Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

இரா.மனகாவலன், சென்னை-34.

தன்னை அறிந்த தமிழருவி மணியனுக்குத் தமிழக அரசியலை அறிந்து கொள்ள முடியவில்லையே. நாளுக்கு ஒரு தலைவன், பொழுதுக்கு ஒரு கட்சி என இன்னமும் தேடிக்கொண்டுதானே இருக்கிறார்?


தன்னையே யார் என்று அறியாததால்தான் இந்த வினையே. காமராஜரைப் பாடிய வாய், இன்று கமல்ஹாசனைப் பாடுகிறது. ராஜாஜியையே விமர்சித்த நாக்கு, இன்று ரஜினிக்குப் பாசுரம் பாடுகிறது. நாக்கால் கிடைத்த புகழ், நாக்கால்தான் போகும்.

கழுகார் பதில்கள்!

ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

சிறையில் விதிமுறைகளை மீறி கைதிகளுக்குச் சலுகை வழங்கியதற்காக, இதற்கு முன் சிறைத்துறை அதிகாரிகள் மீது வழக்குகள் போட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?


சிறைக்குள் பல ரகசியங்கள் புதைந்துள்ளதைப் போல, இந்த விவகாரங்களும் மர்மங்களாகவே புதைந்துவிடும். இவை எப்போதாவதுதான் செய்தியாக வெளியாகும். அதன்பிறகு, நடவடிக்கை எடுப்பதாகக் கைதிகளிடம் அதிரடியாகப் பரிசோதனைகள் செய்வார்கள். செல்போன் பறிப்பு, சிம் கார்டு பறிப்பு, கஞ்சா மற்றும் சிகரெட் பறிமுதல் என்பார்கள். அதிகாரிகளின் தயவின்றி, இவை உள்ளே போயிருக்க முடியாது. சிறைக்குச் சம்பந்தமில்லாத இந்தப் பொருள்களை எடுப்பார்களே தவிர, கொடுத்தவர் யார் என்பதைப் பற்றிப் பேச மாட்டார்கள். இப்போதுகூட, ‘சசிகலாவை மாட்டி விடுவதற்காகவே கர்நாடக சிறை லீலைகள் வெளியில் வந்திருக்கின்றன’ என்று முன்வைக்கப்படும் வாதத்தை நாம் மறுப்பதற்கில்லை. சசிகலா சிறைக்குப் போய் சில மாதங்கள்தான் ஆகின்றன. ஆனால், முத்திரைத் தாள் மோசடி வழக்கு குற்றவாளி அப்துல் கரீம் தெல்கி போன்றவர்கள் இதே வசதிகளோடு பல ஆண்டுகளாக அதே சிறையில் இருக்கிறார்கள். உள்ளே இருப்பதற்கும், வெளியே இருப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் அவர்கள் எல்லாம் வாழ்கிறார்கள். இவையெல்லாம், அதிகாரிகளைக் கொழுக்கச் செய்வதன் மூலமாக இதுபோன்ற சிறைவாசிகள் அனுபவித்துவரும் அதீத வசதிகள்தானே!

த.சத்தியநாராயணன், அயன்புரம்.

எம்.ஜி.ஆர் - சிவாஜி ரசிகர்கள்... ரஜினி - கமல் ரசிகர்கள்... என்ன வேறுபாடு?


எம்.ஜி.ஆரும் சிவாஜியும் தெளிவாகத் தங்களுக்குப் பிடித்த அரசியல் கட்சியோடு தங்களை இணைத்துக்கொண்டார்கள். அதனால், அவர்களுடைய ரசிகர்களுக்கு அரசியல் குழப்பங்கள் இல்லை. ஆனால், ரஜினியும் கமலும் எந்தக் கட்சியிலும் சேராமல், கட்சி ஆரம்பிப்போமா என்றும் சொல்லாமல், தங்களது ரசிகர்களைக் குழப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி ரசிகர்கள் நிம்மதியாகச் சினிமா பார்த்தார்கள். ரஜினி, கமல் ரசிகர்களுக்கு இருந்த நிம்மதி, கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கழுகார் பதில்கள்!

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

ஸ்டாலினுக்கு, ரஜினியும் கமலும் புதிய போட்டியாளர்களாக முளைத்துள்ளார்களே?


ரஜினியும் கமலும் கட்சி ஆரம்பிக்கப் போகிறார்களா என்பதை இன்னும் வெளிப்படையாகச் சொல்லவில்லை. அந்த முடிவுக்கு அவர்கள் இருவரும் வந்தால்தான், ஸ்டாலினுக்குப் போட்டியா என்று சொல்ல முடியும்!

காஞ்சி ஃபைசுதீன், காஞ்சிபுரம்.

தமிழகத்தில் அடக்குமுறைக் கைதுகள் அதிகமாகி விட்டனவே?


கேட்பார் யாருமில்லை. அதனால், போலீஸ் வைத்ததே சட்டம்.

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

ஓ.பி.எஸ் தர்மயுத்தம் புஸ்வாணம்தானா?


சுயநல யுத்தங்கள் அப்படித்தான் ஆகும். அப்படித்தான் ஆகவேண்டும் என்பதே தர்மம்.

கழுகார் பதில்கள்!

மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

‘அரசியலில் நல்லவர்களும் இருக்கிறார்கள்’ என்பது சரியா... ‘இருந்தார்கள்’ என்பது சரியா?

‘அரசியலில் நல்லவர்களும் இருக்கிறார்கள், தலைமறைவாக...’ என்பதுதான் சரி!

திருப்பூர் அர்ஜுனன், அவிநாசி.

‘சந்துக்கடை என்கிற பெயரில், மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் போலீசார் ஒத்துழைப்போடு மது விற்பனை நடக்கிறது’ என்று ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வான செந்தில்பாலாஜி வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறாரே?


அவருக்கு எப்படியாவது அமைச்சர் ஆக வேண்டும் என்று ஆசை. அதற்காகப் பல குட்டிக்கரணங்களைப் போடுகிறார். ஜெயலலிதா எதற்காக அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார் என்பதை அவர் மறந்திருப்பார் போலும்!

கழுகார் பதில்கள்!

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

தனது சொந்தக் கிணறு விவகாரத்தில் கூட ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெகட்டிவ் க்ளைமாக்ஸ் ஆகிவிட்டதே?


அதற்கு யார் காரணம்? மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர் பன்னீர்செல்வம். தனது நிலத்தில் இருந்த கிணற்றை, குடிநீர் தேவைக்கா ஊருக்குத் தாரை வார்க்கிறேன் என்று சொல்லியிருக்கலாம். அந்தப் பரந்த மனப்பான்மை இல்லை என்பதால், ஊர் மக்களுக்கு அதை விற்க ஒப்புக்கொண்டார். ஊர்க்காரர்கள் பணம் திரட்டத் தயாராகும்போதே, வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார். வழக்கு, விவகாரம் என்று ஊர் மக்கள் கொதித்ததும், வேறு வழியில்லாமல் பணிந்தார். இத்தனை காலமாக பணிவு என்பதுதான் அவரின் அடையாளமாகப் பலரால் சுட்டிக்காட்டப்பட்டு வந்தது. அதேசமயம், ‘அதன்  பின்னணியில் முழுக்க முழுக்க நடிப்பும் சுயநலமும்தான் இருக்கிறது’ என்று அவரின் எதிர்தரப்பினர் விமர்சித்து வந்தனர். அதை, இந்தக் கிணறு தற்போது வெட்ட வெளிச்சமாக்கிவிட்டது.

வி.ஐ.பி கேள்வி

கழுகார் பதில்கள்!

பழ.நெடுமாறன்
தமிழர் தேசிய இயக்கத் தலைவர்


‘ராஜீவ் கொலை வழக்கை தடா சட்டத்தின் கீழ் விசாரித்தது செல்லாது’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. அப்படி என்றால் தடா சட்டத்தின் கீழ் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட ஏழு பேர், கால் நூற்றாண்டைத் தாண்டியும் சிறைத்தண்டனை அனுபவித்து வருவது எந்த வகையில் நியாயம்?

‘தடா சட்டத்தின்கீழ் நடத்தப்பட்ட விசாரணை செல்லாது’, ‘தடா சட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் தண்டனை தரப்பட்டது செல்லாது’ என்பதெல்லாம் சட்டம் மற்றும் நீதி ரீதியாக விவாதிக்கப்பட வேண்டியவை. ஆனால், நிர்வாக ரீதியாகவே ‘இந்த ஏழு பேரையும் அவர்களது தண்டனைக்காலம் தாண்டியும் வைத்திருப்பது முறையா’ என்பதுதான் அடிப்படைக் கேள்வி. ஆயுள் முழுக்க தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதே ஆயுள்தண்டனை. ஆனால், ஆயுள் தண்டனை பெற்றவர்கள், 14 ஆண்டுகளில் விடுதலை ஆவது பெரும்பாலும் வழக்கமாக இருக்கிறது. ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் 25 ஆண்டுகளைக் கடந்தும் உள்ளேயே இருக்கிறார்கள். ‘மற்ற வழக்குகளில் எல்லாம் ஆயுள்தண்டனைக் கைதிகளை 14 ஆண்டுகளில் விடுதலை செய்வது போல, இவர்களை ஏன் விடுதலை செய்யவில்லை’ என்ற கேள்விக்கு விடை இல்லை. இன்னும் சொல்லப்போனால், மற்ற கைதிகளுக்குத் தரப்படும் ‘பரோல்’ (விடுமுறை) எனப்படும் உரிமைகூட இவர்களுக்கு இல்லை.

உலகையே திடுக்கிட வைத்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு  சம்பவத்தில் தொடர்புடைய நடிகர் சஞ்சய் தத்துக்கு, அந்த மாநில அரசும், நீதித்துறையும், சிறை நிர்வாகமும் தந்துள்ள சலுகைகளை ஒப்பிட்டுப் பார்த்தால்... ராஜீவ் கொலை வழக்குக் கைதிகள் அனுபவிக்கும் துன்பம் அதிகமானது. சட்டம் மாநிலத்துக்கு மாநிலம், ஆளுக்கு ஆள், வழக்குக்கு வழக்கு மாறும் கோலத்தை என்னவென்று சொல்வது??

படங்கள்:
கே.ராஜசேகரன், என்.ஜி.மணிகண்டன், கே.குணசீலன், பா.காளிமுத்து
வீ.சக்தி அருணகிரி,  கே.ஜெரோம்

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: 
கழுகார் பதில்கள்,  ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002 
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!