Published:Updated:

“இந்தக் கொள்ளைகள் எல்லாம் தி.மு.க ஆட்சியிலும் நடந்தன!”

“இந்தக் கொள்ளைகள் எல்லாம் தி.மு.க ஆட்சியிலும் நடந்தன!”
பிரீமியம் ஸ்டோரி
“இந்தக் கொள்ளைகள் எல்லாம் தி.மு.க ஆட்சியிலும் நடந்தன!”

சூடு கிளப்பும் ஜி.ராமகிருஷ்ணன்

“இந்தக் கொள்ளைகள் எல்லாம் தி.மு.க ஆட்சியிலும் நடந்தன!”

சூடு கிளப்பும் ஜி.ராமகிருஷ்ணன்

Published:Updated:
“இந்தக் கொள்ளைகள் எல்லாம் தி.மு.க ஆட்சியிலும் நடந்தன!”
பிரீமியம் ஸ்டோரி
“இந்தக் கொள்ளைகள் எல்லாம் தி.மு.க ஆட்சியிலும் நடந்தன!”

‘‘கிரானைட் கொள்ளை குறித்து விசாரித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்துக்குக் கொலை மிரட்டல் வந்துள்ளது. 2015-ல் அவர் அளித்த அறிக்கை மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. தாதுமணல் கொள்ளை குறித்து ககன்தீப் சிங் பேடி அளித்த அறிக்கை சட்டமன்றத்திலேயே வைக்கப்படவில்லை. முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க-வோ கிரானைட் கொள்ளை, தாதுமணல் கொள்ளை, ஆற்றுமணல் கொள்ளை ஆகியவற்றைச் சட்டமன்றத்தில் ஒரு விவாதப்பொருளாகவே ஆக்கவில்லை. ஏனென்றால், இந்தக்கொள்ளைகள் எல்லாம் அ.தி.மு.க ஆட்சியில் மட்டுமல்ல, தி.மு.க ஆட்சியிலும் நடந்தன என்பதுதான்” என்று அதிரடி கிளப்புகிறார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்.

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக்கொள்கைகள் குறித்து தமிழகம் முழுவதும் வீடு வீடாகப் பிரசாரம் செய்ய 10 ஆயிரம் குழுக்களை அமைத்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. ஆகஸ்ட் 18 முதல் 23 வரை இந்தப் பிரசார இயக்கம் நடைபெறவுள்ளது. இதற்கான பணியில் பரபரப்பாக இருந்த ஜி.ராமகிருஷ்ணனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“இந்தக் கொள்ளைகள் எல்லாம் தி.மு.க ஆட்சியிலும் நடந்தன!”

“தமிழக அரசு இப்படி வசமாகச் சிக்கித் தவிக்கிறதே?”

“யாரும் கற்பனைகூட செய்துபார்க்க முடியாத அளவுக்கு லஞ்சத்திலும் ஊழலிலும் ஊறித் திளைத்த அ.தி.மு.க-வினர், அவற்றிலிருந்து வெளிவரமுடியாத அளவுக்கு வசமாகச் சிக்கியுள்ளனர். இதைச் சாதகமாகப் பயன்படுத்தி, அ.தி.மு.க-வை முழுமையாகக் கைப்பற்ற பி.ஜே.பி முயற்சி செய்கிறது. அதற்காகத்தான் சி.பி.ஐ., வருமானவரித் துறை மற்றும் அமலாக்கத் துறை மூலம் ரெய்டுகளை நடத்துகிறது. இப்படியெல்லாம் பிளாக்மெயில் செய்து அ.தி.மு.க-வைத் தன் கஸ்டடியில் வைத்துக்கொள்ள பி.ஜே.பி பிரயத்தனம் செய்கிறது. சேகர் ரெட்டி, விஜயபாஸ்கர், ராம மோகன ராவ் ஆகியோர் வீடுகளில் ரெய்டு நடத்தி, தாங்கள் ஏதோ ஊழலுக்கு எதிரானவர்கள் என்று காட்டிக்கொள்ள பி.ஜே.பி நினைக்கிறது. ஆனால், மூன்றாவது முறையாக பி.ஜே.பி ஆட்சியில் இருக்கும் மத்தியப்பிரதேசத்தில்தான் ‘வியாபம்’ என்ற படுபயங்கரமான ஊழல் நடைபெற்றது. கேரளாவில் மருத்துவக்கல்லூரி ஆரம்பிக்க கோடிக்கணக்கில் பி.ஜே.பி-யினர் லஞ்சம் வாங்கி சிக்கிக்கொண்டுள்ளனர். இதில் என்ன துயரமென்றால், பி.ஜே.பி-யின் நரித்தனப் பிடியில் தமிழக ஆட்சியாளர்கள் சிக்கியிருப்பதால், அது தமிழக மக்களைக் கடுமையாகப் பாதித்துவருகிறது. தமிழக அரசுக்குத் தர வேண்டிய 17 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கியை மத்திய அரசு அடாவடியாகத் தர மறுக்கிறது. அதைக்கேட்டு  வாங்கவோ, தட்டிக்கேட்கவோ தமிழக ஆட்சியாளர்கள் தயாரில்லை. தமிழகத்தில் கடந்த 70 ஆண்டுகளில் மிகமோசமான ஆட்சியென்றால், அது இந்த ஆட்சிதான். கூவத்தூரில் என்னமோ செய்து ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டார்கள். மக்கள் பிரச்னைகளைப் பற்றிய பார்வையோ, அவற்றைத் தீர்ப்பதற்கான கொள்கையோ, உறுதியோ இவர்களிடம் இல்லை.”

“அப்படியானால், இந்த அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களை தி.மு.க., மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏன் நடத்தவில்லை?”

“மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, தனியாகப் பலப் போராட்டங்களை நடத்திவருகிறோம். விவசாயிகள் பிரச்னைகளுக்காக பி.ஜே.பி., அ.தி.மு.க தவிர அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து முழுஅடைப்புப் போராட்டம் நடத்தியுள்ளோம். வெறும் சடங்காக அல்லாமல், அந்தப் போராட்டம் வெற்றிகரமாக நடந்தது. போராட்டங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இந்த அரசு மீது மக்களும் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அதனால்தான், டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான தன்னெழுச்சிப் போராட்டங்கள் நடக்கின்றன. டாஸ்மாக் கடைகளை மூடச்சொன்னால், இவர்கள் ரேஷன் கடைகளை மூடப் பார்க்கிறார்கள்.”

“இந்தச் சூழலில், சட்டமன்றத்தில் முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க-வின் செயல்பாடு எப்படி இருக்கிறது?”

“சட்டமன்றத்தில் பல விஷயங்களை தி.மு.க எழுப்பியுள்ளது. ஆனாலும், தமிழ்நாட்டில் மிகவும் கவலையளிக்கக்கூடிய தீண்டாமைக்கொடுமைகள், ஆணவக்கொலைகள் போன்ற சமூகப்பிரச்னைகளை தி.மு.க கண்டுகொள்வதே இல்லை. ஆணவக்கொலைக்கு எதிரான சட்டத்தைக் கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் கொண்டுவர வேண்டும் என்று முதல்வரைச் சந்தித்து வலியுறுத்தினோம். அதை அரசு கண்டுகொள்ளவில்லை. தி.மு.க-வோ, இந்தப் பிரச்னைகள் பற்றி வாய்திறக்கவே இல்லை. தாதுமணல் கொள்ளை, ஆற்றுமணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை ஆகியவை சட்டமன்றத்தில் ஒரு விவாதப்பொருளாக மாறுவதை தி.மு.க விரும்பவில்லை. இது ஒரு மோசமான சூழல்.”

“இப்போது ‘புதிய இந்தியா... புதிய இந்தியா...’ என்று பிரதமர் பேசி வருகிறாரே?”

“சமீபத்தில், ‘புதிய இந்தியா இயக்கம்’ என்ற அறிவித்து ‘புதிய இந்தியா உறுதிமொழி’ என மத்திய பி.ஜே.பி அரசு எல்லா நாளிதழ்களிலும் முழுப்பக்க விளம்பரம் கொடுத்துள்ளது. அதில், ‘1942-ல் நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்’ என்றெல்லாம் பிரதமர் மோடி பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இவர்கள் சுதந்திரப் போராட்டத்திலேயே பங்கெடுக்காதவர்கள். ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின்போது, வாஜ்பாய் கைது செய்யப்பட்டார். அவர், ‘நான், வேடிக்கை பார்க்கத்தான் போனேன். போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை’ என்று நீதிமன்றத்தில் எழுதிக்கொடுத்தார். அதனால், விடுவிக்கப்பட்டார். எனவே, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைப் பற்றிப் பேசுவதற்கோ, அப்படி விளம்பரம் கொடுப்பதற்கோ, இவர்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது.”

- ஆ.பழனியப்பன்
படம்: ப.சரவணகுமார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!