Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

சி.கார்த்திகேயன், சாத்தூர்.

இப்போதைய தமிழக சட்டப்பேரவையில் பி.ஜே.பி-க்குச் சில உறுப்பினர்கள் இருந்திருந்தால்?


இப்போது இருக்கும் 122 பேர் யார்?

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14.

அ.தி.மு.க-வினரின் கூவத்தூர் அணுகுமுறையை குஜராத் விவகாரத்தில் காங்கிரஸ் கடைபிடித்ததே? காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை இழுத்து பி.ஜே.பி மலிவான அரசியல் செய்ததே?

அவர்கள் என்ன யோக்கிய சிகாமணிகளா? அரசியல் என்பது சூதாட்டம். இதில் காங்கிரஸ்,   பி.ஜே.பி., அ.தி,மு.க என எந்த வித்தியாசமும் இல்லை!

கழுகார் பதில்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எம்.ஃபாரூக், திருச்சி.

‘2019 நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடியை எதிர்க்க ஆளில்லை’ என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சொல்லி இருக்கிறாரே?


இன்றைய கள நிலவரமும் அதுதான். நரேந்திர மோடிக்கு வலுவான எதிர்ப்பு என்று பார்த்தால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகிய இருவர்தான். சோனியா உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளார். அரசியலில் தீவிரமாகச் செயல்படும் விருப்பமும் அவருக்கு இல்லை. ராகுல், திடீரென உற்சாகம் காட்டுகிறார்; திடீரென காணாமல் போய்விடுகிறார். காங்கிரஸ்காரர்களுக்கே அவர் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுகிறது. இப்படிப்பட்டவரால் எப்படி மோடியை எதிர்க்க முடியும்?

‘பி.ஜே.பி-க்கு எதிரான கட்சிகள் அனைத்தும் இணைந்து, வரும் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிதிஷ் குமாரை அறிவிக்கப் போகிறார்கள்’ என்று ஒரு தகவல் பரவி வந்தது. க்ளீன் இமேஜ் கொண்ட, இந்தியா முழுவதும் அறியப்பட்ட ஒருவராக அவர் இருந்தார். ஆனால், தன்னுடைய பீகார் முதல்வர் பதவியைத் தக்க வைத்துக்கொள்வதற்காக பி.ஜே.பி-யுடன் கைகோத்துவிட்டார் நிதிஷ். எதிர்க்கட்சிகள் இணைந்து பிரதமர் வேட்பாளராக மம்தா பானர்ஜியை அறிவிக்க நினைத்தால், அதனை காங்கிரஸ் ஏற்காது. எனவே, அகில இந்திய அளவில் பி.ஜே.பி-க்கு எதிரான அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக் கூடிய பிரதமர் வேட்பாளர் இல்லாத நிலையைத்தான் நிதிஷ் சொல்ல வருகிறார்.

வண்ணை கணேசன், சென்னை-110.


‘எடப்பாடி பழனிசாமியை முதல்வராகத் தேர்வு செய்தது அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்தானே தவிர, சசிகலா அல்ல’ என்கிறாரே ஜெயக்குமார்?

நான்காண்டு சிறைத் தண்டனையைவிட ஜெயக்குமார் சொல்வதுதான் பெரும் தண்டனை!

எஸ்.ராமதாஸ், சேலம்-30.

ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் நினைவு மண்டபத்தில் அவர் வீணை வாசிப்பது போல சிலை வைத்து, அருகில் பகவத் கீதை புத்தகம் வைத்திருப்பது பற்றி?


‘விஞ்ஞானி கையில் வீணையைக் கொடுப்பதும் இஸ்லாமியருக்குப் பக்கத்தில் கீதையை வைப்பதும் வேண்டுமென்றே செய்யப்பட்டது’ என்பதுதான் பலரின் குரலாக இருக்கிறது. உடனே அவர் பேரன், அனைத்து மதப் புத்தகங்களையும் கொண்டுப் போய் வைத்தார். உடனடியாக அவை அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டு, வேறு இடத்தில் ஒரு கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சர்ச்சையைத் தவிர்ப்பதற்காக,  ‘பார்வையாளர்கள் யாரும் போட்டோ எடுக்கக் கூடாது’ என்று புதிதாகக் கட்டுப்பாடு விதித்துள்ளார்கள். உயிரோடு உலவியபோது எல்லோருடனும் வயது வித்தியாசம் இல்லாமல் புகைப்படம் எடுத்துக்கொண்டவர் கலாம். அவருடைய நினைவகத்துக்குத்தான் இந்தக் கதி.

மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ) சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவகத்துக்கு இது தேவையற்ற சர்ச்சை!

கழுகார் பதில்கள்!

பிரதீபா ஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை.

நீட் தேர்வில் விலக்குக் கேட்கும் மாநிலம் தமிழகம் மட்டும்தானா?


2013-ம் ஆண்டு நீட் தேர்வு அறிமுகமானபோது, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, குஜராத் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தது. தமிழ்நாட்டில் மட்டுமே தொடர்ந்து நீட் தேர்வுக்கான எதிர்ப்பு பெரிய அளவில் இருந்து வருகிறது. ‘நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும்’ என்று சட்டமன்றத்தில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது தமிழகத்தில் மட்டும்தான்.

குஜராத் மாநிலத்தில் நீட் தேர்வின் அடிப்படையில் சி.பி.எஸ்.இ மாணவர்கள் அதிகளவில் இடம்பிடிக்கிறார்கள் என்பதற்காக, மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் ஒதுக்கீடு வழங்க முடிவெடுக்கப்பட்டது. இதை நீதிமன்றம் ரத்து செய்தது. ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் மருத்துவக் கல்லூரிகளில் அந்தந்த மாநில மாணவர்கள் மட்டுமே சேரும் வகையில் சிறப்புச் சட்டம் இருக்கிறது. எனவே, இந்த மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், அகில இந்திய மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் இடம்பெற முடியாது. இங்கெல்லாம் உள்ள அரசு மருத்துவ இடங்களில் இதர மாநில மாணவர்கள் சேர முடியாது. 

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் அங்கீகரிக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரிகள் 25 உள்ளன. அடுத்த இடத்தில் உள்ள மகாராஷ்ட்ராவில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே உள்ளன. மேலும், பெரும்பாலான மாநிலங்களில் மருத்துவப் படிப்பில் சேர நுழைவுத் தேர்வு இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் +2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது என்பதும் எதிர்ப்புக்கு முக்கிய காரணம்.

படம்: உ.பாண்டி

வி.ஐ.பி கேள்வி

ஹெச்.வி.ஹண்டே, (முன்னாள் அமைச்சர், பி.ஜே.பி மூத்த தலைவர்)

கழுகார் பதில்கள்!

ஸ்தாபன காங்கிரஸில் இருந்த காமராஜரைத் தோற்கடித்த இதே காங்கிரஸ் கட்சியினர்தான், ‘காமராஜர் ஆட்சியைக் கொண்டுவருவோம்’ என்று இப்போது சொல்லி வருகிறார்கள். இது நியாயமா... பொருத்தமா?

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினருக்குச் சொல்வதற்கு இருக்கும் ஒரே முழக்கம் இதுதான். அதற்கும் நீங்கள் வேட்டு வைக்கிறீர்களா? காங்கிரஸ் ஆட்சி அமைப்பதையே அவர்கள் காமராஜர் ஆட்சியாக உருவகப்படுத்துகிறார்கள். இன்றைய காங்கிரஸ் கட்சியினருக்கும் காமராஜருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

இன்னும் சொல்லப் போனால், இன்றைய காங்கிரஸில் பெரும்பாலானவர்களுக்கு ஸ்தாபன காங்கிரஸ் - இந்திரா காங்கிரஸ் என்ற பிரிவினையே தெரியாது. ‘காமராஜரும் இந்திராவும் ஒன்றாகத்தான் அரசியல் செய்தார்கள்’ என்று இவர்கள் நினைப்பார்கள். இந்திராவின் அடக்குமுறைச் சிந்தனைகளை மிகக் கடுமையாக எதிர்த்தவர் காமராஜர். அவரது மறைவுக்குப் பிறகு வேறு வழியில்லாமல் தமிழகத்தில் இரண்டு அணிகளும் ஒன்று இணைந்தன.

1980 முதல் (1989 நீங்கலாக) அனைத்துத் தேர்தல்களிலும் தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளின் தோளில் மாறி மாறி ஏறி பயணம்செய்யும் காங்கிரஸ் கட்சியால் காமராஜர் ஆட்சியை எப்படி அமைக்க முடியும்? ‘இந்த இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’ என்றார் காமராஜர். அவரது மரண சாசனமாகச் சொல்லப்படும் தீர்மானத்திலும் இது இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள்தான் காமராஜர் பேரைச் சொல்கிறார்கள்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: 
கழுகார் பதில்கள்,  ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600 002 
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!