Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

உமரி பொ.கணேசன், மும்பை-37.

அ.தி.மு.க அணிகள் வெளியில் மோதிக்கொண்டாலும், சட்டமன்றத்தில் ஒற்றுமையாகச் செயல்பட்டார்களே... எப்படி?


 ஆகவேண்டிய காரியங்கள் நடந்தாக வேண்டுமல்லவா?!

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

மு.க.ஸ்டாலின் மீது என்ன கோபம் திருமாவளவனுக்கு?


‘மக்கள் கோரிக்கைகளுக்கான போராட்டம் நடத்தும் கூட்டு இயக்கத்தில் பங்கேற்கலாம். ஆனால், தேர்தல் கூட்டணி வேண்டாம்’ என்று திருமாவளவனுக்கு ஸ்டாலின் சொல்லி அனுப்பிவிட்டார் என்று தகவல். அநேகமாக, இது காரணமாக இருக்கலாம். இதைச் சம்பந்தப்பட்ட இருவரும்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

ச.புகழேந்தி, மதுரை-14.


‘தமிழ்நாட்டின் அனைத்துத் துறைகளிலும் ஊழல்’ என்கிறாரே கமல்?


இப்படி பொத்தாம் பொதுவாகச் சொல்வதால்தான் அமைச்சர்கள் அனைவரும் எதிர்க்கிறார்கள். ‘அவதூறு வழக்குப் போடுவோம்’ என்றும் மிரட்டுகிறார்கள். இந்த ஆட்சியில் நடந்த மிக முக்கியமான ஊழல் ஒன்றைக் கண்டுபிடித்து, அதைக் கமல் ஆதாரத்தோடு வெளியிட்டிருந்தால், இத்தகைய எதிர்ப்பு வந்திருக்காது. அமைச்சர்கள் அனைவரும் பதுங்கியிருப்பார்கள்.

ப.பாலா என்ற பாலசுப்பிரமணி, பாகாநத்தம்.


சிவாஜி கணேசன், பாக்யராஜ், டி.ராஜேந்தர், விஜயகாந்த் ஆகியோரெல்லாம் கட்சிகளை ஆரம்பித்தவர்கள். இவர்களையெல்லாம் பார்த்த பிறகுமா ரஜினி கட்சி ஆரம்பிக்கிறார்?


ரஜினி கட்சி ஆரம்பிக்கிறாரா என்பது தெரியவில்லை. நீங்கள் குறிப்பிடும் ஒவ்வொருவர் விவகாரமும் வேறு வேறு.

சிவாஜி ஆரம்பித்த கட்சி, வி.என்.ஜானகியுடன் கூட்டணி வைத்தது. ‘ஜெயலலிதாவா, ஜானகியா’ என்று நடந்த போட்டியில், ஜானகியோடு சிவாஜியும் சேர்ந்து தோற்றார். சிவாஜி ரசிகர்கள், எம்.ஜி.ஆரை ஏற்க மாட்டார்கள். தோற்றபிறகு தொடர்ந்து அரசியலில் பயணப்பட சிவாஜியும் விரும்பவில்லை.

எம்.ஜி.ஆர் முகத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தினார், பாக்யராஜ். அதனை மொத்தமாக ஜெயலலிதா அறுவடை செய்த காலத்தில்,  எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்குப் பாக்யராஜ் தேவைப்படவில்லை. எம்.ஜி.ஆரின் எதிரியான கருணாநிதியோடு போய்ச் சேர்ந்தார் பாக்யராஜ். அவரது தோல்வி, அதனால் ஏற்பட்டது.

கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்குமான ஆதரவு - எதிர்ப்பு நிலைப்பாட்டில், எப்போது எந்த நிலையில் இருக்கிறார் என்றே தெரியாததும், தொடர்ச்சியான அரசியல் செய்யாததும் டி.ராஜேந்தரை அமுக்கியது.

கருணாநிதி, ஜெயலலிதா என இரண்டு தரப்புகளையும் எதிர்த்த விஜயகாந்த், தி.மு.க-வுடன் கூட்டணி பேசியதும், அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்ததும் அவரது சறுக்கலுக்குக் காரணம்.

சினிமாவால் கிடைக்கும் பிரபலம், கட்சி ஆரம்பிக்கப் போதுமானது. ஆனால், அதைத் தக்கவைத்துக்கொள்ள கொள்கை வேண்டும். அது இல்லாததுதான் அவர்களது தோல்விக்குக் காரணம். இதை, ரஜினி உணர வேண்டும்.

கழுகார் பதில்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

என்.காளிதாஸ், அண்ணாமலை நகர்.

2009 முதல் 2014 வரை வெளியான தமிழ்த் திரைப்படங்களுக்கான தமிழக அரசு விருதுகள் மொத்தமாக அறிவிக்கப்பட்டிருப்பது எதைக் காட்டுகிறது?

ஓர் அரசாங்கம் எவ்வளவு அதிவேகமாக நடக்கிறது என்பதற்கு உதாரணம் இது. 2009 முதல் 2011 வரையிலான மூன்று ஆண்டுகளுக்குக் கருணாநிதி முதல்வராக இருந்தார். அதன்பிறகு, 2016 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்தார். இரண்டு பேரும் சினிமாத் துறையிலிருந்து வந்தவர்கள். ‘அவர்களுக்கு சினிமா பற்றி அக்கறை இல்லையா... அல்லது அவர்கள் மொத்தத்தில் செயல்படவே இல்லையா?’ என்ற சந்தேகம்தான் எழுகிறது. 

எஸ்.பி.விவேக், சேலம்.

அரசியலில் மௌனமாக இருப்பது ஒருவித தந்திரமா?


ஆமாம். நீங்கள் புத்திசாலியா, முட்டாளா என்று அடுத்தவர்களுக்குத் தெரிவிக்காமலேயே மௌனம் காப்பாற்றிவிடும் அல்லவா?

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.

 சிறைச்சாலையையும் விட்டு வைக்கவில்லையே?


சிறைச்சாலையிலும் மாட்டிக்கொள்கிறார்களே!

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14.

தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் தொடரும் மோதல்களால், காமராஜர் ஆட்சியை நிலைநாட்டும் அவர்களின் லட்சியம் நிறைவேறுமா?


காங்கிரஸ் ஆட்சி அமைவதாலேயே அது காமராஜர் ஆட்சி ஆகிவிடாது. கருணாநிதி ஆட்சி, அண்ணா ஆட்சியாக எப்படி ஆகாதோ... அதைப் போல!

பி.ஸ்ரீதர்ஷினி, குடந்தை.

‘கமல்ஹாசன் ஓர் ஆளே கிடையாது’ என்கிறாரே உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன்?


ஓ! இப்படி ஓர் அமைச்சர் இருக்கிறாரா?

கார்த்திகேயன், வேலூர்.

‘வேலையில்லா பட்டதாரி - 2’ எப்போது ரிலீஸ் ஆகும்?


வேலையில்லா பட்டதாரிகள்தான் அது பற்றிக் கவலைப்பட வேண்டும்!

கழுகார் பதில்கள்!

மத்திய பி.ஜே.பி அரசுடன் இன்றைய தமிழக அரசு நெருக்கமாக இருக்கிறது. அதன் மூலமாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து, காவிரி நீரைப் பெற்றுத்தந்து, டெல்டா மாவட்டங்களைத் தமிழக அரசு காப்பாற்றுமா?

மத்திய பி.ஜே.பி அரசுடன் இன்றைய எடப்பாடி அரசு நெருக்கமாக மட்டுமல்ல, அடிமையாகவே இருக்கிறது. அடிமைகள் எப்போதும் கோரிக்கைகள் வைக்கவும் மாட்டார்கள். அடிமைகளின் கோரிக்கைகள் எஜமானர்களால் கண்டுகொள்ளவும் படாது.

‘காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கவேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்டபோது ஒப்புக்கொண்டு வந்தது மத்திய அரசு. மறுநாளே, ‘காவிரி மேலாண்மை வாரியத்தை நாடாளுமன்ற சட்டத்தின் வாயிலாகவே அமைக்க முடியும். இவ்விவகாரத்தில் மத்திய அரசை உச்ச நீதிமன்றம் நிர்பந்தம் செய்ய முடியாது’ என்று சொன்னது. இந்தச் சேவையை, கர்நாடக சட்டசபை மனப்பூர்வமாக பாராட்டியிருக்கிறது. மத்திய பி.ஜே.பி-க்கு தமிழ்நாட்டை விட கர்நாடகாதான் முக்கியம். அங்குதான், காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி ஆட்சிக்கு வரும் வல்லமை பி.ஜே.பி-க்கு இருக்கிறது. எனவே, கர்நாடகாவுக்குச் சாதகமான முடிவைத்தான் எப்போதும் எடுப்பார்கள். டெல்டா விவசாயிகளின் வாழ்க்கை, கர்நாடக பி.ஜே.பி-யின் கையில் இருக்கிறது. எடப்பாடியின் வாழ்க்கை, டெல்லி பி.ஜே.பி-யின் கையில் இருக்கிறது. இதனால், டெல்டா விவசாயிகளின் வாழ்க்கை பாலைவனமாகப் போகிறது.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: 
கழுகார் பதில்கள்,  ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600 002 
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!