Published:Updated:

பிக்பாஸ் வீடும் தமிழ்நாடும் - என்னங்க சார் உங்க ஸ்க்ரிப்ட்டு?

பிக்பாஸ் வீடும் தமிழ்நாடும் - என்னங்க சார் உங்க ஸ்க்ரிப்ட்டு?
பிரீமியம் ஸ்டோரி
பிக்பாஸ் வீடும் தமிழ்நாடும் - என்னங்க சார் உங்க ஸ்க்ரிப்ட்டு?

ப.திருமாவேலன் - ஓவியம்: கார்த்திகேயன் மேடி

பிக்பாஸ் வீடும் தமிழ்நாடும் - என்னங்க சார் உங்க ஸ்க்ரிப்ட்டு?

ப.திருமாவேலன் - ஓவியம்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
பிக்பாஸ் வீடும் தமிழ்நாடும் - என்னங்க சார் உங்க ஸ்க்ரிப்ட்டு?
பிரீமியம் ஸ்டோரி
பிக்பாஸ் வீடும் தமிழ்நாடும் - என்னங்க சார் உங்க ஸ்க்ரிப்ட்டு?

 தலை இல்லை. ஆனால், மூன்று கால்கள் இருக்கின்றன. மூளை அந்த உடலில் இல்லாமல் வெளியில் இருக்கிறது. இப்படி ஒரு மனிதன் இருந்தால் எப்படிச் செயல்படுவானோ, அப்படி இருக்கிறது அ.தி.மு.க. இது நாட்டில் இருக்கும் கட்சிகளோடு சேர்த்துப் பத்தோடு பதினொன்றாக இருந்தால் அதைப்பற்றிக் கவலைப்படப் போவதில்லை. அதன் தலைவலி, அதன் தலைவிதியோடு முடியட்டும் என்று இருக்கலாம். ஆனால், இந்த அ.தி.மு.க-வின் கையில்தான் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை அடங்கியிருக்கிறது. அதாவது தமிழகத்தின் ஆளும்கட்சியாக இருக்கிறது. இவர்களது ஆயுள்காலம், இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கின்றன. இன்னும் 48 மாதங்களுக்கு இந்த விநோதமான ஜீவனோடு எப்படி வாழ்க்கை நடத்துவது என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் ஒரே கவலை. இந்த விநோதமான ஜீவன், எப்படி நடந்துகொள்ளும், என்னவெல்லாம் செய்யும், இதற்கு மூச்சுக்குழாய் தொடர்ந்து செயல்படுமா, டெல்லியில் இருந்து பைப்லைன் மூலமாக ஆக்ஸிஜன் தருவதாக இருந்தால் எத்தனை நாட்களுக்குக் கிடைக்கும், ஒரு ஜடத்தை எத்தனை மாதங்களுக்கு இரவல் மூச்சில் வைத்துக் காப்பாற்றுவது? என்பதெல்லாம் விடை தெரியா கேள்விகள். இவையெல்லாம் சகித்துக்கொண்டு இருப்பதுதான் தமிழ் மக்களின் சாதனை!

பிக்பாஸ் வீடும் தமிழ்நாடும் - என்னங்க சார் உங்க ஸ்க்ரிப்ட்டு?

அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார். அவர், பொதுக்குழுவில் தேர்தல் நடத்தப்பட்டு அதில் வெற்றிபெற்று பொதுச் செயலாளர் ஆனவர் அல்ல. அனைவராலும் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டவர். அடுத்ததாக, முதலமைச் சராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ள இருந்தார். அதற்குள் உச்ச நீதிமன்றத்தின் மேல் முறையீட்டு தீர்ப்பு வந்து, அவரது சிறைத்தண்டனை உறுதிப்படுத்தப் பட்டது. அதனால் அவர் சிறைக்குப் போனார். சிறைக்குப் புறப்படும்முன், டி.டி.வி. தினகரனை அ.தி.மு.க-வில் இணைத்துக் கொண்டார். துணைப் பொதுச்செயலாளர் பதவியும் கொடுக்கப்பட்டது. சிறைக்குச் செல்லும் அவசர நெருக்கடியில் யாரை முதலமைச்சர் ஆக்குவது என்று யோசித்த சசிகலா, அதுவரை விசுவாசத்தை உச்சமாகக் காட்டிய எடப்பாடி பழனிசாமிக்குத் தாரை வார்த்தார். ஜெயலலிதா சமாதியை சடார் சடார் என்று அடித்துவிட்டு பெங்களூரு கிளம்பினார் சசிகலா. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனை நிறுத்துவதும், அவர் வென்றதும் முதல்வர் ஆக்குவதும்தான் சசிகலா குடும்பத்தின் திட்டம். ஜெயலலிதா உயிரோடு இருந்தால் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி பக்கம்கூட வர முடியாதவர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் போகத் திட்டமிட்டார்கள். இவை அனைத்துக்கும் டெல்லியில் இருந்து மலர் வளையம் வைக்கப்பட்டது.

 தினகரன் சிறைக்குப்போன பிறகுதான் காட்சிகள் மாறின. வீட்டுக்குக் கடன் கொடுத்துவிட்டு அந்த வீட்டையே அபகரிப்பதைப்போலவே அந்தக் காட்சிகள் இருந்தன. சசிகலா, தினகரன் என்று இருந்த அ.தி.மு.க. தலைமை நரேந்திரமோடி, அமித்ஷா என மாறியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அமித்ஷாவை அம்மாவாகவும் மோடியை அப்பாவாகவும் நினைத்து நடிக்கத் தொடங்கினார்கள். ‘சொத்து’ உள்ள வளர்ப்பு மகன்கள் என்பதால், அவர்களும் இவர்களை ஏற்றுக்கொண்டார்கள்.

பிக்பாஸ் வீடும் தமிழ்நாடும் - என்னங்க சார் உங்க ஸ்க்ரிப்ட்டு?

சசிகலா குடும்பத்தில் இருந்து பன்னீர் செல்வத்தைப் பிரித்த பி.ஜே.பி. அவரைத் தனது வளர்ப்புப் பிராணியாக வளர்த்தது. எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து தினகரனைப் பிரித்துத் தனிமைப்படுத்தியது. இப்போது பன்னீரையும் எடப்பாடியையும் சேரச் சொல்கிறது. இருவரும் சேர்ந்தால் இரட்டை இலை தரப்படும் என்பதுதான் லஞ்சம். இரட்டை இலை இல்லாமல் கட்சி நடத்த முடியாது என்பது பன்னீருக்கும் தெரியும். எடப்பாடிக்கும் புரியும். ஆனால், இரண்டு தனிமனிதர்களுக்கு இடையிலான ஈகோ, இந்தச் சேர்க்கையையும் தள்ளிப்போடுகிறது. முதலமைச்சர் பதவி தனக்கு வேண்டும் என்கிறார் பன்னீர். அதை விட்டுத்தர மாட்டார் எடப்பாடி.  எனவே, டெல்லி மிரட்டல் இந்த இரண்டு மனிதர்களின் ஈகோவில் தொங்கிக்கொண்டு இருக்கிறது.

சசிகலாவையும் தினகரனையும் கட்சியை விட்டு நீக்கச் சொல்கிறார்கள். சசிகலா தொடரட்டும்,  தினகரனை மட்டும் நீக்கிவிடுவோம் என்று நினைக்கிறார் எடப்பாடி. ‘அம்மாவுக்காக அனைத்துக் கஷ்டங்களையும் தாங்கியவர் சின்னம்மா. இப்போது சிறையில் இருக்கிறார். என்னை முதலமைச்சராகத் தேர்வு செய்தவர் அவர். இப்போது அவர் இதைச்செய், அதைச்செய் என்று எதிலும் தலையிட்டு உத்தரவு போடவில்லை. நான்கு ஆண்டுகள் கழித்து வரும்போதும் பொதுச்செயலாளர் நாற்காலியில் வந்து உட்காரப் போவதில்லை. அப்போது அவர் உடல்நிலை எப்படி இருக்குமோ? அப்படிப்பட்டவரை கட்சியைவிட்டு நீக்கத் தேவையில்லை’ என்று எடப்பாடி சொல்கிறார். ஆனால், `சசிகலாவையும் சேர்த்து நீக்கியாக வேண்டும்’ என்று பன்னீர் நிபந்தனை விதிக்கிறார். தன்னை அவமானப்படுத்தியவர் சசிகலா என்பது பன்னீரின் வேதனை. மேலும், யாரைப் பார்த்தாலும் பயந்து நடுங்கும் பன்னீருக்கு சசிகலா பிம்பம் இன்னமும் மிரட்டலாகத்தான் தெரிகிறது.

சசிகலாவையும் தினகரனையும் நீக்கினால்தான் எடப்பாடியும் பன்னீரும் நாம் சொன்னதற்கு எல்லாம் தலையாட்டுவார்கள் என்று டெல்லி பி.ஜே.பி. நினைக்கிறது. இரட்டை இலைச் சின்னத்தை மீட்டுக்கொடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கத் திட்டமிட்டுள்ளது பி.ஜே.பி. பாதிக்கும் மேற்பட்ட உள்ளாட்சி இடங்களை வாங்கிப் போட்டியிடுவதும் நாடாளுமன்றத் தேர்தலின் போது 20 தொகுதிகளில் போட்டியிடுவதும் அவர்களது திட்டம். நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழகச் சட்டமன்றத் தேர்தலை நடத்துவதா இல்லையா என்பதில் இன்னமும் இறுதிமுடிவு எடுக்கப்படவில்லை. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகத் தமிழகச் சட்டமன்றம் கவிழ்ந்துவிடக் கூடாது என்பதிலும் பி.ஜே.பி. தெளிவாக உள்ளது. எதையாவது காரணமாக வைத்து இந்த ஆட்சியைத் தினகரன் கவிழ்த்துவிடுவார் என்று பி.ஜே.பி. நினைக்கிறது. அப்படிக் கவிழ்க்கும் காரியத்தை அவர் பார்க்கக் கூடாது என்பதற்காகத்தான் விசாரணைகள், மிரட்டல்கள், கைதுகள், அச்சுறுத்தல்கள். அதாவது, தினகரன் அரசியல் பண்ணலாம். ஆட்சி பண்ண நினைக்கக் கூடாது.

பிக்பாஸ் வீடும் தமிழ்நாடும் - என்னங்க சார் உங்க ஸ்க்ரிப்ட்டு?

அதற்காகச் சும்மா இருக்க முடியுமா?  இத்தனை ஆண்டுகளாக யாரையும் அ.தி.மு.க-வில் அதிகாரம் செலுத்தவிடாமல் தடுத்த பிரயத்தனங்கள் அனைத்தும் வீணாவதா? அச்சம் தவிர்த்தவராக டி.டி.வி. தினகரன் திமிறி எழுகிறார். நாடு முழுக்கச் சுற்றுப்பயணம் கிளம்புகிறார். தன் ஆதரவாளர்களைத் தலைமைக்கழகப் பொறுப்புக்கு நியமிக்கிறார். 34-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் இவரைச் சந்தித்துள்ளார்கள். 13 எம்.எல்.ஏ-க்களுக்கு பொறுப்பு வழங்கியுள்ளார். சிலர் தங்களுக்கு இதில் உடன்பாடு இல்லை என்று சொன்னாலும், சில எம்.எல்.ஏ-க்கள் தினகரனைத் தொடர்பு கொண்டு, ‘எங்களுக்கு ஏன் பதவி தரவில்லை?’ என்றும் கேட்டபடி இருக்கிறார்கள். ‘யாருடைய தைரியத்தில் எடப்பாடி ஆடுகிறார் என்று எனக்குத் தெரியும். ஆட்சி இருப்பதால்தான் அவரை பி.ஜே.பி. மதிக்கிறது. நான் நினைத்தால் அரைமணி நேரத்தில் ஆட்சியைக் கவிழ்த்துவிடுவேன். அம்மா ஆட்சியைக் கவிழ்த்தேன் என்ற பழிச்சொல் வந்துவிடுமே என்பதற்காகத்தான் பதுங்கி இருக்கிறேன்’ என்கிறார் தினகரன். ‘தினகரன் கவிழ்த்தால் நமக்கு நல்லதுதான். அதன்பிறகு எடப்பாடி அரசியலைவிட்டே ஒதுங்கிவிடுவார்’ என்று நினைக்கிறார் பன்னீர். நாங்கள் சொல்லும்வரை ஆட்சியைக் கவிழ்க்கக் கூடாது என்கிறது பி.ஜே.பி.

மொத்தத்தில் பிக்பாஸ் வீடு மாதிரி இருக்கிறது தமிழ்நாடு. எல்லாமே திட்டமிடப்பட்டதா என்றால் இல்லை. பாதி ஸ்கிரிப்ட். மீதி அதுவாகக் கருமமே என்று நடக்கிறது. அங்கு நடக்கும் எல்லா பிரச்னைக்கும் சிநேகனும் காயத்ரியுமே காரணம் என்பது மாதிரி இங்கு எடப்பாடியும் பன்னீரும். இது எதுவும் தெரியாமல் தமிழக பி.ஜே.பி. மாதிரி வையாபுரியும் கணேஷூம் புலம்பித் திரிகிறார்கள். தாக்குப்பிடிக்க முடியாமல் பரணிபோல ஓடிவிட்டார் தீபா. என்ன ஆனால் நமக்கென்ன நம் காரியத்தில் கண்ணாக இருப்போம் என்ற ஆரவ்களாகச் சம்பாதிப்பதில் குறியாத் திரிகிறார்கள் அமைச்சர்கள் சிலர். வையாபுரிபோல இந்த ஆட்டத்தில் இருக்கிறோமா இல்லையா என்று புரியாமல் புலம்பிக்கொண்டிருக்கிறார் தினகரன். இந்த எல்லா கேரக்டர்களையும் தனது அப்பா பி.வாசு மூளையால் கணக்குப்போட்டு சாந்த சொரூபியாக `சின்னத்தம்பி’ ஷக்திபோல தம்பித்துரைகள் திரிகிறார்கள். அந்த பிக்பாஸ் குரல் ஒரு பத்திரிகையாளருக்குப் பொருத்தமாக இருக்கிறது. யாரைச் சேர்க்க வேண்டும், யாரை நீக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும். மக்கள் வாக்களிப்பது எல்லாம் டுபாக்கூர் மெஷினில்தான். மொத்தமும் நயவஞ்சக நாடகம் தான் என்பது தெரிந்தும் சிரிக்காமல் தொகுத்து வழங்குகிறார் நரேந்திர மோடி.

எல்லாம் நிஜமென்று நம்பிக்கிடக்கிறது தமிழ்நாடு. ஆட்சியும் காட்சியும் மக்களுக்கானது அல்ல. கரன்சிக்கானது!