Published:Updated:

' அமாவாசை முடியும் வரை...!'  - கலக்கத்தில் கருணாநிதி  உறவுகள்

' அமாவாசை முடியும் வரை...!'  - கலக்கத்தில் கருணாநிதி  உறவுகள்
' அமாவாசை முடியும் வரை...!'  - கலக்கத்தில் கருணாநிதி  உறவுகள்

கிட்னி, கல்லீரல் நோய்த் தொற்றைக் குணப்படுத்தும் சிகிச்சைகளைத் தொடங்கினாலே கடுமையான மூச்சுத் திணறலுக்கு ஆளாகிறார் கருணாநிதி.

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர் மருத்துவர்கள். ' சிறுநீரகம், கல்லீரல் தொடர்பாக சிகிச்சையளித்தபோது, கடுமையான மூச்சுத் திணறலுக்கு ஆளானார் கருணாநிதி. தற்போது செயற்கை சுவாசத்தில் வைக்கப்பட்டிருக்கிறார்' என்கின்றனர் குடும்ப உறவுகள். 

சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் பத்து நாள்களுக்கும் மேலாகச் சிகிச்சை பெற்று வருகிறார் கருணாநிதி. அவரது உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம், இதுவரையில் ஆறு செய்திக் குறிப்புகளை வெளியிட்டிருக்கிறது. நேற்று மாலை காவேரி மருத்துவமனை செயல் இயக்குநர் அரவிந்தன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ' கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. வயது மூப்பின் மூலம் வரும் பிரச்சினைகளை கணக்கிடும்போது, முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டைப் பராமரிப்பதில் சவாலான நிலையே தொடர்கிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, மிகச் சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுமா என்பது 24 மணி நேரத்துக்கு பிறகே தெரியும்' எனக் குறிப்பிட்டிருந்தார். ஒரு வாரகால இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் பின்னடைவு என்ற வார்த்தைகளைக் கேள்விப்பட்டு மருத்துவமனை முன்பு குவியத் தொடங்கினர் தொண்டர்கள். ' எழுந்து வா தலைவா...அறிவாலயம் போகலாம்' என்ற குரல்கள் அதிர வைத்துக் கொண்டிருந்தன. 

அறிவாலயத்தின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். " தற்போது வரையில் கருணாநிதியின் உடல்நிலையில் பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை. கடந்த மூன்று நாள்களாக ஏற்ற இறக்கமான சூழலே நிலவி வருகிறது. மூன்று நாள்களுக்கு முன்பு நள்ளிரவில் ஏற்பட்ட பின்னடைவு, தற்போது வரையில் நீடிக்கிறது. சிறுநீரகத்தின் வழித்தடத்தில் ஏற்பட்ட தொற்று நோயை குணப்படுத்தும் சிகிச்சைகள் தொடர்ந்து கொண்டிருந்தபோது, கல்லீரலையும் அந்தத் தொற்று தாக்கியது. ரத்தத்திலும் கிருமித் தொற்று பரவியதன் விளைவு இது. இதனையடுத்தே, குளோபல் மருத்துமனையின் சிறப்பு மருத்துவர் ரேலா வரவழைக்கப்பட்டார். அப்போதே சிகிச்சை முறைகளை கலவர முகத்துடன் கவனிக்கத் தொடங்கிவிட்டார் ஸ்டாலின். அதற்கேற்ப, கிட்னி, கல்லீரல் நோய்த் தொற்றைக் குணப்படுத்தும் சிகிச்சைகளைத் தொடங்கினாலே கடுமையான மூச்சுத் திணறலுக்கு ஆளாகிறார் கருணாநிதி. இவ்வளவு நாள் இயற்கையாகத்தான் சுவாசித்துக் கொண்டிருந்தார். கடந்த ஓரிரு நாள்களாக செயற்கை சுவாசத்தில் வைக்கப்பட்டிருக்கிறார். இவ்வளவு நாள்களாக, 'சுவாசம் இருக்கிறது' என்ற ஒற்றை ஆறுதலுடன் குடும்பத்தினர் இருந்தனர். இப்போது அதுவும் செயற்கை சுவாசத்துக்குச் சென்றுவிட்டதால் செய்வது அறியாமல் கலங்கிப் போய் உள்ளனர். 

சிகிச்சையின் மூலம், அவரது உடல் துயரப்படுவதைக் குடும்பத்துக்கு மூத்தவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆஸ்பத்திரிக்கு வெளியில் நின்றால் மட்டுமே ஓரளவுக்கு சகஜமாகப் பேசிக் கொள்ள முடிகிறது. மருத்துவமனைக்குள் சென்றுவிட்டால், ஸ்டாலின், கனிமொழி, செல்வி, அழகிரி என அனைவருமே ஒருவித இறுக்கமான முகத்துடனேயே தென்படுகின்றனர். யாராவது முக்கியமானவர்கள் வந்தாலும்கூட, சிறு தலையாட்டலோடு நின்றுவிடுகின்றனர். வேறு எதையும் பேசிக் கொள்வதில்லை. ஏதேனும் தேவை என்றால், துறைமுகம் காஜா, பூச்சி முருகன் உள்பட அங்கே தென்படும் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்துகிறார் ஸ்டாலின். நேற்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வந்தபோது மட்டும், அவர் வந்துவிட்டதாகச் சத்தமாகச் சொன்னார்கள். இதைக் கேட்டு டி.ஆர்.பாலுவும் ராசாவும் வரவேற்பதற்காக எழுந்து சென்றார்கள். அவர்களும் கட்கரியிடம் வணக்கம் வைத்ததோடு சரி. அங்கிருந்து நேராகச் சென்று செயல் தலைவரிடம் நலம் விசாரித்தார் கட்கரி. பின்னர் கட்கரியை வழியனுப்ப வந்தார் கனிமொழி. அப்போது கண்கள் கலங்கியபடியேதான் அவர் நின்றிருந்தார். 

கருணாநிதி மீண்டும் நலம் பெற வேண்டும் என தொண்டர்களும் குடும்ப உறுப்பினர்களும் பிரார்த்தனை செய்கின்றனர். நேற்று குடும்பத்துக்கு மூத்தவர் ஒருவர் பேசும்போது, ' ஆடி அமாவாசை தாண்டினால்தான் நிலைமை சீராகும். அமாவாசை முடியும் வரையில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதுவரையில் ஏற்ற இறக்கமான சூழலைத் தவிர்க்க முடியாது' என விரக்தியோடு பேசினார். மருத்துவமனை வளாகத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அழகிரி, ' தலைவர் நலமாக இருக்கிறார்' என்றவர், ஆதரவாளர்களிடம் பேசும்போது, ' மிக மோசமான நிலையில் இருக்கிறார் தலைவர்' என தழுதழுத்தபடியே பேசியிருக்கிறார். நேற்று இரவு 9.15 மணிக்கு ஸ்டாலின் கிளம்ப, செல்வியும் அழகிரியும் 10.30 மணிக்குக் கிளம்பிவிட்டனர். இரவு முழுக்க கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருக்கும் அறைக்குப் பக்கத்திலேயே இருந்தார் கனிமொழி. காலை 9 மணியளவில் வழக்கம்போல குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனைக்குள் குவியத் தொடங்கிவிட்டனர். கருணாநிதியின் உடல்நிலையைக் கவலையோடு கவனித்து வருகின்றனர்" என்றார் அமைதியாக. 

நெஞ்சுக்கு நீதி - இரண்டாம் பாகத்தின் முன்னுரையில், ' வாழ்க்கையை ஒரு போராட்டம் என வர்ணிப்போர் உளர். எனக்கோ போராட்டமே வாழ்க்கையாகிவிட்டது' எனக் குறிப்பிட்டிருப்பார் கருணாநிதி. மருத்துவமனை சிகிச்சையிலும் இந்த வார்த்தைகள் எதிரொலிக்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு