Published:Updated:

ஸ்டாலினுக்கு வந்த போன்; வலியில் துடித்த அழகிரி! மெரினா தடை தகர்ந்த பின்னணி

`குடும்பமாகச் சென்று சந்தித்ததால், எடப்பாடி பழனிசாமி உரிய முடிவெடுப்பார்' என்ற நம்பிக்கையோடுதான் காவேரி மருத்துவமனைக்குத் திரும்பினார் ஸ்டாலின்.

ஸ்டாலினுக்கு வந்த போன்; வலியில் துடித்த அழகிரி! மெரினா தடை தகர்ந்த பின்னணி
ஸ்டாலினுக்கு வந்த போன்; வலியில் துடித்த அழகிரி! மெரினா தடை தகர்ந்த பின்னணி

`அண்ணா சமாதியில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்படும்' என்பதில் உறுதியாக இருக்கிறார் ஸ்டாலின். அதற்கேற்ப, நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துவிட்டது. `சமாதி விவகாரத்தில் பொதுமக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும் என ஆலோசகர்கள் அறிவுறுத்தியும், எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டார். இதன் பின்னணியில் அரசியல் கணக்குகளும் இருக்கின்றன' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அண்ணா சமாதிக்கு அருகில் இடம் ஒதுக்குவது குறித்து, தலைமை நீதிபதி (பொறுப்பு) குலுவாடி ரமேஷ், சுந்தர் ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடந்தது. இந்த விவகாரத்தில் மெரினாவில் கட்டடம் எழுப்புவது தொடர்பாக, டிராஃபிக் ராமசாமி உட்பட வழக்கு தொடர்ந்த அனைவரும் வாபஸ் பெற்றுவிட்டனர். இப்படியோர் அதிரடி முடிவை எடுப்பார்கள் என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எதிர்பார்க்கவில்லை. `காமராஜர், ராஜாஜி, ஜானகி ஆகியோருக்கு மெரினாவில் இடம் கொடுக்கவில்லை' என்ற காரணத்தை நீதியரசர்கள் முன்பு தெரிவித்தது தமிழக அரசு. அதேநேரம், `சமாதியில் இடம் கொடுக்க மறுப்பதற்கான தொழில்நுட்பக் காரணங்களை அரசு தெளிவுபடுத்தவில்லை' என வாதாடினர் தி.மு.க வழக்கறிஞர்கள். `இன்று மாலைக்குள் மெரினா சமாதியில் கருணாநிதி அடக்கம் செய்யப்படுவார். அதில் எந்தவித மாற்றங்களும் இல்லை' என உறுதியாகக் கூறிவிட்டார் ஸ்டாலின். அவரது நம்பிக்கை வீண்போகவில்லை. அனுமதி வழங்குவதில் இடையூறு இருப்பதாகத் தெரியவில்லை என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், மெரினாவில் இடம் ஒதுக்கி, அரசு மரியாதையுடன் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளனர்.  

தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ``மெரினாவில் இடம் ஒதுக்குவது தொடர்பாக, `எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவிக்க மாட்டார்' என உறுதியாக நம்பினார் ஸ்டாலின். ஆனால், நேற்று முன்தினம் மயிலாப்பூரில் நடந்த காவல் அதிகாரிகள் கூட்டத்தில், `காமராஜர் நினைவிடம் அருகில் அடக்கம் செய்யப்படுவதற்கே வாய்ப்பு அதிகம்' என உயர் அதிகாரி ஒருவர் கூறியதுதான், தி.மு.க தரப்பினருக்குக் கிடைத்த முதல் சிக்னல். இதையடுத்து, மூத்த நிர்வாகிகளை அனுப்பி கருணாநிதி உடல்நிலை தொடர்பாகவும் சமாதிக்கான இடம் கேட்டும் மனு கொடுக்க வைத்தார் ஸ்டாலின். அப்போதும் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து உறுதியான பதில் வரவில்லை. நேற்று மதியம் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி எனக் குடும்ப உறவுகள் அனைவரும் ஒன்றாக இணைந்து எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்கச் சென்றனர்.

`குடும்பமாகச் சென்று சந்தித்ததால், எடப்பாடி உரிய முடிவெடுப்பார்' என்ற நம்பிக்கையோடு காவேரி மருத்துவமனைக்குத் திரும்பினார். ஆனால், அடுத்த சில மணித்துளிகளில் சமாதிக்கு அனுமதி மறுப்பு தொடர்பாக தலைமைச் செயலாளர் அறிக்கை ஒன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார் என்ற தகவல், ஸ்டாலினுக்கு போன் மூலம் சென்று சேர்ந்தது. இதை எதிர்பாராத ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி தரப்பைத் தொடர்புகொண்டு பேசினார். `இது முழுக்க மத்திய அரசின் முடிவு. நாங்கள் செய்வதற்கு எதுவும் இல்லை' என்ற ரீதியில் தகவல் சொல்லப்பட்டதாம். அதேநேரம், டெல்லியில் தர்மேந்திரா பிரதான் முதல்கொண்டு முக்கிய அமைச்சர்கள் பலரையும் தொடர்புகொண்டு உதவி கேட்டார் கனிமொழி. `அவர்களும் எங்களால் முடிந்த உதவிகளைச் செய்கிறோம்' என்றதோடு முடித்துக்கொண்டனர். 

இதற்கிடையில் கடுமையான முதுகுவலியில் இருக்கிறார் அழகிரி. இறுதி அஞ்சலி நிகழ்வில் அவரால் தொடர்ந்து நிற்க முடியாமல் அவதிப்படுகிறார். குடும்பத்தோடு நேரடியாக முதல்வரை சந்திக்கச் சென்றும் அனுமதி மறுக்கப்பட்டதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. `இத்தனை பேரும் ஒன்றாக சி.எம்மைப் பார்க்கப் போனோம். இப்படிச் செய்வார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. இவ்வளவுதான் மரியாதையா?' என அவர் வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார்" என்றார் கவலையான குரலில். 

அதேநேரம், இந்த விவகாரம் தொடர்பாகப் பேசும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர், ``அண்ணா சமாதிக்கு அருகிலேயே கருணாநிதிக்கு இடமளிப்பது குறித்து முதல்வருக்கு அவரது ஆலோசகர்கள் சில தகவல்களைத் தெரிவித்தனர். அதில், `பெருந்தன்மையோடு நாம் நடந்து கொண்டால், அரசியல்ரீதியாக நமக்கு அது வலுவைக் கொடுக்கும். மக்கள் மத்தியிலும் உங்களுக்குச் செல்வாக்குக் கூடும்' எனக் கூறியுள்ளனர். ஆனால், வேறு சில நிர்வாகிகளோ, `அ.தி.மு.கவின் ஒட்டுமொத்த தொண்டர்களையும் உங்களை நோக்கித் திருப்புவதற்கு அனுமதி மறுப்பதுதான் நல்ல பலனைக் கொடுக்கும். இத்தனை நாள் வரையில் தி.மு.க எதிர்ப்பில்தான் அம்மா அரசியல் செய்து வந்தார். நீங்கள் அனுமதியை மறுத்தால் பொதுமக்கள் எதிர்ப்பார்கள். ஆனால், 95 சதவிகித அ.தி.மு.கவினர் உங்கள் பக்கம் நிற்பார்கள்' எனக் கூறியுள்ளனர்.

இதன்பின்னர், அ.தி.மு.க நிர்வாகிகளிடம் பேசிய முக்கிய பிரமுகர் ஒருவர், `எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் கடவுள் ஆதரவுக் கொள்கையை உடையவர்களாக இருந்தார்கள். அண்ணாதுரை, தீவிர கடவுள் மறுப்பாளர். அதே இடத்தில் கருணாநிதிக்கு இடம் கொடுத்தால், கடவுள் மறுப்புக் கொள்கைக்கான முக்கியச் சின்னமாக இந்த இடம் மாறிவிடும். எனவே, அனுமதி கொடுப்பது சரியானதல்ல. சட்டரீதியான விஷயங்களை முன்வைத்துப் பேசுங்கள்' எனக் கூறியிருக்கிறார். இந்தக் கருத்தை ஆளும் தரப்பில் உள்ளவர்களும் ஏற்றுக் கொண்டனர். இந்த விவகாரத்தில், நீதிமன்ற வழக்கைக் காரணம் காட்டிப் பேசினார் தினகரன். அனைவரும் ஒரு நிலைப்பாட்டை எடுக்கும்போது, என்ன முடிவை எடுப்பது என்பதில் தினகரன் குழம்பிப் போய்விட்டார். இதுவும் ஒரு வகையில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான ஒன்றுதான்" என்கின்றனர். 

கருணாநிதி உடலை முன்வைத்து நடந்த அரசியல் கணக்குகளால் மிகுந்த கொந்தளிப்பில் இருக்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள்.