Published:Updated:

நூறு விமர்சனங்கள்... ஆயிரம் காதல்கள்..! கருணாநிதியோடு ஓர் இறுதிப்பயணம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நூறு விமர்சனங்கள்... ஆயிரம் காதல்கள்..! கருணாநிதியோடு ஓர் இறுதிப்பயணம்
நூறு விமர்சனங்கள்... ஆயிரம் காதல்கள்..! கருணாநிதியோடு ஓர் இறுதிப்பயணம்

நூறு விமர்சனங்கள்... ஆயிரம் காதல்கள்..! கருணாநிதியோடு ஓர் இறுதிப்பயணம்

ங்கே, எல்லாருக்குமான முடிவு ஒன்றுதான். அம்முடிவை நோக்கிய திரைக்கதைதான் வேறு வேறு. ஒன்பது தசாப்தங்களாக ஏற்றமும் இறக்கமும் திருப்பங்களுமாக இருந்த கருணாநிதியின் திரைக்கதை, இறுதிக்கட்டத்தில் பேரன்பும் நெகிழ்ச்சியுமாக முடிந்திருக்கிறது. `இனி அந்த இருப்பை எங்கே காண்பது' எனக் கண்ணீரும், `அந்த உடல் தாங்கிய வதை போதும்!' என சமாதானமும் கலந்து, தன் வீட்டுப் பெரியவரை வழியனுப்பிவைத்திருக்கிறது தமிழகம். அவரின் மரண அறிவிப்பு வெளியான பின்பும் எஞ்சிய நப்பாசையோடு, `எழுந்து வா... எழுந்து வா... என் தலைவா எழுந்து வா!' எனக் கூக்குரல் எழுப்பும் நிபந்தனையற்ற அன்பைவிட என்ன வேண்டும் ஒரு வாழ்க்கைக்கு?

நூறு விமர்சனங்கள்... ஆயிரம் காதல்கள்..! கருணாநிதியோடு ஓர் இறுதிப்பயணம்

அவரின் உடல் தாங்கிய வண்டி, காவேரி மருத்துவமனை வளாகத்திலிருந்து வெளிவந்தபோது கிளம்பிய ஓலம், இன்னும் அந்தப் பக்கக் காற்றில் மிச்சமிருக்கக் கூடும். விளைவுகள் பற்றிக் கவலைப்படாமல், படபடவென வண்டியின் முன் வந்துவிழுகிறது கருஞ்சிவப்புப் படை. எத்தனையோ பேரின் வாழ்க்கையை மாற்றிய கையெழுத்துகளை இட்ட அந்தக் கரங்களைக் கடைசியாக பற்றிடத்தான் இத்தனை போராட்டமும். அது முடியாத நிலையில், அவரைத் தாங்கியிருக்கும் வண்டியை தொட்டுத் தொட்டு கண்ணீர்விடுகிறார்கள். காலம் முழுக்க தடுப்புகளில்லாமல் வாழ்ந்த தலைவனை, முதன்முறையாக உடன்பிறப்புகளிடமிருந்து பிரிக்கிறது ஒரு இரும்புச்சுவர்.

`எந்த நிலையிலும் ஒழுங்கு தவறாது இந்தக் கருஞ்சிவப்புப் படை' என்ற கர்வம் கருணாநிதிக்கு உண்டு. அதை அவரது இறுதி அஞ்சலியிலும் நிரூபித்தார்கள் தொண்டர்கள். 'வாழ்கவே வாழ்கவே கலைஞர் புகழ் வாழ்கவே!' என்றும், `மெரினா வேண்டும் மெரினா வேண்டும்' என்றும் கோஷங்கள் எழுப்பியபடி அவர் வண்டிக்கு முன்னால் நடைபோடுகிறது கூட்டம். குரல் கமறினால் தண்ணீர் கொண்டணைக்கிறார்கள் மற்றவர்கள். ஓட்டம் தடைபட்டால் அவரின் இடத்தில் இன்னொருவர் முன்னெடுக்கிறார். கோபாலபுரம் நோக்கி முன்னேறுகிறது கூட்டம்.  

நூறு விமர்சனங்கள்... ஆயிரம் காதல்கள்..! கருணாநிதியோடு ஓர் இறுதிப்பயணம்

எக்கச்சக்க தடுப்புகள் கோபாலபுரம் போகும் சாலைகளில். அத்தனையிலும் காக்கிச்சட்டைகள். ஆனாலும் முண்டியடித்து முன்னேறுகிறது கூட்டம். வீட்டு கேட்களில், காம்பவுண்டு சுவர்களில், கம்பங்களில் எங்கும் மனிதத்தலைகள். இறுதியாக ஒருமுறை பார்த்துவிடமாட்டோமா என்ற ஏக்கம் அனைத்துக் கண்களிலும். ஆம்புலன்ஸின் கதவுகள் திறந்து மெதுவாக இறக்கப்படுகிறது உடல். அத்தனை பேரின் கைகளும் அந்தப் பெட்டியை நோக்கி நீள்கின்றன தந்தையிடம் தூக்கச் சொல்லும் குழந்தைகள் போல, தூக்கும்நிலையில் தந்தை இல்லையே!

தலைமாட்டில் ஸ்டாலின் தளர்ந்து நிற்க, மின்னற்பொழுது போதும் என அவரின் உடலை அழுதபடி வணங்கிச் செல்கிறது கூட்டம். ஆனாலும் கூட்டம் அதிகரித்தபடி இருக்க, முதன்முறையாக கருணாநிதி இருக்கும்போதே கோபாலபுரத்தின் கதவுகள் அடைக்கப்படுகின்றன. அவருக்கும் இதில் உடன்பாடு இருந்திருக்காதுதான். வேறு வழியில்லையே, உடன்பிறப்புகளின் கால்கள் சி.ஐ.டி காலனிக்கு ஓடுகின்றன.

நூறு விமர்சனங்கள்... ஆயிரம் காதல்கள்..! கருணாநிதியோடு ஓர் இறுதிப்பயணம்

பெரிய கதவுகளைத் தள்ளியபடி இங்கும் ஓடிவருகிறது கூட்டம். `எல்லாரும் தலைவரை பார்க்கலாம். ஆனா, அதுக்கு முதல்ல அவருக்கு வழிவிடணும்ல' எனக் கலங்கிய குரலில் வேண்டுகோள் வைக்கிறார் கனிமொழி. கூட்டம் வழிவிட, சி.ஐ.டி வீட்டுக்குள் கடைசியாக ஒருமுறை வந்திறங்குகிறார் கருணாநிதி. ராஜாத்தியம்மாள் அவரையே வெறித்த கண்களால் பார்க்க, மகனின் தோளில் முகம் புதைத்து அழுகிறார் கனிமொழி. ஒருகணம் கருணாநிதி எழுந்துவந்துவிடுவார் என்றே தோன்றியது. கடைக்குட்டிகள் அழுவதைப் பார்க்க எந்தத் தந்தையால் முடியும்?

நூறு விமர்சனங்கள்... ஆயிரம் காதல்கள்..! கருணாநிதியோடு ஓர் இறுதிப்பயணம்

அங்கிருந்து தன் `அண்ணா' சாலையின் வழியாக ராஜாஜி ஹாலுக்கு வருகிறார் கலைஞர். அவர் சீராக்கிய சிங்காரச் சென்னை இறுதியாக ஒருமுறை வணக்கம் வைக்கிறது. அதற்கு முன்பாகவே அங்கே ஆயிரக்கணக்கில் கூட்டம். கருணாநிதி வைகறையில் துயில் கலைபவர். இங்கும் அவருக்குப் பின்னால்தான் வருகின்றன கதிர்ரேகைகள். கூட்டம் ஏறிக்கொண்டே செல்கிறது. ஐந்து வயது மகனை தோளில் தூக்கிவைத்து, `அதான்டா தாத்தா' எனக் காட்டும் தந்தையை அந்தக் கூட்டத்தில் பார்க்கமுடியும். சருமம் சுருங்கி தளர்ந்துபோன தந்தையை, `முடிஞ்சளவுக்கு அவர் பக்கத்துல கொண்டு போயிடுறேன்ப்பா' எனத் தூக்கிவரும் மகனையும் அந்தக் கூட்டத்தில் காணமுடியும். 

நேரமாக ஆக, கூட்டம் இன்னமும் அதிகரிக்கிறது. குழந்தைகள், இளைஞர்கள், பாட்டிகள் என அனைவரும் கலங்கிய முகத்தோடு கலைஞரை நோக்குகிறார்கள். `உன் பேனாவின் மூடியை நீ கழற்றுகின்றாய் என்றால் நம் பசிக்குப் பாலூட்ட அன்னையின் முந்தானை விலகுவதாய் எண்ணிக் குதூகலிப்போம்' என்ற கவிக்கோவின் கடைசிக் கவிதையை நிஜமாக்குவதுபோல அனைவரின் கண்களிலும் பசி. 

அண்ணாவின் அருகில் இடம் உறுதியானதும் ஆர்ப்பரிக்கிறது கூட்டம். நெகிழ்கிறது குடும்பம். எதிர்வரும் தலைமுறைக்கான ஆவணமாக அத்தனையையும் கேமராவுக்குள் அடைக்கின்றன ஊடகங்கள். இப்போது செயல்தலைவரின் முறை. `தலைவர் இறுதிப் பயணம் மேற்கொள்ள வழிவிடுங்கள்' என அவர் வேண்டுகோள் வைக்க, வழிமொழிந்தபடி வழிவிடுகிறார்கள் மக்கள். காவிரி தண்ணீர்க்கரையில் பிறந்தவர் கண்ணீர்க்கடலில் மிதந்து வெளியே வருகிறார். `Till the time you served, Social justice was served. Well done mate!' எனத் தன் பெருந்தொண்டனை முதுகில் தட்டி அனுப்பிவைக்கிறார் வாசலில் நிற்கும் பெரியார். 

நூறு விமர்சனங்கள்... ஆயிரம் காதல்கள்..! கருணாநிதியோடு ஓர் இறுதிப்பயணம்

அவரைத்தாண்டி வரும்போது ஓரிடத்தில் தயங்கி நிற்கிறது கருணாநிதி செல்லும் வாகனம். எதிரே ஓங்கி நிற்கிறது அவரின் பெருங்கனவு. அவரின் மொழியில் `புதிய தலைமைச் செயலகம்'. தன்னைப் பார்த்துப் பார்த்து செதுக்கிய சிற்பியின் முகத்தை இறுதித் தடவையாகப் பார்த்துக் குமுறுகிறது விரிசல்கள் விழுந்த அந்த சிலை. சிற்பிக்கும் நிச்சயம் வலித்திருக்கும். இதை எல்லாம் காணச் சகிக்காமல் திரும்பி நிற்கிறார் அண்ணா.

அவரின் நிலை காணமுடியாமல் தலையிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு அழுகிறார்கள் திருநங்கைகள். வார்த்தைகள்கூட அவர்களுக்காக வீணாகக் கூடாது எனப் பல தலைமுறைகளாக ஒரு சத்தத்தை மட்டுமே பரிசாகக் கொடுத்தது சமூகம். அப்படி ஒடுக்கப்பட்டவர்களை `திருநங்கைகள்' எனத் தமிழ் தத்தெடுக்கக் காரணம் அவர்தானே. அதே கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளும் எக்கச்சக்கம். முடக்கப்பட்டவர்களை சமவாய்ப்பு கொடுத்து பொதுவெளிக்கு அழைத்துவந்தவரும் அவர்தானே. 2014-ல் சிந்தாதிரிப்பேட்டையில் கலைஞர் பேசியபோது கூட்டத்திலிருந்தார் ஒரு விழித்திறன் இழந்த மாற்றுத்திறனாளி. `அவரை நான் இதுவரை பாத்ததே இல்ல தம்பி. ஆனா, குரலைக் கேட்க எங்கே கூட்டம் நடந்தாலும் போய்டுவேன். அவருக்கு எனக்குள்ள நானே ஓர் உருவம் கொடுத்து வெச்சுருக்கேன். அது என்னிக்கும் இருக்கும்ல!' என்றார் அவர். இந்தக் கூட்டத்தில் அவரும் இருக்கக்கூடும், கடைசியாக ஒருமுறை அந்தக் குரலைக் கேட்க, உருவத்தைப் போல இனி குரலும் மானசீகமாகிவிடும் அவருக்கு. இழப்பைச் சுமக்கமுடியாமல் தவிக்கிற அவரைப் போன்றவர்களை ஆற்றுப்படுத்த ஒரு வரியுண்டு! 

`ஒளி அதன் மூலத்திற்குத் திரும்பும்போது 

தான் ஒளிரச் செய்த எதையுமே 

எடுத்துச் செல்வதில்லை!’

நூறு விமர்சனங்கள்... ஆயிரம் காதல்கள்..! கருணாநிதியோடு ஓர் இறுதிப்பயணம்

எங்கெங்கு காணினும் கறுப்பும் சிவப்புமான மனிதத்தலைகள். கொடிகள். ``I haven't seen such a scenario anywhere. The way you celebrate and send off a leader is of a whole new level! I heard he had contributed 80 years of his lifetime to the people of Tamilnadu. That's amazing! I could feel the love you people have for him! It's in the air man! He deserves such love! Well, all I could say is just one thing. We have very low level of respect on our politicians when compared to yours! The level of respect you show for him... No one can match that! Love you guys!'' - மொத்த ஊர்வலத்தையும் தன் கேமராவுக்குள் அடக்கிய இங்கிலாந்தின் வேல்ஸைச் சேர்ந்த டோனி என்னிடம் நெகிழ்ந்துபோய் சொன்னது இது! 

கருணாநிதி தன் இறுதி வசிப்பிடத்தை நெருங்குகிறார். `அவர் மேல் வெறுப்புகொள்ள நூறு காரணங்கள் உண்டு, அன்புகொள்ள ஆயிரம் காரணங்கள் உண்டு. எதுவென்பது உங்கள் விருப்பம்' என்பதாக இறங்கி வருகிறது மழை. `நான் உங்கள் பக்கம்தான் கலைஞரே' என உரக்கச் சொல்கிறார் எழிலகத்திற்குள் நிற்கும் பாபு ஜெகஜீவன்ராம். நேருவின் முதல் அமைச்சரவையில் சமூகநீதிக்காகக் குரல்கொடுத்த போராளி. அவருக்குத் தென்னிந்தியாவில் சிலை வைத்த முதல் தலைவர் கருணாநிதியே. 

நூறு விமர்சனங்கள்... ஆயிரம் காதல்கள்..! கருணாநிதியோடு ஓர் இறுதிப்பயணம்

`பிரமாண்டமான கடலில்

பிரமாண்டமான இருள் கவிவதைத் கண்டு

வீடு திரும்ப மனமில்லாமல்

மனம் பிறழ்ந்து அங்கேயே நின்றுகொண்டிருக்கிறோம்' - 

மனுஷ்யபுத்திரனின் இந்த வரிகள் அங்கிருப்பவர்களின் மனநிலையைப் படம்பிடித்துக்காட்டும். அண்ணா நினைவிடத்திற்கு உள்ளே உடல் சென்றுவிட்டபோதிலும் திரும்ப மனமில்லாமல் கலங்கியபடி நிற்கிறான் கடைக்கோடித் தொண்டன்.

இறுதியாக ஒருமுறை கருணாநிதியை வழியனுப்பத் திரள்கிறது குடும்பம். எளிதில் உணர்ச்சிவசப்படும் அழகிரியை யாராலும் சமாதானப்படுத்தமுடியவில்லை. வாஞ்சையாக கருணாநிதியின் கன்னம் தடவி முத்தம் வைக்கிறார் கனிமொழி. தன் கடைசி முத்தத்தை செல்லமகளிடமிருந்து பெற்றுக்கொண்டு விடைகொடுக்கிறார் தந்தை. ஊனும் குருதியுமாக இருந்த நண்பனுக்கு வெறித்தபடி விடைகொடுக்கிறார் அன்பழகன்.

நூறு விமர்சனங்கள்... ஆயிரம் காதல்கள்..! கருணாநிதியோடு ஓர் இறுதிப்பயணம்

எல்லாருக்கும் பின், கடைசியாக ஸ்டாலின். போதுமென்ற மனது பணத்துக்கும் அதிகாரத்துக்கும் வராது என்பார்கள். நமக்குப் பிடித்தவர்களை இறுதியாகப் பார்க்கும் நம் கண்களுக்கும் போதுமெனத் தோன்றவே தோன்றாது. கண்களின் வழியே உடல் முழுக்க அந்த முகத்தை நிரப்பிக்கொள்ளத் தோன்றும். அவர்களின் நினைவுகள் அந்த இறுதிநொடிகளில் பூதாகரமாக ஆட்கொள்ளும். `நாளை இந்த இருப்பைக் காணாத வெறுமையை எப்படித் தாங்குவேன்' என உள்ளே ஏதோவொன்று அழுத்தும். அத்தனையும் அவரின் முகத்தில். பிடித்தமானவர்களுக்கு நிரந்தர விடைகொடுப்பதைவிட பெரிய வலி என்ன இருக்கிறது. கட்சிப்பேதமில்லாமல் அந்த நொடியில் மொத்தத் தமிழகமும் ஸ்டாலினைத் தேற்றியது. அது - மகன் தந்தைக்காற்றும் அன்பும் மகனுக்குத் தமிழகம் கொடுத்த தேற்றுதலும்!  

எல்லாம் முடிந்தது. ஆசைபட்டபடியே அண்ணாவுக்கு அருகில் ஓய்வெடுக்கத் தொடங்கிவிட்டார் கருணாநிதி. `இரவலாக வாங்கிய இதயத்தைத் திருப்பிக்கொடுக்க வந்து பிற இதயங்களில் கனத்தை ஏற்றிவிட்டாய் இளவலே' என அண்ணாவும் வரவேற்றிருக்கக் கூடும். `ஓய்வெடுக்காமல் உழைத்தவர் இதோ ஓய்வு கொண்டிருக்கிறார்'. இத்தனை நாள்களும் அவரைச் சூழ்ந்திருந்த பரபரப்பு இனி இருக்காது. அவரை சூழ்ந்துள்ள கூட்டமும் வடிந்து, தன் காலத்தில் அனுபவித்திராத தனிமை இனி அவரை ஆட்கொள்ளும். ஆனால்...

``யாருமில்லாத அந்தப் பிரதேசத்தில்

என்ன இருக்கிறது

எல்லாம்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு