Published:Updated:

பொள்ளாச்சியா... உடுமலையா? - எம்.ஜி.ஆர் விழாவில் வெடித்த தகராறு!

பொள்ளாச்சியா... உடுமலையா? - எம்.ஜி.ஆர் விழாவில் வெடித்த தகராறு!
பிரீமியம் ஸ்டோரி
News
பொள்ளாச்சியா... உடுமலையா? - எம்.ஜி.ஆர் விழாவில் வெடித்த தகராறு!

பொள்ளாச்சியா... உடுமலையா? - எம்.ஜி.ஆர் விழாவில் வெடித்த தகராறு!

‘அ.தி.மு.க-வில் இனி நான்தான் எல்லாம்’ என்று உணர்த்தி, கட்சிக்காரர்களைத் தன் தலைமையின் கீழ் கொண்டுவர நடத்திய ஒரு நிகழ்ச்சியில், தன் எதிரிலேயே தகராறு நடக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிர்பார்த்து இருக்கமாட்டார். தன் அதிகார முத்திரையைப் பதித்து, கட்சியிலும் ஆட்சியிலும் தன் ஆதிக்கத்தை வலுப்படுத்த எடப்பாடி எடுத்திருக்கும் அஸ்திரம்தான் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் காலண்டர் போட்டு நடக்கும் இந்த விழாவில், எடப்பாடி தவறாமல் பங்கேற்கிறார். திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் ஜூலை 22-ம் தேதி நடந்த இந்த விழாவில்தான் மோதல் உச்சத்துக்குப் போனது.

மாலையில் விழா மேடையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுக்கு சபாநாயகர் தனபாலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் வந்து சேரும்வரை, மற்ற அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் மேடைக்குக் கீழே காத்துக்கொண்டிருந்தனர். முதல்வர் வந்து, விழா மேடைக்குச் சென்ற பிறகே மற்றவர்கள் மேடைக்கு அனுமதிக்கப்பட்டார்கள்.

பொள்ளாச்சியா... உடுமலையா? - எம்.ஜி.ஆர் விழாவில் வெடித்த தகராறு!

விழா மேடையில் முதல்வரும் சபாநாயகரும் அருகருகே அமர்ந்திருக்க, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அங்கே அமர வந்தார். அவரைத் தடுத்து நிறுத்திய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், ‘‘இங்கு உட்காரக் கூடாது, பின்னால் சென்று அமருங்கள்’’ என்று முகத்தில் அடித்தது போலச் சொன்னார். சட்டென முகம் சிவந்த பொள்ளாச்சி ஜெயராமன், “நான் ஏன்யா பின்னால போகணும்” என்றவாறு எதிர்த்து நின்றார். ராதாகிருஷ்ணன், ‘‘புரோட்டோகால் படி இடம் போட்டேன்’’ எனச் சொல்ல, ‘‘எம்.ஜி.ஆரிடம் நேரடியா பழகின நான்கைந்து பேர்தான் இப்போது கட்சியில் இருக்கிறோம். அதில் நான் ஒருத்தன். எங்கள் வீட்டில் எம்.ஜி.ஆர் மூன்று முறை வந்து சாப்பிட்டிருக்கிறார். அப்புறம் என்ன புரோட்டோகால்’’ என ஜெயராமன் கொந்தளித்தார்.

இப்படி இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்ற, எல்லோரும் மேடையையே கவனிப்பதை உணர்ந்த முதல்வர் எடப்பாடி, உடனே சுதாரித்துக்கொண்டார். சட்டென எழுந்து உடுமலை ராதாகிருஷ்ணனை இழுத்துச் சென்று இருக்கையில் அமர்த்தினார். இந்தப் பக்கம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சமரசத்தில் இறங்கி, பொள்ளாச்சி ஜெயராமனின் கைகளை இறுக்கிப் பிடித்தார். அவரை அமைதியாக்கி, தன்னுடைய சீட்டில் அமர வைத்து நிலைமையைச் சமாளித்தார் வேலுமணி. சில நிமிடங்களுக்கு மேடையில் இருந்த அனைவருமே பதறிப் போனர்கள்.

பின்னர் முன்னிலை உரை வழங்கிய உடுமலை ராதாகிருஷ்ணன், ஒவ்வொருவரின் பெயரையும் வரிசையாக வாசித்தபோதுகூட, பொள்ளாச்சி ஜெயராமனின் பெயரைச் சொல்லவில்லை. அவரைத் தவிர எல்லோருக்கும் நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சி முழுவதும் மேடையில் இறுக்கமான முகத்துடனேயே காட்சியளித்த பொள்ளாச்சி ஜெயராமன், இறுதியாக முதல்வருக்குக் கட்சியினர் நினைவுப் பரிசு வழங்கியபோது மேடையில் இருந்தே இறங்கிப்போய் விட்டார். விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி, ‘‘எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தைப் போலவே தலைமைக்குக் கட்டுப்பட்டு நடந்துகொள்பவர்களுக்குப் பதவிகள் தானாகத் தேடி வரும்’’ என்று பன்ச் வைத்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பொள்ளாச்சியா... உடுமலையா? - எம்.ஜி.ஆர் விழாவில் வெடித்த தகராறு!

விழா முடிந்ததும் பொள்ளாச்சி ஜெயராமனிடம் பேசினோம். ‘‘யார் எங்க உட்காரணும்ங்கறது எல்லாம் ஒரு சின்ன விஷயம். அந்தப் பிரச்னையை அங்கேயே பேசித் தீர்த்துக்கொண்டோம்’’ என்றார். நம்மிடம் பேசிய உடுமலை ராதாகிருஷ்ணன், “எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்பது ஒரு முழுமையான அரசு நிகழ்ச்சி. அதில் அரசாங்க நெறிமுறைப்படிதான் இருக்கைகள் அமைக்கப்பட்டு இருக்கும். அதில் நான் தலையிட்டு எதையும் செய்துவிட முடியாது. பொள்ளாச்சி ஜெயராமன் தவறுதலான இருக்கையில் அமர்ந்துவிட்டு என்னிடம் வந்து கேட்டால், நான் என்ன செய்ய முடியும்? ‘அரசு அதிகாரிகளிடம் கேளுங்கள்’ என்று கூறிவிட்டேன். வேறு எதுவும் பிரச்னை இல்லை’’ என்றார்.

கடந்த 2011 தேர்தலில் உடுமலைப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் பொள்ளாச்சி ஜெயராமன். ஆனால், அடுத்தடுத்த காய் நகர்த்தல்களால் இப்போதைய அரசின் அமைச்சர் பதவியையும், திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியையும் கைப்பற்றிக்கொண்டார் உடுமலை ராதாகிருஷ்ணன். திருப்பூர் மாவட்டத்தில் இருவருக்குமிடையே பல வருடங்களாக நீடித்த பனிப்போர், இப்போது பொதுவெளிக்கு வந்துவிட்டது.

அ.தி.மு.க-வின் தலைமையை இறுக்கமாகப் பற்றியிருக்கும் கொங்கு லாபிக்குள் நடந்திருக்கும் இந்த மோதல், என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தப்போகிறதோ!

- தி.ஜெயப்பிரகாஷ்