Published:Updated:

போராடும் தமிழ்நாடு... அடக்கும் அரசு... அத்துமீறும் போலீஸ்!

போராடும் தமிழ்நாடு... அடக்கும் அரசு... அத்துமீறும் போலீஸ்!
பிரீமியம் ஸ்டோரி
போராடும் தமிழ்நாடு... அடக்கும் அரசு... அத்துமீறும் போலீஸ்!

ப.திருமாவேலன் - படங்கள்: ஆ.முத்துக்குமார், தே.தீக் ஷித்

போராடும் தமிழ்நாடு... அடக்கும் அரசு... அத்துமீறும் போலீஸ்!

ப.திருமாவேலன் - படங்கள்: ஆ.முத்துக்குமார், தே.தீக் ஷித்

Published:Updated:
போராடும் தமிழ்நாடு... அடக்கும் அரசு... அத்துமீறும் போலீஸ்!
பிரீமியம் ஸ்டோரி
போராடும் தமிழ்நாடு... அடக்கும் அரசு... அத்துமீறும் போலீஸ்!

`நீயே அயிரை மீன்... உனக்கு ஏன் விலாங்கு மீன் சேட்டை?’ என்று முத்தமிழ் வித்தகரும், முன்னாள் அமைச்சருமான கா.காளிமுத்து அடிக்கடி சொல்வார். நரேந்திரமோடி பெயரைக் கேட்டால் நடுக்கமும், அமித்ஷா பேரைச் சொன்னால் அலறலும் ஏற்படும் எடப்பாடி பழனிசாமித் தலைமையிலான தமிழக அரசாங்கம், தனது காவல் துறையை ஏவல் துறையாக மாற்றி ஆடும் ஆட்டத்தைப் பார்த்தால் அதிகப்படியான அதிகாரம் பொருந்தியவர்கள் கூட இப்படிச் செய்யத் தயங்குவார்கள். தனது நாற்காலியைக் காப்பாற்றத் துடிக்கும் எடப்பாடியின் இதயம் அடுத்ததாகக் காவல்துறையைக் காதலிக்கிறது. தன்னை ‘வேட்டி கட்டிய ஜெயலலிதா’வாகவே நினைத்துக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார் எடப்பாடி. அவர் செல்லும் சாலைகள் தோறும் கொளுத்தும் வெயிலில் காக்கிச் சீருடைப் பணியாளர்கள் நிறுத்தி வைக்கப்படுவதைப் பார்த்தால், தன்னை அவர் எட்டு ராஜ்யத்தின் மன்னராகவே நினைத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது.

எடப்பாடி பழனிசாமியைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். அதிகம் வாய் பேசாதவர். பேசி மாட்டிக் கொள்ளக் கூடாது என்று நினைப்பவர். ‘நாக்குதான் ஒரு மனிதனின் எதிரி. அதை அதிகம் பயன்படுத்தக் கூடாது’ என்ற பொன்மொழியை பொன்மனச் செம்மல் நூற்றாண்டு விழாவில் உதிர்த்தவர். அப்படிப்பட்டவர் அடக்குமுறை என்றால், எவ்வளவு கிளர்ந்து எழுவார் என்பதை வளர்மதி விவகாரத்தில் பார்த்தோம்.

போராடும் தமிழ்நாடு... அடக்கும் அரசு... அத்துமீறும் போலீஸ்!

வளர்மதி மணல் கடத்தல்காரப் பெண் அல்ல. அப்படி இருந்திருந்தால் கமிஷன் கொடுத்து வெளியே வந்திருப்பார். இயற்கைப் பாதுகாப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர். பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தைச் சேர்ந்தவர். விவசாய நிலங்களைப் பறிப்பது மட்டுமல்லாமல் மக்களின் வாழ்க்கைக்கும் அச்சுறுத்தலாக அமையும் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்தும்படி வலியுறுத்தி துண்டுக் காகிதங்கள் கொடுத்தார் என்று கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார். குண்டு வைக்கவில்லை. துண்டுப் பிரசுரம்தான் கொடுத்தார். ஒன்றுக்கு மேற்பட்ட திருட்டு வழக்குகள், தொடர் கொள்ளைகள், தொடர் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவர்மீது பாயும் குண்டர் சட்டம், ஒரு கல்லூரி மாணவி மீது பாய்ந்துள்ளது. கேட்டால், ‘இவர் தொடர்ந்து போராட்டங்களில் பங்கெடுத்து வருபவர்’ என்று சட்டமன்றத்தில் விளக்கம் சொல்கிறார் முதலமைச்சர். மக்கள் பிரச்னைக்காகத் தொடர்ந்து போராடுவது தவறா? மத்திய, மாநில அரசாங்கத்தை ஒருவர் விமர்சிக்கவே கூடாதா? இவர்கள் அப்பழுக்கற்ற ஆன்ம சக்திகளா?

‘ஜனநாயகம் என்ற பெயரால் வெளியே போராட்டம் நடத்திக்கொண்டு இருந்தால் மாநில சட்டம் ஒழுங்கை எப்படிப் பேணிப் பாதுகாக்க முடியும்?’ என்று கேட்கிறார் முதலமைச்சர். இந்த நாட்டின் சட்டம் ஒழுங்கை துண்டுப் பிரசுரம் கொடுப்பதால் வளர்மதிகள் கெடுத்துவிட முடியுமா என்ன? சாதியின் பேரால் நடக்கும் வன்முறை வெறியாட்டங்கள், மதத்தின் பேரைச் சொல்லி நிகழ்த்தப்படும் வன்மத் தாண்டவங்களை விடவா வளர்மதிகளின் செய்கை ஆபத்தானது? இந்தச் சாதி மதப் பேயாளர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது உண்டா? பாயாது. ஏனென்றால் இவர்களிடம், இவர்கள் சாதியிடம், மதத்திடம் ஓட்டு இருக்கிறது. அது வேண்டும்.  இவர்கள் ஆட்சிக்கு எதிராகவே திரும்புவார்கள். அதனால்தான் பொதுப் பிரச்னைக்காகச் சாலை மறியல் செய்பவர்கள், டாஸ்மாக் கடையை எதிர்ப்பவர்கள், குடங்களோடு குடிக்கத் தண்ணீர் கேட்டு வீதிக்கு வருபவர்கள்மீது வீரத்தைக் காட்டுகிறது காவல்துறை; திருப்பி அடிக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில்!

மூன்றரை லட்சம் தமிழர்களைக் கொத்துக் குண்டுகள் மூலமாகவும், வெள்ளை பாஸ்பரஸ் வீசியும் கொன்று குவித்த சிங்கள ராணுவத்தின் செயலைக் கைகட்டி வேடிக்கை பார்த்த பாவத்தைத் துடைக்க ஆண்டுதோறும் தமிழ்நாட்டுத் தமிழன் செய்யும் ஒரே பரிகாரம் மே-17 அன்று சென்னை மெரினாவில் மெழுகுவத்தி ஏற்றுவதுதான். அதைக்கூடச் செய்யவிடாமல் தடுத்த காவல்துறை, மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியையும் தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோரையும் குண்டர் சட்டத்தில் அடைத்துள்ளது. முன்பெல்லாம் தேசப் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்வார்கள். இப்போது தேசம் பாதுகாக்கப்பட்டு விட்டதால், குண்டர் சட்டம் பாய்ச்சுகிறார்கள். ஈழம், காவிரி, நெடுவாசல்... எனத் தமிழர் உரிமைப் போராட்டங்களுக்குத் தொடர்ந்து குரல் கொடுத்ததால், குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

போராடும் தமிழ்நாடு... அடக்கும் அரசு... அத்துமீறும் போலீஸ்!

பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் படம் போட்ட சுவரொட்டிகள் காவல்துறையினரால் கிழித்தெறியப்படுகிறது. அதை ஒட்டியவரை அடித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இவையெல்லாம் பேசக் கூடாது என்றால் எவையெல்லாம் பேசப்படலாம்? தமிழ் ஈழத்தை ஆதரித்தும், போர்க் குற்ற விசாரணையை வலியுறுத்தியும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டவர் ஜெயலலிதா. அம்மா ஆட்சி நடத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் எடப்பாடி அரசு, மெழுகுவத்தியைப் பார்த்துப் பயப்படுகிறது. பயம், மெழுகுவத்தியைப் பார்த்து அல்ல, மத்திய அரசை ஆளும் பி.ஜே.பி-யைப் பார்த்து. இந்தப் போராட்டங்கள் எல்லாம் நேரடியாகவே மத்திய அரசுக்கு எதிரானவை. அவர்கள் கோபப்பட்டு விட்டால் என்னாவது? அந்தப் பயத்தில்தான் அடக்குமுறைகள் நடத்தப்படுகின்றன.

இந்தியாவில் நடக்கும் போராட்டங்களில் 25 சதவிகிதப் போராட்டங்கள் தமிழ்நாட்டில் நடக்கின்றன என்று மத்திய அரசின் புள்ளிவிவரம் சொல்கிறது. இவை அரசியல் கட்சிகளின் போராட்டங்கள் அல்ல. தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற பயத்தில் மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள். இவை வாரக் கணக்கில் நடக்கின்றன. இந்த இடத்துக்கெல்லாம் முதலமைச்சரோ, அமைச்சர்களோ, அரசு அதிகாரிகளோ சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்களா? சமாதானம் செய்துள்ளார்களா? எதற்காகப் போராடுகிறீர்கள் என்று கேட்டுள்ளார்களா? இதைவிடப் பெரிய வேலை ஏதாவது இவர்களுக்கு இருக்கிறதா? இது எதையுமே செய்யாமல் சாலை மறியல் செய்பவர்களையும், துண்டுப்பிரசுரம் கொடுப்பவர்களையும் கைது செய்வோம் என்றால் எத்தனை லட்சம் பேரைக் கைது செய்வீர்கள்? தமிழ்நாட்டையே திறந்தவெளிச் சிறைச்சாலையாக அறிவித்தால்தான் இது சாத்தியம்?

இப்படி லத்தி ராஜ்யம் நடத்தும் அளவுக்கு பரிசுத்தமானதா இந்த அரசாங்கம்? ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் முறைகேட்டில் ஈடுபட்டார் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்தால் குற்றம் சாட்டப்பட்டவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியின் புகாரின் பேரில் அபிராமபுரம் காவல் நிலையம் எஃப்.ஐ.ஆர். போட்டுள்ளது. 89 கோடி ரூபாய் பணம் பங்கு பிரிக்கப்பட்டதாகக் கிடைத்த ஆவணத்தின் அடிப்படையில்தான் ஆர்.கே. நகர் தேர்தலே நிறுத்தப்பட்டது. இதில் முதலமைச்சரோடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, மின்துறை அமைச்சர் தங்கமணி, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரின் பெயர்களும் இருக்கின்றன. ஆர்.கே.நகர் வேட்பாளரும் அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளருமான டி.டி.வி. தினகரனும் அந்தப் பட்டியலில் இருக்கிறார். தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கே லஞ்சம் தர முயன்ற வழக்கில் கைதாகி, டெல்லி சிறையில் இருந்துவிட்டுப் பிணையில் வெளியில் வந்துள்ளார் தினகரன். இக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா, நான்காண்டு சிறைத் தண்டனை பெற்றவராகப் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார். சிறையையே மினி போயஸ் கார்டனாக மாற்ற முயற்சிக்க  இரண்டு கோடி லஞ்சம் கொடுத்த விவகாரம் அம்பலமாகி இந்தியா முழுக்க நாறிக் கொண்டிருக்கிறது.

``முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பெயரை எஃப்.ஐ.ஆரில் ஏன் சேர்க்கவில்லை?” என்று வைரக்கண்ணன் வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்யநாராயணன், சுந்தர் அமர்வுக் கேள்வி எழுப்பியதைவிட கேவலம் வேண்டுமா? மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் பொறுப்பு யார் கையில் இருக்கிறது பாருங்கள்!

போராடும் தமிழ்நாடு... அடக்கும் அரசு... அத்துமீறும் போலீஸ்!

மெரினாவுக்கு காற்று வாங்க வருபவர்களையும், காதல் பண்ண வருபவர்களையும் உள்ளே விடாமல்,  ‘போராட வந்தார்களா?’ எனக் காவல் துறையினர் குடைந்துகொண்டிருக்கும்போது டி.ஜி.பி.அலுவலகத்தையே ‘குட்கா குடோன்’ என்று பெயர்ப்பலகை மாட்டிவிட்டான் மதுரை இளைஞன் செந்தில் முருகன்.  தடை செய்யப்பட்ட குட்காவைத் தைரியமாக விற்கச் சென்னைக் காவல்துறை ஆணையர்கள், உதவி ஆணையர் மற்றும் அமைச்சர் உள்பட அரசு முத்திரை பதித்த வாகனத்தில் செல்லும் மனிதருக்கு, மாதம் தோறும் மாமூல் வெட்டியதை மாதவராவ் என்ற வியாபாரியின் டைரியில் எழுதியிருந்தது மூலமாகத் தெரிந்துகொண்டது வருமான வரித்துறை. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு தாக்கீது வந்துள்ளது. மதுரை உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் தமிழகக் காவல்துறையின் இன்றைய தலைவர், அன்றைய சென்னைக் காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன் தலை உருள்கிறது. இப்படி ஒரு சிக்கல் இருக்கும் சூழ்நிலையில்தான் அவருக்கு இரண்டு ஆண்டு பணி நீட்டிப்புத் தரப்பட்டு டி.ஜி.பி-யாகத் தொடர வைக்கப்பட்டுள்ளார். அதனால்தான் காக்கி வெள்ளை மாளிகை, ‘குட்கா குடோன்’ எனக் கிண்டலடிக்கப்படுகிறது.

வருமான வரித்துறை, தமிழக அரசுக்கு ஒரு கடிதம் அனுப்புகிறது. ‘ஒரு குற்றவாளியிடம் பறிக்கப்பட்ட ஆவணத்தில் அமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பெயர் இருக்கிறது. அவர்கள்மீது நடவடிக்கை எடுங்கள்’ என்பதுதான் அந்தக் கடிதத்தின் உத்தரவு. அதன்மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஏன் என்று கேட்டால், ‘அப்படி ஒரு கடிதமே வரவில்லை’ என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சொல்கிறார். தலைமைச் செயலகத்துக்குள் புகுந்து ‘யாரோ’ திருடிவிட்டார்கள். யாரால் திருட முடியும்?  திருமுருகன் காந்தியா? ஒருவேளை வளர்மதி திருடி இருப்பாரோ? இவ்வளவும் முடிந்தபிறகு சென்னையில் 135 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் வேட்டை ஒன்று தொடங்கி உள்ளது. எதற்காகத் தெரியுமா? குட்கா மற்றும் பான் மசாலா வேட்டையாம். இந்தக் கள்ளமார்க்கெட் பற்றி காவல்துறை கட்டுப்பாட்டு அறை 100-க்கு தொடர்புகொண்டு சொல்லலாமாம். குதிரையை அவிழ்த்துவிட்டு லாடத்தைப் பூட்டுவது என்று இதற்குப் பெயர். மாட்டிக்கொண்டதும் தனிப்படை வேட்டைகள். இதுவும் வசூலுக்கு மட்டுமே வழிவகுக்கும்.

தடை செய்யப்பட்ட பொருள்கள் அல்ல, அங்கீகரிக்கப்பட்ட புகையிலைப் பொருள்களின் விற்பனையாளர்களிடமே, ‘நீ குட்கா விற்கிறாய்’ என்று மிரட்டிப் பணம் பறிக்கும் அதிகாரிகளை டி.ஜி.பி-க்குத் தெரியுமா? முதலமைச்சர் அறிவாரா? இந்த மிரட்டலும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பில்தான் வரும்.

சும்மா சும்மா ‘அம்மா’ என்பதால் இது அம்மா அரசு ஆகிவிட முடியாது. இது போலீஸ் ராஜ்ஜியம் என்பதைத்தான் எடப்பாடி ஒவ்வொரு நாளும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை தலைநகர் பக்கமே வரமுடியாமல் விரட்டியடிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகள் இரண்டு பேர் இன்று தலைநகரத்திலேயே கோலோச்ச முடியுமானால் இது ஜெயலலிதா அரசாக எப்படி இருக்க முடியும்? இது போலீஸ்களுக்காக போலீஸ்காரர்களால் நடத்தப்படும்...!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism