Published:Updated:

கருணாநிதியின் இறுதிச்சடங்கை ஒருங்கிணைத்த அமுதா ஐ.ஏ.எஸ்... யார் இவர்?

கருணாநிதியின் இறுதிச்சடங்கை ஒருங்கிணைத்த அமுதா ஐ.ஏ.எஸ்... யார் இவர்?
கருணாநிதியின் இறுதிச்சடங்கை ஒருங்கிணைத்த அமுதா ஐ.ஏ.எஸ்... யார் இவர்?

டல்நலக்குறைவால், சென்னை காவேரி மருத்துவமனையில் ஆகஸ்ட் 7-ம் தேதி அன்று மரணம் அடைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதற்கான இடம் எது என்பது, நேற்று உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு தாமதமாகத்தான் தெரிய வந்தது. 

கருணாநிதியின் உடல் அடக்கம், 'சென்னை மெரினா அண்ணா சமாதிக்கு அருகில்தான்' என்று முடிவானதற்குப் பிறகு, இருந்த மிகக்குறுகிய நேரத்துக்குள் அதற்கான பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்றன. அண்ணா சமாதியின் பின்புறம், கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை இறுதிசெய்ததில் தொடங்கி, அவரின் உடல் வைக்கப்பட்ட சந்தனப்பேழையைச் சுற்றி நடைபெற்ற இறுதிச் சடங்கு, முழு ராணுவ மரியாதையுடன் அந்தப் பேழையை குழிக்குள் வைத்து மூடிய நிமிடம் வரை, வெள்ளை நிற சுடிதார் அணிந்த ஒரு பெண், கருணாநிதி குடும்பத்தினர், ராணுவத்தினர், அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் பணியில் சிறப்பாக ஈடுபட்டிருந்தார்.

மெரினாவில் நடந்த கருணாநிதியின் இறுதிச்சடங்கை தொலைக்காட்சிகளில், நேரலையாகப் பார்த்துக்கொண்டிருந்த அனைவருக்குமே 'யார் இந்தப் பெண்?' என்ற கேள்வி எழாமல் இருந்திருக்காது. அவர்தான், ஐ.ஏஎஸ் அதிகாரி அமுதா. இவர், கடந்த 24 வருடங்களாகத் தமிழக அரசின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை நிறைய சவால்களுக்கிடையே வகித்ததுடன், தன் பணியில் சிறப்புடன் செயல்பட்டு வருபவர். 

தமிழகத்தின் முதல் பெண் தொழிலாளர் நல ஆணையர், கபடி விளையாட்டில் மூன்றுமுறை தேசிய அளவில் தங்கப்பதக்கம் பெற்றவர் என்ற பெருமைக்கு உரியவர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக அமுதா இருந்தபோது, செங்கல்பட்டில் மணல் கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்றபோது, மணல் ஏற்றிவந்த லாரி அமுதாவை இடித்துக் கீழே தள்ளிவிட்டுச் சென்றது. ஆனாலும், அச்சமடைந்து பின்வாங்காமல் தொடர்ந்து அந்தப் பகுதியில் மணல் கொள்ளை நடைபெறாமல் தடுத்தார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியராக அவர் இருந்தபோது, நிறையச் சவால்கள் அவர்முன் இருந்தன. பெண் கல்வியில் பின்தங்கிய மாவட்டமான தருமபுரியில், பெண் சிசுக் கொலை, குழந்தைத் திருமணம் போன்ற சமூக அவலங்களைத் தடுக்கவேண்டிய நிலை உருவானது. அந்த வகையில், தருமபுரி மாவட்டத்தில் அமுதா செய்யவேண்டிய சீர்திருத்தங்கள் அதிகம் இருந்தன எனலாம். அந்த மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் சுயமாகச் சம்பாதிக்க ஏதுவாக, ஏராளமான மகளிர் சுயஉதவிக் குழுக்களை அமைத்து, பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்கப் பயிற்சி அளித்து, அவர்களுக்கு வங்கிகளின் கடன் பெற்றுத்தந்தார். பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திய மாணவிகளைக் கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து, படிப்பைத் தொடர வழிசெய்தார். 

பெண் குழந்தைகளிடம் குழந்தைத் திருமணம் பற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்தினார். நிறைய குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்தினார். அந்த வகையில், தருமபுரி மாவட்டத்தில் ஆட்சியராக அமுதா கொண்டுவந்த மாற்றங்கள் ஏராளம். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில், கடந்த 2015-ம் ஆண்டில் பெய்த பெருமழை, வெள்ளத்தில் தாம்பரம், முடிச்சூர் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள், பெருமளவு பாதிக்கப்பட்டு வெள்ளத்தில் தத்தளித்தார்கள். பேரிடர் ஏற்பட்ட அந்த நேரத்தில், பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்கும் அதிகாரிகள் குழுவில் சிறப்பு அலுவலராக அமுதா நியமிக்கப்பட்டு, திறம்படச் செயல்பட்டார். எண்ணற்ற மக்களை வெள்ளப் பாதிப்புகளில் இருந்து மீட்டார். 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டுவருமாறு, தன் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலர்களை வேலைசெய்ய உத்தரவிட்டு, அமுதா ஒதுங்கி ஓரமாக நிற்கவில்லை. பத்திரிகைகள், ஊடங்களின் பார்வைக்கு மட்டும் களத்தில் நிற்பதுபோன்று அவர் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கவில்லை. ஒட்டுமொத்த சென்னை மக்களும் வெள்ளத்தில் சிக்கித்தவித்த நிலையில், பாதிப்புக்கு உள்ளானவர்களை மீட்க, ராணுவத்தினருடன் மழை, வெள்ள நீரில் களமிறங்கி மீட்புப் பணியில் தீவிரமாகச் செயல்பட்டார் அமுதா.

வெள்ள மீட்புப் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட அமுதாவுக்கு, குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை அகற்றும் பொறுப்பு தமிழக அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்றும் அந்தப் பணியில் துணிவுடன் இறங்கிய அமுதாவுக்குப் பல முனைகளில் இருந்தும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால், எல்லா சவால்களையும் மீறி, அவர் துணிச்சலுடன் செயல்பட்டார். 2016-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில், உதவித் தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றினார். இதுபோன்று, அவரின்  சாதனைகளைப் பட்டியலிட்டுக்கொண்டேபோகலாம். ஆனால், அவை அனைத்தையும்விட, லட்சக்கணக்கான மக்கள் திரண்டு, மெரினா கடற்கரைச் சாலை முழுவதும் உணர்ச்சிப் பெருக்குடன் நடைபெற்ற கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யும் நேற்றைய நிகழ்ச்சியில், அமுதா ஏற்றிருந்த பொறுப்புதான் அவருக்கு மிகவும் சவாலானதாக இருந்திருக்கும் எனலாம். 

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அண்ணா சமாதிக்கு உட்பட்ட வளாகத்தில் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்வதற்கான இடத்தைத் தேர்வுசெய்தது முதல், அந்த இடத்தை மாலை 5 மணிக்கு முன் தயார்படுத்தியது வரையிலும் அமுதாவின் பணி குறிப்பிடத்தக்க பணியாக அமைந்தது. கருணாநிதியின் உடலுக்கு குறிப்பிட்ட சில தேசியத் தலைவர்கள், உயரதிகாரிகள், மெரினாவிலும் மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினர். மிக முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்பு அதிகாரிகளை எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பும் அவருக்கு உருவானது. அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, எந்த ஒரு சிறு பிரச்னையோ, சலசலப்போ இல்லாமலும், பாதுகாப்புக் குறைபாடு ஏற்படாமலும் அமுதா செயல்பட்ட விதம், தொலைக்காட்சி நேரலையிலும் பதிவானது.

ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இதுவரை எத்தனையோ பதவிகளை அமுதா வகித்திருந்தாலும், அவர் கடந்துவந்த பொறுப்புகளில் கருணாநிதியின் இறுதிக்கட்ட நிகழ்வை ஒருங்கிணைத்தது முக்கியமானதாக அமைந்துவிட்டது. தி.மு.க தலைவர், ஐந்துமுறை முதல்வராக இருந்தவர் என்னும் ஆளுமைகொண்ட கருணாநிதியின் உடல் அடக்கத்தின்போது, மெரினாவில் நிலவிய ஒருவித இறுக்கமான சூழலில், கூடிநின்ற அத்தனை பேரையும் ஒருங்கே கையாண்டு, திறம்படச் செய்வது அவ்வளவு சுலபமான காரியமல்ல. இதுபோன்ற செயல்பாடுகளில் பொறுப்பும், கடமையும் அதிகம் இருக்க வேண்டும். அந்த வகையில், அமுதா சிறப்பாகவே செயல்பட்டார்.

ஒன்றன்பின் ஒன்றாக என்னென்ன நிகழ்ச்சிகள் நடக்க வேண்டும் என்பதில் இருந்து, கருணாநிதி குடும்பத்தினரில் யாருக்குப் பின் யார் வந்து, அவரின் உடலுக்கு அஞ்சலிசெலுத்த வேண்டும் என்பதுவரை, முன்கூட்டியே கேட்டுத் தெரிந்து, அமுதா தெளிவாகச் செயல்பட்டார். கட்சியின் மூத்தத் தலைவர்களும், அதிகாரிகளும் அடுத்து என்ன செய்ய வேண்டுமென அவர்களுக்கு அருகில் சென்று கனிவுடன் கூறினார். 

உலக அளவில் தமிழர்கள் அனைவரும் கவனித்துக்கொண்டிருக்கும் அந்த நிகழ்வின்போது, தவறாக எது நடந்திருந்தாலும் அது மிகப்பெரிய சங்கடத்தை ஏற்படுத்திவிடும் என்பதோடு, வரலாற்றுப் பிழையாகிவிடும் என்பதால், அதுபோன்று ஏதும் நடக்காதவகையில் அனைவரையும் ஒருங்கிணைத்ததில் அமுதாவின் பங்கு அளப்பறியது. மிக அமைதியான முறையில் கருணாநிதியின் உடல் அடக்கம் நடந்து முடிந்தது. 

இதுபோன்ற செயல்திறன் மிக்க அதிகாரிகளைத் தன் பக்கம் வைத்து, அவர்களைப் பாராட்டுவதுடன், அவர்களின் திறமைகளை ஆட்சி நிர்வாகத்திற்குப் பயன்படுத்திக்கொள்வதில் தி.மு.க தலைவரான கருணாநிதி மிகவும் தேர்ந்த தலைவர். என்ன செய்வது, ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதாவின் பணித்திறனைப் பாராட்ட இப்போது கருணாநிதி இல்லையே என்பதுதான் மிகப்பெரும் சோகம்!

அடுத்த கட்டுரைக்கு