Published:Updated:

``யாருக்காகவும் தன் கொள்கையை விட்டுக் கொடுக்காதவர் தலைவர்!" - சல்மா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``யாருக்காகவும் தன் கொள்கையை விட்டுக் கொடுக்காதவர் தலைவர்!" - சல்மா
``யாருக்காகவும் தன் கொள்கையை விட்டுக் கொடுக்காதவர் தலைவர்!" - சல்மா

``யாருக்காகவும் தன் கொள்கையை விட்டுக் கொடுக்காதவர் தலைவர்!" - சல்மா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருவாரூரிலிருந்து ஒரு முதியவர் காவேரி மருத்துவமனை வாசலில், `தலைவர ஒரு தடவையாவது பாத்துட்டுப் போயிடுறேன்'னு உட்கார்ந்திருந்தார். திமுக தலைவர் கருணாநிதி மறைந்துவிட்டார் என்றதும் மொத்த தமிழகமும் கலங்குகிறது. கோபாலபுரம் கண்ணீரால் நனைகிறது. கலைஞர் கருணாநிதி அரசியல் மட்டுமல்ல சினிமாவிலும், இலக்கியத்திலும் ஆர்வமிக்கவர். அவருடனான அனுபவங்களை தி.மு.க மகளிர் அணி மாநில துணைப் பொதுச் செயலாளரும், எழுத்தாளருமான சல்மா பகிர்ந்துகொள்கிறார்.

கலைஞர் கருணாநிதி இந்தப் பெயரை எப்போதும் வியந்து பார்ப்பேன். ஒன்று, இரண்டு காரணம் என்றால் உடனே சொல்லிவிடலாம். ஆனால், கலைஞர் பற்றி கூறும் ஒவ்வோரு வரிகளுமே நம்மை வியக்க வைக்கும். அதுதான் கலைஞர். முதலில் தான் நம்பிய கொள்கையை எந்தக் காரணத்துக்காகவும், யாருக்காகவும் விட்டுக்கொடுக்கமாட்டார். அதேபோல எந்த ஒரு சூழ்நிலைக்காகவும் தன்னை மாற்றிக்கொண்டது கிடையாது. 

ஒருமுறை பேட்டி ஒன்றில் ராமர் பாலம் குறித்த சர்ச்சையான கருத்தைக் கூறிவிட்டார். அந்த சர்ச்சை வலுத்து மீண்டும் அதே கேள்வி அவரை நோக்கிவர கொஞ்சமும் தயக்கமில்லாமல், தன் கொள்கையிலிருந்து மாறுபடாமல் ``ராமர் பாலம் கட்டினாரா... அவர் என்ன இன்ஜினீயரா'' என்று கூறிவிட்டு நகர்ந்தார். இந்தக் கொள்கை மாறா கருணாநிதியைப் போல் ஒரு தலைவர் நமக்குக் கிடைக்கப்போவதில்லை. 

80 வருடங்களாகப் பொதுவாழ்வில் இருந்தவர். ஒருபோதும் இவர் தலைவர், இவர் தொண்டர் என்று பாகுபாடு பார்த்ததில்லை. எல்லாரிடத்திலும் ஒரே மாதிரியான அன்போடு பழகக்கூடியவர். ஒருமுறை நான் அமெரிக்கா செல்லும் முன் தலைவரைச் சந்தித்து சொல்லிவிட்டு சென்றேன். திரும்ப வந்ததும் அறிவாலயம் சென்றிருந்தேன். அப்போது தலைவர் வருகிறார். எல்லாரையும் பார்த்துவிட்டுச் செல்கிறார், என்னைப்பார்த்ததும் ``என்னம்மா... எப்ப வந்த.. எப்படி இருக்கனு'' விசாரித்தார். இப்படி ஒவ்வொரு தொண்டனையும் பர்சனலாக நினைவில் வைத்திருப்பார் தலைவர்.

நான் பல நேரங்களில் அரசியலுக்கு வந்த பின் அவ்வளவாக எழுத முடியவில்லையே என்று வருந்தியிருக்கிறேன். ஆனால், கலைஞர் முதல்வராக இருக்கும்போதே எத்தனை படங்கள், புத்தகங்கள், பத்திரிகைச் செய்திகள் என தினசரி எழுதியுள்ளார் என்று நினைத்தால் பிரம்மிப்பாக இருக்கும். நம்மை இன்னமும் ஓட வைக்கும் கடிகாரமாக கலைஞர் சுழன்று கொண்டுதான் இருக்கிறார். இந்தப் படைப்புகள் எல்லாம் தனிப்பட்டதாக இல்லாமல், சமூக மாற்றத்துக்கான விதையாகத்தான் இருந்துள்ளது. 

அவரிடம் மிகவும் பிடித்த விஷயமே எப்போதும் உற்சாகமாக இருப்பார். நகைச்சுவை உணர்வோடு பேசக்கூடியவர். எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் நகைச்சுவையாகப் பேசி அங்கிருப்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிடுவார். இது கலைஞரோடு பழகியவர்களுக்கு நன்றாகவே தெரியும். எக்ஸ்ட்ராடினரி பர்சன் என்று கூறுவார். ஒருவரால் எப்படி இவ்வளவு வேலைகளை சரியாகச் செய்ய முடிகிறது என வியக்க வைக்குமளவுக்குக் கலைஞரின் செயல்பாடுகள் இருந்துள்ளன. 

விளிம்புநிலை மனிதர்களிடம் கருணாநிதி காட்டிய அன்பு அளப்பறியது. அவர்களுக்கென்று தனி இட ஒதுக்கீடு கொண்டுவந்தவர். இதற்கு ஆகச்சிறந்த உதாரணம் நீண்ட நாள்கள் திமுகவின் பொருளாளராக சாதிக் பாட்ஷா இருந்ததுதான். காயிதே மில்லத்துடன் கலைஞரின் நட்பு என்பது ஆழமானதாக இருந்தது. காங்கிரஸ் சிறுபான்மையினருக்கான கல்லூரியை மறுத்ததை கருணாநிதிதான் மீண்டும் கொண்டுவந்தார். அதற்கு காயிதே மில்லத் கல்லூரி என்றே பெயரும் வைத்தார். சிறுபான்மையினரை ஊக்குவிக்க கருணாநிதி தவறியதே இல்லை. 

அவரில்லா தமிழகத்தைப் பார்க்கவே பயமாக உள்ளது. மாநில சுயாட்சி, மாநில உரிமைகள் மறுக்கப்பட்டு பினாமி ஆட்சியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதைக் கலைஞர் இருந்திருந்தால் கேட்டிருப்பார். சட்டமன்றத்தில் கர்ஜித்திருப்பார். முதல் பட்டதாரிகளாகப் படிக்க பலருக்கும் உதவி செய்தவர் கலைஞர். இந்த ஊரில்தான் நமது ஊர் கல்லூரிகளில் நமது பிள்ளைகளே படிக்க முடியாத சூழலை இந்த பினாமி ஆட்சி அரங்கேற்றியுள்ளது. இது மட்டுமல்லாது 8 வழிச் சாலை ஆரம்பித்து, நீட், ஹைட்ரோ கார்பன், சிலைக் கடத்தல் எனப் பட்டியல் நீள்கிறது. இதையெல்லாம் கலைஞர் அதட்டி கேட்டிருப்பார். ஒற்றை அறிக்கைக்குச் செய்வதறியாமல் ஆளுங்கட்சியனர் திணறியிருப்பர். சொல்லப்போனால் நிலைமை கைமீறினால் ஆட்சியையே கலைத்திருப்பார்.

கருணாநிதியின் இழப்பு மிகப்பெரியது. தலைவர் செய்த நல்ல விஷயங்கள் ஏராளம் அவர் இல்லையென்றால் ஒரு முதல் தலைமுறை பட்டதாரி உருவாகியிருக்கவே மாட்டான். சில விஷயங்களில் எனக்கு திமுக மீது வருத்தம். திமுக செய்த வரலாற்று தவறு... கருணாநிதி செய்ததை அவ்வளவாக திமுக விளம்பரப்படுத்தவில்லை... மோடி தன்னை விளம்பரப்படுத்திக்கொள்வதை போல கருணாநிதி செய்யவில்லை. இன்று ஐடி நிறுவனங்களில் பயன்பெறும் இளைஞர்கள் இதைத் தேடிப்பிடித்துச் சொல்கிறார்கள். கலைஞரை படிக்கிறார்கள். அவர்தான் ஐடி துறையை உருவாக்கியவர், அவர்கள் இன்று கருணாநிதியின் புகழை உலக அளவில் கொண்டு சென்றுள்ளார்கள்.

கருணாநிதியின் தேவை இந்த சமூகத்தில் இன்னும் ஒரு நூற்றாண்டு காலம் இருக்கிறது. ஆனால், அவர் இல்லாதது ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அவர் வாழ்ந்த காலத்தில் அவர் இயக்கத்தில் நான் இருந்தேன் என்பதே எனக்குப் பெருமையான விஷயம்

கலைஞரின் கொள்கைகள் என்றும் திமுக தொண்டனிடம் வாழும். கொள்கை மாறா சூரியன் என்றுமே மேற்கில் உதிக்காது. கலைஞரை ரொம்பவே மிஸ் செய்கிறோம் என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு