Published:Updated:

“கமல் முதல்வர் வேட்பாளராக நிற்கட்டும்!” - வெடிக்கும் சீமான்

“கமல் முதல்வர் வேட்பாளராக நிற்கட்டும்!” - வெடிக்கும் சீமான்
பிரீமியம் ஸ்டோரி
“கமல் முதல்வர் வேட்பாளராக நிற்கட்டும்!” - வெடிக்கும் சீமான்

எஸ்.முத்துகிருஷ்ணன், அ.சையது அபுதாஹிர் - படங்கள்: பா.காளிமுத்து

“கமல் முதல்வர் வேட்பாளராக நிற்கட்டும்!” - வெடிக்கும் சீமான்

எஸ்.முத்துகிருஷ்ணன், அ.சையது அபுதாஹிர் - படங்கள்: பா.காளிமுத்து

Published:Updated:
“கமல் முதல்வர் வேட்பாளராக நிற்கட்டும்!” - வெடிக்கும் சீமான்
பிரீமியம் ஸ்டோரி
“கமல் முதல்வர் வேட்பாளராக நிற்கட்டும்!” - வெடிக்கும் சீமான்

``இன்று ரஜினி, கமல் போன்றோர் சிஸ்டம் சரியில்லை என்று பேசுகிறார்கள். அந்த அம்மையார் இருந்தபோது இருந்த சிஸ்டம் தானே இப்போதும்  இருக்கிறது. இன்று கலைஞரும் செயல்படமுடியாமல் இருக்கிறார். அம்மையாரும் இல்லை என்பதால் இதைப் பேசுகிறார்கள். யாரும் இல்லாத பொட்டலில் வேகமாகக் கைவீசி நடப்பதுபோலத்தான் இவர்கள் பேச்சுகள் இருக்கின்றன’’ - துடிப்பும் வெடிப்புமாகப் பேசுகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். `நெய்தல்படைக் கட்டுவேன்’ என்று பேசியதற்காக சீமான்மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறது தமிழக அரசு. எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்கிற சூழலில் சீமானைச் சந்திதோம்.

“கமல் முதல்வர் வேட்பாளராக நிற்கட்டும்!” - வெடிக்கும் சீமான்

``ரஜினி, கமலின் அரசியல் பேச்சுகளை நீங்கள் எதிர்க்கிறீர்களா?’’

‘`அவர்கள் அரசியலுக்கு வரட்டும். யார் தடுத்தது? நீங்கள் நினைப்பதுபோல, அரசியல் என்பது வாக்கு அரசியல் மட்டும் அல்ல. சேவை மனப்பான்மையோடு செய்யப்படும் பணிகள் எல்லாமே அரசியல்தான். அமைப்புகளை வைத்து மக்களுக்குச் சேவை செய்யுங்கள்; தொண்டு செய்யுங்கள். ஆனால், முதல்வராக இருந்து எங்களை ஆட்சி செய்து அதிகாரம் செலுத்துவேன் என்று சொல்வதை ஏற்க முடியாது. ரஜினிகாந்தின் பாட்டன் முப்பாட்டன்கள் சரபோஜி மன்னர்கள். ரஜினி தமிழகத்தில் படம் எடுக்கலாம். ஆனால், எங்களை ஆட்சி செலுத்தப் பார்க்க வேண்டாம். இது எனது நாடு. வாழும் உரிமையும், ஆளும் உரிமையும் எங்களுக்கு மட்டுமே உண்டு.’’

``கமலையும், ரஜினியையும் ஒரே நிலைப்பாட்டில்தான் பார்க்கிறீர்களா..?’’

‘`கமல் அரசியலுக்கு, தான் வந்துவிட்டேன் என்கிறார். அவர் நீண்டகாலமாகவே தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிவிட்டார். அதுவே சேவைதான். அவர் தேர்தல் அரசியலில் உடன்பாடு இல்லை என்கிறார். அவர் முதலில் முதல்வர் வேட்பாளாராக நிற்கட்டும். பிறகு பார்க்கலாம்.’’

‘` `ஓவியாவுக்கு விழுந்த ஒட்டு எனக்கு விழுந்திருந்தால், ஆட்சியைப் பிடித்திருப்பேன்’ என்று அன்புமணி ராமதாஸ் சொல்லியுள்ளாரே..?’’

‘`காட்சி ஊடகங்களின் தாக்கத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. பிக்பாஸ் நிகழ்ச்சியை பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பார்ப்பதாகச் சொல்கிறார்கள். இது சமூகத்தின் துயரம். நம் மக்கள் பெரும் நுகர்வுக் கலாசாரத்தில் ஊறிப்போன மக்களாக இருக்கிறார்கள். கேளிக்கையிலும்,பொழுதுபோக்கிலும் நாட்டம் கொண்ட மக்களாக இருக்கிறார்கள். அது அப்படித்தான் இருக்கும்.’’

‘`கேளிக்கையில் ஊறிப்போன மக்களைக்கொண்டு நீங்கள் எப்படி மாற்றத்தைக் கொண்டுவர முடியும்..?’’

‘`தேவைகளில் இருந்துதான் மாற்றம் பிறக்கிறது. அரசியல் மாற்றம் மக்களுக்குத் தேவை ஏற்படும் போது புரட்சியும், மாற்றமும் வந்துவிடும்.’’

‘`எதிர்க்கட்சிக் தலைவராக ஸ்டாலின் செயல்பாடு எப்படி..?’’

‘`செயல்பட்டு இருந்தால் இந்தக் கேள்வியே எழுந்திருக்காது.’’

``எடப்பாடி ஆட்சியின் செயல்பாடுகளின் பின்னணியில் பி.ஜே.பி. அரசு இருப்பதாக எழும் குற்றச்சாட்டை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்..?’’

‘`ஜெயலலிதா ஆட்சியில் மெரினாவில் அறவழியில் மெழுகுவத்தி ஏந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தியதுபோலவே இந்த ஆண்டும் திருமுருகன்,  ஈழத்தமிழர்களுக்கான நினைவேந்தல் நடத்தினார். அதற்காக, அவரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளது எடப்பாடி பழனிசாமி அரசு. ஆனால், சென்னை ஐ.ஐ.டி-யில் மாட்டுக்கறி சாப்பிடலாம் என்று சொன்னதற்காக மாணவன் சூரஜ் கடுமையாகத் தாக்கப்பட்டார். அவரின் மூக்கை உடைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுத்தான் அவர் உயிர் பிழைத்தார். அப்படிக் கொடுமையாகத் தாக்கிய கும்பல்மீது ஒரு நடவடிக்கைகூட இல்லை. அப்படி என்றால், இது யாருடைய ஆட்சி என்று வெளிப்படையாகத் தெரிகிறதல்லவா. சுப்பிரமணியன் சுவாமி, `நான் சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்று பிரதமரிடம் சொன்னேன். ஆனால், இங்கு நடந்த குழப்பத்தில் எடப்பாடி முதல்வராகி்விட்டார்’ என்று சொல்கிறார். அப்படி என்றால், தமிழத்தில் ஆட்சி செய்வது பி.ஜே.பி-தானே!

இங்கு நடப்பதே அடியாள் ஆட்சிதான். முதல்வரே அதிகாரம் இல்லாதவராக இருக்கிறார். மத்திய அரசு சொல்வதை, மாதம் ஒருமுறை டெல்லிக்குச் சென்று கேட்டு வருகிறார். `ஹைட்ரோகார்பனை எடுக்கவிட மாட்டோம்’ என்று முதல்வர் சொல்கிறார். அதற்கு  ஆதரவாகத்தான் தங்கை வளர்மதி துண்டறிக்கை கொடுத்தது. ஆனால், அவரை ஏன் குண்டர் சட்டத்தில் கைது செய்தார்கள்..? போராடத் தூண்டுவது அரசுப் பயங்கரவாதம் என்று சொல்கிறார்கள். போராடத் துாண்டுவது அரசாங்கமா, அடித்தட்டு மக்களா? அதுதான் இங்கே எனது கேள்வி. அரசே பிரச்னைக்குத் தீர்வு கண்டுவிட்டால், போராட வேண்டிய தேவை இல்லை. அந்த அடிப்படையே தெரியாதவர்களால் ஆட்சி நடக்கிறது. தாய்மண்ணைக் காக்க, மக்களின் நலத்தைக் காக்க போராடுபவர்களின் கழுத்தை நெறிப்பது எந்த வகையில் நியாயம். நாட்டில் எங்கு வளம் இருக்கிறதோ, அதைக் கொள்ளையடிக்க அமெரிக்கக்காரன் வருகிறான். நமது மண், மக்களின் வாழ்விடமாக இல்லாமல், பெரு முதலாளிகளின் வேட்டைக்காடாக மாறி வருகிறது. தகப்பன் இல்லாத வீடுபோல, தலைவன் இல்லாத நாடாகத் தமிழ்நாடு இருக்கிறது. எல்லோருடைய பார்வையும் என் நாட்டு வளத்தின்மேல் விழுந்திருக்கிறது. காவிரிப் படுகை மாதிரி கங்கைப் படுகையிலும், மீத்தேன் வாயு இருக்கிறது அல்லவா, அங்கே  போய் மீத்தேன் வாயு எடுக்கவில்லையே...இருபத்தி ஐந்து சதவிகிதம் எரிவாயு இருக்கிற மாநிலம் குஜராத். அங்கே ஏன் மீத்தேன் எடுக்கவில்லை? அதனால்தான், தமிழ்நாட்டுக்குள் வராதே என்று எதிர்க்கிறோம்.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“கமல் முதல்வர் வேட்பாளராக நிற்கட்டும்!” - வெடிக்கும் சீமான்

``அ.தி.மு.க. அரசுமீது ஊழல் புகார்கள் அதிகமாகி இருக்கின்றனவே..?’’

‘`அ.தி.மு.க. ஆட்சியில் இவ்வளவு ஊழல் நடந்து கொண்டிருக்கிறது என்றால், அந்த ஊழலைப் பிரசவித்த தாயே தி.மு.க-தான். மக்களின் வறுமை, மறதி, அறியாமை என்ற மூன்றையும் முதலீடாக வைத்து நீண்டகாலம் அரசியல் செய்துகொண்டு இருக்கிறார்கள். ஊழல் லஞ்சத்தை இந்த நாட்டுக்கே அறிமுகப்படுத்தியது யார் என்று கேட்டால் சின்னப்பிள்ளை கூட தி.மு.க. என்று சொல்லும். குட்காவைச் சட்டசபைக்குள்ள தூக்கிக்கொண்டு போறீங்களே, ஏன் உங்க சாராய கம்பெனியில் இருந்து ஒரு சாராய போத்தலைத் தூக்கிக்கொண்டு போக வேண்டியதுதானே..! உங்கள் ஆட்சியில் பான்பராக், குட்கா விற்கப்பட்டதா, இல்லையா? அப்புறம் என்ன இப்போது நாங்கள் மனிதப் புனிதராகிட்டோம் என்று மக்கள் முன் வந்து நிற்கிறீர்கள்? இதை எப்படிப் பொதுமக்கள் ஏற்றுக்கொள்வார்கள். சட்டமன்றத்தில் ஜெயலலிதா இருக்கும்போது உங்களால் இப்படியெல்லாம்  பேச முடிந்ததா, கேள்வி கேட்க முடிந்ததா? மின்சாரம் இல்லைனு கேட்டா உங்க ஆட்சியில் இருந்ததா என்று திருப்பிக் கேட்பார்கள். ஊழல் பற்றிப் பேசினால், உங்கள் ஆட்சியில் இல்லையா என்று கேட்பார்கள். அதனால் எதற்குமே வாயைத் திறக்க முடியவில்லை. ஆனால், இப்போது திரும்பிக் கேள்வி கேட்க சரியான ஆள் இல்லை என்பதால் உத்தமர் வேடம் போடுகிறார்கள்.’’

‘`தொழிற்சாலைகள் வராமல், நாட்டின் வளர்ச்சி இல்லை என்று ஆட்சியாளர்கள் சொல்கிறார்களே..?’’

‘`எதை நீங்கள் தொழில் வளர்ச்சி என்று சொல்கிறீர்கள்..? அரபு நாடுகளில் பெட்ரோல் கிடைக்கிறது. பாலைவன பூமி. அதனால், அங்கே மண்ணைத் தோண்டி பெட்ரோல் எடுக்கி றார்கள். கதிராமங்கலமும், நெடுவாசலும் முக்கனியும் விளையும் பொன் விளைகிற பூமி. அந்தப் பூமியில் குழியைத் தோண்டி ஏன் அந்த மண்ணை நஞ்சாக்க வேண்டும். ராமநாதபுரம் கமுதகுடியில் 20 கிராம மக்களை அப்புறப் படுத்திவிட்டு அவர்கள் நிலத்தைப் பறித்து, அங்கே ஏன் சோலார் பூங்கா அமைக்க வேண்டும். ராஜஸ்தான் பாலைவனத்திலும் கரமுரடான மலைமுகடுகளிலும் சூரியமின் சக்தி திட்டங்களைக் கொண்டு வாருங்கள். பெட்ரோலும், காரும் வைத்துக்கொண்டு நீரும் சோறும் இல்லாத நாட்டில் என்ன பண்ண முடியும்? நீரும் சோறும் இல்லாமல் வளர்ச்சி என்பது வெறும் வார்த்தை தானே. பளபளக்கும் கண்ணாடியைப் பார்த்து வளர்ச்சி என்று சொல்கிறார்கள். அதற்குப் பின் பஞ்சடைத்த கண்ணோடும் ஒட்டிய வயிறோடும் நிற்கிறவனை நீங்கள் பார்ப்பதில்லை. நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது தேசத்தின் வளர்ச்சி என்று சொல்கிறீர்கள். திரும்பி ஒரு சந்தில் போனால் சாலையா, சவக்குழியா என்று தெரியும். ஒரு தேசம், அதன் நிலமும், வளமும் சார்ந்த தொழிற் சாலைகளை உருவாக்க வேண்டும். அதுதான் வளர்ச்சி. நாப்கினுக்கு விலையைக் கூட்டிவிட்டு `பாரத மாதாவுக்கு ஜே’ என்று வெட்கம் இல்லாமல் கோஷம் போடுகிறார்கள். தவித்த வாய்க்கு தரமான தண்ணீர் இலவசமாகத் தர முடியவில்லை. ஏழை மக்களுக்குத் தரமான மருத்துவ வசதி இல்லை. மக்களைப் புதைகுழிக்குள் தள்ளுகிற தொழில்வளர்ச்சி தேவையா...?’’

‘`பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை அதிகாரத்தில் பா.ஜ.க. அமர வேண்டும் என்று அக்கட்சியினர் சொல்லி வருகிறார்களே..? அதற்கு தமிழகத்தில் சாத்தியம் உண்டா?’’

‘`வாய்ப்பே இல்லை. தி.மு.க, அ.தி.மு.க. கட்சிகளை வைத்து இதை நான் சொல்லவில்லை. என்னை வைத்துச் சொல்கிறேன். சாதி, மதம், கடவுள் ஆகியவை நம்மைக் காப்பாற்றாது என்ற நம்பிக்கை கொண்டவர்கள் நாங்கள். எங்களைக் கடல், காற்று, மலை, மரம் காப்பாற்றும் என்று உறுதியாக நம்புகிறோம். நீ மண்ணைக் காப்பாற்றாமல் மனிதனைக் காப்பாற்ற முடியாது. இங்கு அரசியல் என்பதே சாதி மத உணர்வுகளைத் தூண்டிவிடுவதாக இருக்கிறது. மாவு அரைக்கும இயந்திரம் தருகிறேன்; இரு சக்கர வாகனம் வாங்க மானியம் தருகிறேன் என்று மனிதனுக்கு மட்டும் பிச்சை போட்டு வாக்கைப் பெற்று அதிகாரம் செலுத்தும் அரசியல் இப்போது இருக்கிறது. அதை ஒழிக்க வேண்டும்.’’

‘`தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கும் வல்லமையான கட்டமைப்பு நாம் தமிழர் கட்சிக்கு இருக்கிறதா..?’’

‘`எங்கள் கட்சியின் கட்டமைப்பையே தி.மு.க, அ.தி.மு.க. கட்சிகளுக்கு மாறான புதுமையாகத்தான் செய்திருக்கிறோம். 234 தொகுதிகளுக்கும் ஒவ்வொரு செயலாளர், இரண்டு சட்டமன்றத் தொகுதி ஒரு மாவட்டம். இது கொஞ்சம் கொஞ்சமாக வளரும். திரைத் துரையில் இருந்து நேரடியாக அரசியலுக்கு வரும்போது, ரசிகர்களே தொண்டர்களாக மாறிவிடுவார்கள். எம்.ஜி.ஆர் கட்சியை வளர்த்தது அப்படித்தான். அண்ணா உருவாக்கி வளர்ந்த கட்சிக்கு கருணாநிதி தலைவராக வந்தார். ஆனால், நான் அப்படி அல்ல; புதிய கருத்தியலையும், புதிய சிந்தனையையும் இன்றைய தலைமுறைக்குச் சொல்லி வருகிறேன். தமிழகத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகள் கழித்து, ஆளுமைமிக்க இளைஞர்களாக எனது கட்சியின் இளைஞர்கள் இருப்பார்கள். அப்போது ஆட்சி அதிகாரம் எங்கள் கைக்கு வந்துவிடும்.’’

``மண்ணையும் மக்களையும் நேசிப்பதாகச் சொல்லும் சீமான் தேர்தலில் ஏன் வெற்றிபெற முடியவில்லை..?’’

‘`ஒன்றரைக் கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லும் கட்சிகள்கூட தங்கள் உறுப்பினர்களுக்கே ஓட்டுப்போட பணம் கொடுக்கும் அவலம் இங்குதான் நடக்கிறது. அவர்கள் கட்சிக் கூட்டத்துக்கே காசு கொடுத்துதான் ஆட்களைக் கூட்டி வருகிறார்கள். வாக்குக்குக் காசு கொடுக்காமல் என்னோடு தேர்தல் களத்தில் அவர்களை நிற்கச் சொல்லுங்கள் பார்ப்போம். துணிவு உள்ள ஒருத்தனை வரச்சொல்லுங்கள். மக்களின் ஏழ்மையைப் பயன்படுத்திக் காசு  கொடுத்து வாக்குகளைப் பறிக்கிறார்கள்.”

‘`வாக்குக்குக் காசு கொடுக்கும் நிலை மாறும் என்று நினைக்கிறீர்களா..?’’

‘`இருக்கின்ற பதறுகளில் மணியை நான் தேடவில்லை. நானே உழுது விதைத்து நல்ல நெல்மணிகளை அறுவடை செய்ய வேலை செய்துகொண்டு இருக்கிறேன். ஒரு தலைமுறையை உண்மையும், நேர்மையுமாக, ஊழல் லஞ்சத்துக்கு எதிராகத் துாய உள்ளத்தோடு அரசியல் செய்யும் தலைமுறையை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்.’’
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism