தி.மு.க தலைவர் கருணாநிதி உடலை அடக்கம்செய்ய மெரினாவில் இடம் கேட்டால், ''கிண்டியில் 2 ஏக்கர் தருகிறோம், மெரினாவில் தர இயலாது'' என்று பதில் வருகிறது. உங்களுக்கு ஒரு வரலாறு தெரியுமா... கருணாநிதிதான் நிலமில்லா ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் தர வேண்டும் என்ற திட்டத்தைக் கொண்டுவந்தவர். இவருக்கா நிலமில்லை என்கிறார்கள். 1972-ம் ஆண்டு கட்சி ஆரம்பித்த எம்.ஜி.ஆர், அவர் இறந்த பின் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவுக்கு இருந்த இடம், கருணாநிதிக்கு மட்டும் ஏன் இல்லை என்ற கேள்வியை மக்கள் மனதில் ஆழமாக விதைத்துள்ளது. தமிழகத்தில் ஒரு மாநிலக் கட்சியின் தலைவர்தான் கருணாநிதி, இவரை 61 ஆண்டுகளாகத் தோற்கவிடாமல், தங்களது பிரதிநிதி என்ற அந்தஸ்திலிருந்து இறக்கிப் பார்க்க மறுக்கிறார்கள் தமிழக மக்கள். கருணாநிதியின் தேர்தல் வரலாறு மிக நீண்டது.
1957-ம் ஆண்டு, குளித்தலை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கே.ஏ.தர்மலிங்கத்தை எதிர்த்து நின்ற கருணாநிதியை அத்தொகுதி மக்கள் 8296 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்கிறார்கள். வென்ற கருணாநிதி, முதல்முறையாக சட்டமன்றம் செல்கிறார். அன்று அவர் பேசவேண்டிய உரையை கண்ணாடி முன் ஒப்பித்துப்பார்க்கிறார், முதல் உரைக்கு ஒப்பனை பார்த்த கருணாநிதி, எதையும் திட்டமிட்டுச் செய்பவர். 61 ஆண்டுகளில் எதிர்க்கட்சியோ, ஆளுங்கட்சியோ இவரிடம் கேள்வி எழுப்பினால், முகத்தில் அறைந்தார்ப்போல பதில் வரும்.
1962ல் தஞ்சாவூரில், காங்கிரஸின் ஏ.ஒய்.எஸ்.பரிசுத்தநாடாரை வென்ற கருணாநிதிக்கு, அடுத்த 1967 தேர்தலிலும் வெற்றி முகம்தான். ஹாட்ரிக் அடித்த கருணாநிதிக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார் அண்ணா. 1969ல் அண்ணா மறைந்த பிறகு, ஒட்டுமொத்த தி.மு.க தொண்டர்களும் முதல்வர் பதவிக்கு கருணாநிதியைத்தான் கைகாட்டுகிறார்கள். தி.மு.க-வை திறம்பட நடத்திய கருணாநிதி, தமிழகத்தையும் நடத்துவார் என்ற நம்பிக்கை எல்லாருக்கும் இருந்தது.
1972-ம் ஆண்டு கட்சியை விட்டு விலகி அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆர் ஆரம்பித்தார். அன்றிலிருந்து, இறக்கும் வரை கருணாநிதியை முதல்வர் பதவி பக்கமே வரவிடாமல் தடுத்தார் எம்.ஜி.ஆர். தி.மு.க தோற்றதே தவிர, மக்கள் கருணாநிதியைத் தோற்க விடவில்லை. வென்றார், வென்றார், கேள்வி கேட்டார்... ஜார்ஜ் கோட்டைக்குள் தி.மு.க-வின் உயிர்மூச்சாக இருந்தார்.
ராஜீவ் காந்தி படுகொலையை ஒட்டி நடந்த 1991 தேர்தலில், அ.தி.மு.க-விடம் வரலாறு காணாத தோல்வியை தி.மு.க கண்டது. இந்தத் தேர்தலில் தி.மு.க-வின் வெற்றி, வெறும் இரண்டு தொகுதிகள்தான். அதில் ஒன்று கருணாநிதி. துறைமுகம் தொகுதியை தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்தார். 1996ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது கருணாநிதி முதலமைச்சராக ஆட்சி நடத்தவில்லை, ஒரு கார்ப்பரேட் சிஇஓ-வாக ஆட்சி நடத்தினார். ராமானுஜம் கமிட்டி அமைத்தார். சட்டசபைக்கு காலையிலேயே வந்துவிடுவார். அமைச்சர்களுக்கு டாஸ்க் கொடுத்து முடித்தார். தமிழக ஆட்சிக் காலத்தில் இந்த 5 ஆண்டுகளைப் 'பொற்காலம்' என்று சொல்லவைத்தார்.
2011-க்குப் பிறகு, கருணாநிதிக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லை. முன்புபோல அவ்வளவு ஆக்டிவாக இல்லை. இருந்தாலும் சட்டமன்றம் வருவார். 2016 தேர்தலில் கையெழுத்துப் போட மட்டும்தான் சட்டமன்றம் வந்தார். பிறகு, ஓய்வில்தான் இருந்தார். 2016ல் ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமானபோது வருத்தம் தெரிவித்தார். அதன்பின், காவேரி மருத்துவமனைக்கும் கோபாலபுரம் வீட்டுக்கும்தான் கருணாநிதி சென்று வந்துகொண்டிருந்தார்.
ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 6 வரை 10 நாளில் 130 இந்திய அரசியல் தலைவர்கள் காவேரி மருத்துவமனைக்கு வந்ததற்குக் காரணம், கருணாநிதி என்ற ஆளுமையும், அவரது நட்பும்தான். கருணாநிதி, வயது மூப்பின் காரணமாக மறைந்தார். இன்று கோபாலபுரத்து வாசலில் கதறிய தொண்டனின் சத்தம், இந்த உதய சூரியனுக்கு மறைந்தாலும் கேட்கும். கருணாநிதியை தி.மு.க-வும், தமிழகமும் இழந்து தவிக்கிறது. தோல்வியே காணாத இந்த 95 வயது தலைவன், சூரியனாய் என்றும் இருப்பார்.