Published:Updated:

``பழனிசாமியா.. பந்தாசாமியா?" `விளம்பர முதல்வருக்கு' எதிராகக் குவியும் கண்டனங்கள்

"தனியார் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள இந்த அறிக்கையின் முழு விவரங்களையும் வெளியிடாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட சில விவரங்களை மட்டும் வெளியிட்டு இந்த அரசு எல்லாக் குற்றங்களிலிருந்தும் தப்பிக்கப் பார்க்கிறது."

``பழனிசாமியா.. பந்தாசாமியா?" `விளம்பர முதல்வருக்கு' எதிராகக் குவியும் கண்டனங்கள்
``பழனிசாமியா.. பந்தாசாமியா?" `விளம்பர முதல்வருக்கு' எதிராகக் குவியும் கண்டனங்கள்

பெங்களூருவில் உள்ள `பப்ளிக் அஃபையர்ஸ் சென்டர்' என்ற தனியார் அமைப்பு இந்தியாவில் உள்ள மாநிலங்களில், துறை வாரியாக ஆய்வு செய்து அந்தந்த மாநிலங்களின் தரநிலையை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகம் எந்தெந்தத் துறைகளில் சிறப்பாக உள்ளது என்றும், மற்ற மாநிலங்களில் உள்ள துறைகளின் தரம் குறித்தும் புள்ளிவிவரங்களை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. 

அதில், சமூக மூலதனம், கடுங்குற்றங்கள் குறைப்பு, வன்கொடுமைத் தடுப்பு, காவல்துறையின் திறன் மிகு செயல்பாடு, குழந்தைகள் நலன் காக்கும் ஆளுமைத் திறன் மற்றும் கட்டமைப்பு ஆகியவற்றில் தமிழகம் முதல் இடம் வகிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், கல்வி வசதிகள், நீதி வழங்கல், வனப்பரப்பு, புதுப்பிக்கத் தக்க எரிசக்தி, கழிவு மேலாண்மை, நிலையான வேளாண்மை, நீர் ஆதார மேலாண்மை, சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் பாதுகாப்பு, மாசுக்கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் விதி மீறல்களைக் கட்டுப்படுத்துதல் போன்றவற்றில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த விளம்பரம் குறித்து சமூக ஆர்வலர்கள் பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

இதுகுறித்துப் பேசிய சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் செந்தில் ஆறுமுகம்,  

``நாளிதழ்களில் நேற்று வெளியான தமிழக அரசின் விளம்பரத்தைப் பார்த்தபோது, ஒரு தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வை வைத்து இப்படியான பொய்யான விளம்பரத்தைக் கொடுக்க தமிழக அரசால் எப்படி முடிகிறது என்ற ஆதங்கம்தான் ஏற்படுகிறது. கடும் குற்றங்கள் குறைப்பு, வன்கொடுமைத் தடுப்பு போன்றவற்றில், தமிழகம் முதல் இடம் பெற்றிருப்பதாகக் கூறுகிறது அந்த விளம்பரம். சிலைக் கடத்தல் வழக்கையும், அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கையும் மறந்துவிட்டு இப்படியான வெட்டிப் பந்தா விளம்பரத்தைக் கொஞ்சம்கூட கூச்சம் இல்லாமல் எப்படித் தரமுடிகிறது எனத் தெரியவில்லை. 

இந்த ஆய்வறிக்கையை முழுமையாகப் பார்த்தால் கடன், சொந்த வரி வருவாய், மூலதனச் செலவுகள் போன்றவற்றை உள்ளடக்கிய நிதி மேலாண்மையில் தமிழகம் 18 வது இடத்தில் உள்ளது. தகவல் ஆணையம், லோக் ஆயுக்தா, ஈ-கவர்னென்ஸ், லஞ்ச ஒழிப்புத்துறை செயல்பாடு ஆகிய உள்ளாட்சிகளுக்கு அதிகாரங்களைப் பரவலாக்கும் முயற்சி போன்ற `வெளிப்படையான, பொறுப்புள்ள அரசு நிர்வாகத்தில்', 17 வது இடம் பிடித்துள்ளது. 

ஒரு சிறப்பான அரசாங்கத்துக்கு மிகவும் தேவையானது. வெளிப்படையான நிர்வாகம். அதில் தமிழக அரசு 17 வது இடத்தில் இருக்கிறது.

இதுதான் வளர்ச்சியா? மேலும் சிறு-குறு தொழில் வளர்ச்சியில் 12 வது இடத்தையும், சமூக நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் 9 வது இடத்தையும் தமிழக அரசு பெற்றுள்ளது. இவற்றைப் பார்க்கும்போது தமிழகம் மோசமான நிலையில் உள்ளது என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. 

தங்களுக்குச் சாதகமான ஓரிரு விஷயங்களை மட்டும் குறிப்பிட்டுவிட்டு `தமிழகம் இந்தியாவிலேயே முதல் இரண்டு இடங்களில் உள்ளது' என்று தமிழக அரசு விளம்பரம் வெளியிட்டிருப்பது இந்த அரசாங்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை உயிரோடு புதைக்கும் செயல். இன்னும் வெளிப்படையாகச்  சொன்னால் தனியார் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள இந்த அறிக்கையின் முழு விவரங்களையும் வெளியிடாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட சில விவரங்களை மட்டும் வெளியிட்டு இந்த அரசு எல்லாக் குற்றங்களிலிருந்தும் தப்பிக்கப் பார்க்கிறது. தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில், தொடங்கிய விளம்பர மோகம், நிறைவேற்றாத திட்டங்கள் வரையிலாக தனது ஆசைகளை எல்லாம் விளம்பரமாக வெளியிட்டுள்ளார்" என்றார் கோபமாக. 

இதுகுறித்துப் பேசிய விவசாயிகள் சங்கப் பிரதிநிதி அறச்சலூர் செல்வம், ``இதில் வேடிக்கையானது என்னவென்றால், நிலையான  வேளாண்மையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறுவை, சம்பா, தாளடி என முப்போகமும் பொய்த்துப் போயிருப்பதுதான் நிலையான வேளாண்மையா? குறித்த நேரத்தில், கர்நாடகாவிடமிருந்து தண்ணீரைப் பெற்றுத் தராமலிருந்து விவசாயிகளைக் கொலை செய்துள்ளது இந்த அரசு. அப்படி இருக்கும்போது இப்படி ஒரு விளம்பரம். பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான  விவசாயிகளின் வீடுகளுக்கு இந்த விளம்பரத்தை அனுப்பி வைத்து அவர்களுடைய வரவேற்பையும் அரசாங்கம் பெற்றிருக்கும் என்றால், உண்மையிலேயே சிறப்பான நிர்வாகத்துக்கு எடுத்துக்காட்டு என ஏற்கிறோம்" என்றார்.