Published:Updated:

தஞ்சையில் தடையை மீறிய மாணவர்கள் கைது

தஞ்சை: திருச்சியில் மாணவர்களை தாக்கிய காங்கிரஸாரைக் கைது செய்யக் கோரி தஞ்சையில் த‌டையை மீறி பேரணி செல்ல முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருச்சியில் காங்கிரஸாருக்கும், மாணவர்களுக்கும் நேற்று முன் தினம் நடந்த மோதலில் மாணவர்கள் தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் பொறியியல் மாணவர் வெங்கடேஷ்  படுகாயமடைந்து சிகிச்சையில் இருக்கிறார்.

இதையடுத்து, மாணவர்களை தாக்கிய காங்கிரஸாரை கைது செய்யக் கோரி மாநிலம் முழுவதும் மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதனால், காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜசேகரன் உள்ளிட்ட 51 பேர் மீது நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

##~~##
அப்படியும் போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை. தாக்குதலில் ஈடுபட்ட காங்கிரஸாரை கைது செய்யக் கோரி இன்று காலை தஞ்சையில் மாணவர் கூட்டமைப்பினர்  சாந்தி கமலா தியேட்டர் அருகிலிருந்து பேரணி செல்ல முற்பட்டனர். இதற்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டதால், மாணவர்கள் தடையை மீறி பேரணி கிளம்பினார்கள். போலீஸ், அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்ததால் பதற்றம் நிலவுகிறது.

இதேபோல், வேலூரில் மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த  நான்கு மாணவிகள் உள்பட 24 பேர்  காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ஞானதேசிகன் வீட்டை முறுகையிட முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்திருக்கிறது போலீஸ்.

பெரம்பலூரில் உள்ள‌ ஹான்ஸ் ரோவர் கல்லூரி மாணவர்கள் 20 பேர், 'கையாலாகாத கைகூலியான  மத்திய காங்கிரஸ் இருக்கும் வரை  கண்ணீர் தான் மிச்சம் எம் சொந்தங்களுக்கு" என்று பதாகைகள் ஏந்தி உண்ணா விரதம் இருந்து வருகிறார்கள்.

கு.ராமகிருஷ்ணன், ஏ.சசிகுமார், சி.ஆனந்தக்குமார்

படங்கள்:
கே.குணசீலன்