Published:Updated:

62... 67... 69... இறுதியாக 6.10... கருணாநிதியின் வாழ்க்கையை நிர்ணயித்த 'ஆறு' என்ற எண்!

கருணாநிதி
News
கருணாநிதி

காலம்... அது அவரிடம் பாடம்படித்தது. காலமே அவராக ஆனது.

இறந்துபோனால் ஒருவரைக் காலமானார் என்பது மரபு. எல்லோருக்கும் அந்த வார்த்தை பொருந்துமா? காலத்தை வீணடித்தவர்கள், வீணாகப் பொழுதைக் கழித்தவர், இலக்கு எதுவுமின்றி கால்போன போக்கிலே காலத்தைப் போக்கியவர்... யாராக இருந்தாலும் இறந்துபோனபின்பு காலமானவர் எனக் கௌரவிக்கப்படுகிறார்கள். பிறந்த நாள் முதல் இறந்த நாள்வரை காலத்தை மிஞ்சிக்கொண்டும் சரித்திரத்தைத் துரத்திக்கொண்டும் ஓடிய கலைஞர் கருணாநிதியும் இப்போது காலமாகியிருக்கிறார்.

காலம்... அது அவரிடம் பாடம்படித்தது. காலமே அவராக ஆனது. 1924- முதல் 2018 வரை வாழ்ந்த எத்தனையோ பேருக்கும் காலத்தின் அளவு அதுதான். அது கலைஞரின் வாழ்க்கையில் அதே காலகட்டம் சகாப்தமாக இருந்தது. சரித்திரமாக இருந்தது.

காலம் அவருக்கு 95 ஆண்டுகளை மட்டும்தான் வழங்கியது. ஆயிரம் ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனைகளை அதிலே அவர் செய்தார். எழுதிக்குவித்த பக்கங்கள், பேசிக்குவித்த மேடைகள், கவிதை முழங்கிய மன்றங்கள், சட்டம் இயற்றிய சபைகள்... ஒரு தனிமனிதன் 100 மனிதனின் வேலையைச் செய்ய முடியுமா? ‘‘கருணாநிதி எத்தனை மணிக்குத் தூங்குகிறார்... எத்தனை மணிக்கு எழுந்திருக்கிறார் என்பதை அவருக்குத் தெரியாமல் கண்டுபிடிக்க வேண்டும்’’ எனக் பூரிப்புடன் பொறாமைப்பட்டார் அறிஞர் அண்ணா இந்தியா முழுக்க செல்வாக்குடன் இருந்த காங்கிரஸ் இயக்கத்தைச் சுதந்திரம் பெற்ற இருபதே ஆண்டுகளில் சாய்த்த இயக்கம், தி.மு.க இயக்கம். 1967-ல் ஆட்சியைப் பிடித்தது. 1969-ல் அண்ணா மறைந்துபோனார். ஆட்சியைப் பிடித்த இரண்டே ஆண்டுகளில் தி.மு.க இயக்கம், மு.க இயக்கமாக மாறியது. தி.மு.க வேறு, மு.க வேறு அல்ல. அன்று அண்ணாவுக்கு அடுத்த நிலையிலே இருந்த தலைவர்கள் யாரிடமேனும் தி.மு.க-விக்கு தலைமையேற்க வேண்டிய நிலை இருந்திருந்தால் அந்த இயக்கம் பொன்விழா கொண்டாடும் காலம் வரை உயிரைப் பிடித்துக்கொண்டு இருந்திருக்குமா  என்ற கருத்தை எதிரி கட்சியினரும் ஏற்றுக்கொள்வார்கள். அண்ணா இறந்த அடுத்த ஆறு ஆண்டுகளில் நெருக்கடி நிலை. மாநிலக் கட்சிகள் செல்வாக்குடன் இருப்பதை அன்றைய பிரதமர் இந்திரா பிரிவினைவாதமாகப் பார்த்தார். கலைஞரோ, மாநில சுயாட்சியே இந்தியாவைக் கட்டிக்காப்பாற்றும் என்றார். நெருக்கடிநிலை தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுத்துக்கொண்டிருந்த நேரத்தில் இந்திய அளவிலேயே மிசா-வைத் துணிச்சலாக எதிர்த்த ஒரே தலைவர் கருணாநிதி. கட்சியில் சிலரோ, கட்சியின் பெயரை மாற்றிக்கொள்ளலாம், கொள்கைகளிலே மிதவாதம் போற்றலாம் என்றனர். அவருக்குப் பிடித்தவாதமே பிடிவாதம்தான். கலைஞர் ‘தன்னைக் கைதுசெய்யட்டும் பார்த்துக்கொள்ளலாம்’ எனக் காத்திருந்தார். கடைசிவரை இந்திரா அரசு அவரைக் கைது செய்யவில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அவர் சொற்பொழிவு ஆற்றாத ஒரு தமிழக ஒன்றியம் இல்லை. அப்படியிருந்தால் அது தமிழக ஒன்றியமில்லை. அவர் புகைப்படம் வெளிவராத தமிழக நாளிதழ் இல்லை... அப்படியிருந்தால் அது நாளிதழ் இல்லை. அவர் இல்லாமல் தமிழ் நாட்டில் ஓர் அரசியல் செய்தியை விவாதிக்க முடியாது. 

தமிழ்நாட்டின் எளிய சிற்றூரில் ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்த ஒருவர், தன்னிடம் இருந்த தமிழை மட்டும் நம்பிக் கிளம்பினார். தஞ்சை மண்ணில் இருந்து கிளம்பி... காஞ்சியின் அண்ணனையும் ஈரோட்டுத் தந்தையையும் இதயத்தில் சுமந்தபடி சேலம் மார்டன் தியேட்டர்ஸ் வசனமழை பொழிந்தார். ஒவ்வொரு படமும் வசனப்புத்தகமாகப் படிக்கப்பட்ட காலம். எம்.ஜி.ஆருக்கு வசனம், கலைஞருக்கு வசனம், எஸ்.எஸ்.ஆருக்கு வசனம், விஜயகாந்துக்கு வசனம், சத்யராஜுக்கு வசனம்... என பிரசாந்த் காலம் வரை வசனம் எழுதினார்.

பூம்புகார் படத்தில் கோவலனைப் பற்றி ஒரு பாடல்வரி இடம்பெறும்... ‘காலம் கற்பித்த பாடத்தின் வலிதாங்க முடியாமல் தப்பித்து வந்தானம்மா..’ என்பது அந்த வரி. காலத்துக்கே பாடம் கற்பித்த கலைஞரின் வரி அது.

பலரும் நினைத்துக்கொண்டிருப்பதுபோல அவர் தமிழகத் தலைவர் அல்ல... இந்தியத் தலைவர். இந்திய மாநிலக் கட்சிகளின் வழிநடத்தும் தலைவராக இருந்தார். பிரதமர் பதவிக்காக அவருடைய பெயர் உச்சரிக்கப்பட்டபோது, ‘என் உயரம் எனக்குத் தெரியும்’ என்று தவிர்த்தார். எம்.ஜி.ஆர் மட்டும் இடையில் தனிக்கட்சித் தொடங்கியிருக்கவில்லை என்றால் இந்திய வரலாறு மாநில சுயாட்சிகளின் உரிமைக்குக் குரல்கொடுக்கும் உறுதிமிக்கக் கட்சியாக இருந்திருக்கும் என்பதே அரசியல் நோக்கர்கள் சொல்லும் கருத்து. அப்படி நிகழ்ந்துவிடக்கூடாது என்ற இந்திராவின் அச்சத்தின் விளைவுதான் அ.தி.மு.க-வின் உதயம் என்பார்கள் அரசியல் தெரிந்தவர்கள்.

ஆனாலும் என்ன... கடைசி மூச்சுவரை அவர் தமிழர்களின், ஏழை மனிதர்களின் பிரதிநிதியாக உரிமைக்கு முழக்கமிட்ட தலைவராக இருந்தார். அறுபத்து இரண்டில் எதிர்கட்சி துணைத் தலைவரானார். அறுபத்து ஏழில் அமைச்சரானார். அறுபத்து ஒன்பதில் தி.மு.க தலைவரானார்... முதல்வரானார்.

ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை ‘அறு பத்து’ நிமிடத்தில் மறைந்தார்.