Published:Updated:

கருணாநிதிக்கு மெரினாவில் இடம்... வெளிச்சத்துக்கு வந்த கடற்கரை மண்டல பஞ்சாயத்துகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கருணாநிதிக்கு மெரினாவில் இடம்... வெளிச்சத்துக்கு வந்த கடற்கரை மண்டல பஞ்சாயத்துகள்!
கருணாநிதிக்கு மெரினாவில் இடம்... வெளிச்சத்துக்கு வந்த கடற்கரை மண்டல பஞ்சாயத்துகள்!

மெரினாவில் இடம் தொடர்பான சர்ச்சை நீடிக்கிறது. இதை எதிர்த்து தி.மு.க மனுத்தாக்கல் செய்த நிலையில், அந்த மனு மீதான விசாரணை தற்போது நடைபெற்றுவருகிறது.

டந்த ஒருவார காலமாக, கருணாநிதியின் உடல்நிலையில் கடும் பின்னடைவு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில், நேற்று மாலை 6.10 மணிக்கு கருணாநிதி காலமானார். அதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது முதல் தமிழகம் முழுவதும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. கருணாநிதியின் உடல், மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழக மக்களும், தி.மு.க-வினரும் நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால், 'மெரினாவில் இடம் கிடையாது; அதற்குப் பதில் கிண்டி காந்தி மண்டபம் வளாகத்தில் நிலம் கொடுக்கப்படும்' என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது, தி.மு.க தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி, மு.க.அழகிரி என கூட்டாகச் சென்று தமிழக முதல்வர் இல்லத்தில் நடத்திய பேச்சுவார்த்தையும் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால், அதன் பின்னரும் மெரினாவில் இடம் தொடர்பான சர்ச்சை நீடிக்கிறது. இதை எதிர்த்து தி.மு.க மனுதாக்கல் செய்த நிலையில், அந்த மனு மீதான விசாரணை தற்போது நடைபெற்றுவருகிறது.

கருணாநிதி தனது உடல்நிலை குன்றிய ஆரம்ப காலத்திலேயே, 'நான் மரணமடைந்தால், அண்ணா சமாதிக்கு அருகில் புதைக்கப்பட வேண்டும்' என தனது நெருங்கிய வட்டாரத்தில் கருணாநிதி சொல்லியிருக்கிறார். சென்னை மெரினாவில் அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. அதுபோல அண்ணாவுக்கு அருகில் கருணாநிதியின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது தி.மு.க தரப்பு கோரிக்கையாக இருந்தது. கடந்த ஒரு வாரமாகவே இதில் சிக்கல் நீடித்திருந்தது. அரசு தரப்பிலிருந்து உறுதியான எந்தவொரு பதிலும் அளிக்கப்படவில்லை. நேற்றைய முன்தினம் (06-08-2018) கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க வந்த குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த்திடம், தி.மு.க தரப்பு இதை வலியுறுத்தியது. ஆனாலும், சரியான பதிலை அவர் அளிக்கவில்லை. இருப்பினும், மெரினாவில் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய முடிவெடுப்பது என்பது தமிழக அரசின் கையில்தான் இருக்கிறது. ஏனென்றால், கடற்கரையில் Phase - 1 தான் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. ஆனால், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் சமாதிகள் கடற்கரையின் Phase - 2-வில் உள்ளன. இந்த இடம் முழுக்க முழுக்க தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடியது. இதைத்தான் மத்திய அரசுத் தரப்பும் தி.மு.க-விடம் தெரிவித்திருந்தது. 

இந்த நிலையில், நேற்று மாலை ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன் ஆகியோர் ஒரு குழுவாகச் சென்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து கடிதம் கொடுத்தார்கள். ஆனால், 'பார்க்கலாம்' என்ற பதிலையே முதல்வர் பழனிசாமி சொல்லி அனுப்பியிருக்கிறார். ஆனால், கருணாநிதி மரணமடைந்த அறிவிப்பு வந்ததையொட்டி, தமிழக அரசு அவரின் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய அனுமதி கொடுக்க முடியாது என்றும், 'அதற்குப் பதிலாக கிண்டி காந்தி மணிமண்டபம் அருகில் இரண்டு ஏக்கர் இடம் ஒதுக்கப்படும். அங்கு கருணாநிதியின் உடலை அடக்கம் செய்யுங்கள்' என்றும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனால், தி.மு.க வழக்கறிஞர் அணி சார்பில் ஆர்.எஸ் பாரதி மனுதாக்கல் செய்தார். 

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் மற்றும் சுந்தர் அமர்வு முன்னிலையில், இரவு 11.40 மணிக்கு விசாரணையைத் தொடங்கியது. தி.மு.க தரப்பு வழக்கறிஞரான வில்சன், இந்த விசாரணையில் ஆஜராகிறார். அதற்கு முன்பாக போலீஸாருடன் தி.மு.க தரப்பு வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க அரசு தரப்பு வழக்கறிஞர்களை மட்டும் வீட்டுக்குள் அனுமதித்ததாக அவர்கள் குற்றம் சாட்டினர். அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் மற்றும் கூடுதல் வழக்கறிஞர் ராஜகோபால் ஆகியோர் ஆஜராகியுள்ளனர். கிரீன்வேஸ் சாலையில் உள்ள தலைமை நீதிபதி வீட்டில் விசாரணை நடைபெற்றுவருகிறது.

இதில் அதிரடித் திருப்பமாக வழக்குகள் வாபஸ் படலமும் நடைபெற்றுவருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபோது, அவரது உடல் கடற்கரையில் அடக்கம் செய்யக் கூடாது என வழக்குகள் பதியப்பட்டன. அதில், வழக்கறிஞர் துரைசாமி, பாலு ஆகியோரது வழக்குகள் கவனம்பெற்றன. இந்நிலையில், அந்த மூவர் உட்பட மொத்தம் ஐந்து வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அப்போது பேசிய வழக்கறிஞர் துரைசாமி, "பொய் தகவல் அடிப்படையில் தலைமைச் செயலாளர் அனுமதி மறுத்துள்ளார். இந்த நேரத்தில், அரசு எனது வழக்கைக் காரணம் காட்டி கருணாநிதி உடல் அடக்கத்துக்கு இடம் மறுப்பதால் வழக்கை திரும்பப் பெற்றுவிட்டேன்", எனப் பேட்டியளித்துள்ளார்.

கருணாநிதியின் உடல் மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது தி.மு.க தொண்டர்களின் விருப்பம் மட்டுமல்ல, தமிழகப் பெரும்பான்மை மக்களின் விருப்பமாகவே இருந்துவருகிறது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு