
மிஸ்டர் கழுகு: நள்ளிரவில் பணத்தை திருப்பிக் கொடுத்த அமைச்சர்!
உள்ளே நுழைந்த கழுகார், இந்த இதழுக்காகத் தயாராகிவரும் அட்டையைப் பார்த்துச் சிரித்தார். “ஐயோ பாவம், எடப்பாடி! அவர் என்ன செய்வார்? எத்தனை நாள்களுக்கு ஆட்சியோ... அதுவரை அமைதியாக ஓட்டுவோம் என்று சைலன்ட் ஆக்டிங் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். அவரை அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் என யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லையாம்!” என்றபடி செய்திகளைக் கொட்டத் தயாரானார் கழுகார்.

“தமிழகத்தைத் திரைமறைவில் ஆள்வது மத்திய அரசுதான் என்பது பழைய செய்திதான். ஆனால், மிரட்டல்கள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டதாகச் சொல்கிறார்களே?” என்று இடைமறித்தோம்.
“இதெல்லாம் அரசியலில் சகஜம்தானே? பி.ஜே.பி அல்லாத அரசுகள் ஆளும் மாநிலங்களில், தன்னுடைய அரசியல் சதுரங்க விளையாட்டை ஆடவும், குழப்பங்களை ஏற்படுத்தவும் மத்திய பி.ஜே.பி அரசு தொடங்கிவிட்டது. அ.தி.மு.க-வில் பல விதமான கோஷ்டிகள் இருப்பதால், அவர்களுக்கு அது வசதியாகப் போய்விட்டது. எடப்பாடி பழனிசாமியைத் தங்களுடைய கட்சி ஆளாகவே பி.ஜே.பி தலைமை பார்க்கிறதாம். அந்த அளவுக்கு மோடி, அமித்ஷா ஆகியோருடன் அடிக்கடி ஆலோசனை கேட்டு வருகிறாராம் எடப்பாடி. எல்லாவற்றையும் அவர்களிடம் சொல்லிவிட்டுத்தான் செய்கிறாராம். இவரை இப்படியே வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறதாம் மத்திய அரசு. இதேபோல அமைச்சர்களையும் பயத்தில் வைத்திருக்கத் திட்டமிட்டுள்ளார்களாம்.”
“என்ன செய்கிறார்களாம்?”
“மத்திய உளவுத்துறை மூலமாக தமிழக அமைச்சர்களின் அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப் படுகின்றன. அவர்களது கடந்த காலம், இதற்கு முன்பு இருந்த சொத்துகள், அவர்களின் பினாமிகள், திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, முறையாகச் செலவுசெய்யப்படுகிறதா என்ற ரீதியில் தகவல்கள் திரட்டச் சொல்லி இருக்கிறார்கள். அ.தி.மு.க-வில் இப்போது பல கோஷ்டிகள் இருப்பதால், தகவல்களைத் திரட்டுவது ஈஸியாக இருக்கிறதாம்.”

“ஆட்சியில் அமர்ந்த சில நாட்களில், உயர் கல்வித்துறையில் துணைவேந்தர்கள் நியமனத்தை கவர்னரே நேரடியாகப் பார்த்துக் கொள்ள, எடப்பாடி க்ரீன் சிக்னல் காட்டினாராம். நமக்கு எதுக்குடா வம்பு என்ற ரீதியில் இப்படி ஒப்படைத்தாராம்.”
“கவர்னர்தான் மத்திய அரசின் கடிவாளமோ?”
“தமிழக கவர்னர், சென்னையில் உள்ள மத்திய உளவுத்துறை கூடுதல் இயக்குநர் ஆகிய இருவரையும்தான் முக்கியமாகச் சொல்கிறார்கள். கவர்னர் மாளிகையிலிருந்து அனுப்பிவைக்கப்படும் கடிதங்கள் சில, தமிழக அரசைக் கேள்வி கேட்பது மாதிரியும், இதெல்லாம் இவர்களுக்கு எப்படித் தெரியும் என்று சந்தேகப்படுவது மாதிரியும் இருக்கிறதாம். இதைப் பார்த்து அமைச்சர்கள் மிரண்டுபோயிருக்கிறார்கள். மத்திய உளவுத்துறையின் கூடுதல் இயக்குநர் வர்மா, யார் யாரிடமோ செய்திகளை வாங்கிவிடுகிறார். அரசுக்கு மிக மிக நெருக்கமானவர்களைக் கண்காணிக்கிறார். எல்லா விஷயங்களும் அவருடைய காதுக்குப் போய்விடுகின்றன என்கிறார்கள். அவர், அந்தத் தகவல்களை டெல்லிக்கு அனுப்பிவிடுகிறார். மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு அனுப்பும் கடிதங்கள், முதல்வரைப் பீதியடையவைத்துள்ளன. இவை அனைத்துமே தமிழக அரசை கன்ட்ரோலில் வைத்துக்கொள்ளவே என்று முதல்வர் நினைக்கிறாராம். தனது பயத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல், அனைத்தையும் வாயால் சமாளித்துக்கொண்டு இருக்கிறார் எடப்பாடி”
“ஓர் அமைச்சர் தொடர்பான விவகாரத்தில், தமிழக முதல்வருக்கு டெல்லி மேலிடம் நெருக்கடி கொடுத்ததாமே?”
“ஆமாம். தமிழகத்தின் மூத்த அமைச்சர் ஒருவர், ஏற்கெனவே இரண்டு முறை சிக்கலில் மாட்டினார். சமீபத்தில், தன் சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் கான்ட்ராக்ட் வாங்கிக்கொடுப்பதாக, பெரிய தொகை ஒன்றை அந்த அமைச்சர் வாங்கியுள்ளார். பணம் கொடுத்த தொழிலதிபருக்கு அமைச்சரால் கான்ட்ராக்ட் பெற்றுத்தர முடியவில்லையாம். சரி, கொடுத்த தொகையையாவது திருப்பிக் கொடுங்கள் என்று கேட்டபோது, தரமுடியாது என அதிகாரத் தோரணையில் அமைச்சர் கூறியிருக்கிறார். அதனால், வேறு ரூட்டில் அந்தத் தொழிலதிபர் போயிருக்கிறார். கடைசியில் அது, முதல்வருக்கே சிக்கலாகி விட்டதாம்.”
“முதல்வருக்கு என்ன சிக்கலாம்?”
“அந்தத் தொழிலதிபரும், பவர்ஃபுல்லான மத்திய அமைச்சர் ஒருவரும் ஒரே சமூகத்தினராம். தன் பிரச்னையை மத்திய அமைச்சரிடம் சொல்லிப் புலம்பியுள்ளார் தொழிலதிபர். கோபடைந்த மத்திய அமைச்சர், ‘அந்த அமைச்சரிடமிருந்து பணத்தை வாங்கவேண்டும்’ என்று மத்திய அரசின் அதிகாரி ஒருவருக்கு உத்தரவிட்டுள்ளார். இரவோடு இரவாக தமிழக முதல்வரைத் தொடர்பு கொண்ட அந்த அதிகாரி, ‘தமிழக அரசு நிர்வாகத்தில் என்ன நடக்கிறது? டெண்டருக்கு கமிஷன் வாங்குவதோடு, மோசடியும் செய்கிறார்கள். நீங்கள் எதையும் கண்டுகொள்வதில்லையா?’ என்று எகிறியுள்ளார். பதறிய முதல்வர், உடனடியாக சம்பந்தப்பட்ட தமிழக அமைச்சரைத் தொடர்புகொண்டு, ‘உன்னால் ஏற்கெனவே சர்ச்சை. ஆட்சி கலைந்தாலும் பரவாயில்லை... நீ செய்வதை எல்லாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. ராஜினமா செய்துகொடுத்துவிட்டுப் போ’ என்று கொந்தளித்துள்ளார்.”
“அப்படியா?”
“அந்த அமைச்சர் அப்படியே ஆடிப்போய் விட்டார். அந்த நள்ளிரவு நேரத்திலும், உடனடியாக அந்தத் தொழிலதிபரை வரவழைத்து முழுப் பணத்தையும் செட்டில் செய்துள்ளார். சமீபத்தில்கூட இந்த அமைச்சரின் துறையில், பெரிய அளவிலான டெண்டர் நடைபெற இருந்து, நீதிமன்ற உத்தரவினால் அது நின்றுபோனது. இந்த டெண்டரிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதை மத்திய அரசுக்கு நோட் போட்டு கொடுத்துள்ளது, உளவுத்துறை. இந்த அமைச்சர், விரைவில் சிக்கலில் மாட்டுவார் என்கிறார்கள்” என்று சொன்ன கழுகார், அடுத்து கமல் மேட்டருக்குத் தாவினார்.

“கடந்த முறையே கமல் விவகாரம் பற்றிச் சொன்னேன். இப்போது, மேலும் சீரியஸாகி விட்டது. கமல், ஏதாவது கருத்துச் சொல்வார். அது அத்தோடு போயிருக்கும். அமைச்சர்கள் அனைவரும் வரிசையாக எதிர்கருத்துக்களைச் சொல்லிவைக்க... கமல் இன்னும் சீற ஆரம்பித்துவிட்டார். ‘பீகாரை விட தமிழகத்தில் ஊழல் பெருகிவிட்டது’ என்றார். இதற்குத்தான் அமைச்சர்கள் கமலைத் திட்டினார்கள். ‘வழக்குப் போடுவோம்’ என்றார் அமைச்சர் வேலுமணி. இதையும் தாண்டி பி.ஜே.பி-யைச் சேர்ந்த ஹெச்.ராஜா திட்டினார். ‘கமல், முதுகெலும்பு இல்லாதவர்’ என்றார். இவை அனைத்தும் சேர்ந்து கமலை கொந்தளிக்க வைத்தன. தமிழக அமைச்சர்களையும், ஹெச். ராஜாவையும் கிண்டல்செய்து அறிக்கை விட்ட கமல், அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை அவர்களுக்கே பொதுமக்களும் ரசிகர்களும் அனுப்பலாம் என்று கொந்தளித்தார். இதை அ.தி.மு.க தரப்பு எதிர்பார்க்கவில்லையாம்.”
“ஓஹோ!”
“அமைச்சர்கள் இப்படிப் பேசியதை தினகரனும் விரும்பவில்லையாம். ‘கமல் பேசியது ஒரே நாளில் முடிந்திருக்கும். இவர்கள்தான் அதை ஊதிப் பெரிதாக்கிவிட்டார்கள்’ என்றாராம் தினகரன். ‘யாருமே அரசாங்கத்தைப் பற்றி விமர்சனம் பண்ணக் கூடாது என்று எப்படிச் சொல்ல முடியும்? அதற்கு இவர்கள் கண்ணியமாக பதில் சொல்வதற்குப் பதிலாக, ஒருமையிலா பதில் சொல்வது?’ என்றாராம் தினகரன். ‘அமைச்சர்கள் அனைவரும் கன்ட்ரோல் இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள், முதலமைச்சர் பேச்சையே கேட்காதவர்கள்’ என்று சீறினாராம் தினகரன். அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகிய மூவர்தான் கமலைச் சீண்டியவர்கள். இவர்கள் மூவர்தான், தினகரனுக்கும் ஆகாதவர்கள். அதனால்தான், தினகரனின் கோபம் அதிகமாக இருந்ததாம்.”
“மீடியாவிடமும் தனது கருத்தைத் தினகரன் சொல்லியிருக்கிறாரே?”
“ஆமாம்! ‘அரசாங்கத்தைப் பற்றி யார் வேண்டுமானாலும் கருத்துச் சொல்லலாம். ஆனால், போகிற போக்கில் எதையும் சொல்லக்கூடாது. கமல் சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர்கள் ஒருமையில் பதில் சொல்லாமல், கண்ணியத்தோடு பதில் அளித்திருக்கலாம்’ என்று தினகரன் வெளிப்படையாகவே கண்டித்தார். இது சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதாம். ‘நம்முடைய அரசாங்கம் ஊழல் அரசாங்கம் என்கிறார் கமல். அவருக்குப் பதில் சொல்லாமல், தினகரன் நமக்கு அட்வைஸ் செய்கிறார்’ என்று கொந்தளித்தார்களாம்.”
“எந்த மோதலாக இருந்தாலும், அது தினகரன் - அமைச்சர்கள் மோதலாக மாறிவிடுகிறதே?”
“ஆமாம். ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழில் முதல்வர், அமைச்சர்களின் செய்திகளை நிறுத்தி வைத்திருந்தார்கள் அல்லவா. மீண்டும் வெளியிட ஆரம்பித்துள்ளார்கள். ஆனாலும், தினகரன் செய்திதான் தலைப்புச் செய்தியாக வருகிறது. முதலமைச்சரின் செய்தி கீழேதான் பிரசுரம் ஆகிறது. ‘முதலமைச்சரின் செய்தியை மேலே போட வேண்டாமா?’ என்று கேட்டபோது, ‘இது கட்சிப் பத்திரிக்கை. கட்சியில் யார் மூத்த பதவியில் இருக்கிறார்களோ அவர்களது செய்திக்குத்தான் முக்கியத்துவம் தருவோம். சசிகலா பொதுச்செயலாளர், தினகரன் துணைப் பொதுச்செயலாளர். அதனால் அவர்களுக்குத்தான் முன்னுரிமை தரப்படும்’ என்றார்களாம் நமது எம்.ஜி.ஆரில்.”
“நல்ல லாஜிக்தான். அது சரி, ஆகஸ்ட் மாதம் தி.மு.க-வுக்கு அதிர்ச்சி கொடுக்க எடப்பாடி அரசு திட்டமிடுகிறதாமே?”
“தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் தாராளமாகக் கிடைக்கின்றன என்ற குற்றச்சாட்டை முன்வைப்பதற்காக, அவற்றை தி.மு.க உறுப்பினர்கள் சட்டசபைக்கு உள்ளே எடுத்துவந்து சபாநாயகர் முன்பாகக் காண்பித்த விவகாரத்தை, உரிமை மீறல் குழுவுக்கு சபாநாயகர் அனுப்பிவைத்தார். 21 தி.மு.க உறுப்பினர்கள் இந்த உரிமை மீறல் புகாரில் உள்ளனர். இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உரிமை மீறல் குழுவின் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் தீவிரமாக சட்ட ஆலோசனை நடத்திவருகிறார்” என்ற கழுகார்,
“சட்டசபை கலாட்டா தொடர்பான உரிமைமீறல் பிரச்னையில் சிக்கிய தி.மு.க உறுப்பினர்கள் ஏழு பேருக்கு அண்மையில் சபாநாயகர் மன்னிப்பு வழங்கினார். ஆனால், இந்த முறை மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறார்கள் அ.தி.மு.க-வினர்” என்றபடி பறந்தார்.
படம்: வி.ஸ்ரீனிவாசுலு
‘‘ஜெயலலிதாவைவிட அதிகாரம் படைத்த எடப்பாடி’’
தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தபோது “தீர்மானங்களை ஒட்டியே பேசுங்கள். வேறு விஷயங்களைப் பேச வேண்டாம்” எனச் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். நீட் தேர்வுக்கு எதிராக நடைபெறவுள்ள மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் மாணவர்களையும், பெற்றோர்களையும் அதிகளவில் பங்கெடுக்கச் செய்ய வேண்டும் என்று பலரும் கருத்துச் சொல்லியுள்ளார்கள். ஜெ.அன்பழகன், “முதல்வர் எடப்பாடி, தன்னை ஜெயலலிதாவைவிட அதிக அதிகாரம் படைத்தவராகக் காட்டிக்கொள்ள நினைக்கிறார். மக்கள் செல்வாக்கு இல்லாத அவரையும், அவரது ஆட்சியையும் அகற்றுவதற்கு நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும்” என்று ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தாராம்.
செம்மொழி நிறுவனம்... முதல்வர் எடுக்கப் போகும் முடிவு!

செம்மொழி நிறுவனத்தை மூட நடக்கும் முயற்சிகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் இது எதிரொலித்தது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ‘‘செம்மொழி நிறுவனத்தை திருவாரூர் மையப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் திட்டமே இல்லை’’ என்றார். இதற்கிடையில், செம்மொழி நிறுவனத்தின் தலைவராக உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதன் ஆட்சிக்குழு கூட்டத்தை வரும் 26-ம் தேதி கூட்டவுள்ளார். அதில் செம்மொழி நிறுவனத்தின் இயக்குநர் பணி உட்பட காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்கிறது கோட்டை வட்டாரம்.
தியாகராஜன் ரெய்டு... சிக்கலில் அமைச்சர்!
எடப்பாடிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரராக சொல்லப்படும் தியாகராஜன் என்பவர் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியுள்ளது. தியாகராஜனின் அப்பா, பொதுப்பணித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அந்த அடிப்படையில், கடந்த சில ஆண்டுகளாக பொதுப்பணித் துறையின் முக்கிய ஒப்பந்தங்களை தியாகராஜன் எடுத்துள்ளா். வேண்டியவர்களுக்கும் வாங்கி கொடுத்திருக்கிறார். சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற சில வருமான வரித் துறை சோதனையின்போது கிடைத்த ஆவணங்களில் தியாகராஜன் பெயரும் இருந்ததால், இவரைக் கண்காணித்து அதன் தொடர்ச்சியாக தியாகராஜன் அலுவலகம், வீடுகளில் சோதனை போட்டது வருமான வரித்துறை. இருபது கிலோ தங்கம், நாற்பது லட்சம் ரூபாய் பணத்தை கைப்பற்றியிருக்கிறார்கள். தியாகராஜன் வீட்டில் நடத்தபட்ட சோதனையே தமிழக அமைச்சர் ஒருவர் பற்றிய ஆவணங்களை எடுக்கத்தான் என்கிறார்கள்.

அது வேற வாய்!
‘தூய்மை இந்தியா' திட்டத்தின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட கமல், தனது பிறந்தநாளை 2014-ம் ஆண்டு நவம்பரில் கொண்டாடினார். சென்னை, மாடம்பாக்கம் ஏரியில் இருந்து ‘தூய்மை இந்தியா' திட்டத்தை அன்றைக்கு ஆரம்பித்தார். ‘‘கேக் வெட்டி மகிழ்ச்சி அடைவதைவிட, குப்பையை வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவதை பெருமையாகக் கருதுகிறேன்’’ என்றார் கமல். அதில் கலந்து கொண்ட தமிழிசை செளந்தரராஜன், கமலை வாழ்த்திப் பேசினார். அன்றைக்கு வாழ்த்திய தமிழிசைதான் இன்றைக்கு ‘‘எந்தச் சேவையும் செய்யாமல் கமல் அரசியலுக்கு வர நினைப்பது ஏன்?’’ எனப் பொங்குகிறார்.