Published:Updated:

"அ.தி.மு.க ஆட்சி தானாகவே கலையும்!” - ‘தலைவன் இருக்கிறான்’ கமல்

"அ.தி.மு.க ஆட்சி தானாகவே கலையும்!” - ‘தலைவன் இருக்கிறான்’ கமல்
பிரீமியம் ஸ்டோரி
"அ.தி.மு.க ஆட்சி தானாகவே கலையும்!” - ‘தலைவன் இருக்கிறான்’ கமல்

ம.கா.செந்தில்குமார், படங்கள்: எஸ்.பத்ரி நாராயணன், அருண் டைட்டன்

"அ.தி.மு.க ஆட்சி தானாகவே கலையும்!” - ‘தலைவன் இருக்கிறான்’ கமல்

ம.கா.செந்தில்குமார், படங்கள்: எஸ்.பத்ரி நாராயணன், அருண் டைட்டன்

Published:Updated:
"அ.தி.மு.க ஆட்சி தானாகவே கலையும்!” - ‘தலைவன் இருக்கிறான்’ கமல்
பிரீமியம் ஸ்டோரி
"அ.தி.மு.க ஆட்சி தானாகவே கலையும்!” - ‘தலைவன் இருக்கிறான்’ கமல்

மல்... தமிழகத்தின் ஹாட் ஸ்டார். பரபரப்புச் செய்திகளின் பிக் பாஸ். அதிகாலையில் தட்டிவிடுகிற ட்வீட்டோ, ‘இன்னொரு ஃபைவ் ஸ்டார் ஜெயிலும் இருக்கு’ என நிகழ்ச்சிக்கு நடுவே அடிக்கிற  கமென்ட்டோ அதிரடிக்கிறது. அப்ளாஸ் அள்ளுகிறது. புன்னகை மன்னனின் பெருஞ்சிரிப்பில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் அனல் பறக்கின்றன.

"அ.தி.மு.க ஆட்சி தானாகவே கலையும்!” - ‘தலைவன் இருக்கிறான்’ கமல்

‘‘நான் ஒண்ணும் புதுசாப் பேசலை.எப்பவுமே சொல்றதைத்தான் இப்பவும் சொல்றேன். 1985-ல் ஈழப் படுகொலைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்த நான், அன்றே அரசியலுக்கு வந்துட்டேன். ‘என்னய்யா இவன் பெரியவங்க இருக்கும்போது சின்னப்பய குரல் கொடுக்குறான்’னு நினைப்பாங்களோனு யோசிக்கலை. ஆனா, அப்ப இருந்தவங்க எல்லாத்தையும் அனுமதிச்சாங்க. அதுக்குக் காரணம் அவங்க யாரும் யானை மாலை போட்டு அதிர்ஷ்டத்துல ஆட்சிக்கோ, அதிகாரத்துக்கோ வந்தவங்க இல்லை. அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஏன் ஜெயலலிதா அம்மையார்கூட மக்கள் மாலை போட்டு வந்தவங்கதான். ஆனால் இன்று...’’ கறுப்புச் சட்டைக்காரர் கமல் இன்று கலகக்காரர்.  அ.தி.மு.க. அரசின் சிம்மசொப்பனம். பரபரப்பான சூழலில் ஆனந்த விகடனுக்காகக் கமல் தந்த சிறப்புப் பேட்டி இது.

‘‘கபடி நம் பாரம்பர்ய விளையாட்டு என்பதற்காக மட்டும் அல்ல, தமிழகத்தை எந்தெந்தத் துறைகளில் எல்லாம் அழகா காட்ட முடியுமோ, அதையெல்லாம் செய்ய வேண்டும் என்ற ஒரு முயற்சி. ஜல்லிக்கட்டை சினிமாவில் அழகாகக் காட்ட முயற்சி பண்ணினதுதான் ‘விருமாண்டி’. ஜல்லிக்கட்டுக்கு நான் குரல்  கொடுக்கக் காரணமும் அதுதான். இது ஏதோ திடீர்னு எனக்குப் பிடிச்சிருக்குனு நான் சொல்லலை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"அ.தி.மு.க ஆட்சி தானாகவே கலையும்!” - ‘தலைவன் இருக்கிறான்’ கமல்

‘சலங்கை ஒலி’ சமயத்தில், ‘இந்தப் படத்துக்காக நீங்க பரதநாட்டியம் கத்துக்கிட்டீங்களா?’னு கேட்டா எப்படி இருக்கும்? அந்த மாதிரி எனக்கு ஒரு பெரிய அவமானம் உண்டோ? ‘சங்கராபரணம்’ல பாடுறதுக்காக நீங்க பாட்டு கத்துக்கிட்டீங்களா?’னு எஸ்.பி.பி-யைப் பார்த்துக் கேட்கிற மாதிரி அது. `தமிழ் தலைவாஸ்’ கபடி அணிக்கு விளம்பரத் தூதுவராகக் கேட்டபோது சந்தோஷமா பாய்ஞ்சுபோய் சம்மதிச்சதுக்குக் காரணம் அந்த அன்புதான். அந்த கபடி வீரர்களைப் பார்த்ததும் எங்க ஊர்க்காரங்களை, எனக்கு நெருக்கமானவங்களைப் பார்த்த மாதிரி நம்பிக்கையா இருக்கு. ஆம், அதைச் செய்ய வேண்டியது நம் எல்லோரின் கடமை.’’

‘‘ ‘பிக்பாஸ் மிகப்பெரிய கலாசாரச் சீரழிவு’னு அரசியல் வாதிகள் சிலர் குற்றம் சாட்டு கிறார்கள். போலீஸ் புகார்கூட கொடுத்திருக்கிறார்களே?’’

‘‘ ‘நேத்து ராத்திரி யம்மா’, `நிலாக்காயுது நேரம் நல்ல நேரம்’, `கட்ட வண்டி கட்ட வண்டி’ னு பாடின ஆளுங்கதானே நாம. அப்போ அழியாத கலாசாரமா இப்போ அழிஞ்சிடப் போகுது? தவிர அதெல்லாம் கலாசாரச் சீரழிவுனு நினைச்சா சீரழிவுதான். இல்லை... இளைஞர்கள் மன சந்தோஷத்துக்காகச் செய்யக்கூடிய கேளிக்கைனு நினைச்சா, அது அப்படி.

ஆனால், இப்போ எல்லோரும் எல்லாத்துக்கும் ஒரு ஆங்கிள் பார்த்துக் கிளம்புறாங்க. விஷயம் என்னன்னா, இப்போ பிரயாணம் பண்ண வேண்டிய அவசியம் எல்லா அரசியல்வாதிகளுக்கும் இருக்கு. ஆனால், யாருக்கும் சரியான பஸ் கிடைக்க மாட்டேங்குது. அதனால கிடைச்ச வண்டியில எல்லாம் தொத்திட்டு ஏறிடுறாங்க. ‘ஏறாதீங்கப்பா. இந்த பஸ் வேற இடம் போகுது’னு சொல்லலாம். ஆனா, ‘இது நீங்க போகணும்னு நினைக்கிற இடத்துக்குப் போகாது. கோட்டைக்குப் போகாது’ன்னு சொல்றதானு தெரியலை. அதான் இப்போ நடக்குது.’’

‘‘அரசியல்லதான் இருக்கேன்னு சொல்றீங்க. அதில் பல முதல்வர்களைக் கடந்திருக்கீங்க. ஒவ்வொருவரின் அணுகுமுறையும் எப்படி இருக்கும்?’’

‘‘ராஜாஜியும் காமராஜரும் எங்க வீட்டுக்கு வந்திருந்தபோது எடுத்த போட்டோ ஒண்ணு இன்னமும் வீட்ல இருக்கு. சாருஹாசனும் சந்திரஹாசனும் குழந்தைகளா நிற்பாங்க. அப்போ நான் எங்கப்பா மனசுல இருந்திருப்பேன்னு நினைக்கிறேன். எங்க அப்பா சின்னப்பையனா 25 வயசுல நிற்பார். ராஜாஜியும் காமராஜரும் உட்கார்ந்திருப்பாங்க. இந்தியைத் தார் பூசி அழிச்சுட்டு வந்தா, வீட்ல எங்க அப்பாகூட பக்தவத்சலம் கேஷுவலாப் பேசிட்டு உட்கார்ந்திருப்பார்.

எங்க அப்பாவுக்குக் காமராஜரை ரொம்பப் பிடிக்கும். நான் சினிமாவுக்கு வந்ததில் காமராஜருக்கு ரொம்ப வருத்தம். ‘நீ படிச்சு பெரிய ஆளா கலெக்டர் ஆகணும்னு உங்க அப்பாட்ட சொல்லிட்டு இருக்கேன். கூத்தாடி...கூத்தாடி...’னு திட்டியிருக்கார். ஆனா, நான் படிக்காம விட்டதில் எங்க அப்பாவுக்குக்கூட அந்த அளவுக்கு வருத்தம் கிடையாது.

நான் பாட்டுக்குத் திடீர்னு கிளம்பி ராமாவரம் தோட்டத்துக்கு எம்.ஜி.ஆரைப் பாக்கப் போயிடுவேன். ‘என்னய்யா திடீர்னு வந்தா எப்படி?’னு செக்ரெட்டரியெல்லாம் கோவிச்சுப்பாங்க. அவர் அறைக்கதவு திறந்து மூடும்போது, அப்படி எட்டிப் பார்த்து முகம் காட்டுவேன். ‘என்ன விஷயம்?’னு சாடையில் கேட்பார். ‘பாக்கணும்’னு நானும் செய்கையால்  சொல்வேன். அவர் அருகில் அப்போ யார் யாரோ உட்கார்ந்து இருப்பாங்க. அவ்வளவு ஏன்... இன்னொரு மாநில முதல்வர்கூட இருப்பார். அப்பல்லாம் நான் யார்? எனக்கு அக்‌ஷரா வயசுதான் இருக்கும். ஆனா, அனுமதிப்பார்.

‘நாயகன்’ ஆஸ்கருக்குப் போகுது. போக் ரோடு போய் சிவாஜி சாரைப் பார்த்துட்டு இவரைப் பார்க்கப் போயிருக்கேன். கூட ஸ்ருதியையும் அழைச்சிட்டுப் போயிருந்தேன். சோபாவில் உட்கார்ந்தால் கீழே கால் தொங்காது. அந்த சோபாவுக்குள்ளேயே அடங்கிடும் அளவுக்கு  ஸ்ருதிக்குச் சின்ன வயசு. கார்ல போகும்போதே, ‘எம்.ஜி.ஆர். வந்ததும் ‘ஐயா வணக்கம்’னு சொல்லணும். இப்படிக் கும்பிடணும்’னு சொல்லிக்கொடுத்துக் கூட்டிட்டுப் போயிருந்தேன். அங்க ரிஷப்ஷன்ல டேபிள்ல கைய வெச்சுகிட்டு நிற்கிற மாதிரி அவரது பெரிய படம் ஒண்ணு இருக்கும். ஸ்ருதி அதையே பார்த்துட்டுக் காலாட்டிட்டு இருந்துச்சு. அப்போ படக்குனு அவர் தொப்பி போடாமல் வெளியில வந்துட்டார். சில பேருக்குதான் அந்தத் தரிசனம் கிடைக்கும். வந்ததும், ‘ஸ்ருதி எழுந்திரி’னு கூப்பிடுறேன். ஆனால், அது பாட்டுக்குக் காலாட்டிட்டு அந்தப் படத்தையே பார்த்துட்டு இருக்குது. ‘அதுக்கு ரிகர்சல் கொடுத்துத்தான்யா கூட்டிட்டு வந்தேன். அதுக்கு டேக் 2 வேணுங்கய்யா’னு அவர்கிட்ட சொல்லிட்டு ‘யேய் எழுந்திரி’னு அதட்டினேன். ‘இல்லல்ல, குழந்தையை வையாத’ன்னு சொன்னவர், இப்போ பாரு’னு சொல்லிட்டு உள்ளே போய் தொப்பி போட்டுட்டு வந்தார். டக்குனு ஸ்ருதி எழுந்து, ‘ஐயா வணக்கம்’னு சொல்லுச்சு. ‘பாத்தியா... நாம பண்ணின தப்புக்குக் குழந்தையை எப்படித் தப்பு சொல்லலாம்’னு சிரிச்சார். இப்படி ஏகப்பட்ட அனுபவங்கள்.

"அ.தி.மு.க ஆட்சி தானாகவே கலையும்!” - ‘தலைவன் இருக்கிறான்’ கமல்

கலைஞருடன்  நிறைய நெருங்கிப் பழகியிருக்கேன். அதேபோல் அவருடன் முரண்பட்ட தருணங்களும் உண்டு. 1988-னு நினைவு. அப்போ இங்கே கவர்னர் ஆட்சி. ‘நாயகன்’, ‘வேதம் புதிது’, ‘வீடு’, வாலி சார் கதை எழுதின ‘ஒரே ஒரு கிராமத்திலே’ படம்னு அந்த வருஷம் தமிழுக்கு மொத்தம் எட்டு தேசிய விருதுகள். அப்போ யாரைக் கூப்பிட்டு நிகழ்ச்சி நடத்துறதுன்னு தெரியலை. ஜானகி அம்மா, சிவாஜி சார், கலைஞர் மூணு பேரையும் கூப்பிட்டு அவார்டு கொடுக்கவைக்கணும்னு அந்த நிகழ்ச்சியையும் நான்தான் நடத்தினேன். இவங்க இருப்பதால், ஜெயலலிதா வர மாட்டார்கள் என்பதால், நான் அவரை அழைக்கவில்லை. அந்த விழாவில் எல்லோருக்கும் அவார்டு  கொடுத்த கலைஞர், ‘ரிசர்வேஷனைக் கேலி பண்ற படம். கண்டிப்பா அதுக்கு என் கையால நான் விருது கொடுக்க மாட்டேன்’னு சொல்லி ‘ஒரே ஒரு கிராமத்திலே’ பட இயக்குநர் ஜோதி பாண்டியனுக்கு அவார்டு  கொடுக்க மறுத்துட்டார். அதுக்குக் காரணம், ‘ஒரே ஒரு கிராமத்திலே’ படம் பிராமணப் பெண்ணான லட்சுமி, தன்னை ஒரு தலித்னு சொல்லி இடஒதுக்கீட்டில் அரசு வேலை பெறுவது மாதிரியான கதைகொண்ட படம். மேலும் ‘பாலம் பழுதுபட்டு இருக்குனு பைபாஸ் போட்டோம்னா, அது எதுக்கு இப்போ போட்டீங்க?’னு கேட்கிற மாதிரி இருக்கு இந்தப் படம்’னு சொன்னார்.

கடைசியில் பேசின நான், ‘பாலம் பழுதுபட்டு இருக்குனு சொன்னீங்க. பாலம் பழுது பார்க்கப்பட வேண்டும். அதுக்கு நீங்க என்ன வேலை சொன்னாலும் அணிலா இருந்து செய்றோம். ஆனால், பைபாஸ் போட்டாச்சு. அது போதும்னு விட முடியாது’னு பேசினேன். பாலம் பழுது பார்க்கப்பட வேண்டும் என்பது பெரிய கொத்தனார் வேலை. 200 வருஷத்துக்கான வேலைனு அதை மனசுல வெச்சு சொன்னேன். பிறகு வீட்டுக்குப் போனவர், ‘உன்னைக் கடைசியில பேசவிட்டா, இப்படிச் சொல்லிட்டியே’னு போன்ல கூப்பிட்டு வருத்தப்பட்டுட்டு, ‘இல்ல, நான் பேசினது தப்புனு பிரஸ்கிட்ட சொல்லிடு’ன்னார். ‘இல்ல ரைட்டுனு நீங்கல்லாம் சொல்லிக் கொடுத்ததனாலதான்யா அப்படிப் பேசினேன்’னேன். ‘அப்படியா’ன்னார். ‘ஆமாங்கய்யா’ன்னேன். அவ்வளவுதான், போனை டொக்குனு வெச்சுட்டார். `ஆமாங்கய்யா’னு பளிச்சுனு சொன்ன தொனியில எதுவும் கோவிச்சுகிட்டாரா கேளுங்க’னு அவர் பக்கத்துல உள்ளவங்ககிட்ட சொன்னேன். ‘அவன் மேடையில சொல்லிட்டான். இப்பப்போய் மாத்திச் சொன்னாலும் பிரயோஜனம் இல்லை. தவிர நான் சொன்னது ரைட்டுனு சொல்றான். அவனை இனிமே புத்தி சொல்லித் திருப்ப முடியுமா? போயிட்டுப் போறான் விட்டுடு’ன்னாராம். பிறகு அது எதையும் அவர் மனசுல வெச்சுக்கவே இல்லை.

‘தசாவதாரம்’ சமயத்தில் சந்திச்சப்ப, ‘இந்த மாதிரி கதை. இதில் இத்தனை உருவங்கள் இருக்குய்யா’ன்னேன். ‘ஓ... இது எல்லாத்தையும் எப்படி இணைக்கப்போற?’ன்னு கேட்டவர், ‘எங்க கதையைச் சொல்லு, கேட்போம்’னு உட்கார்ந்துட்டார். முழுக் கதையையும் சொன்னேன். ‘இதை இப்படி வெச்சுக்கிட்டா பெட்டரா இருக்கும்’னு ஒரு சஜஷன் கொடுத்தார். இப்படி எப்பவும் கனெக்டடா இருக்கிறது, படம் போடும்போது பார்த்துட்டுப் பெருமைப்படுறதுனு எங்களை மாதிரிக் கலைஞர்களுக்கு அது பண்ணாலே போதும். நீங்க வரிவிலக்குக்கூட கொடுக்க வேண்டாம்.’’

"அ.தி.மு.க ஆட்சி தானாகவே கலையும்!” - ‘தலைவன் இருக்கிறான்’ கமல்

‘‘இப்படி எம்.ஜி.ஆர்.கூட முரண்பட்டு இருக்கீங்களா?’’

‘‘முரண்பட்டது இல்லை. உடன்பட்டுருக்கேன். அப்போ எம்.ஜி.ஆர். முதல்வர். கோவையில் பெரிய ரசிகர் மாநாட்டை நடத்தினோம். அப்போ என் ரசிகர்கள் அனைவரும் ஃபிசிக்கல் ட்ரெயினிங்கில் இருக்கணும்னு சொல்லியிருந்தேன். எல்லோரும் கராத்தே கிளாஸ் பண்ணிட்டு இருந்தாங்க. அந்தச் சமயம் எம்.ஜி.ஆர். என்னைக் கூப்பிட்டார். ‘மன்றத்துல எத்தனை பேர் இருப்பாங்க’னு கேட்டார். ‘தெரியலைங்கய்யா... நான் அதெல்லாம் எண்ணினதில்லை. எப்படியும் லட்சம் பேருக்கு மேல இருப்பாங்கய்யா’ன்னேன். `அத்தனை பேருக்கும் நீ தற்காப்புக் கலை கத்துக்கொடுத்தேன்னா, போலீஸ்காரன் கதி என்னாகுறது? நான் நடிகனா இருக்கும்போது ‘எம்.ஜி.ஆர். உடற்பயிற்சிக் கழகம்’னு வெச்சு அந்தத் தப்பைப் பண்ணியிருக்கேன். அப்போ பதவியில் இருந்தவங்க எனக்குச் சொன்ன அட்வைஸைத்தான் உனக்கு நான் இப்போ சொல்றேன்.

இத்தனை பேர்ல சிலர் கை மீறினாலும் அவங்களை உன்னாலயே கன்ட்ரோல் பண்ண முடியாது. அதை உடனே நிறுத்து’ன்னு சொன்னார். அடுத்த நாளே நிறுத்திட்டேன். ஏன்னா, அது நல்ல அறிவுரை. அதை அவர் அதட்டி எல்லாம் சொல்லலை. அப்போ அப்படிக் கூப்பிட்டுச் சொல்ல ஆள் இருந்தாங்க. அது சி.எம்-மாவே இருந்தது பெரிய விஷயம். ஆனா, இப்போ சின்னதா ஒரு ஆபீஸரைப் போய் பார்க்கணும்னாலும் கவனிப்புகள் செய்ய வேண்டியதா இருக்கு என்பதுதான் வருத்தம்.’’

‘‘இப்படி ஒரே சமயத்தில் கருணாநிதி, எம்.ஜி.ஆருடன் நட்பாக இருந்ததால், ஏதாவது பிரச்னைகளைச் சந்திச்சிருக்கீங்களா?’’

‘‘டி.என்.பாலு. எம்.ஜி.ஆர். பிக்சர்ஸில் கார்  ஓட்டிட்டு இருந்தவர். அவருக்குப் பதவி கொடுத்ததே எம்.ஜி.ஆர்.தான். கொஞ்சம் துடுக்காப் பேசுவார். தி.மு.க-வில் இருந்து எம்.ஜி.ஆர். பிரியும்போது, அவர் கலைஞருடனே இருந்துவிட்டார். அப்போ எம்.ஜி.ஆருக்கும் டி.என்.பாலுவுக்கும் என்ன வருத்தம் என்றுகூட எனக்குத் தெரியாது. அது எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த நேரம். என் ‘சட்டம் என் கையில்’ படத்தின் 100-வது நாள் விழா. படத்தின் இயக்குநர் டி.என்.பாலு. அவர் டைரக்‌ஷன்ல ‘சங்கர்லால்’ படத்துக்குப் பூஜை போடுறோம். அப்போ புரொகிபிஷன் இருந்த நேரம்.

டி.என்.பாலுவை அரெஸ்ட் பண்ணிட்டாங்க. அந்த ஃபங்ஷனுக்கு டைரக்டர் வந்தாகணும். என்ன பண்றதுனு தெரியலை. அப்போ எனக்கு 21 வயசு. ஆர்.எம்.வீரப்பன் சாரைச் சந்திச்சேன். ‘எம்.ஜி.ஆர். வெளியில வரும்போது பேசிக்கங்க’ன்னார். சுழல்படிக்குக் கீழே நின்னேன். அவர் இறங்கிவரும்போது சுழல் படிக்குள் கையைவிட்டு அவர் காலைப் பிடிச்சிட்டேன். ‘ஏய்... ஏய்... என்ன... என்ன’னு பதறிட்டார். ‘முதல் நூறு நாள் படம். நான் ஒண்ணும் தப்பு பண்ணலை. எனக்கு அவமானமாகிடும்’னேன். யோசிச்சார். ‘அவரை மறுபடியும் அரெஸ்ட் பண்ண வேண்டி இருக்கலாம்’னார். ‘அதெல்லாம் பெரியவங்க. நீங்க பாத்துக்கங்க’ன்னேன். பக்கத்துல இருந்தவரிடம் கண் காட்டினார். ‘விட்டீங்களா, இல்லையா’னு கேட்கக்கூட தைரியம் கிடையாது. வந்துட்டேன். டி.என்.பாலுவை வெளியில விட்டுட்டாங்க.

"அ.தி.மு.க ஆட்சி தானாகவே கலையும்!” - ‘தலைவன் இருக்கிறான்’ கமல்

வெளியில் வந்த டி.என்.பாலு நேரா கோபாலபுரம் போய் அங்க இருந்து எனக்கு போன் பண்ணினார். ‘எப்படி... என்னை உள்ள வைக்க முடியல பாத்தீயா?’ன்னார். நான் எம்.ஜிஆர். கால் கையில விழுந்து அவரை வர வெச்ச விஷயம் அவருக்குத் தெரியாது. மறுநாள் உட்லண்ட்ஸ்ல ஃபங்ஷன். அங்கே போன பிறகுதான் அவர் நிகழ்ச்சிக்குக் கலைஞரையும் கூப்பிட்டுட்டு வந்த விஷயம் எனக்குத் தெரியும். பயந்துட்டேன். ‘இங்க உட்கார்’னு கலைஞர் என்னைத்  தன் பக்கத்துல உட்கார வெச்சுக்கிட்டார். நான் நன்றியுரை சொல்லிட்டுத் திரும்பி மேடையைப் பார்த்தா, டி.என்.பாலுவைக் காணோம். எங்க போனார்னு தெரியலை. வெளியில போலீஸ் நிக்குது. ‘அப்புறம் பேசலாம்’னு கலைஞர் சிரிச்சுட்டே போயிட்டார். உட்லண்ட்ஸ்ல சுவருக்கு அந்தப் பக்கம் ஒரு வண்டியைக் கொண்டுவந்து நிறுத்தி சுவர் ஏறி அந்த வண்டியில் ஏற்றி டி.என்.பாலுவை பெங்களூர் கொண்டு போயிட்டாங்க. இன்னொரு அதிர்ச்சி, அவரை அழைச்சுட்டுப் போனது என் வண்டி. ஓட்டிட்டுப் போன டிரைவர் தி.மு.க வக்கீலும் என் அண்ணனுமான சாருஹாசன். மறுநாள் நாளிதழ்ல ஏதோ நானும் கலைஞரும் அருகருகே அமர்ந்து முக்கியமான சதியாலோசனை செய்ற மாதிரி மத்தவங்களுக்குத் தோணவைக்கிற மாதிரியான போட்டோ வந்தது. இந்தச் சம்பவத்தால் எம்.ஜி.ஆர். என்னுடன் ஆறுமாசம் பேசாம இருந்தார். சேர்ந்து கலந்துக்கிற ஃபங்ஷன்ல, நான் இப்படி நின்னா அவர் அந்தப் பக்கம் பார்த்தபடி நிற்பார். ஒருநாள் பேசிட்டேன். ‘உனக்கு இன்னும் விஷயம் புரியலை’னார். ‘நான் என்னங்கய்யா பண்ணுவேன்?’னேன். ‘உன் வண்டிதான் பெங்களூர் போச்சுங்கிற விஷயம் எனக்குத் தெரியும்’னார். பக்கத்தில் இருந்தவர்ட்ட, ‘இவன் வண்டி நம்பர் என்ன தெரியுமா? என் வண்டி நம்பர்தான். மறக்குமா எனக்கு’ன்னார். ஆமாம், அவர்கிட்டயும் ஏழாம் நம்பர்ல ஒரு வண்டி இருக்கும். இப்படி அவங்க இருவரும் எதிர் எதிர்க் கட்சின்னாலும் இரண்டு பேர்கிட்டயுமே அவ்வளவு கேஷுவலா இருந்தோம்.’’

‘‘ஆனால், ‘சண்டியர்’ ‘விருமாண்டி’யானது, ‘விஸ்வருபம்’ பிரச்னைனு ஜெயலலிதாவுடன்தான் உங்களுக்கு இணக்கமில்லாமல் போய்விட்டதோ?’’

‘‘ ஜெயலலிதா மேடமுக்கும் எனக்குமான நட்பை `விஸ்வரூபம்’ படத்துக்குப் பிறகான விஷயங்களை வெச்சுத்தான் பேசுறாங்க. அதுக்கு முன் உள்ள விஷயங்களை யாருமே பேச மாட்டேங்கிறாங்க. முதல்வரா வருவாங்கனு யாரும் எதிர்பார்க்காத காலத்தில், எம்.ஜி.ஆரின்  இறுதி ஊர்வல வண்டியில் இருந்து பிடிச்சுத் தள்ளிவிடப்பட்ட அந்தக் காலத்திலேயே அவங்களுக்குப் பூச்செண்டு கொடுத்தவன் நான். ஏன்னா, அந்த வண்டியில் ஏறுறதுக்குத் தகுதி அவங்களுக்கு இருக்கிறதா அப்ப நான் நினைச்சேன். நான் மட்டும் இல்லை, மக்களும் நினைச்சாங்க. அதே ஆள்கிட்டதான் மறுபடியும் சத்தம் போடுறோம். ‘சண்டியர்’ பிரச்னை எதுக்காக வந்ததுன்னே தெரியாது. நான் ஷூட்டிங் போனபோது அந்த இடத்தில் வாங்கியிருந்த ஷூட்டிங் பெர்மிஷனை கேன்சல் பண்ணிட்டாங்க. ஏதாவது பிரச்னை ஏற்படலாம்னுகூட, அவங்க கேன்சல் பண்ணியிருக்கலாம். எந்தப் படத்துக்கும் மதுரை யில் பூஜை போட மாட்டாங்க. நான் ‘சண்டியர்’க்கு மதுரையில் பூஜை போட்டேன். என் மனசுல ஏதாவது அரசியல் எண்ணங்கள் இருக்கலாம்னு அவங்க நினைச்சிருக்கலாம். இல்லை... யாராவது அப்படி அவங்ககிட்ட சொல்லியிருக்கலாம். ‘நேராப் போய்ப் பார்த்துடுங்க. தப்பாயிடும்’னு சொன்னாங்க. நான் நேராப் போய்ப் பார்த்தேன்.

‘அப்படிச் சொல்றாங்கன்னா, அந்தத்  தலைப்பை மாத்திடுங்களேன். இது ஒரு நியூசென்ஸாதான் வரும்’னாங்க. ‘மாத்தினா அவங்களுக்காக மாத்தினது மாதிரி ஆகிடும் மேடம்’னேன். ‘நியூமராலஜிக்காக மாத்திட்டேன்னு சொல்லிடுங்க’னு சொன்னாங்க. ‘நான் அப்படிச் சொன்னா நம்ப மாட்டாங்க. நீங்க சொல்லிக் கொடுத்ததாகத்தான் சொல்வாங்க. ‘எதுக்குப் போட்டு இழுத்தடிச்சுகிட்டு. மாத்திடுங்க’னு சி.எம் சொன்னாங்க’னு என் பாணியில் சொல்லி டுறேன்’னு சொன்னேன். ‘அப்படிச் சொன்னா, அது நான் சொன்னதால்ல இருக்கும்’னாங்க. ‘ஆமா, நீங்கதானே சொல்றீங்க. நீங்க சொன்னபடி சொன்னாலும் நியூமராலஜிக்காக மாத்தினார்னு யாரும் என்னை நம்பப்போறது இல்லை’னேன். ‘ஓ யு ஆர் ஸோ மச் ஆஃப் எ நான்-பிலீவர்?’னாங்க. ‘யெஸ் மேடம்’னேன். ‘அப்ப சரி, நீங்க எப்படிச் சொல்லணுமோ  அப்படிச் சொல்லிக்கங்க’ன்னாங்க. இப்படி எங்களுக்குள் காழ்ப்போ, தனிப்பட்ட பகையோ எதுவும் கிடையாது.’’

"அ.தி.மு.க ஆட்சி தானாகவே கலையும்!” - ‘தலைவன் இருக்கிறான்’ கமல்

‘‘முதல்வர்கள் இவ்வளவு கேஷுவலா இருந்திருக்கிறார்கள். இப்ப உள்ள அரசு அப்படி இல்லை என நினைக்கிறீர்களா?’’

‘‘நான் காமராஜரைப் பார்த்திருக்கேன். போற ட்ரெயின்ல அவரை மக்கள் சந்திச்சுப் பேசுவாங்க. ஜன்னல் ஓரத்துல உட்கார்ந்து வெளியில நிற்கிற அதிகாரிகளுக்கு  இன்ஸ்ட்ரக்‌ஷன்  கொடுத்துட்டுப் போயிட்டே இருப்பார். அவ்வளவு ஏன்... மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஒரு விருது விழா நடத்தினாங்க. அதுக்கு வரச்சொல்லி மூணுமுறை லெட்டர் எழுதியிருந்தாங்க. பிறகு அவங்களே நேரடியா போன் பண்ணிட்டாங்க. எனக்கு அவங்க பழக்கமே கிடையாது. போனேன். ‘நீங்க வந்தது எனக்கு அவ்வளவு சந்தோஷம். அந்த டயஸ்ல அமிதாப் பச்சனும் நீங்களும் உட்கார்ந்திருக்கணும்னு எனக்கு ஆசை. அதை நிறைவேத்திட்டீங்க’னாங்க. ‘நீங்க கூப்பிட்டதுக்கு அப்புறம் வராம இருக்க முடியுமா?’ மாதிரியான லௌகீக வார்த்தைகள் பேசியபடி புறப்பட்டேன். அப்படியே என் கூடவே வந்து கார் கதவைத் திறந்துவிட்டாங்க. ‘நீங்க இந்த வண்டியில வரப்போறீங்களா?’னு கேட்டேன். ‘இல்லல்ல... உங்களுக்காகத்தான் வந்தேன்’னாங்க. `நீங்க ஏங்க கார் கதவைத் திறக்கிறீங்க?’ன்னேன். ‘இங்க நான் சி.எம் கிடையாது. இது விருந்தோம்பல். நீங்க எங்க விருந்தாளி’ன்னாங்க. ஆச்சர்யமா இருந்துச்சு. அதே மாதிரிதான் கேரளாவில் பினராயி விஜயன் சார். ‘இதுதான் சி.எம் நம்பர்’னு ஒரு நம்பர் கொடுத்தாங்க. போன் பண்ணி ‘என் பேர் கமல்ஹாசன்’னு சொன்னதும், எதிர்முனையில் ‘ம்... சொல்லுங்க’னு சந்தோஷக் குரல். ‘சி.எம் சார்...’னு கேட்டதும், ‘நான்தான் பேசுறேன்’ன்னார். இங்க ஒரு கதாசிரியரை இப்படி ரீச் பண்ண முடியாது. ஆனால், அப்படித்தாங்க இருக்கணும்.நான் கலைஞர்கள்கிட்ட மட்டும் சொல்லலை, மக்கள்கிட்டயும் அவங்க அப்படித்தான் நடந்துக்கணும்னு ஆசைப்படுறேன்.’’

‘‘ `ஜெயலலிதா இருந்திருந்தால், இந்த அளவுக்கு நீங்கள் எதிர்க்குரல் கொடுத்திருக்க மாட்டீர்கள்’னு சொல்கிறார்களே?’’

‘‘ ‘யாரைப் பார்த்து முதுகெலும்பு இல்லாதவர்னு சொல்றீங்க. எப்படிச் சமமாக உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார் பாருங்கள். அவரைப்போல நீங்கள் பேசியிருக்கிறீர்களா?’னு ஜெயலலிதா அவர்களுடன் நான் பேசிக்கொண்டு இருக்கும் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் போட்டு இருக்கிறார்கள். இதிலிருந்து எனக்கு முதுகுத்தண்டு இருக்கா இல்லையா என்பதைத் தாண்டி எப்படி இருந்த உறவு எப்படிக் கெட்டுப்போச்சு என்பதைத்தான் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவங்களை நான் சக நடிகையாக எல்லாம் பார்க்கவே முடியாது. எனக்கு அவங்க அன்றிலிருந்து மேடம்தான். கடைசிவரைக்கும் மேடமாகத்தான் இருந்துட்டுப் போனாங்க. ஏன்னா, அவங்க சினிமாவில் உச்ச நட்சத்திரமா இருந்த சமயத்தில்,  நான் சினிமாவில் கடைநிலை ஊழியர். அவங்கல்லாம் வந்தா வழிவிட்டு நிற்கக்கூடிய டெக்னீஷியன் கூட்டத்தில் நானும் ஒருத்தன். அந்த மரியாதையை நான் அவங்களுக்கு என்னைக்கும் கொடுக்கத் தவறினது இல்லை. அவங்களுக்கு எழுதின கடிதத்திலோ, அவங்களைப்பற்றிப் பேசும்போதோ என்றாவது ஆணவத்துடன் பேசியிருக்கிறேனா? ஆனால்,  திரு.கே.பாலசந்தர் அவர்களாகவே இருந்தாலும், என் தன்மானத்தின்மீது, சுயமரியாதையின்மீது கைவைக்கக் கூடாது என நினைப்பேன். ஆமாம், ஜெயலலிதா மேடம் மேல் இருந்த நம்பிக்கை எனக்கு ‘விருமாண்டி’க்கு அப்புறம் போயிடுச்சு. கேட்டதெல்லாம் நடக்காதுனு புரிஞ்சுது. ஏன்னா அவங்க வேறு பாதைக்குப் போயிட்டாங்க.’’

‘‘ `என் துறையில் இருந்து ஆரம்பிக்கிறேன். நான் வரிவிலக்குக்கு லஞ்சம் தந்தது இல்லை...’னு உங்க அறிக்கைக்குப் பிறகு அரசு தன் இணையதளத்தில் இருந்த மின்னஞ்சல், தொலைபேசி எண்களை நீக்கியிருக்காங்க. அடுத்தகட்டமா ஏதாவது பண்ணலாம்னு திட்டம் இருக்கா?’’

‘‘நான் கட்டம் கட்டமா எதுவும் போட்டுக் கிட்டுப் போகலை. என்னை இந்தக் கட்டத்துக்குக் கொண்டுவந்தது நானா,  அவங்களா? 15 வருஷமா தொடர்ந்து தொல்லை கொடுத்துட்டு இருந்த தனால, முதல்ல வலியிலும்  பின் கோபத்திலும் இப்போ இன்னும் உத்வேகத்திலேயும் பேசிட்டு இருக்கேன். மூன்றும் அந்த நிலைக்கு வரும்போது, ‘ஆமாம்ல இதைக் கேட்டிருக்கலாமோ?’னு தோணும். இப்ப ஏன் திடீர்னு பேசுறார்னு ஏதோ தப்பு மாதிரி கேட்கிறாங்க. இரண்டரை வயசா இருக்கும்போது வழவழகொளகொளனு ஒரு குழந்தை மழலை மாறாமப் பேசுவான். இப்ப 12 வயசுல வெளுத்து கட்டுறானேன்னா... அதுதான் வளர்ச்சி. முதிர்ச்சியாகக்கூட இருக்கலாம்.’’

‘‘ரஜினி அரசியலுக்கு வருவதைப் பற்றி ரொம்ப நாளாகப் பேசிட்டு இருக்கார். இப்போ உங்களின் எதிர்க்குரல். இருவரில் யார் முதலில் தேர்தல் அரசியலுக்கு வருவாங்கனு ஒரு பரபரப்பு உருவாகியிருக்கே?’’

‘‘நான் 1985-ம் வருஷம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வேன் மேல கையை தூக்கிட்டு நிற்பேன். அது அரசியலுக்கு வந்த கமலா? வராத கமலான்னு நீங்களே சொல்லுங்க. தெருவில் போய் நின்னு மக்களை எழுப்பிக் கோஷம் போடுடானு சொல்றவன் அரசியலுக்கு வந்துட்டான்னுதானே அர்த்தம். ஆனால், அது என்ன மாதிரியான அரசியல்? ஆதாய அரசியல்னு ஒண்ணு இருக்கு, போராட்ட அரசியல்னு ஒண்ணு இருக்கு.

அடுத்தது... மாறுதல் வேண்டிச் செய்யும் அரசியல். பெரியார்,  காந்தினு என் கதாநாயகர்கள்அனைவரும் இந்தத் தேர்தல் அரசியலில் ஆர்வம் இல்லாதவர்கள்தான். அவர்களை மாதிரி இன்னும் அவ்வளவு ஆயுள் உள்ள அரசியல்வாதிகளைக் காட்டுங்க பார்ப்போம். செத்துப்போனால்கூட என் பேச்சில், இன்னொருத்தன் பேச்சில், அவரைப் பிடிக்காமல் திட்டணும்னு நினைச்சுத் திட்டுறவன் பேச்சில்னு முளைச்சு முளைச்சு வநதுட்டே இருக்காரே பெரியார். அவருக்கான மரியாதை இன்னும் கூடிட்டேதானே இருக்கு. இந்த எதிர்க்குரல் இந்த அரசுக்கு எதிராக மட்டும் அல்ல... இது தொடரும் என்பது மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் தெரியும். அவர் ஒருவேளை ஆட்சிக்கு வருவதாக இருந்தால், என் வாழ்த்துடன் சேர்த்து முன்கூட்டியே இந்த எச்சரிக்கையும் சொல்லித்தான் வெச்சுருக்கேன். நண்பர் ரஜினிக்கும் இதையே சொல்லியிருக்கேன். வந்தா  சந்தோஷம். நல்லபடியா இருந்தா, இன்னும் சந்தோஷப்படுவேன். நல்லா இல்லைனா, யார்னாலும் இதே மாதிரிதான் பேசுவேன். இந்தக் கடமை எல்லாருக்கும் இருக்கு. இருக்கணும்.’’

‘‘இப்போது அனைவரின் பார்வையும் தமிழகத்துக்கான அடுத்த தலைவர் தேடலில்தான் இருக்கு. உங்களை ரசிகர்கள் அழைப்பதும்கூட அதற்காகத்தானே?’’

‘‘எதுக்கு இங்கே தலைவர், அவரோட தேவை என்ன? உங்களுக்குத் தேவையானது ஒரு நிர்வாகி. நீங்க என்ன செம்மறி ஆடா? உங்களை மேய்க்க ஒரு மேய்ப்பன் வேணுமா? திக்குத்தெரியாம மந்தையில் இருந்து விலகிப்போய் காணாமல் போயிடுவீங்களா? நான் முக்கியமா வைக்கிற முதல் மறுப்பே, இந்தத் தலைவனைத் தேடுவதைப் பற்றித்தான். தலைவனைத் தேடாதீங்க. உங்களுக்குச் சரியான ஒரு தொண்டனைத் தேடுங்க. சமூகத் தொண்டன்தான் வேணும். ஆனா, எப்போ தேவை இல்லையோ, அப்போ அவனை நீக்குறதுக்கான ஒரு நியாயமான காரணத்தை மக்கள் சொல்லும்பட்சத்தில் நீக்க வேண்டும். அப்படி ஒரு ஜனநாயகம் இங்கே வேணும்.

ஆறு மாசங்கள் முன்னால் என் மன்ற நிர்வாகிகளைச் சந்திச்சேன். ‘நம் ரசிகர்கள் இதை நோக்கி உந்துவாங்க. இதெல்லாம் வெச்சுக்கக் கூடாது. நான் என்னவாகணும்னு நீங்க நினைக்கிறீங்க? அஞ்சு வருஷத்துல என்னை இறக்கிவிட்டுடுவாங்க. இல்ல, ‘இவன் பண்ற அக்கிரமம் தாங்க முடியலை’னு மூணு வருஷங்கள்ல இறக்கிவிட்டு ஜனாதிபதி ஆட்சிகூட கொண்டுவரலாம். அதுவா உங்களுக்கு வேணும்? நான் உயிருள்ளவரை செய்ய வேண்டிய விஷயம்தான் இப்போ செஞ்சிட்டு இருக்கேன். யாரு ஆட்சிக்கு வந்தாலும் நல்லாட்சி நடக்கும்போது, அவங்களுக்கு உறுதுணையா இருக்கலாம். நல்ல ஆட்சி இல்லாதபோது, நாம் கொடுக்கிற குரல்ல பூகம்பம் ஏற்படுத்தணும். இந்த இரண்டில் எது முதல்வன் பொசிஷன்? மக்களில் முதல்வன், குரல் கொடுப்பதில் முதல்வனாக இருக்க வேண்டும். காந்தி, பெரியார், காமராஜர் எல்லாம் அந்த மாதிரியான முதல்வர்கள்தானே. அதைத்தான் நான் பண்ணிட்டே இருப்பேன்’னு சொன்னேன். உங்களுக்கும் நம்ம எல்லோருக்கும் இப்பவும் அதையே சொல்லிக்கிறேன்.’’

‘‘உங்களின் எதிர்க்குரலுக்கு தி.மு.க. உள்ளிட்ட சில கட்சிகளின் தூண்டுதலே காரணம்னு சிலர் குற்றம் சாட்டுகிறார்களே?’’

‘‘அப்படித் தூண்டுறதா இருந்தா, அவங்க 83-லேயே தூண்டியிருக்கலாமே? ஏன்னா கலைஞர் எனக்கு, ‘நீங்கள் ஏன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேரக் கூடாது’னு கேள்வியா ஒரு தந்தி அனுப்பியிருந்தார். அதை ரொம்பநாள் வெச்சிருந்தேன். அதுக்குப் பதில் போடக்கூட எனக்குத் தைரியம் கிடையாது. அவங்க புரிஞ்சுக் கிட்ட அளவுகூட மக்கள் புரிஞ்சுக்கலையேங்கிற ஆதங்கம்தான் எனக்கு. டெல்லியில் இருந்து வந்த யாரோ ஓர் ஒற்றன், ‘கருப்புச் சட்டையை நீ போட்டுக்க. இப்போதைக்கு இதுவா நடிச்சிக்க’னு சொன்னாராம். அதனால நான் கருப்புச் சட்டை போட்டிருக்கேனாம். அ.தி.மு.க. பக்கம் இருந்து இப்படி ஒரு குற்றச்சாட்டு. காந்தியைக்கூட பிரிட்டிஷாரின் கூலினு சொன்னவங்கதானே. அதனால எனக்கு சிரிப்புதான் வந்தது. மத்திய அரசையும் பல விஷயங்கள்ல விமர்சிச்சிருக்கேன். இந்த மாதிரியான கேள்விகள் மக்களிடம் இல்லை. பத்திரிகையாளர்கள்தான் கேட்கிறாங்க. எல்லோரும் ஏதோ ஒரு ஆங்கிள் வைக்கணும்னு பார்க்கிறாங்க. அந்த ஆங்கிள் வைக்கும்போது என் கோலத்தில் இல்லாத புள்ளியெல்லாம் வெச்சிடுறாங்க. என் கோலத்தில் அவ்வளவு வளைவுகள் கிடையாது. அதனால் அத்தனை புள்ளிகள் வைக்க வேண்டியது இல்லை. இரண்டு முக்கோணம் போட்டா, அதுதான் நான். அதாவது சினிமா நட்சத்திரம். அவ்வளவுதான்.’’

‘‘முரசொலி பத்திரிகையின் 75-ம் ஆண்டு விழாவில் கலந்துக்கிறதையும் இதையும் முடிச்சுப் போடுகிறார்களே?’’

``என்னை ஏதாவது கோயில் கும்பாபிஷேகங்கள்ல பார்த்திருக்கீங்களா? இத்தனைக்கும் எங்கப்பா ராமேஸ்வரம் கோயில் ட்ரஸ்ட்டி. ஆனா, அவருடைய மூத்த மகன் சாருஹாசன் நாத்திகன். என் மாமாக்கள்ல ஒருத்தர் கம்யூனிஸ்ட். ஆரம்பத்தில் இருந்து என் பயிற்சி அப்படித்தான் இருந்தது. அந்தப் பழக்கவழக்கங்கள் எனக்கு வந்ததற்கு நான் மட்டும் பொறுப்பாளி அல்ல. அவ்வளவு ஏன் பாலசந்தர் சாரே ‘வந்துட்டான்யா கருப்புச் சட்டைக்காரன்’னுதான் சொல்லுவார். ‘அபூர்வ ராகங்கள்’லயே ஒரு காட்சி  வெச்சு, பிறகு அதை எடிட் பண்ணிட்டாங்க. ஸ்ரீவித்யா வீட்ல பூஜை நடக்கும். ‘அதெல்லாம் வேணாம்’னு நான் சொல்லுவேன். அந்த சீனை  ஷூட் பண்ணிட்டு, ‘உனக்காகத்தாண்டா. சந்தோஷமா?’ன்னார் பாலசந்தர் சார். அதனால என் இஷ்டப்படி விட்ட பெரியவங்கதான் இதுக்குக் காரணம். முரசொலிக்கும் கமல்ஹாசனுக்கும் என்ன சம்பந்தம்னு இப்ப புரியுதா?’’

"அ.தி.மு.க ஆட்சி தானாகவே கலையும்!” - ‘தலைவன் இருக்கிறான்’ கமல்

‘‘ ‘இது ஜெயலலிதாவுக்காகப் போட்ட ஓட்டு. இதில் தொடர உங்களுக்குத் தகுதி இல்லை’ என்பது தற்போதைய அ.தி.மு.க. அரசின் மீதான பொதுவான குற்றச்சாட்டு. அதுதான் உங்களின் குற்றச்சாட்டுமா?’’

‘‘ஆமாம். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படத்தில் வரும் கதைபோல, இது சொத்துப் பிரிக்கிற சண்டைதான். ரெங்காராவ் செத்ததுக்குப் பிறகு யாருக்கு அந்தச் சொத்து போகும் என்பதுதான். தவிர, எனக்கு அவர்களுடன் வித்தியாசங்கள் இருந்திருக்கலாம். அது எனக்கு ஏற்பட்ட சோகங்களால் வந்தவை. அவங்களால் மக்களுக்கு ஏற்பட்ட சோகங்களை நான் என்னைக்குமே சொல்லாமல் விட்டது கிடையாது.

மிதமிஞ்சிப்போகும்போது நான் சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறேன். அந்தக் குரல்தானே ரஜினியுடையதும். ‘சிஸ்டம் சரியில்லை’னு படக்குனு ஒண்ணு அடிச்சார் இல்லையா? அந்தக் குரல் எல்லா துறைகளில் இருந்தும் வர வேண்டும்.’’

‘‘அப்போ இந்த ஆட்சியைக் கலைக்கணும்கிறீங்களா?’’

‘‘இந்த  ஆட்சி  தானாகவே கலையும்னு சொல்றேன். ‘கலைக்கணும்னு சொல்றதுக்கு நீ யாரு?’னு கேட்பாங்க. இல்லை... கலையும் என்கிறேன். ‘நீ ஜோசியரா?’னு கேட்பாங்க. இல்லை. நான் என் மக்களில் ஒருத்தன். ஏன்னா அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் நான் பண்றதா, அவங்க நினைக்கிறதுதான் வேடிக்கை. அதுக்கான எல்லா ஏற்பாடுகளையும் அவங்களேதான் பண்ணிட்டு இருக்காங்க. அது இன்னைக்கு நேத்திக்கு இல்லை. ஒரு வருஷமாப் பண்ணிட்டு இருக்காங்க. அதுவும் கடும் முயற்சி எடுத்து எல்லா விஷயங்களையும் பண்ணிட்டு இருக்காங்க. திட்டம் போட்டு எதிரி எழுதிக்கொடுத்தால்கூட, இவ்வளவு சரியா நடக்காது. அவங்களே அவ்வளவு தவறுகளையும் தொடர்ந்து பண்ணிட்டு இருக்காங்க.’’

‘‘இப்படித் தொடர்ந்து பேசிட்டு வர்றதால, நிறையப் பிரச்னைகளை எதிர்கொள்ளும் சூழல்கள் வந்திருக்குமே?’’

‘‘நான் கருப்புச் சட்டை போட்ட பிறகு, என் கேரியர் முழுவதும் 40 வருஷமா மக்கள் அறிய என் இறை மறுப்பைச் சொல்லிட்டே இருக்கேன். அதனால எனக்கு 10 ரூபாய் லாபம்னு ஏதாவது உண்டா என்ன? இந்த யுகத்தில் இப்படிப் பேசுவதில் இருக்கக்கூடிய நஷ்டங்கள்தான் அதிகம். இருந்தாலும் விடாமல் பேசுறேன்னா, ஏதோ ஒரு தெளிவை நான் நம்புறேன்னுதானே அர்த்தம். இதுதான் என் வாழ்க்கை முறைனு எனக்குத் தெரிஞ்ச அளவு வாழ்ந்துட்டு இருக்கேன்.’

‘‘உடல்நிலை தேறிட்டீங்க. எப்போ பட ஷூட்டிங் கிளம்புறீங்க?’’

‘‘ ‘விஸ்வரூபம் 2’தான் முதலில் வரணும். அடுத்தது ‘சபாஷ் நாயுடு’. இவை இரண்டுக்குப் பிறகான என் அடுத்த படத்தின் தலைப்பைச் சொன்னால், இப்போ உள்ள சூழலை நான் பயன்படுத்திக்கிறேன்னு நினைப்பாங்க. ஆனா,  அந்தத் தலைப்பை நாலைஞ்சு வருஷங்களுக்கு முன்னாடியே பதிவு பண்ணிட்டேன். ஆமாம்... என் அடுத்த படம், ‘தலைவன் இருக்கிறான்’.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism