Published:Updated:

மிஸ்டர் கழுகு: கூடாரம் காலி! - பன்னீருக்கு வெந்நீர் ஊற்றும் எடப்பாடி...

மிஸ்டர் கழுகு: கூடாரம் காலி! - பன்னீருக்கு வெந்நீர் ஊற்றும் எடப்பாடி...
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு: கூடாரம் காலி! - பன்னீருக்கு வெந்நீர் ஊற்றும் எடப்பாடி...

மிஸ்டர் கழுகு: கூடாரம் காலி! - பன்னீருக்கு வெந்நீர் ஊற்றும் எடப்பாடி...

மிஸ்டர் கழுகு: கூடாரம் காலி! - பன்னீருக்கு வெந்நீர் ஊற்றும் எடப்பாடி...

‘‘எடப்பாடி ஆட்சி நடக்கிறது’’ என்றபடி வந்தமர்ந்தார் கழுகார்.

‘‘எடப்பாடிதானே ஆட்சி நடத்துகிறார். அதை ஏன் புதிதாகச் சொல்கிறீர்?’’ என்றோம்.

‘‘கட்சியிலும் ஆட்சியிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குச் சுக்கிர திசை நடக்கிறது. பட்ஜெட் கூட்டத்தொடரில், உள்துறை மானியக் கோரிக்கை என்பது தலைமேல் தொங்கும் கத்தியைப் போன்றது. கருணாநிதி, ஜெயலலிதா முதலமைச்சர்களாக இருந்த காலத்தில்கூட அது இவ்வளவு அமைதியாக நடந்ததில்லை. ஆனால், எடப்பாடி அதைக்கூடச் சிறு சலசலப்பு இல்லாமல் நடத்தி முடித்துள்ளார். ஒவ்வொரு விஷயத்திலும் எடப்பாடி பழனிசாமி வெளிப்படுத்தும் சாமர்த்தியத்தைப் பார்த்து அதிகம் கலங்கிப் போனது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்தான். எடப்பாடியின் வியூகங்களில் சிக்கிப் பன்னீர் அணி சிதறிக்கொண்டிருக்கிறது. அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ பழ.கருப்பையா ஒரு கூட்டத்தில் பேசும்போது, ‘இன்னும் ஆறு மாதங்களில் பன்னீர் பழையபடி டீக்கடையில்தான் போய் உட்கார வேண்டும்’ என்றார். அது நடந்துவிடுமோ என்னவோ’’

‘‘ம்ம்ம்... ஆறுக்குட்டி எம்.எல்.ஏ மாறப்போவது பன்னீர் அணிக்குத் தெரியாதா?’’

‘‘அது பன்னீருக்கும் தெரியும்; அவரது அணியைச் சேர்ந்தவர்களுக்கும் தெரியும். ஆனால், ஆறுக்குட்டியை சமாதானப்படுத்தும் நிலையில் பன்னீரும் இல்லை; அவரது அணியைச் சேர்ந்தவர்களும் இல்லை. அந்த அணியில் உள்ள பலருமே ஏறத்தாழ அணி மாறும் முடிவுக்கு வந்துவிட்டனர். ‘சசிகலா குடும்பத்தை நீக்கிவிட்டால் அணிகள் இணைவது சாத்தியம்’ என்று பலர் நினைத்தனர். ஆனால், அப்படி ஒன்றும் நடக்கவில்லை. அணிகள் இணைப்புக்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல், கோயில் கோயிலாகப் போய் குறி கேட்பது, யாகம் செய்வதிலேயே பன்னீர் ஆர்வமாக இருந்தார். அவருடைய உடல்நிலையும் முன்பு போல இல்லை. அடிக்கடி மருத்துவமனை சென்றுவருகிறார்.  மேலும், அணிகள் இணைப்புக்காக ஓ.பி.எஸ் கொஞ்சம் இறங்கிவந்தாலும், அந்த அணியில் இருக்கும் கே.பி.முனுசாமியும் செம்மலையும் விடுவதில்லை. அணிகளை இணைப்பதைக் காட்டிலும் அவரவர் லாபம் அடைவதிலேயே குறியாக இருக்கின்றனர். இவற்றையெல்லாம் பார்த்து வெறுத்துப்போன பன்னீர் அணி எம்.எல்.ஏ-க்கள், அவர்களுக்கு லாபம் கிடைக்கும் அணிகளை நோக்கிப் போகின்றனர்.’’

மிஸ்டர் கழுகு: கூடாரம் காலி! - பன்னீருக்கு வெந்நீர் ஊற்றும் எடப்பாடி...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘பன்னீர் அணியில் என்னதான் கோரிக்கையாம்?’’

‘‘அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் பதவியைக் கேட்கிறார் பன்னீர். டெல்லியில் இருந்துகூட ஆதரவு கருத்துச் சொன்னார்களாம். ஆனால், எடப்பாடி பழனிசாமி  அணியில் இருக்கும் யாருக்கும் சம்மதம் இல்லை. தேர்தல் ஆணையத்தில் விவகாரம் இருப்பதைச் சுட்டிக் காட்டி, ‘நாங்களே நினைத்தாலும் அவருக்கு அந்தப் பதவியைத் தர முடியாது’ என்றார்களாம். ‘வெளிப்படையான உறுதிமொழியாவது கொடுங்கள்’ என்று பன்னீர் தரப்புக் கேட்டதாம். அதற்கு ஒப்புக்கொண்டு எடப்பாடி இறங்கிவந்தால், அவருடைய ஆட்சியைக் கவிழ்க்கும் வேலையில் சசிகலா குடும்பம் மொத்தமும் இறங்கிவிடும். எனவே, ‘பன்னீர் ஏற்கெனவே வகித்து வந்த பொருளாளர் பதவியில் நீடிக்கட்டும். அமைச்சரவையில் இடம் தருகிறோம். அதைத்தவிர வேறு எதுவும் செய்யமாட்டோம்’ எனக் கறாராகத் தெரிவித்துவிட்டனர்.   இதைப் புரிந்துகொள்ளாமல் செம்மலை தனக்கும் அமைச்சர் பதவி வேண்டும் என்று கேட்கிறார். கே.பி.முனுசாமி, ராஜ்யசபா எம்.பி பதவியை எதிர்காலத்தில் தருவதற்கான உறுதிமொழியைக் கேட்கிறார். எடப்பாடியே நினைத்தாலும் இவற்றையெல்லாம் தர முடியாது.’’

‘‘ஆறுக்குட்டி என்ன சொல்கிறார்?’’

‘‘ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வாக இருந்தும், ‘எந்த அதிகாரமும் எந்தப் பலனும் இல்லாமல் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வைவிட பலவீனமாக ஏன் இருக்க வேண்டும்’ என நினைத்தார். அணி மாறினால்கூட, அமைச்சர் வேலுமணிக்கு ஆறுக்குட்டி எப்போதும் நெருக்கமானவராகவே இருந்தார். ‘பன்னீர் அணி வலுவான அணியாக பரிணமிக்கும்’ என்று அவர் கருதினார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. மாறாக பன்னீர் அணியில் அதிகார மையங்களாகச் செயல்படும் கே.பி.முனுசாமி, பி.ஹெச்.பாண்டியன் உள்ளிட்ட சிலர் அவரைப் புறக்கணித்தனர். இந்த மனக்கசப்பைச் சரியாகக் கணக்குப் போட்ட அமைச்சர் வேலுமணி, ஆறுக்குட்டியை எடப்பாடி அணிக்குக் கொண்டுவந்துவிட்டார். ‘இதன் பின்னணியில் டாஸ்மாக் பார் வருமான விவகாரம் ஒன்று இருக்கிறது’ எனப் பன்னீர் தரப்பில் சொல்கிறார்கள்.’’

மிஸ்டர் கழுகு: கூடாரம் காலி! - பன்னீருக்கு வெந்நீர் ஊற்றும் எடப்பாடி...

‘‘பன்னீர் அணியில் மற்றவர்களின் மனநிலை எப்படி உள்ளது?’’

‘‘முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கடும் அதிருப்தியில் இருக்கிறாராம். ‘அணிகளை இணைக்கும் வேலையை ஒரு மாதத்தில் முடியுங்கள்; இல்லையென்றால் நான் அணி மாறிக் கொள்கிறேன்’ என அவர் நேரடியாகவே பன்னீரிடம் சொன்னதாகத் தகவல். பன்னீர் அணியில் இருக்கும் பல எம்.எல்.ஏ-க்களுக்கும், தங்கள் தொகுதிப் பணிகளைச் செய்வதில் சிரமங்கள் இருக்கின்றன. ‘தினகரன் பக்கம் போனவர்களைக்கூட சீராட்டுகிறார்கள். நம்மை யாரும் சீந்துவதில்லை’ எனப் புலம்பல் கேட்கிறது. ஏதாவது கோரிக்கைகளோடு அமைச்சர்களிடம் போனால், ‘இந்தப் பக்கம் வந்தால்தான் எதுவாக இருந்தாலும் நடக்கும்’ எனப் பன்னீர் அணியினருக்கு வெந்நீர் ஊற்றும் வேலையைக் கச்சிதமாகச் செய்கிறார்கள். இதில் நொந்து போய் இருக்கிறார்கள் பன்னீர் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள். டெண்டர்கள் பல முடிவாகி கொண்டிருக்க... அதற்குள் பன்னீர் கூடாரம் காலியானாலும் ஆச்சர்யம் இல்லை!’’

‘‘ஓஹோ.’’

‘‘நிர்வாகிகளிலும் பலர் மதில் மேல் பூனையாக இருக்கிறார்கள். அவைத்தலைவர் மதுசூதனன் தனக்கு நெருக்கமானவர்களிடம் ‘பன்னீர் என்ன முடிவில் இருக்கிறார் என்றே தெரியவில்லை; இணைந்து போவதுதான் நல்லதாகப்படுகிறது’ என்று சொல்லி உள்ளார். ஆனால், இணைப்பை விரும்பாதவர்கள், ‘சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவிக்குத் தேர்தல் ஆணையம் முடிவுரை எழுதிவிடும்; அதன்பிறகு  கட்சி நம் கட்டுப்பாட்டுக்கு வந்துவிடும்’ என நம்பிக்கை கொடுக்கிறார்கள். அதே நேரத்தில், ‘தன்னை முன்னிலைப்படுத்தும் வேலையை எடப்பாடி கச்சிதமாக செய்துகொண்டிருக்கிறார். மத்தியில் இருக்கும் பி.ஜே.பி-யும், நம்மைவிட எடப்பாடி அணியைத்தான் அதிகம் கவனிக்கிறது. இந்தச் சூழ்நிலையில் அணிகளை இணைத்துவிட்டு, கட்சியில் பொறுப்புகளைப் பெற்றுக்கொள்வதுதான் சாமர்த்தியம்’ என்ற நிதர்சனத்தையும் சிலர் சொல்கின்றனர். கோயில் கோயிலாகப் போய் குறிகேட்டுக் கொண்டிருக்கும் பன்னீர், இப்போதும் பிரதமர் மோடியைத்தான் மலைபோல் நம்பிக்கொண்டிருக்கிறார். ஜனாதிபதி பதவியேற்பு விழாவுக்காக டெல்லி சென்றபோது, பிரதமர் மோடியைச் சந்தித்தார் பன்னீர். சிறிதுநேரம் மோடியும் பன்னீரும் தனியாகவும் பேசினார்கள். டெல்லியிடம் இருந்து உற்சாகமான வார்த்தைகள் வரவில்லையாம்.’’

‘‘எடப்பாடியும் டெல்லிக்கு விசிட் அடித்தாரே?’’

‘‘எடப்பாடி டெல்லி செல்வதற்கு முன்பே ஆறு அமைச்சர்கள் டெல்லிக்குப் படையெடுத்தனர். ‘நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என்று மத்திய அமைச்சர்களிடம் வலியுறுத்துவதற்கு இந்தப் பயணம்’ என்று சொன்னாலும், இதில் அரசியல் இல்லாமல் இல்லை. அ.தி.மு.க ஆட்சி மீது  மத்திய அரசு ஏகக் கடுப்பில் இருக்கிறது என்று ஏற்கெனவே சொல்லியிருந்தோம். குறிப்பாக அமைச்சர்களின் நடவடிக்கைமீது மத்திய அரசுக்கு இருக்கும் கோபத்தைத் தணிக்கவும் ஜனாதிபதி பதவியேற்பு விழாவை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளும் திட்டத்திலும்தான் இந்தப் பயணம் அமைந்ததாம்.”

‘‘குட்கா விவகாரத்தில் ஸ்டாலின் ஏவுகணை வீசுகிறாரே?’’

மிஸ்டர் கழுகு: கூடாரம் காலி! - பன்னீருக்கு வெந்நீர் ஊற்றும் எடப்பாடி...

“குட்கா விவகாரத்தில் தொடர்புடைய  டி.கே.ராஜேந்திரனை டி.ஜி.பி-யாக நியமித்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. ‘பான், குட்கா விவகாரம் குறித்த வருமான வரித்துறை கடிதத்தையும், ரெய்டில் சிக்கிய லெட்ஜர் பக்கங்களோடு வருமான வரித்துறை அனுப்பிய அறிக்கையையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்’ எனத் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அவர் அதைச் சமர்ப்பிக்கவில்லை. இதைத்தான் இப்போது எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து,  தலைமைச் செயலாளரை விமர்சிக்கின்றன.’’

‘‘ஏன்?’’

‘‘2016 ஆகஸ்ட் 11-ம் தேதி வருமான வரித்துறை முதன்மை இயக்குநர் பி.ஆர்.பாலகிருஷ்ணன், அன்றைய தலைமைச் செயலாளர் ராம மோகன ராவைச் சந்தித்து குட்கா ஊழல் தொடர்பான அறிக்கையைக் கொடுத்தார். அதற்கு மறுநாள் அவர், ‘குட்கா லெட்ஜரில் பலருக்குக் கொடுத்ததாகக் கூறப்பட்டுள்ள 39.91 கோடி ரூபாய் குறித்து விசாரியுங்கள்’ என்று தலைமைச் செயலாளருக்குக் கடிதம் எழுதி உள்ளார். அந்தக் கடிதத்துக்கான ஒப்புகையைத் தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் உள்ள மூத்த உதவி நிர்வாக அலுவலர் பாபு, அனுப்பி வைத்துள்ளார். ஆனால், வழக்குப் போட்டவர் தரப்பில் ‘ஜூலை 9-ம் தேதி வருமான வரித்துறை கடிதம் அனுப்பியது’ என்று கூறப்பட்டிருந்தது. அதாவது அவர்கள் சொல்லும் தேதி தவறானது. கடிதம் அனுப்பப்பட்டது உண்மை. ஆனால் தேதி தவறு. தேதி மாறி இருப்பதைச் சாதகமாக்கிக்கொண்டு, ‘அப்படி ஒரு கடிதமே வரவில்லை’ என அரசுத் தரப்பில் கூறப்பட்டது. இதனால்தான் ‘நீதிமன்றத்தில் தவறான தகவலை தற்போதைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கொடுத்துள்ளார்’ என்று குற்றம்சாட்டுகின்றன எதிர்க்கட்சிகள். இதைவிட அதிர்ச்சி... வருமான வரித்துறை அனுப்பிய கடிதமும் அறிக்கையும் அடங்கிய ஃபைல்கூட தலைமைச் செயலகத்தில் காணாமல் போய்விட்டது என்பதுதான்! ‘வருமான வரித்துறை அலுவலகத்தில் அதன் நகல் இருக்குமே, அதை வாங்கி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாமே. யாரைக் காப்பாற்ற இப்படிப் பொய் சொல்கிறார்கள்?’ என்று ஐ.பி.எஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் கேட்கிறார்கள்.’’

‘‘தலைமைச் செயலாளர் இப்படித் தவறான தகவலை நீதிமன்றத்துக்கு அளிக்க வேண்டிய நிர்பந்தம் என்ன?’’

‘‘டி.ஜி.பி பதவிக்கு டி.கே.ராஜேந்திரனைக் கொண்டு வருவதற்குத்தான். டி.ஜி.பி பதவிக்கான ‘பதவி உயர்வுப் பட்டியல்’ தயாரிக்கும்போது, ‘அந்தப் பதவியில் அமர்த்தப்பட உள்ளவர்கள் மீது விஜிலென்ஸ் விசாரணை நடக்கிறதா, வேறு ஏதேனும் விசாரணை நிலுவையில் இருக்கிறதா?’ என்ற விவரங்களையும்  தெரிவிக்க வேண்டும். அந்தப் பொறுப்பு தலைமைச் செயலாளருடையதுதான். பதவி உயர்வுப் பட்டியலில் உள்ள அதிகாரி மீது துறை ரீதியாகவோ, விஜிலென்ஸ் ரீதியாகவோ விசாரணை ஏதுமில்லை என்று ‘தடையில்லா சான்றிதழ்’ வழங்க வேண்டிய கடமை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு இருக்கிறது. இவ்வளவு விதிமுறைகள் இருந்தும், ‘குட்கா விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய போலீஸ் அதிகாரி பெயரை எப்படி டி.ஜி.பி பதவி உயர்வுக்கான பட்டியலில் தலைமைச் செயலாளர் சேர்த்தார்’ என்பதுதான் முக்கியமான கேள்வி. அதனால்தான், ‘குட்கா லஞ்சப் பணம் குறித்தும், அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள அதிகாரிக்கு டி.ஜி.பி பதவி உயர்வு வழங்கியதில் உள்ள முறைகேடுகள் குறித்தும் உடனடியாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று ஸ்டாலின் சொல்லி இருக்கிறார்.’’

‘‘செந்தில்பாலாஜி மீண்டும் ஆளுங்கட்சி மீது புகார்களை வீசியுள்ளாரே?’’

‘‘தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்ற கோபம் செந்தில்பாலாஜிக்கு இருக்கிறது. அதோடு, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவருக்குக் கொடுக்கும் குடைச்சலும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு போகிறது. செந்தில்பாலாஜியின் தொகுதியில் சில தினங்களுக்கு முன் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் விஜயபாஸ்கர் கலந்துகொண்டார். ஆனால், தொகுதி எம்.எல்.ஏ-வான செந்தில்பாலாஜிக்கு அழைப்பு இல்லை. இதில் உச்சகட்ட கடுப்பான செந்தில்பாலாஜி, டாஸ்மாக் விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளார். கரூர் பகுதியில் மூடப்பட்ட பல டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கு அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் பின்னணியில் இருந்துள்ளார்களாம். ‘அமைச்சர் மீது இருந்த கோபத்தைத்தான் செந்தில்பாலாஜி வெளிக்காட்டியுள்ளார்’ என்கிறார்கள். சட்டசபையிலேயே, ஜி.எஸ்.டி வரி விவகாரத்தில் ஆளுங்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டில் செந்தில்பாலாஜி பேசினார். அப்போதே முதல்வர் தரப்பில் இருந்து அவரைத் தொடர்புகொண்டு, ‘அமைதியாக இருங்கள், எதுவாக இருந்தாலும் பின்னர் பேசிக்கொள்ளலாம்‘ என்று சொல்லியுள்ளார்கள். ‘இரண்டு மாதங்களாக இதையேதான் சொல்கிறீர்கள். ஆனால் ஒன்றும் நடக்கவில்லையே’ என்று தனது ஆதங்கத்தையும் அந்த நபர்களிடமே வெளிப்படுத்தியுள்ளார் செந்தில்பாலாஜி.’’

‘‘ஆளும்கட்சியே மொத்தத்தில் கலகலத்துப் போய்க்கிடக்கிறது. இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் கமல்ஹாசனும் சேர்ந்து கலக்கிக்கொண்டு இருக்கிறாரே?’’

‘‘தமிழக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்த நடிகர் கமல் மீது அமைச்சர்கள் பலரும் பாய... கமலின் அண்ணனான நடிகர் சாருஹாசன் இன்னும் ஒரு படி மேலே போய் கேள்வி எழுப்பினார். உடனடியாக அமைச்சர்களின் இமெயில் முகவரிகளை அரசின் இணையதளத்தில் இருந்து நீக்கினார்கள். உடனே, ‘லஞ்ச ஒழிப்புத்துறைக்குப் புகார்களை அனுப்புங்கள்’ என்றார் கமல். இதுபற்றி அமைச்சர் ஜெயக்குமாரிடம், ‘கமலின் குற்றச்சாட்டுக்குப் பிறகு அரசின் இணையதளத்தில் அமைச்சர்களின் இமெயில் முகவரிகள் இல்லையே?’ என்று பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு அமைச்சர், ‘அப்படியெல்லாம் இல்லை; எல்லா அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்கள்தானே? எல்லா எம்.எல்.ஏ-க்களின் இமெயில் முகவரிகளும் அப்படியேதான் இருக்கின்றன’ என்றார். செய்தியாளர்களும் விடாமல், ‘அமைச்சர்களுக்கு என இருந்த இமெயில் முகவரிகளைக் காணோமே’ என மீண்டும் கேட்க, ‘அரசின் மீது ஏதாவது புகார் இருந்தால் நீதித்துறையிடம் முறையிடலாம்; அதைவிட்டுவிட்டு இமெயில், இன்டர்நெட் எனச் சொல்வதெல்லாம் குழந்தைத்தனமானது’ என்றார். ஆனாலும் கடைசிவரை அமைச்சர்களின் இமெயில் முகவரிகள் அகற்றப்பட்டதைப் பற்றி ஒரு வார்த்தையும் சொல்லவில்லை.’’

‘‘எப்படிச் சொல்வார்?’’

‘‘ரஜினி ரசிகர்கள்தான் திரள்வார்கள் என்று பார்த்தால், கமல் ரசிகர்கள் முந்திக்கொண்டு விட்டார்கள். அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை அவர்கள் ஒவ்வொரு பகுதியிலும் திரட்ட ஆரம்பித்துவிட்டார்கள். ‘இந்தத் தகவல்களை எல்லாம் மொத்தமாகச் சேர்த்து கவர்னரைச் சந்தித்து மனுவாகக் கொடுக்கலாம்’ என்று கமலுக்கு ஆலோசனை சொல்லப்பட்டதாம். ‘அந்தளவுக்கு எல்லாம் இப்போதைக்கு வேண்டாம்‘ என்றாராம் கமல்’’ என்றபடியே கழுகார் பறந்தார்.

அட்டை கிராஃபிக்ஸ்: பிரேம் டாவின்ஸி
படங்கள்: எம்.விஜயகுமார், ஆ.முத்துக்குமார்

மிஸ்டர் கழுகு: கூடாரம் காலி! - பன்னீருக்கு வெந்நீர் ஊற்றும் எடப்பாடி...

அமைச்சர் அறிவித்தார்... அதிகாரிகள் தடுக்கிறார்கள்!

மிழக சட்டசபையில் கடந்த மாதம் 19-ம் தேதி மின்சாரத் துறையின் மானியக்கோரிக்கையில் பேசிய அமைச்சர் தங்கமணி, “விவசாயிகள் மூன்று லட்சம் ரூபாய் கட்டினால் தட்கல் முறையில் மின்சார இணைப்பு வழங்கப்படும்” என்று அறிவித்தார். அறிவிப்பு வெளியாகி நான்கு நாட்கள் கழித்து 24-ம் தேதி மின்சார வாரிய விநியோக இயக்குநர், “24-ம் தேதிக்கு முன் விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே தட்கல் இணைப்பு வழங்கப்படும். மேலும், ஐந்து ஹெச்.பி. முதல் 10 ஹெச்.பி. மோட்டார்களுக்கு மட்டுமே வழங்கப்படும்” என்று அறிவித்தார். பெரும்பாலான விவசாயிகள் 15 ஹெச்.பி மோட்டார் பயன்படுத்திவரும் நிலையில், அதிகாரியின் இந்த அறிவிப்பு விவசாயிகளுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபையில் தி.மு.க-வும் இந்தப் பிரச்னையைக் கிளப்ப, ‘‘15 ஹெச்.பி மோட்டார்களுக்கும் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் அறிவித்தார். ஆனால், இது குறித்து அரசாணை எதுவும் வரவில்லை. இந்நிலையில், ‘‘அமைச்சரின் அறிவிப்பைச் செயல்படுத்த வேண்டாம்’’ என்று அதிகாரிகள் சிலர் சொல்லிவருவது விவசாயிகளுக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.