்சரும் நிதித்துறை செயலாளரும் அதில் உள்ளனர். இந்த அமைப்புதான், எதற்கு என்ன வரி விகிதம் என்பது குறித்த இறுதி முடிவை எடுக்கிறது. ‘எங்கள் துறைக்குக் கூடுதலாக வரி விதிக்கப்பட்டுள்ளது. இதைக் குறைக்க வேண்டும்’ என்ற கோரிக்கையுடன் இந்த கவுன்சிலுக்கு மனு அனுப்பலாம். அவர்கள் அதைப் பரிசீலிப்பார்கள்.

தீ.அசோகன், திருவொற்றியூர்.

தடை செய்யப்பட்ட பான் மசாலா விற்பனை தமிழகத்தில் கொடி கட்டிப் பறக்கிறதே... இதற்கு யார் காரணம்?


அரசு அதிகாரிகளும் காவல் துறை அதிகாரிகளும்தான் காரணம். கோடிகளில் கொழிப்பவர்கள் இவர்கள்.

கழுகார் பதில்கள்!

ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி.

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சேகர் ரெட்டி உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளாரே?

சேகர் ரெட்டியால் பலனடைந்த பல பேர் இருக் கிறார்கள். அவரிடம் இருந்து பணம் பெற்றவர்கள் பல பேர் இருக்கிறார்கள். சேகர் ரெட்டி, அவர்களைப் போட்டுக் கொடுத்துவிடக் கூடாது அல்லவா? அவர் வாயைத் திறந்து உண்மையைப் பேச ஆரம்பித்தால், பலரும் உள்ளே போக வேண்டி வரும். அவருடைய வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட பணம், தங்கம் அனைத்தும் அவருடையவை மட்டுமல்ல... பலருடையவை. அதில் அமைச்சர்களும் இருக்கிறார்கள்; அதிகாரிகளும் இருக்கிறார்கள். இம்மாதிரியான ஆட்கள், சேகர் ரெட்டியை மிரட்டிக்கொண்டிருக் கிறார்கள். அவர்களால் சேகர் ரெட்டிக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம்.

சம்பத்குமாரி, பொன்மலை

இன்றைய நிலையில் நம் நாட்டிலேயே பேச்சுரிமை அதிகம் உள்ள கட்சி அ.தி.மு.க அம்மா அணிதான் என்று கூறலாமா?


 ‘அம்மா இல்லாததால்’ என்பதையும் சேர்த்துக் கூறவும்.

வி.ஐ.பி கேள்வி

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாகச் செயல்படுகிறது. இப்படியே தொடர்ந்தால் தமிழக மாணவர்களின் எதிர்காலம் என்ன ஆகும்?

து முழுக்க முழுக்க மாநில அரசின் தவறு. கல்வி விஷயத்தில் தமிழகத்தில் ஆட்சிக் கட்டிலில் அமரும் கட்சிகள் காலங்காலமாக குழப்பமான முடிவுகளையே எடுத்துக்கொண்டிருப்பதால், அப்பாவி மாணவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகிறார் கள். குறிப்பாக மாநிலப் பாடத் திட்டத்தில் படிப்பவர்கள் ஆட்சியாளர்களின் தவறுகளுக்குப் பலிகடா ஆக்கப்படுகிறார்கள். உச்சக்கட்டமாக, தமிழக அரசின் பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி என்பது எட்டாக்கனி என்கிற கொடுமையான நிலை தற்போது வந்துவிட்டது.

கழுகார் பதில்கள்!

‘மத்திய அரசின் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்துக்கு இணையாக மாநிலப் பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டும்’ என்று நீண்டகாலமாகவே குரல் கொடுக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் ஆட்சியில் இருந்தவர்கள்/இருப்பவர்கள் நேற்றுவரை அதைக் கண்டுகொள்ளவே இல்லை. தற்போதுதான், தூக்கம் விழித்தவர்கள் போல சில நடவடிக்கைளை எடுக்க ஆரம்பித்துள்ளனர். இதற்கிடையே அப்பாவி மாணவர்களைக் காப்பாற்றுவதற்காக மத்திய அரசிடம் பேசி கால அவகாசத்தை வாங்கியிருக்கலாம். தும்பைவிட்டு வாலைப் பிடித்த கதையாக, எல்லாம் முடிந்தபிறகு அரசாணை போடுகிறேன் என்று மக்களை ஏமாற்றுகிறார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரைப் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வை மாநிலப் பாடத்திட்டத்தில் சராசரியாக 4 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள்; சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே எழுதுகிறார்கள். இதை மனதில் வைத்தே, மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவிகித இடஒதுக்கீடு வழங்க தற்போது அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆணையைச் சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இந்த விசாரணையின்போதுகூட அழுத்தமானவாதத்தைத் தமிழக அரசுத் தரப்பில் வைக்கவில்லை என்பதுதான் கொடுமை.

இது பல்லாயிரம் குடும்பங்கள் சம்பந்தப்பட்டது. பல்லாயிரம் மாணவர்களின் எதிர்காலம் தொடர் புடையது. ஆனால்,  நாற்காலியைக் காப்பாற்றிக்கொள்வதைத் தவிர வேறு எந்த யோசனைகளும் ஆள்வோருக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: 
கழுகார் பதில்கள்,  ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002 
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு