Published:Updated:

இந்தியக் ‘கூட்டாட்சி’ என்பதான ஒன்றியமும், மாநில சுயாட்சியும் - வீ.எம்.எஸ்.சுபகுணராஜன்

இந்தியக் ‘கூட்டாட்சி’  என்பதான ஒன்றியமும், மாநில சுயாட்சியும் - வீ.எம்.எஸ்.சுபகுணராஜன்
பிரீமியம் ஸ்டோரி
இந்தியக் ‘கூட்டாட்சி’ என்பதான ஒன்றியமும், மாநில சுயாட்சியும் - வீ.எம்.எஸ்.சுபகுணராஜன்

இந்தியக் ‘கூட்டாட்சி’ என்பதான ஒன்றியமும், மாநில சுயாட்சியும் - வீ.எம்.எஸ்.சுபகுணராஜன்

இந்தியக் ‘கூட்டாட்சி’ என்பதான ஒன்றியமும், மாநில சுயாட்சியும் - வீ.எம்.எஸ்.சுபகுணராஜன்

இந்தியக் ‘கூட்டாட்சி’ என்பதான ஒன்றியமும், மாநில சுயாட்சியும் - வீ.எம்.எஸ்.சுபகுணராஜன்

Published:Updated:
இந்தியக் ‘கூட்டாட்சி’  என்பதான ஒன்றியமும், மாநில சுயாட்சியும் - வீ.எம்.எஸ்.சுபகுணராஜன்
பிரீமியம் ஸ்டோரி
இந்தியக் ‘கூட்டாட்சி’ என்பதான ஒன்றியமும், மாநில சுயாட்சியும் - வீ.எம்.எஸ்.சுபகுணராஜன்

ந்தியா ஒரு கூட்டாட்சி நாடா? பதில் இல்லை என்பதுதான் முரணின் துவக்கப்புள்ளி. கூட்டாட்சியின் மாதிரிகளாகக் கருதப்படும் ஐக்கிய அமெரிக்கக் கூட்டமைப்பு, கனடா, ஆஸ்திரேலியா ஆகியவற்றை வைத்துக்கொண்டுதான் இந்திய அரசியலமைப்புச் சட்ட உருவாக்கம் நிகழ்ந்தது. இத்தனைவிதமான அரசியலமைப்புச் சட்டங்களை ஆய்ந்த குழு, இறுதியாகப் பெரும்பாலும், பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் அரசியலமைப்புச் சட்டவடிவான 1935-ல், பிரிட்டிஷ் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட சட்ட வடிவின் அடிப்படைகளைக்கொண்டு தீர்மானமானது என்பதுதான் வரலாற்று முரண். ஆம், பிரிட்டிஷ் இந்தியா என்ற பிரிட்டிஷ் பேரரசின் கீழ் டொமினியன் அந்தஸ்துகொண்ட பிரதேசத்துக்காக உருவாக்கப்பட்ட சட்டம், சுதந்திர இந்தியாவிற்கும் உரியதானதுதான் முரண். ஆனால், அந்த ‘நோக்கமே’ முறியடிக்கப்பட்டு அதன் ‘அடிப்படையான’ கூட்டாட்சி என்பது வார்த்தையாகக்கூட வராமல் ஆனதுதான் உச்சக்கட்ட நகைமுரண். இது எப்படி நடந்தது என்பதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்ட உருவாக்க வரலாறு. 1935-ம் ஆண்டு சைமன் கமிஷன் பரிந்துரைகளின்படி உருவான மேற்படிச் சட்டத்தை அன்றைய காங்கிரஸ் இயக்கம் முற்றிலுமாக நிராகரித்தது. அவர்களின் அடிப்படைக் கோரிக்கையான மாநிலங்களின் சுயாட்சிக் (PROVINCIAL AUTONOMY) கூறுகள் அதில் இல்லை என்பதே காரணம்.  மாநில சுயாட்சியைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புவோர்க்கு ஓர் எளிமையான சூத்திரம், விடுதலைப் போராட்டக் களத்தில் ‘இந்திய அரசு’ என்பதற்கான லட்சணங்களாக எதையெல்லாம் காங்கிரஸ் கட்சி முன்வைத்ததோ, அதுதான் ‘மாநில சுயாட்சி’. ஆட்சி கைமாறியதும் அதே காங்கிரஸ், தான் ‘மாநில உரிமையாகக்’ கேட்டதை மாநிலங்களுக்கு மறுப்பதற்காகவே உருவாக்கியதுதான், இன்றைய அரசியலமைப்புச் சட்டம்.

இந்தியக் ‘கூட்டாட்சி’  என்பதான ஒன்றியமும், மாநில சுயாட்சியும் - வீ.எம்.எஸ்.சுபகுணராஜன்

சுதந்திர இந்தியாவின் முன்வடிவான 1937-ம் ஆண்டு ஆட்சிமுறை உருவானபோதே இந்திய அரசியல் களம் வெகுதீவிரமான நிலைப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியதானது. 1937- லக்னோ மாநாட்டில் அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியும் ‘இந்தியாவில் மாநிலங்களின் கூட்டாட்சியும், குறைந்த அதிகாரம் கொண்ட மத்திய அரசும் வேண்டும்’ என்றுதான் தீர்மானம் நிறைவேற்றியது. 1937-ம் ஆண்டின் தேர்தல் வெற்றி தோல்விகளும், அரசு அமைப்பதில் உருவான காங்கிரஸ், லீக் மோதல்களும், லீக்கைக் கலைத்துவிடும்படி வைக்கப்பட்ட ஆலோசனைகளும் பல்வேறு விளைவுகளுக்குக் காரணமானது. இதற்கிடையே 1937-ம் ஆண்டில் அஹமதாபாத் மாநாட்டில், இந்து மகாசபை வீர் சவர்க்கார், “இந்துக்கள் ஓரினம், இஸ்லாமியர்கள் ஓரினம்” என்ற ‘கண்டுபிடிப்பை’ அறிவித்து, ‘அகண்ட பாரதத்தில்’ இஸ்லாமியர்கள் பெரும்பான்மை இந்துக்களுக்குக் கீழ்ப்படிந்த கூட்டுறவில் (SUBORDINATE CO-OPERATION) வாழலாம் என்ற ‘கனிவான’ ஆலோசனையையும் வழங்கினார். காங்கிரஸ் மற்றும் இந்து மகாசபாவினரின் ‘ராஜதந்திரம்’ அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியதானது.    விவாதங்கள் தொடர்ந்து 1940-ல் ஜின்னா, “இந்தப் பூமியில் எந்தச் சக்தியும் பாகிஸ்தான் உருவாவதைத் தடுக்க முடியாது” என்று அறிவித்தபோது, காங்கிரஸ் கட்சியினர் கேலி பேசினர். ஆனால், 1946-ல் அது நிதர்சனமானது.    

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், ‘கூட்டாட்சி’ (FEDERAL) என்ற வார்த்தை மிகக் கவனமாக ‘விடுப்பட்டதுதான்’ இந்தியக் கூட்டாட்சி குறித்த ஆய்வாளனுக்கான தளம். அது ஒன்றும் இயல்பாகவோ, தவறுதலாகவோ நடந்துவிடவில்லை. பெரும் விவாதங்களுக்குப் பிறகே அந்தச் சொல் விடுபட்டது. அந்தச் சொல்லை நிராகரித்த அரசியல்தான் இன்றளவும் நம்மைப் பீடித்திருக்கும் பெரும் பிணி. அந்தத் தீர்மானத்தை மொழிந்தவர்கள் முன்வைத்த 5,000 வருடப் பாரம்பர்யம்கொண்ட, ‘ஒற்றைக் கலாசார இந்து இந்தியா’ என்ற கருத்தாக்கமே அந்தப் பிணி.அதை மொழிந்தவர்கள் யாரோ ‘இந்து தேசியவாதிகள்’ என்று புரிந்துகொள்வது பெரும் வரலாற்றுப் பிழை. கருத்தாக்கம் வேண்டுமானால் சாவர்க்காரால் முன்னெடுக்கப் பட்டிருக்கலாம். ஆனால், அதனை ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்’ பகுதியாக்கியவர்கள் பண்டிட் நேரு, சர்தார் பட்டேல், ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட ‘மெய்யான’ இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களே. அரசியலமைப்புச் சட்டம் குறித்த எந்த விவாதமும் ‘இந்து இந்தியப்’ பழைமை பற்றிப் பேசத் தவறுவதில்லை, 2010-ம் ஆண்டின் மத்திய மாநில உறவு கமிஷன் அறிக்கை வரை.   

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தியக் ‘கூட்டாட்சி’  என்பதான ஒன்றியமும், மாநில சுயாட்சியும் - வீ.எம்.எஸ்.சுபகுணராஜன்

இங்கிலாந்து அரசின் ‘மந்திரிசபைக் குழு’, (CABINET COMMISSION) ‘ஒன்றுபட்ட இந்தியா’வுக்கான மூன்றடுக்கு அரசு முறை ஒன்றைப் பரிந்துரைத்தது. அதன் அலகுகள், மையத்தில் முற்றிலும் வலுவற்றதான அரசும், பிரதேச அளவில் சற்று வலுவானதாகவும், மாநில அரசுகள் தன்னாட்சி அதிகாரம் கொண்டவையாகவும் இருந்தன. இந்தத் திட்டத்தைத் தயக்கத்தோடு 6, ஜுன், 1946- ல் லீக் ஏற்றது. காங்கிரஸ் காரிய கமிட்டி 25/6/1946-ல் ஒப்புக்கொண்டது. ‘துக்கம் மலிந்து கிடக்கும் இந்தப் பூமியைத் துக்கமும் கஷ்டமும் இன்றி மாற்றுவதற்கான விதை இந்தத் திட்டத்தில் இருப்பதாக’ காந்தியார் கருதினார். அரசியல் நிர்ணய சபை அமைக்க ஜுலை, 1946-ல் உறுப்பினர் தேர்தல் நடத்தப்பட்டது. பெரும்பான்மைத் தொகுதிகளில் காங்கிரஸ் வென்றது. லீக் 73 தொகுதிகளில் வென்றது. அரசியல் நிர்ணய சபை கூடுவதற்கான வேலைகள் தொடங்கின. 10, ஜூலை 1946-ல் பம்பாயில் பத்திரிகையாளர் சந்திப்பில் நேரு, “அரசியல் நிர்ணய சபையில் பங்கெடுக்க மட்டுமே காங்கிரஸ் ஒப்புக்கொண்டிருக்கிறது. தான் சிறந்தது என்று கருதினால், ‘மந்திரி சபை திட்டத்தை’ மாற்றியும் திருத்தியும் அமைக்கக்கூடிய சுதந்திரத்தை காங்கிரஸ் பெற்றிருக்கிறது” என்றார். உடனே ஜின்னா, “தனது பெரும்பான்மையைக்கொண்டு முழு திட்டத்தையும் காங்கிரஸ் மாற்றியமைத்துவிடும். எனவே, நிர்ணய சபையில் பங்கெடுக்கப் போவதில்லை. தனிநாடு கோரிக்கை தொடரும்” என்று அறிவித்துவிட்டார். அதற்குப் பின்னரான காங்கிரஸ் சமாதானங்கள் ஏற்கப்படவில்லை. ‘ஒருங்கிணைந்த இந்தியா’ (UNITED INDIA) என்ற பெருங்கனவு நொறுங்கிச் சிதைந்தது. “வரலாற்றின் போக்கினை மாற்றிய துரதிருஷ்டவசமான நிகழ்வுகளில் ஒன்று இது” என்றார் ஆசாத். நேருவின் சரிதை எழுதிய பிரெச்சர், அந்தப் பத்திரிகையாளர் கூட்டத்தில் நேரு நடந்துகொண்டது ஒரு தவறான/பிழையான செயல்முறை எனப் பதிந்தார். லியனார்டு மோஸ்லி, “இது நேரடியான நாசவேலை” என்றார். ஆம், சுதந்திர இந்தியாவில் இந்துத்துவவாதிகளைக் கட்டுக்குள்வைத்து எத்தனையோ நேர்மறையான காரியங்கள் செய்த நேரு அவர்களின்  ‘ஒற்றை ஆட்சி’ (UNITARY GOVT) நோக்கமும் காஷ்மீர் இணைப்பும் ‘ஆசிய ஜோதி’ கனவும் உருவாக்கிய எதிர்மறை விளைவுகள் பாரதூரமானவைதான்.

இந்தியக் ‘கூட்டாட்சி’  என்பதான ஒன்றியமும், மாநில சுயாட்சியும் - வீ.எம்.எஸ்.சுபகுணராஜன்1946, டிசம்பரில் அரசியல் நிர்ணய சபை கூடியபோது காங்கிரஸ் மட்டுமே இருந்தது. அதுதவிர சமஸ்தானங்களின் நியமன உறுப்பினர்கள் 93 பேர் இருந்தனர். அந்த அவை 1947, மே மாதம் ஒரு சட்ட முன்வடிவை வைத்தது. அதில் ‘கூட்டாட்சி’ என்ற சொல் இருந்தது. ஜூன் மாதம் பாகிஸ்தான் உறுதியாகி, அது வெளியிடப்பட்டபோது ‘கூட்டாட்சி’ (FEDERAL) காணாமல்போய், ‘ஒன்றியம்’ (UNION) ஆகிவிட்டிருந்தது. “ஆம், பாகிஸ்தானுடைய பிறப்பு ஐக்கிய இந்தியா என்ற தத்துவத்தை மட்டுமே அழித்துவிடவில்லை. பிரிவினையைத் தடுப்பதற்கு விலையாகக் கொடுக்கப்பட்ட கூட்டாட்சி முறை என்ற தத்துவத்தையும் அது அழித்து ஒழித்தது” என்றார் ஆட்சிமுறையியல் அறிஞர் கே.ஆர்.பாம்ப்வால். “இந்திய அரசியல் சட்ட அமைப்புக் குறித்த கருத்தாக்கம் ‘நெகிழ்வான கூட்டாட்சி’ (LOOSE FEDERATION) என்ற ஒரு முனையில் இருந்து  ‘சர்வ வல்லமையான அதிகாரம்’ படைத்த மைய அரசு (UNITARY GOVERNMENT) என்ற முனையை நோக்கிச் சென்றுவிட்டது என்கிறார் சந்தானம் அவர்கள். அரசியல் நிர்ணய சபை விவாதத்தின்போது அம்பேத்கர், “ஒன்றியம் என்ற வார்த்தை மிகக் கவனமாக உபயோகிக்கப்பட்டிருக்கிறது” என்றார். “இந்தியாவை, அமெரிக்க, கனடிய கூட்டாட்சிகளோடு ஒப்பிடக் கூடாது. ஏனெனில், அவை ‘சுதந்திர நாடுகளாக’ இருந்து ஒன்றுபட்டவை. ஆனால், இது பலநூறு வருடங்களாக ஒன்றாக இருந்த நாட்டின் ஒன்றியம், இங்கு யாருக்கும் பிரிந்து செல்லும் உரிமை கிடையாது என்பதை உணர்த்தவே ‘ஒன்றியம்’ என பதியப்பட்டது’’ என்றார்.

இந்தியக் ‘கூட்டாட்சி’  என்பதான ஒன்றியமும், மாநில சுயாட்சியும் - வீ.எம்.எஸ்.சுபகுணராஜன்

சுதந்திரத்திற்குப் பிறகு மொழிவாரி மாநிலங்கள் குறித்த மூவர் குழு (நேரு, பட்டேல், ராஜேந்திர பிரசாத்) அறிக்கை, “இந்தியா ஒரு தேசமாவது வரை மொழிவாரிப் பிரதேசங்கள் பொறுத்திருக்க வேண்டும். அங்கு காணப்படும் துணை தேசியக் கூறுகள் அனைத்தும் அடக்கப்பட வேண்டும்” என்றது. அப்படியானால் ‘துணை தேசியங்களாக’ அடையாளப்படுத்தப்படும் ‘உண்மையான தேசியங்களை’ நசுக்கி ‘புதிய இந்திய தேசியத்தை’ உருவாக்க முனைந்தனர் என்பதுதானே மெய். அரசியலமைப்பு ஆய்வறிஞர் ஏ.வி.டைசி அவர்கள் தேசியங்கள் ஒன்றிணைவை, அடையாளமற்று, தனித்தன்மையற்று ‘ஒற்றை’ ஆகிப் போவதற்கான விருப்பாக மாற்றிக்கொள்ளக் கூடாது என்கிறார். “தேசிய ஒருமைப்பாடும், பிரதேசங்களின் சுயாட்சியும், குடிமகனின் ‘விசுவாசத்திற்கு’ போட்டியிடும் கூறுகளாக மாற்றப்படக் கூடாது” என்கிறது கனடிய ராயல் கமிஷன் அறிக்கை. அரசியல் நிர்ணய சபையில் மத்திய அரசிடம் அதிகாரம் குவியக் கூடாது என்றவர்களின் தேச பக்தியே கேள்விக்குள்ளானது. மத்திய, மாநில, பொதுப் பட்டியல் என மூன்று வகை அதிகாரங்கள் உருவாக்கப்பட்டன. இவை போக ‘எஞ்சிய அதிகாரங்கள்’ மைய அரசு வசமானது. ஆனால், மைய அதிகாரத்தின் சிகரமானது ‘நெருக்கடி நிலை அதிகாரம்’. அது இயற்றப்பட்ட நாள் “துக்கத்திற்கும் வெட்கத்திற்கும் உரியது” என்றார் ஹெச்.வி.காமத். 

மைய அரசின் அதிகாரத்தை வலுவாக்கியது அரசியலமைப்புச் சட்டத்திற்கு வெளியே அதனால், உருவாக்கப்பட்டத் திட்டக்குழுவும், நிதிக் குழுவும் ஆகும். சொல்லப்போனால் ஐந்தாண்டுத் திட்டங்கள் மைய அரசின் சர்வாதிகாரக் களமானது. குறிப்பாகப் பொதுத்துறை நிறுவனங்களைத் திட்டமிடுவதும், அது எந்த மாநிலத்தில் அமைக்கப்பட வேண்டுமென்பதும் அதன் அதிகாரமானது. இந்தச் செயல் அரசியல் சார்புகள் சார்ந்து நடத்தப்பட்டது. மாநிலங்களின் வளர்ச்சியில் இந்தக் குழுக்களின் நடவடிக்கைகள் பெரும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தின. மைய அரசிடம் கையேந்தி நிற்கும் நிலைக்கு மாநில அரசுகள் தள்ளப்பட்டன. மைய அரசை வலுவாக்கிய இன்னொரு பிரதான காரணி உச்ச நீதிமன்றமாகும். மத்திய மாநில அரசுகளின் உரிமை தொடர்பான வழக்குகளில் அது பெரும்பாலும் மைய அரசுக்கே அதிகாரத்தைப் பங்கீடு செய்தது. அந்த நீதிமன்றத்தின் நீதிபதிகள் மைய அரசால் தேர்வாவது இதைச் சாதகமாக்கியது. சரியாகச் சொல்வதானால்,சட்டவிதி 356-ல் மாநில அரசுகளை விருப்பப்படிப் பந்தாடிய மைய அரசைக் கட்டுப்படுத்திய ‘பொம்மை தீர்ப்பு’ மற்றும் ‘மண்டல் பரிந்துரை ஏற்பு தீர்ப்பு’ (இதையும் தி.மு.க முன்னாள் மாவட்டச் செயலாளர் ரத்தினவேல் பாண்டியன் உச்ச நீதிமன்ற நீதிபதியாகி வழங்கினார் என்பது அதி முக்கியம்.) தவிர மாநிலங்களுக்குச் சாதகமான தீர்ப்பு ஒன்றுகூட இல்லை எனலாம். அந்த நிலை இன்னும் மோசமாகி இருப்பது இன்றைய யதார்த்தம். ‘எஞ்சிய அதிகாரங்கள்’ எனும் களம்தான் மைய அரசின் தினசரியாக அதிகார விரிவு நிகழும் தளம். பொருளாதார, தொழில்நுட்ப வளர்ச்சிகள் இந்த அதிகார வரம்பிற்குள்ளாக இயங்குகின்றன. குறிப்பாக சூழலியல் போன்ற துறைகள் மாநில அரசுகளை ஊனமாக்கி விட்டதெனவே சொல்லலாம்.

இந்தியக் ‘கூட்டாட்சி’  என்பதான ஒன்றியமும், மாநில சுயாட்சியும் - வீ.எம்.எஸ்.சுபகுணராஜன்

1967-ம் ஆண்டு உருவான அரசியல் கள மாற்றம் மையத்திலும், மாநிலத்திலும் நிலவிய ஒரு கட்சி ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தது. பல மாநிலங்களில் கூட்டணி ஆட்சி உருவானது.தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த முதல் மாநிலக் கட்சியானது தி.மு.க. தனிநாடு கோரிக்கைகளின் ‘அடிப்படைக் காரணிகள் அப்படியே இருக்க’ அதைக் கைவிட நிர்பந்திக்கப் பட்டவர்கள், மாநில சுயாட்சியைக் கையிலெடுத்தனர். அதுவரை எத்தனையோ திருத்தங்களைக் கண்ட அரசியலமைப்புச் சட்டத்தை மறுசீரமைப்புச் செய்யும்படிக்கு, நீதியரசர் ராஜமன்னார் தலைமையில் மத்திய மாநில அரசுகளின் உறவு குறித்து ஆய்வறிக்கை சமர்ப்பிக்க கமிட்டி அமைத்தது தமிழ்நாடு. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பற்றிய எந்த ஆய்வும் எதிர்கொள்ளும் நிகழ்வு அது.  ஒரு மாநில அரசின் முன்னெடுப்பில் உருவான ஒரே கமிஷன். அந்தக் கமிட்டியின் பரிந்துரைகளில் சில 1)கவர்னர் பதவி ஒழிப்பு 2)ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற மத்திய அரசால் நியமிக்கப்படும் அதிகாரிகள், பதவிகள் நிறுத்தப்படுவது 3)“எஞ்சிய அதிகாரங்கள்” முற்றிலுமாக மாநில அரசுகளின் வசம் ஒப்படைத்தல் ஆகியவை இந்திய அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. ஆனால், 1971-ம் ஆண்டின் பெரும் வெற்றிக்குப் பிறகு மத்தியில் அசுரப் பெரும்பான்மை பெற்ற இந்திரா அம்மையார், தனது வழிமுறைகளை மாற்றிக்கொண்டார். 1967-தேர்தலுக்குப்பின் நிர்வாகச் சீர்திருத்தக் குழு (ADMINISTRATIVE REFORMS COMMISSION) அமைத்தவர், அதன் பரிந்துரைகளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. மாறாக ‘மாநில சுயாட்சி’ பேசிய கூட்டணிக் கட்சியான தி.மு.க-வை எம்.ஜி.ஆரைக் கொண்டு பிளவுபடுத்தவே முனைந்தார். ராஜமன்னார் கமிட்டிப் பரிந்துரைகள் மத்திய அரசால் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டன. 1976-ல் நெருக்கடி நிலை உருவாகி அரசியலமைப்புச் சட்டமே ‘சஸ்பெண்ட்’ ஆகும் நிலை உருவானது. நெருக்கடி நிலை விலகியதும் 1977-ல் உருவான முதல் மையக்கூட்டணி அரசால், இனி ‘நெருக்கடி நிலை’ பிரகடனம் செய்ய இயலாத வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. கூட்டணிக் குழப்பத்தில் 1980-ல் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏறிய இந்திரா, மத்திய-மாநில உறவை ஆராய சர்க்காரியா கமிஷன் அமைத்தார். அவரது அகால மரணம் மற்றும் இன்னபிற காரணங்களால் அறிக்கை கடும் தாமதமாகி, 1988-ல் சமர்ப்பிக்கப்பட்டது.

1991-ம் ஆண்டிற்குப் பின்னரான வலுவற்ற நரசிம்மராவ் அரசு, அதிகாரி அமைச்சரான மன்மோகன் சிங்கின் தாராளமயமாக்கல், உரிமம் மீதான மைய அரசின் கட்டுப்பாடுகள் விலக்கம், மாநிலங்களின் வளர்ச்சியில் பெரும்பங்கு ஆற்றியது. மைய அரசின் அசுரப் பிடி விலகி, மாநிலங்கள் தமக்கான நிதி ஆதாரங்களையும் (அந்நிய முதலீடுகள்), தொழில்வளங்களையும் உருவாக்கிக்கொள்ள முடிந்தது. நிதி வருவாய் வளர்ச்சி மையத் திட்டங்களை வளமாக்கியது. மத்திய-மாநில அரசு உறவு தொடர்பான சர்க்காரியா அறிக்கை தூசி தட்டப்பட்டு, ‘பஞ்சாயத்து ராஜ்’ திட்டம் உருவானது. உள்ளாட்சி அமைப்புகளை மாநிலங்களின் பிடியிலிருந்து விலக்கி ‘தன்னாட்சி’ கொண்டவையாக்க முனைந்தது.

இந்தியக் ‘கூட்டாட்சி’  என்பதான ஒன்றியமும், மாநில சுயாட்சியும் - வீ.எம்.எஸ்.சுபகுணராஜன்

‘அகண்ட பாரதம்’ ஆனால், ‘சர்வ அதிகாரமும்கொண்ட ஒற்றை அரசு’ என்ற ‘இந்துத்துவா’ திட்டங்களோடும், அறுதிப் பெரும்பான்மையோடும் மைய அரசைத் தன் அசுரப் பிடியில் வைத்திருக்கும் மோடி என்ற ‘சுயமோகி’ தலைமையிலான ஆட்சி ‘மாநில சுயாட்சி’ எனும் சொல்லே இந்திய அரசியல் களத்தில் இல்லாமல் செய்துவிடும் திட்டத்தில் முனைந்துள்ளது. இதற்கான தளம் பத்து ஆண்டுகள் - மன்மோகன் சிங் தலைமையில் கூட்டணி ஆட்சி நடத்திய யு.பி.ஏ அரசின் காலத்தில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. மைய ஆட்சியில், மாநிலக் கட்சிகளின் (96-ல் தொடங்கித் தொடர்ந்த) மேலோங்கிய இருப்பு, உயர்சாதி, பார்ப்பன அதிகாரிகள் மற்றும் பனியா முதலாளிகளின் குறியானது. அரசியலமைப்புச் சட்டத்தால் ‘தன்னாட்சி’ அதிகாரம் வழங்கப்பட்ட சி.ஏ.ஜி, சி.பி.ஐ போன்றவற்றின் தாக்குதலுக்கு உள்ளாகின மாநிலக் கட்சிகள். ‘வலுவான அரசியல் பின்புலமற்ற’ பிரதமரின் தலைமையை ‘வலதுசாரி சார்பான’ அதிகாரிகளால் எளிதாக மீற முடிந்தது. உச்ச நீதிமன்றமும் தன் பங்களிப்பைச் செய்தது. விளைவு, வலுவான பிரதேச மற்றும் மாநிலக் கட்சிகள் இலக்காகின. விளைவு, வலுவற்ற காங்கிரஸ், நிலைப்பாடுகளை எடுக்கத் தடுமாறும் கம்யூனிஸ்ட்டுகள், ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்குண்டு திணறும் மாநில மற்றும் பிரதேசக் கட்சிகள் என்ற நிலை இன்று.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை, அதன் ‘விளைவு’ பற்றிய எந்த வித அறிக்கையும் அளிக்கவில்லை. ஆனால், எந்தத் தயக்கமுமின்றி அதே ரீதியில் அவசரகதியில், மத்திய-மாநில உறவுகளில் தீவிரமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய சரக்கு மற்றும் சேவை வரியைக் கொண்டுவந்துள்ளது. மாநிலங்களின் ‘சுயேச்சைத்தன்மை’ பெரும் சவாலுக்குள்ளாகி இருக்கிறது. வரி வருவாய் அதிகாரம் பிடுங்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி கவுன்சில் நிர்வாகம், அதில் மாநிலங்களின் பிரதிநிதிகள் மூன்றில் இரண்டு பங்கு என்பதெல்லாம் மாய்மாலம். போதாக்குறைக்கு ‘நிதி அயோக்’ எனும் திட்டக் குழுவுக்கு மாற்றான அமைப்பு, அதன் வரையறைகள் பற்றிய தெளிவின்மை ஆகியவை மாநில உரிமை என்பதற்கான எதிர்வடிவங்களே. மதிப்புக் கூட்டு வரி, நுகர்வு வரி (consumption tax) என்பனவெல்லாம் களத்தில் எந்தவிதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் தெளிவில்லை. ஆனால், சொன்ன தேதியில் அரசுத் தரப்பிலேயே எந்த விதத் தயாரிப்புமின்றி கொண்டுவரப்பட்டிருக்கும் சட்டம், அதன் இயக்கத் தளத்திலும், அதன் நிர்வாகத் தளத்திலும் என்னவிதமான விளைவுகளை ஏற்படுத்தும்?- யாருமே அறியார் என்பதுதான் கொடுமை. தனது வளங்களை, உற்பத்தியை, நிதி ஆதாரங்களை, அதன் முதலீட்டைத் தன்னிச்சையாகச் செயல்படுத்த முடியாத மாநில அரசு முடமாக்கப்பட்ட ஒன்றே.

எதிர்ப்பில்லை என்ற மமதையில் உருவாகும் மோடி அரசின் மாநிலங்களை ஒடுக்கும் திட்டங்களை வலுவற்ற கட்சிகள்  சம்பிரதாயமாக மட்டுமே எதிர்க்கின்றனர். சரியான ஆனால், எதிர்பாராத களத்திலிருந்து எதிர்வினை நிகழ்த்தப்படுகிறது. மோடியின் இந்துத்துவ அரசின் வகுப்புவாரி உரிமை போன்ற சமூகநீதி கொள்கைகளைக் காலாவதியாக்கும் முனைப்பு, ஆட்சி மொழியாக இந்தித் திணிப்பு, பசுவதைத் தடுப்புச் சட்டம், பண மதிப்பிழப்பு ஆகியவற்றுக்கான எதிர்வினைகள் பிரதேசங்களில் கடுமையாக முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக ‘இந்தி பேசாத’ மாநிலங்கள் என்ற தளம் வெகுவாக விரிந்தபடி இருக்கிறது. அதைவிட முன்பொரு நாளில் தமிழ்நாட்டின் ஒற்றைக் குரலாக மட்டுமே இருந்தது, இன்று ஒட்டுமொத்த ‘திராவிடத்தின்’ குரலாகிவிட்டிருக்கிறது. அதற்கான ஆதரவு கேரளத்திலும் வங்காளத்திலும், மகாராஷ்ட்ராவிலும் ஒலிக்கிறது. ஒரு வலதுசாரி மூர்க்கம் உருவாக்கக்கூடிய எதிர்வினை இயல்பாக நிகழ்கிறது.        

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism