Published:Updated:

இந்திரா இருந்திருந்தால் ஈழம் மலர்ந்திருக்கும் - வெடிக்கும் எம்.நடராஜன்!

இந்திரா இருந்திருந்தால் ஈழம் மலர்ந்திருக்கும் - வெடிக்கும் எம்.நடராஜன்!
இந்திரா இருந்திருந்தால் ஈழம் மலர்ந்திருக்கும் - வெடிக்கும் எம்.நடராஜன்!

- குள.சண்முகசுந்தரம்

சென்னை: ''இந்திராகாந்தி உயிரோடு இருந்திருந்தால் திரிகோணமலையை தலைமையிடமாக கொண்டு தனி தமிழ் ஈழம் அமைந்திருக்கும்"  எம்.நடராஜனிடமிருந்து தான் இப்படியொரு அதிரடி ஸ்டேட்மென்ட்.
 

இந்திரா இருந்திருந்தால் ஈழம் மலர்ந்திருக்கும் - வெடிக்கும் எம்.நடராஜன்!

அனைத்துலக தமிழீழ மக்கள் சபையின் சார்பில் ஜெனீவாவில் நடந்த மாநாடு மற்றும் பேரணியில் கலந்து கொண்டு விட்டு தாயகம் திரும்பி இருக்கிறார் எம்.நடராஜன். ஜெனீவா பயணம் குறித்து விகடன் டாட் காமிடம் பேசினார்.

''புலம் பெயர்ந்த தமிழர்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட மாநாடு அது. ஜெனீவாவில் உள்ள ஐநா மன்றத்திற்கு முன்பாக அமைந்துள்ள‌ மண்டபத்தில் கூடிய அந்த மாநாட்டில் இலங்கை, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், நார்வே மொரீசியஸ், அயர்லாந்து, இந்தியா உள்ளிட்ட  பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேயர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். தமிழகத்திலிருந்து நான், தா.பாண்டியன், டாக்டர் கிருஷ்ணசாமி, ம.தி.மு.க. எம்.பி. கணேசமூர்த்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டோம். மாநாட்டின் நிறைவில் பத்தாயிரம் பேர் கலந்து கொண்ட பிரம்மாண்ட பேரணி நடந்தது. ஐந்து மைல் தூரம் கடந்தது அந்தப் பேரணி.
 

இந்திரா இருந்திருந்தால் ஈழம் மலர்ந்திருக்கும் - வெடிக்கும் எம்.நடராஜன்!

இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், அங்கு நடந்த படுகொலைகளை இனப்படு கொலைகளாக அறிவிக்கப்பட வேண்டும்,  இலங்கை தமிழர்களின் எதிர்கால நிரந்தர அமைதிக்கு வழி ஏற்படுத்துதல்  இந்த மூன்று விஷயங்களைப் பற்றித்தான் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

##~~##
அங்கே என்னுடைய கருத்தை எடுத்து வைத்தபோது, 'இன்றைக்கு இலங்கைக்கு எதிராக போர்க்குற்றம் தீர்மானம் கொண்டு வரும் விஷயத்தில் அமெரிக்கா மெனக்கெடுகிறது. ஆனால், 1980களில் இதே அமெரிக்கா இலங்கையின் திரிகோணமலையில் தனது படைத்தளத்தை நிறுவிக் கொண்டு அதன் மூலம் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அச்சுறுத்தல் கொடுக்க முயற்சி செய்தது. இப்போது இருப்பது போல் அப்போது சீனா வலுவான நாடாக இல்லை, ஆனால், ரஷ்யா அன்றைக்கு அமெரிக்காவுக்கு சவாலாக இருந்தது. அமெரிக்கா திரிகோணமலையில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தால் இந்தியாவுக்கு அது மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்று ரஷ்யாவின் உளவுத் துறையான கே.ஜி.பி. இந்தியாவை எச்சரித்தது.
இந்திரா இருந்திருந்தால் ஈழம் மலர்ந்திருக்கும் - வெடிக்கும் எம்.நடராஜன்!


இதையடுத்தே மளமளவென காரியத்தில் இறங்கினார் அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி. ஏற்கெனவே பங்களாதேஷ் பிரிவினை போரின் போது பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வானில் பறக்க தடை விதித்தார் இந்திரா. அதனால் தனது நாட்டின் வான் எல்லையை பயன்படுத்திக் கொள்ள பாகிஸ்தானுக்கு இலங்கை அனுமதியளித்தது. இந்தக் கோபம் இலங்கை மீது இந்திராவுக்கு இருந்தது. ரஷ்ய உளவுத் தகவலை அடுத்து, பங்களாதேஷை பிரித்துக் கொடுத்தது போல் இலங்கையிலிருந்து தனி தமிழ் ஈழத்தை பிரித்துக் கொடுக்க இந்திராவும் முனைப்போடு களத்தில் இறங்கினார்.

அதற்காக சிறீ சபாரத்தினம் தலைமையில் செயல்பட்ட போராளிக் குழுக்களுக்கு டெராடூனில் வைத்து ஆயுதப் பயிற்சிகளை கொடுத்தார். இலங்கையில் இருந்த‌ போராளிகளுக்கும் இந்திய ராணுவத்தின் ஆயுதங்களே சப்ளை செய்யப்பட்டன. ராஜீவ் காந்தி காலத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, போராளிக் குழுக்கள் ஆயுதங்களை ஒப்படைத்தார்கள். அந்த ஆயுதங்களில் இந்திய  முத்திரைகள் இருந்ததே இதற்கு சான்று.
 

இந்திரா இருந்திருந்தால் ஈழம் மலர்ந்திருக்கும் - வெடிக்கும் எம்.நடராஜன்!

ஒரே வாரத்தில் பங்களாதேஷை ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வந்து எப்படி தனி நாடாக பிரித்துக் கொடுத்தாரோ அதேபோல் மூன்றே மூன்று நாட்களில் இலங்கையை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தனி ஈழத்தை பிரித்துக் கொடுக்க திட்டமிட்டு வைத்திருந்தார் இந்திரா. 1984 ஜனவரி 19, 20, 21 இது தான் அந்த மூன்று நாட்கள். ஆனால், அதற்குள்ளாக அவரை சுட்டுக் கொன்றுவிட்டார்கள். இதில் என்ன உள்சதி இருந்ததோ தெரியாது. இந்திராவுக்குப் பிற‌கு வந்த ராஜீவ்காந்தி இலங்கை தமிழர் விவகாரத்தில் நல்ல முடிவுகளை எடுக்க நினைத்தார் ஆனால், அவருக்கு அருகில் இருந்த அதிகாரிகள் அவரை தவறான வழியில் நடத்திச் சென்று விட்டார்கள்.

விடுதலைப்புலிகளுக்கு உதவக் கூடாது என்பது தான் அதிகாரிகள் ராஜீவுக்கு சொன்ன அட்வைஸ். இந்திராவுக்கு வரலாறு தெரிந்திருந்தது. ஆனால், அவருக்கு பின்னால் வந்தவர்களுக்கு வரலாறு தெரிய‌வில்லை. அதனால் தவறான முடிவுகளை எடுத்து  இன்று இனப்படுகொலையில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்கள். 1983-ல் இந்திய பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் இந்திராகாந்தி, 'இலங்கையில் இனப்படுகொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதை இந்தியா வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது' என்று பகிரங்கமாக சொன்னார். ஆனால், இன்றைக்கு இருக்கும் காங்கிரஸ் அதிகார வர்க்கம் இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்று சொல்லவே மறுக்கிற‌து. இந்திய ரத்தம் இனப்படுகொலையை கண்டு துடித்தது. இத்தாலி ரத்தம் இனப்படுக்கொலையை மறைக்கத் துடிக்கிறது. இந்திரா காந்தி இன்றைக்கு உயிரோடு இருந்திருந்தால் தனித் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும். என்னுடைய கருத்துரையில் இதை எல்லாம் விரிவாக எடுத்து வைத்தேன். அத்தனைக்கும் ஆதாரங்களையும் கொடுத்தோம்" என்று சொன்னார் நடராஜன்.
 

இந்திரா இருந்திருந்தால் ஈழம் மலர்ந்திருக்கும் - வெடிக்கும் எம்.நடராஜன்!

'இலங்கை பிரச்னையில் முதலமைச்சர் ஜெயலலிதா,  திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு அதிரடியான முடிவுகளை எடுக்கிறாரே?" என்று அவரைக் கேட்டதற்கு,

''இலங்கை தமிழர்களுக்கு, மத்தியில் இந்திரா எப்படி ஆதரவாக இருந்தாரோ அதேபோல் மாநிலத்தில் புரட்சிச் தலைவர் எம்.ஜி.ஆர். ஆதரவாக இருந்தார். ஜெயலலிதா அம்மையார் அவர்கள் விடுதலைப்புலிகளை விமர்சித்து சில தகவல்களை சொன்னது உண்மைதான். அதை நான் மறுக்கவில்லை. ஆனால், அப்போது அவர் எதிர்க்கட்சி வரிசையில் இருந்ததால் இலங்கையில் நடந்த இனப்படுகொலைகள் பற்றிய உண்மையான விஷயங்கள் அவருக்கு தெரியவில்லை. இப்போது முதலமைச்சராக இருப்பதால் அவருக்கும் அங்கே நடந்திருக்கின்ற உண்மை சம்பவங்கள் தெரிகின்றன. சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையிலேயே, 'இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு பெற்றுத் தருவதற்கான உறுதியான முயற்சிகள் எடுக்கப்படும்'னு தெளிவா சொல்லிருக்காங்க.
 

இந்திரா இருந்திருந்தால் ஈழம் மலர்ந்திருக்கும் - வெடிக்கும் எம்.நடராஜன்!

அதுவுமில்லாமல், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போர் நிறுத்த நாடகம் ஆடி கருணாநிதி காங்கிரஸ் கூட்டணி 27 இடங்களை ஜெயித்துவிட்டது. அடுத்து வந்த சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி கண்டார்கள். இதற்கு காரணம் இலங்கை விவகாரம் தான் என்று தெரிந்து கொண்ட கருணாநிதி, இப்போது டெசோ ஆயுதத்தை கையில் எடுத்து இலங்கை தமிழர்களுக்கு சாதித்தவர் போல் காட்டிக் கொள்ள நினைக்கிறார். அவரது முகத்திரையை கிழிக்க வேண்டிய பொறுப்பு ஜெயலலிதா அம்மையாருக்கு இருக்கு. அதனால் தான் அவர் இலங்கை தமிழர் விவகாரத்தில் அடுத்தடுத்து அதிரடியான முடிவுகளை எடுத்து வருகிறார். அவரது வியூகங்களுக்கு முன்னால் கருணாநிதியில் டெசோ நாடகம் தோற்றுப் போகும்" என்று குரலை உயர்த்தினார்.