Published:Updated:

’நண்பனுக்கு’ முதல் ‘என் உயிரினும் மேலான’ வரை... கருணாநிதியின் கடிதங்களில் ஒரு பயணம்!

’நண்பனுக்கு’ முதல் ‘என் உயிரினும் மேலான’ வரை... கருணாநிதியின் கடிதங்களில் ஒரு பயணம்!

கருணாநிதி கடிதங்கள்

’நண்பனுக்கு’ முதல் ‘என் உயிரினும் மேலான’ வரை... கருணாநிதியின் கடிதங்களில் ஒரு பயணம்!

கருணாநிதி கடிதங்கள்

Published:Updated:
’நண்பனுக்கு’ முதல் ‘என் உயிரினும் மேலான’ வரை... கருணாநிதியின் கடிதங்களில் ஒரு பயணம்!

தன் கட்சித் தொண்டர்களுடன் கருணாநிதி அளவுக்கு அணுக்கமாக இருந்த தலைவர்கள் என்று எடுத்துக்கொண்டால் வேறு யாரும் இருந்திருப்பார்களா என்பது சந்தேகமே. அப்படியே இருந்தாலும் மிகவும் சொற்பமானவர்களே இருக்க முடியும். ஒரு மாபெரும் இயக்கத்தின் தலைவரை தொண்டர்கள் யாரும் அவ்வளவு எளிதில் அணுகிவிட முடியாத சூழல்தான் வாடிக்கையானதாகும். ஆனால், கருணாநிதி அதற்கு விதிவிலக்காக இருந்தவர். முதலமைச்சராக கருணாநிதி பதவி வகித்தபோதும்கூட, எளிதில் தொண்டர்கள் தன்னைச் சந்திக்கக்கூடிய சூழ்நிலையைச் சாத்தியமாக்கினார். தொண்டர்களை நேரில் சந்திப்பதோடு மட்டுமல்லாமல், கட்சியின் நாளேடான முரசொலியில் தாம் எழுதும் மடல்கள் மூலம் அவர்களுடன் நெருக்கமான உறவை எப்போதும் ஏற்படுத்திக்கொண்டவர் அவர். கருணாநிதியின் முரசொலி கடிதங்கள், ஒவ்வொரு தொண்டனிடமும் தனித்தனியே உரையாடுவதுபோன்ற எளிய நடையில் அழகு தமிழில் இடம்பெற்றிருக்கும். சர்ச்சைக்குரிய மற்றும் குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் கருணாநிதி என்ன நினைக்கிறார், தொண்டர்கள் அந்தப் பிரச்னையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை தன் கடிதங்கள் மூலமாக அறிவுறுத்துவார். இதுபோன்ற நெருக்கத்தால், கட்சித் தொண்டர்களுக்கு அவர் மிகப்பெரிய வழிகாட்டியாக விளங்கினார் என்றே கூற வேண்டும். இதுவரை ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்களை முரசொலி நாளேட்டில் கருணாநிதி எழுதியிருக்கிறார்.

ஆரம்ப காலத்தில் `நண்பனுக்கு...' என்று முரசொலி கடிதத்தைத் தொடங்கியவர் பின்னர், `உடன்பிறப்பே...' என்று தொடங்கி எழுதுவதை வழக்கமாக்கிக் கொண்டார். கருணாநிதியின் கோபம், விமர்சனம், பாராட்டு, எதிர்ப்பு என எதுவானாலும் ஓசைநயத்துடன், அதே சமயம் எளிய மக்களுக்கும் புரியும் வண்ணம் வார்த்தைகள் அந்தக் கடிதங்களில் இடம்பெறும். அவரின் கடிதத்தை வாசிப்பதற்காகவே முரசொலியை வாங்கிப் படிப்பவர்கள் அதிகம் உண்டு. 

’நண்பனுக்கு’ முதல் ‘என் உயிரினும் மேலான’ வரை... கருணாநிதியின் கடிதங்களில் ஒரு பயணம்!

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அமல்படுத்தப்பட்ட `எமர்ஜென்சி' காலத்தில், பத்திரிகைகளில் வெளியாகும் கருத்துகள் பெரும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும். `குறிப்பிட்ட வரிகளுக்குமேல் எழுதக் கூடாது' என்னும் அளவுக்குக் கட்டுப்பாடுகள் அப்போது விதிக்கப்பட்டன. கருணாநிதி அதையும் சவாலாக ஏற்று, குறிப்பிட்ட வார்த்தைகளுக்குள் தன்னுடைய கருத்தை சொல்லவந்த விஷயத்தின் வீச்சு குறையாமல் முரசொலியில் கடிதங்களை எழுதி, கட்சியினரை உயிர்ப்புடன் வைத்திருந்தார் கருணாநிதி.

பத்திரிகைகளுக்கு எமர்ஜென்ஸியின்போது தணிக்கை அமலில் இருந்ததால், கைதுசெய்யப்பட்ட தி.மு.க-வினரின் பட்டியலை வெளியிட யுக்தி ஒன்றைக் கடைப்பிடித்தார் கருணாநிதி. `1976 பிப்ரவரி 3-ம் தேதி அண்ணா நினைவு நாளன்று, அண்ணா சதுக்கத்துக்கு அஞ்சலி செலுத்த வர இயலாதோர் பட்டியல்' என்று ஒரு பட்டியலை வெளியிட்டார். அதில் மாவட்ட வாரியாக கைதுசெய்யப்பட்டவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது. ஒருகட்டத்தில், தணிக்கை அதிகாரிகளின் அத்துமீறலைக் கண்டு அண்ணா சிலையின் முன்பு அன்றைய மத்திய அரசைக் கண்டித்து துண்டறிக்கைகள் கொடுத்தார்.  

எம்.ஜி.ஆர். மரணமடைந்தபோது, தமிழ்நாடு முழுவதும் தி.மு.க-வினருக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைக் கலவரத்தில், சென்னை அண்ணா சாலையில் உள்ள கருணாநிதியின் சிலையை இளைஞர் ஒருவர் கடப்பாறையால் குத்தி, உடைத்தார். இந்தச் செயலுக்கு கருணாநிதி என்ன எதிர்வினை ஆற்றுவார் என தி.மு.க-வினர் எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளையில், மறுநாள் முரசொலியில் அந்தச் சம்பவம் பற்றி இவ்வாறு எழுதியிருந்தார்.

``உடன்பிறப்பே, 

செயல்பட விட்டோர் 

சிரித்து மகிழ்ந்து நின்றாலும்

அந்தச் சின்னத்தம்பி

என் முதுகிலே குத்தவில்லை

நெஞ்சிலேதான் குத்துகிறான்

அதனால் நிம்மதி எனக்கு..

வாழ்க, வாழ்க"

அன்புடன்

மு.க. - என்று குறிப்பிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

பெரியாரின் துணைவியார் மணியம்மை தலைமையில், தவத்திரு குன்றக்குடி அடிகளார் அண்ணாசாலையில் திறந்து வைத்த சிலை அது. எம்.ஜி.ஆர். இறந்த அன்று சேதப்படுத்தப்பட்ட அந்தச் சிலை சிதிலமடைந்து வெறும் பீடம் மட்டுமே அந்த இடத்தில் நீண்டகாலம் எஞ்சி இருந்தது. மீண்டும் அங்கே கருணாநிதியின் சிலையை நிறுவ திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி வலியுறுத்தியபோது, கருணாநிதி தனக்குச் சிலை வேண்டாமென்று அதை மறுத்துவிட்டார். 

தான் எழுதிய கடிதங்களிலேயே தன்னால் மறக்க முடியாத கடிதமாக கருணாநிதி குறிப்பிட்டது இதுதான். 

``வள்ளுவர் கோட்டத் திறப்பு விழா நடந்தபோது, நான் எழுதி, `முரசொலி’யில் வெளியான மூன்று பக்கக் கடிதம்! அப்போது, என் ஆட்சி கலைக்கப்பட்டு பத்து நாள்களே ஆகியிருந்தன. என் முயற்சியைப் பறைசாற்றும் கல்வெட்டு நீக்கப்பட்டு, புதிதாக அடிக்கல் நாட்டி கோலாகல விழா நடத்திக் கோட்டத்தைத் திறந்துவைத்தார்கள். `நான் கலந்துகொள்ளக் கூடாது' என்று எனக்கு அழைப்பைக்கூடத் தாமதமாகத்தான் அனுப்பினார்கள். அந்தச் சமயத்தில், நான் உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதம் கண்டு உருகாத நெஞ்சமே இல்லை. எனக்கு இப்போதும் அதைப் படித்தால் கண் கலங்கும்!'' என்றார். 

’நண்பனுக்கு’ முதல் ‘என் உயிரினும் மேலான’ வரை... கருணாநிதியின் கடிதங்களில் ஒரு பயணம்!

கருணாநிதி பதவியில் இல்லாதபோதும் அவருடைய அறிக்கை பேசுபொருள் ஆகும். `கருணாநிதி என்ன சொல்கிறார்' என ஆளுங்கட்சியினரே காத்துக்கொண்டிருப்பதைப் பார்த்துள்ளோம். எதிர்க்கருத்து கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களைக் காயப்படுத்தாத அளவுக்கு, அதே சமயம் அவர்கள் மீது வைக்கப்படுகிற விமர்சனத்தை அவர்களே ரசிக்கும்விதமாக தன் கடிதங்களில் பதில் சொல்லக்கூடியவர் கருணாநிதி.

கருணாநிதி கடந்த 11 நாள்களுக்கு முன் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, மருத்துவமனைக்கு முன் கூடியிருந்த தொண்டர்கள், ``எழுந்து வா... தலைவா, உடன்பிறப்புகள் அழைக்கிறோம்; தலைவா எழுந்து வா" என்று தொண்டைநீர் வற்றும் அளவுக்கு முழக்கமிட்டவாறே இருந்தார்கள். தொண்டர்களின் அந்தக் குரல் கருணாநிதியின் காதில் விழுமென்று நம்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால், கருணாநிதி கடைசிவரை காவேரி மருத்துவமனையிலிருந்து எழுந்து வரவேயில்லை. அவர் மரணமடைந்த செய்திதான் வந்தது.

``என் அன்பு உடன்பிறப்பே, நீ என் அருகிலே இருந்தாலும் நம் இதயங்கள் இந்த லட்சியப் பயணத்திற்காக எப்போதோ பிணைக்கப்பட்டு விட்டது என்பதை உணர்ந்துகொண்டே இருப்போமாக" என்று ஒருமுறை தொண்டர்களுக்குக் கருணாநிதி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பார். 

அவரின் கடித வரிகள் போன்றே தொண்டர்கள் அதனை உணர்ந்து, கருணாநிதி வகுத்த பாதையில்... அவர் காட்டிய வழியில்... கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பதே கருணாநிதிக்குத் தொண்டர்கள் செய்கிற உண்மையான அஞ்சலியாக இருக்கும்....